” தோகை விரித்த மயில் போன்று என் தேகம் சிலிர்த்து அடங்கியது உன் பார்வை என் மீது விழுந்ததால் “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -10
சிமெண்ட்டில் சுண்ணாம்புக்கல் 65-70%(லைம்ஸ்டோன் ), களிமண் (கிளே ) 10%மற்றும் ஜிப்சம் 4-5% அளவில் சேர்க்கப்படுகிறது . இந்த மூலப்பொருட்கள் நொறுக்கப்பட்டு, கலக்கப்பட்டு, சுமார்
வெப்பநிலையில் உலைகளில் சூடாக்கப்பட்டு, ‘கிளிங்கர்’ ஆக்கப்படுகிறது. இறுதியாக, இந்த கிளிங்கருடன் சிறிதளவு ஜிப்சம் சேர்த்து நுணுக்கமான பொடியாக அரைக்கப்படும்போது சிமெண்ட் கிடைக்கிறது.
இரு முறைகளில் சிமெண்ட் தயாரிப்பு செய்யப்படுகிறது. ஒன்று வெட் மெத்தட் மாற்றொன்று ட்ரை மெத்தட் வானிலை மாற்றத்தைப் பொறுத்து சிமெண்டின் தயாரிப்பு இருக்கும்.
பெரிய சைலோன்ஸ்களில் இறுதியாக சிமெண்டின் தயாரிப்பு முறை நிறைவடைந்து பேக்கிங் செய்யப்படுகிறது. சுண்ணாம்பின் அளவைப் பொறுத்து சிமெண்டின் தரம் அமைகிறது.
சிமெண்ட் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையையும் பார்த்துக் கொண்டே வந்தாள் தினமும் பேக்டரிக்கு தான் வருகிறாள். வர்மா ஆஃபிஸில் இருக்கிறான் அவனைப் பார்த்து 4 நாட்கள் ஆகிறது.அவன் தினமும் இவளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் இவள் அறிய வாய்ப்பில்லை அவன் அதை விரும்பவும் மாட்டான்.
விஜய் தான் வர்மா மேல் கோவத்தில் இருக்கிறான். அன்று சட்டையைப் பிடித்து கேட்ட போது நான் சம்மதம் சொல்லவில்லை என்று சொன்னதில் விஜய் சமாதானம் அடைந்தான் ஆனால் மறு நாளே நிதிஷா ஆஃபிஸில் வந்தது விஜய்க்கு சிறிதும் பிடிக்கவில்லை.
வர்மா இல்லாத போது அதிகாரம் செய்வதும் அவன் இருக்கும் நேரம் அமைதியாக இருப்பதும் என்று அவள் போடும் ரெட்டை வேடம் பார்த்து வாயடைத்துப் போனான். எல்லாம் தெரிந்தும் ஏன் வர்மா அமைதியாய் இருக்கிறான் என்று தான் புரியவில்லை.
வேலை முடிந்து வந்தவன் முறுக்கிக் கொண்டு இருக்கும் விஜயை காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு பேக்டரிக்கு வந்தான் ஆரண்யா பேக்டரியை விட்டு வெளியே வர காரினைத் தாண்டி சென்றவளை அவளுக்கு தெரியாமல் பார்த்தான்.
“வர்மா நீ பண்றது சரி இல்லை “
“நான் என்ன பண்ணேன் “
“ஒரு பொண்ணோட மனசுல ஆசையை வளர்க்காத அவ பாவம் “
எரிச்சலாக இருந்தது “நீ நினைக்குற அளவுக்கு எதுவும் பெருசா நடந்துடல, அன்னைக்கு கொடுத்தது கூட மருத்துவ முத்தம் தான் அவளை காப்பாத்த தான் “
“என்ன டா சொல்ற, நீ என்ன சொல்ற ” நடிகர் விவேக் மாடுலேஷனில் சொன்னவன்
“ஏன் சொன்னது காதுல விழலையா உனக்கு ” கையை அடிப்பது போல் கொண்டு செல்ல
“நீ அடி டா உனக்கு இல்லாத உரிமையா, ஒரு நண்பனா உனக்கு ஒரு சிலதை சொல்லி புரிய வைக்குறது என் கடமை இது தப்பு டா, சரி விடு நான் கேட்குற ஒரு கேள்விக்கு உன்னால உண்மையான பதிலை சொல்ல முடியுமா “
விஜய் சொல்வதெல்லாம் சரி தான் ஆனால் அவள் மீதான இவனின் உணர்வுக்கு இவனுக்கே அர்த்தம் தெரியாத போது இவனால் என்ன பதில் சொல்லிட முடியும், இவனுக்கும் இந்த உணர்வினை தள்ளி வைத்திடத் தான் முயற்சி செய்கிறான். நண்பனிடம் மனதில் இருப்பதை சொல்லி விட நினைத்தாலும் அவன் குணம் அதை செய்ய விடுவதில்லை.
அவனின் இயல்பு மாறாமல் தன் மனதின் எண்ணங்களை சொல்லி விட்டான் சரி, தவறு என்று யோசிக்கவில்லை, அவனுக்கும் இதை சொல்லி ஆரம்பத்திலே சரி செய்து கொண்டால் மனதையும் போகப் போக சரி செய்து விடலாம் என்ற எண்ணம் தான் “கேளு டா “
“நீ ஆராண்யாவ லவ் பண்றியா, அவளை பார்க்குற பார்வையில உன் கண்ணுல தெரியிற மாற்றம் உன் மனசை காட்டிக் கொடுக்குது உன்னை சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கேன், மத்த பசங்க மாதிரி நீ கிடையாது ஒழுக்கமா வளர்ந்தவன், எந்த பொண்ணு கிட்டயும் பேசி பார்த்தது இல்லை அப்டி இருந்தவன் இப்போ பார்க்குறது அவள் கிட்ட மட்டும் வெளிப்பட்ற உன்னோட உணர்வுகள் எனக்கே தெரியும் போது அவளுக்கு தெரியாம இருக்குமா சொல்லு “
தன்னைப் பற்றி முழுமையாய் அறிந்தவன் இவன் தானே, இவன் சொல்வது உண்மை தான் என்னால் ஒரு பொண்ணை நேசிக்க முடியுமா, பெண் இல்லாமல் ஒரு ஆணின் வாழ்வு நிறைவடையுமா, என் வாழ்விலும் நிச்சயம் ஒரு பெண் வரத்தான் போகிறாள், அது ஏன் ஆரண்யாவாக இருக்கக்கூடாது,
அவள் பெயரை நினைக்கும் போதே என் இதயத்தின் ஒவ்வொரு நரம்புகளும் எழுந்து, துடித்து இசை கூட்டி இன்னிசை இசைக்கிறதே, சிறு வயதில் துள்ளி குதிக்கும் சிறுவன் போல என் மனசும், உடலும் மாறிப் போகின்றதே அது இவளால் மட்டுமே அதை நான் ஏன் மறைக்க வேண்டும்.
“உனக்கு என் நிலைமை தெரியும் தானே ” வலி நிறைந்த நிகழ்வுகளில் உறைந்து போய் அதிலிருந்து மீண்டு வந்தவன் வலியோடு கேட்க,
வர்மாவின் கையைப் பிடித்துக் கொண்ட விஜய் “சின்ன வயசுல நடந்தது அதை இப்போ ஏன் டா நினச்சு உன் மனசை நீயே கஷ்டப் படுத்துற”
“என்னால மறக்க முடியல, அந்த நினைப்பு என்னை கல்லாய் மாத்திடுச்சு, ஆனா இவள பார்க்குற வரைக்கும் “
சிரித்த விஜய் “அப்போ ஏன் லவ் பண்றத ஒத்துக்க மாட்ற ” எப்படியாவது ஆரண்யாவுடன் அவன் வாழ்வு தொடங்கி விடாதா என்ற எண்ணத்தில் கேட்டான்.
“ஊதாப் பூ ” அவன் நெஞ்சைத் தடவி கண்கள் மூடினான்.
“மச்சான் ” எதையோ தெரிந்து கொண்டது போல் அவன் வர்மாவின் கைகளைப் பிடித்தான்.
“நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது ஆனா அதுக்கு வாய்ப்பு இருக்காது, வீட்ல கண்டிப்பா பிரச்சனை வரும். அப்பா ஏத்துக்க மாட்டாரு, இப்போ கூட அப்பா மனச மாத்தி தான் இந்த கல்யாணம் நடக்க ஏற்பாடு நடந்துட்டு இருக்கு “
“நானே அவள கொன்னுடுவேன் டா”
விரக்தியாக சிரித்த வர்மா “என்னை மீறி எதுவும் நடந்திடாது, நீ டென்ஷன் ஆகாத, என் மனசுல இருக்குற ஊதாப் பூ இவளா இருக்கும்னு ஒரு சந்தேகம் இருக்கு தான் அந்த ஃபீல் எனக்கு பிடிச்சிருக்கு, கொஞ்ச நாள் இப்டியே இருக்கட்டும். அவளுக்கு என்னை தெரிஞ்சிருக்குன்னா அவ ஏன் மறைக்கணும். அவ உண்மையை சொல்றாளான்னு பாப்போம் “
“கண்டிப்பா அவ உனக்கானவ தான்”
“ஓ அவ்ளோ கான்பிடெண்டா “
“ஆமா “
“என்னைப் பத்தி இவ்ளோ யோசிக்குறவன், உன்னைப் பத்தியும் யோசிக்கலாமே ” வர்மா, விஜய்யை வார்த்தைகளால் மடக்க,
“என்னைப் பத்தி என்னடா இருக்கு வேலை, வசதி இது போதாதா அதான் நீ இருக்கியே “
“உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியும், அதை முதல்ல சொல்லு ” வர்மா பேச்சில் பதறித்தான் போனான் விஜய், ‘ இவனுக்கு தெரிஞ்சிருக்குமா இல்லை போட்டு வாங்குறானா தெரியலயே, எதுக்கும் எதுவும் இல்லைனே மெய்ண்டைன் பண்ணிக்கலாம்.
“நான் உன்னை கேட்டா நீ என்னை மடக்க பார்க்குறியா”
“நடக்கும் போது தெரிஞ்சிப்ப” விஜயைப் பார்த்து ஏளனப் புன்னகை சிந்த,
அவனும் அதே சிரிப்பை உதிர்த்தவன் “உன் அளவுக்குலாம் உன் தங்கச்சி இல்லை டா, அவ எனக்கு சரிப்பட்டு வர மாட்டா ‘ மனதில் விதையாக விழுந்தவளை மரமாக முளைக்கும் முன்னே எடுத்து வீசி விட நினைத்தான்,
நேற்று பார்ட்டியில் தேவதையாய் தனது தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்த வர்மாவின் தங்கை நிலாவைக் கண்டதும் அவன் இதழ்கள் வளைந்தன ‘அழகி ‘ என்று முனுமுனுத்தவன் ரகசிய காதல் பார்வையை வீசி நின்றான்.
சிறு வயதில் இருந்தே வர்மாவும், விஜயும் நண்பர்கள். விடுமுறை நாட்களில் வர்மாவின் வீட்டிற்கு விளையாட வருவான் வீட்டிற்கு தெரியாமல் வசதியான பணக்காரக் குடும்பம் என்பதாலே பள்ளியில் பேசுவதோடு நிறுத்திக்கொள், வீட்டிற்கு போவது கூடாது என்று சொல்லிப் பார்த்தும் விஜயால் வர்மாவின் வீட்டிற்கு போகாமல் விட்டதில்லை.
வீட்டிற்கு தெரியாமல் போவான். பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை இருவரின் நட்பு வளர்ந்து கொண்டே போக வர்மாவின் வீட்டினரையும் நன்றாகவே பழக்கம். சிறு பெண்ணான கவிநிலா அண்ணனின் நண்பன் என்று பழகியவள் போகப் போக பருவ மாற்றங்களால் அவளின் பார்க்கும் பார்வை மாறிப் போனது, முதலில் இதை கவனிக்காமல் இருந்தவன் அவளின் செயலிலும், பார்வையிலும் வித்தியாசத்தை உணர்ந்தான்.
சிறு பெண் என்பதால் அவளிடம் வெளிப்படையாய் எதுவும் கேட்கவில்லை ஆனால் மனதில் அவளைப் பற்றி கற்பனையை வளர்த்துக் கொண்டான். இருவரின் வீட்டிற்கும் கண்டிப்பாக ஒத்து வராது என்று புரிந்து கொண்டவன் மனது மட்டும் காதலை ரகசியமாய் சுமந்து கொண்டு தான் இருக்கிறது. வர்மாவுக்கு இது தெரிந்தாலும் இருவரும் விரும்பினால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை இது அவர்களின் வாழ்க்கை அவர்கள் தான் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று அமைதியாய் இருந்து விட்டான்.
நேற்று அவளை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு போன் பேசும் சாக்கில் சுவற்றில் சாய்ந்து நின்றவன் நிதானமாக அவளைப் பார்த்து நண்பனிடம் பேசிக் கொண்டிருக்க, அவளோ இவன் முன் வந்து நின்றாள்.
போன் பேசிய படி பதட்டத்தை மறைந்துக் கொண்டு அழைப்பை துண்டித்து விட்டு அவளைப் பார்க்க,
“சொல்லுங்க ” என்றான். உள்ளுக்குள்ளோ தேனே, மானே, மயிலே குயிலே என்று செல்லம் கொஞ்சினான்.
“அங்க நிக்கிறானே அவன் யாரு ” அவள் கேட்டதில் தூக்கி வாரிப் போட்டது, சொல்லாத காதலாக இருந்தாலும் உண்மைக் காதாலாச்சே தான் விரும்பியவள் வேறு ஒரு ஆடவனைப் பற்றி விசாரித்தால் மனம் தாங்குமா??
அவள் காட்டிய இடத்தில் வந்திருந்த பிசினஸ் மேன்கள் எவனாவது ஒருவனின் மகனாக இருக்கும் என்று நினைத்தவன் யார் என்று பார்க்க,
‘ச்சே இவனா ‘ நொந்தே போனான். “நிலா சொல்லுங்க எதுக்கு அவனைப் பத்தி கேட்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா “
“அந்த ராஸ்கல் பார்வையே சரி இல்லை, என் பிரண்ட் ஹரிணி இருக்கால்ல அவ கிட்ட வம்பு பண்ணி இருக்கான், அண்ணா கிட்ட சொல்லலாம்னு பார்த்தா அண்ணா காணோம், அதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன் “
ஐஸ் மழையில் நனைந்தது போன்று இருந்தது அவனுக்கு, “அவனை நான் பார்த்துக்குறேன் நீங்க போய் சாப்பிடுங்க, வண்டி ரெடியா இருக்கு வர்மா உங்களை பத்திரமா வீட்ல விட சொல்லிட்டு தான் போனான் ” சிரிப்புடன் சொல்ல,
‘இவன் என்ன இப்படி சிரிக்கிறான், தலைல அடி பட்டு இருக்குமோ ‘ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டே சென்றாள் நிலா, அவனோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான் மனதிற்குள்
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
