நலம் தானா ஊதாப் பூவே!! -12

“மழை நீரில் என் உணர்வுகளும் கரைந்து போகட்டும் யாருக்கும் தெரியாமல் “

… ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…

பாகம் -12

வர்மா மறந்து வைத்து விட்ட போனைக் கொடுக்கத் தான் வீட்டிற்குள் வந்தாள். அங்கே அவள் கண்டது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  மேடை அதில் வீற்றிருந்த இரு குடும்பத்தினர். வர்மாவின் குடும்பத்தினர், நிதிஷாவின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

மேடையின் பின்னே வர்மா, நிதிஷா நிச்சயதார்த்தம் என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திரை, நிதிஷா லாவண்டர் நிற நீண்ட கவுன் அணிந்திருந்தாள். வெள்ளி நிறக் கற்கள் கொண்டு முழுவதும் நிறைந்திருந்தது.

வைரக் கற்கள் பதித்த நகைகள், தலையின் முன் பக்கம் பன் போன்று தூக்கி வாரப்பட்டு  பின்னே அழகாய் பின்னி வெள்ளையும், லாவண்டர் நிற கற்கள் வேலைப்பாடு கொண்ட பூக்கள் வைத்து  வர்மாவை கரம் பிடிக்க போகும் பெருமையிலும், சிரிப்பிலும்  நின்றிருந்தாள்.

வர்மா உடையை மாற்றவில்லை, பெற்றவர்கள் கேட்டதற்கு இதுவே போதும் என்று சொல்லி விட்டான். அவர்கள் வற்புறுத்த அவனின் கோவமான பார்வையில் அமைதி ஆகி விட்டனர்.

அவன் கோவப் பார்வையும் அலட்சியமும் வைத்து பெண்ணவள் புரிந்து கொண்டாள் வர்மாவிற்கு பிடிக்கவில்லை, இந்த நிச்சயமும் அவன் அனுமதி இன்றி நடத்துவதாகத் தோன்றியது.

விருப்பம் இல்லை என்றால் எதற்கு சம்மதம் சொல்ல வேண்டும். அமைதியாகத் தானே நிற்கிறான். இனியும் இங்கு இருந்தால் எனக்கு மண்டையே வெடித்து விடும். அழ வேண்டும் போன்று தோன்றுகிறது தனியே எவ்வளவு வேண்டுமானாலும் அழுதுத் தீர்த்து விடலாம் இங்கே அனைவருக்கும் முன் அழுது விட்டால், என்ன செய்வது என்று யோசித்தவள் விஜய் எங்கு இருக்கிறான் என்று பார்த்தாள்.

நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தான். வர்மாவிடம் பார்வையை முற்றிலுமாக தவிர்த்தவள் விஜயிடம் சென்றாள். “சார் ” என்று அழைக்க, அவனும்

” சொல்லுங்க ஆரண்யா”

“இது சாரோட மொபைல் கார்ல வச்சிட்டு வந்துட்டாரு, நீங்க கொடுத்துடுங்க சார், நான் கிளம்புறேன் “

“ஓகே மா ” வர்மாவின் போனை வாங்கிக் கொண்டவன்

“வர்மா தானே கூட்டிட்டு வந்தான். அவன் சொல்லாம எப்படி கிளம்புவ, கொஞ்ச நேரம் தானே பங்ஷன்  முடியப் போகுது, வர்மா கிட்ட சொல்லிட்டே கிளம்புங்க, டைம் ஆகிடுச்சுனா நான் கூட ட்ராப் பண்றேன்.” விஜய் சொல்லி விட்டு பார்க்க,

அவள் எதுவும் பேசவில்லை, அமைதியாய் நின்றாள். வர்மா அழைத்ததால் விஜய் சென்று விட கூடவே நிலாவும் சென்றாள். ஓரமாய் நின்றவள் எப்போது இங்கிருந்து செல்லலாம் என்றே தவித்துக் கொண்டிருந்தாள்.

இரு வீட்டினர் சூழ மோதிரம் இருவரின் கையிலும் கொடுக்கப்பட்டது, மோதிரம் போடு வர்மா என்ற வார்த்தைகள் மட்டுமே ஆரண்யாவின் செவியில்  விழ, கண்கள் தானாக வர்மாவின் பக்கம் திரும்பியது. அவனும் இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் ஒளிந்துள்ள உணர்வினைத் தான் பாவையால் புரிந்து கொள்ள முடியவில்லை. முடிவெடுத்து தானே சம்மதம் சொன்னாய் அப்புறம் என்ன, நீ நடத்து என்பதை போலப் பார்த்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

மோதிரத்தை போடுவதற்காக நிதிஷாவின் விரல்களைப் பிடித்தவனுக்கு ஆரண்யா முகமே நினைவில் வந்தது.

நிச்சயம் சிறப்பாய் முடிந்து இரு வீட்டினரும்  சாப்பிட அமர, வர்மாவுக்கு வந்த அழைப்பை ஏற்று முக்கியமான அழைப்பு தான் வெளியே சென்று வருவதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

நிதிஷாவின் வீட்டிலிருந்து கிளம்பியவள் நடந்தே சென்றாள். விஜய் டிரைவரை ஏற்பாடு செய்திருந்தும் ஆரண்யா மறுத்து விட்டாள். வர்மா இருந்திருந்தால் இவளை மறுப்பு சொல்லவே இடம் கொடுக்க மாட்டான். அவனின் பார்வையில் அவன் நினைத்ததை செய்திட வைத்து விடுவான்.

வீட்டினை நெருங்கும் வரை நடந்தே வந்தவளின் வலியினை உணர்ந்த மேகமோ அவள் வலிக்கு மேகத்தினை திரட்டி வர்மாவிடம் நியாயம் கேட்க மழைத்துளிகளை பூமிக்கு அனுப்பியது போல் மழை பெய்திடத் தொடங்க, அவள் மழையில் நனைவது கூட உணரவில்லை.

திடீரென மின்னல் தாக்கியது போல் அதிர்ந்தவள் துள்ள, அவளை அணைத்து தூக்கி காரினுள் அமரவைத்தவன் மறு பக்கம் வந்து அமர்ந்தான்.

அவன் கை பட்ட நொடி மட்டுமே அதிரந்தாள், அடித்த கணமே அவன் யார் என்பதை அவளின் மெய்யோடு கலந்த அவனின் வாசமும், ஸ்பரிசமும் அவளுக்கு உணர்த்தி விட்டது. மீண்டும் இருவருக்கும் இடையே மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

வெளியே கொட்டித் தீர்க்கும் மழை உள்ளே கணல் மூண்டது போல் அத்தனை வெம்மை, அவளின் வெறித்த பார்வை கண்ணீரின் தடங்கள் மழை நீரில் அழிந்து போனாலும் அவளின் ஒளி வீசும் கண்கள் வெறிச்சோடி கிடக்கிறதே,

இருவரும் தனிமையில் இருக்கும் தருணங்களில் அவள் கண்களில் தெரியும் படபடப்பும், கரு விழியின் நாட்டியமும் அவள் மேனியில் உணரும் குறு குறுப்பும் அவனுக்கு ரசிப்பிற் குரியது. தனக்கான அவளில் தோன்றும் உணர்வுகளை அவன் உடலும், உள்ளமும் ஏற்று சிலிர்ப்பை  ஏற்படுத்தும்.

அழுததும், மழை நீரில் நனைந்த முகமும் சிவந்து பளிச்சென 
இருந்தாலும் மகிழ்வு இல்லையே, அவனிடம் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது ஒன்றை கூட அவளால் சொல்ல முடியாதே, அவளின் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி, அவன் உன்னைப் பற்றி எந்த உணர்வும் ஏற்படவில்லை, நீ என்னிடம் வேலை செய்பவள் மட்டுமே என்று சொல்லி விட்டாள் இவளால் என்ன பதில் சொல்ல முடியும், அவள் மனம் மறித்துப் போய்விடுமே,

இருவருக்கும் இடையே இருக்கும் சொல்ல முடியா உணர்வுகளின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிவெடுப்பது அவன் மட்டுமே, அவன் என்ன சொல்லப் போகிறானோ, அதற்காகத் தானே இந்த நேரத்தில் வந்திருக்கிறான் அவனே பேசட்டும் என்று அமைதியாய் இருந்தாள்.

காரின் டேஷ் போர்டில் இருந்து பூந்தூவாலையை எடுத்து நீட்ட, அவள் வாங்கவில்லை,  அவன் முறைத்துப் பார்க்க அப்போதும் அவள் வாங்கவில்லை,

“திமிரா ” பூந்தூவாலையை வாங்காமல் இருந்ததற்க்கு சொன்னான்.

“நீங்களும் நனைஞ்சி இருக்கீங்க” அவன் துடைத்து விட்டுக் கொடுத்திருந்தால் உடனே வாங்கி இருப்பாள். இவள் முதலில் பயன்படுத்த தயக்கமாக இருந்தது.

“எனக்கு எதுவும் ஆகாது, நான் வேணும்னு நனையல ” இவள் வேண்டும் என்றே தானே நனைந்தாள் 
அதைத்தான் இப்படி சொன்னான்.

“அது வீடு கிட்ட வந்துட்டோம் சீக்கிரம் போய்டலாம்னு பார்த்தேன். மழை வேகமா வந்திடுச்சு,  நீங்க….. நான் வீட்டுக்கே போய் இருப்பேன் ” அவன் காரில் ஏற்றாமால் விட்டு இருந்தால் மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு சென்று இருப்பாள் அதைத்தான் சொன்னாள்.

“ஓ இஸ் இட் ” தன் இதழை கொஞ்சமாக வளைத்தவன், “சரி கிளம்பு ” என்றானே பார்க்கலாம், அவ்வளவு தான் அதிர்ச்சியோடு வர்மாவைப் பார்த்தாள். அவன் மேல் இருந்த கடுப்பில் சொல்லி விட்டவளுக்கு மீண்டும் இந்த மழையில் எப்படி நனைவது, நினைக்கும் போதே நடுக்கம் தோன்ற, பாவமாய் பார்த்து வைத்தாள்.

அவன் இவளைப் பார்க்கவே இல்லை, போனை எடுத்து விஜய்க்கு அழைத்தவன் “பேசிப் பார்த்தேன் டா செட் ஆகல, விட்டுடலாம்”

“….”

“நானும் அதுக்குத்தான் ட்ரை பண்ணேன். பட் என்ன பண்றது அவங்களுக்கு புரியலையே, அப்போ அனுபவிக்கட்டும் “

முதலில் அவன் பிசினஸ் விஷயமாக பேசுகிறான் என்று தான் நினைத்தாள் ஆனால் அவன் இது போன்று பேசிப் பார்த்தது இல்லையே, இன்று ஏனோ வர்மா இவள் கண்களுக்கு புதியதாய் தெரிந்தான். பேச்சிலும் கூட

“சரி டா வந்துடறேன், நீ ரெடி பண்ணு, நீயும் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்க, இன்னைக்கு எனக்கு ஓகே தான்”

“….”

‘செலிப்ரஷேன் தான், வை உடனே வரேன் ” அழைப்பை துண்டித்தவன், ‘இன்னும் கிளம்பலையா நீ ‘ என்பதைப் போல பார்க்க,

“இல்லை நான் வீட்ல இறங்கிக்கிறேன் ” இவன் அழைத்து போக சொன்னது போல் நினைத்துக் கொண்டு சொல்ல,

“நான் எப்போ சொன்னேன், நீ தான் அப்டியே போய் இருப்பேன்னு சொன்னியே, எனக்கும் இப்போ வேலை இருக்கு, நீ இறங்கி போகலாம் “

இதழ் கடித்து அவன் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தவளுக்கு, அவனிடம் எங்கு செல்கிறாய், என்ன ஏற்பாடு என்று கேட்க துடித்த உதடுகளை கடித்து அடக்கி,மீண்டும் ஒரு பார்வை பார்க்க, அவன் அவளைப் பார்க்கவே இல்லை.

கண்ணீர்த் துளிகள் விழியினை விட்டு இறங்கி துளித் துளியாய் அவள் கன்னத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. அவன் இறங்காதே  என்று சொல்ல மாட்டானா என்று தவித்தாள், அவன் அப்போதும் அமைதியாகவே இருந்தான்.

கண்ணீரை தன் புறங் கைக்கொண்டு துடைத்தவள், காரின் கதவினைத் திறந்து கொண்டு காலினை கீழே வைத்திடும் நேரம், அவள் கையினை பிடித்து இழுக்க, அவன் நெஞ்சில் மோதி சாய்ந்தாள். பயத்தில் அவன் சட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

அவனின் ஒரு கரம் அவள் கையினை அழுத்தமாய் பிடித்து இருக்க, மறு கரமோ அந்தரத்தில், அவளை அணைத்துக் கொள்ள உள்ளுக்குள் தோன்றினாலும், அவன் செய்யவில்லை, அவனுக்கும் சேர்த்து தான் அவள் அணைத்துக் கொண்டே கிடக்கிறாளே,

இருவரின் உடையில் இருந்த நீர் ஒன்றாய் கலந்து கால்களில் வழிந்தோட, அதில் வெம்மை கூடுதலாய் இருந்தது, அவளும் விலகவில்லை, அவனும் அமைதியாக அவளின் அணைப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறான்.

பயம் கொஞ்சம் விலகி அவனின் மேல் சாய்ந்திருப்பது புரிந்து விழியை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள், அவனும் அவள் மேல் தான் பார்வையை பதித்திருந்தான். அவளின் துடிக்கும் இதழ்கள் அவன் சட்டையின் மேல் உரசி இருக்க, இதயத்தில் வீணையின் நாதம் மீட்டுக் கொண்டிருந்தது மென்மையாய்…

அலுவலத்தில் தனது இருக்கையில் இருந்தவன் விஜய்யை அழைத்தான்

“என்ன டா எடுத்துட்டு வரதுக்குள்ள ஏன் இவ்ளோ அவசரம் ” வர்மாவின் முன் கோப்பினை வைத்தான்.

ஆச்சர்யமாக பார்த்தவன் “இது எப்படி கிடைச்சது ” வர்மா சந்தேகப் பார்வையுடன் நண்பனை ஏறிட,

“ஆரண்யா வச்சிருந்த பைல் தானே “விஜய் கேட்க

“ஆமா இது உன் கிட்ட எப்படி “

“காலைலயே ஆரண்யா  ஆபீஸ் வந்து கொடுத்துட்டு தான் பேக்டரிக்கு போன, இதுல உனக்கு என்ன டவுட் “

“வாட் அவ வந்தாளா ” அதிர்ச்சியுடன் வர்மா கேட்க,

அவனின் அதிர்ச்சியும், பேச்சும் புரியாமல் விழித்த விஜயோ “எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு, அதிர்ச்சி ஆகி என்னையும் ஏன் அதிர்ச்சி ஆக வைக்குற, என்ன தான் பிரச்சனை “

“அவளுக்கு உடம்பு சரி இல்லை, லீவு தானே அவ “

தலையை சொரிந்து கொண்ட விஜய் “அவ அவன்னு சொல்றியே அது யாருடா “
எரிச்சலுடன் விஜய் பக்கம் திரும்பியவன் “ஆரண்யா ” என்றான்

“அவ நல்லா தான் இருக்கா, நீ தான் சரி இல்லை, நேத்து எங்க போனா, அங்க தான் ஏதோ ஆகிடுச்சு, காலைலயே கடுப்பு ஏத்திட்டு இருக்க ” புலம்பிக் கொண்டே சென்றவனை போக விடாமல் தடுத்த வர்மா

“அவ நல்லா இருக்காளா  டா ” அவனுக்கு வராத மென்மையான குரலில் கேட்க, பேயை பார்த்தது போல் பதறி, விழுந்து எழுந்து வெளியே ஓடினான்  விஜய்…

என்ன நடந்தது அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page