“கேள்விகள் கூட எனக்கு புரிய வைக்கிறது என் மீதான காதலை உனக்கு மட்டும் புரியவில்லையா “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று..
பாகம் -9
கீர்த்தி சொன்னதில் ஒரு கணம் உலகம் சுழன்று நின்றது அவளுக்கு மட்டும்.இவள் சொன்னது உண்மை தானா இல்லை நம்மை முட்டாளாக்க முயற்சிக்கிறாளா இன்னைக்கு தேதி என்ன காலண்டரைப் பார்க்கிறாள். இது ஏப்ரல் மாதம் இல்லை என்று தெரியும் இருந்தும் காதல் கொண்ட மனம் அவளை அப்படி நினைக்க வைத்தது.
“கீர்த்தி சார் வந்துட்டாரா ” பேக்டரிக்கு சென்று விட்டு வந்ததால் வர்மா வந்தது இவளுக்கு தெரியாது.
“சார் வந்தாரு கூடவே பெரிய சாரும், அவர் கல்யாணம் பண்ணிக்கப் போற நிதிஷா மேடமும் வந்தாங்க, பெரிய சார் தான் கல்யாணம் பத்தி சொன்னாரு ” இவளுக்கு வேண்டிய தகவலை கேட்காமலே கீர்த்தி சொல்ல,
வர்மா என்ன சொல்லி இருப்பாரு, அவர் முகம் எப்படி இருந்திருக்கும், சிரிச்சுட்டு இருந்திருப்பாரா இல்லை சோகமாவா ஆரண்யாவுக்கு இது தெரிந்தே ஆக வேண்டும் இவளிடம் எப்படி கேட்பது,
“வர்மா சார் ” ஆரண்யா முழுதாய் கேட்டு முடிக்கும் முன்னே கீர்த்தி,
“நீ தான் டி இங்க இல்லை. வர்மா சார் ரொம்பவே அமைதியா இருந்தாரு, யாரையோ அவர் கண்ணு தேடிட்டு இருந்தது விஜய் சார் கூட இல்லை அவரை தேடிட்டு இருந்துப்பாருன்னு நினைக்குறேன். ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் அவர் இல்லாம வர்மா சாருக்கு எதுவுமே ஓடாது “
கீர்த்தி சொல்லியதில் அவள் மனம் சற்று நிம்மதி அடைந்தது அந்த தேடுதலுக்குரிய ஆள் ஒரு வேளை நானாக இருந்தால், இருக்குமோ, அவளுக்கு இப்பொழுதே வர்மாவைப் பார்க்க வேண்டும். இந்த கல்யாணம் பிடித்து தான் சம்மதம் சொன்னாரா கேட்டு விடலாம், முறைத்துப் பார்த்தால் விட்டு விடுவேனா மனதில் சூலுறை எடுத்தவள்,
“கீர்த்தி இது முக்கியமான பைல் நான் சார் கிட்ட கையெழுத்து வாங்கணும் மெயில் அனுப்பனும் நான் போய்ட்டு உடனே வந்துடறேன் “
வேகமாய் வர்மா இருந்த அறைக்கு சென்றாள். “மே ஐ கம் இன் சார் ” வேகமாக கேட்டவள், அவன் “எஸ் ” என்று சொல்லும் போதே அவசரமாய் உள்ளே சென்றாள்.
விஜய் வர்மாவின் சட்டையைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் தயங்கியவள் “சார் நான் அப்புறம் வரேன் ” இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது புரிய நண்பர்களுக்குள் எதற்கு நந்தி போல் குறுக்கே நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்ப நினைக்க,
“ஆரண்யா நான் உங்களை போக சொல்லலையே” வர்மா சொல்லில் நின்றவள் அவன்புறம் திரும்ப,
அவளிடம் கையை நீட்டி “சைன் தானே கொடுங்க பண்றேன் ” அவள் சொல்லும் முன்னே அவன் சொல்ல, இதெல்லாம் கரெக்டா தெரியும் மத்தது தெரியாது மனதில் திட்டினால் வெளியே இயல்பாய் காட்டிக் கொள்ளத்தான் முயல்கிறாள் ஆனால் முடியவில்லை.
பைலை வாங்கி சைன் போட்டு விட்டு அவளிடம் கொடுத்தான். விஜயிடம் திரும்பி “நீ ஏன் டா அமைதியா இருக்க, நீ கன்டினுயூ”
வர்மாவின் சட்டையில் இருந்த கையினை எடுத்தவன் “நான் கேட்டுட்டேன் நீ தான் பதில் சொல்லணும் ” ஆரண்யா வந்ததால் மெதுவாக பேசினான்.
விஜய் பிடித்ததால் கசங்கிய சட்டையை கையினால் நீவி சரி செய்து கொண்டே “அப்பாக்கு மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை அதை நான் எப்படி டா தடுக்க முடியும் ” நண்பன் கேள்விக்கு பதில் சொன்னவன் கண்கள் ஆரண்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன,
“அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா” நிதிஷாவை எப்படி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தான் என்பது மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது விஜய்க்கு,
“நான் இன்னும் எங்க அப்பா கிட்டயே சம்மதம் சொல்லலையே டா ” இப்போதும் பார்வை அவளிடம் தான்,
‘இவன் என்ன குழப்புறான் ‘ நினைத்துக்கொண்டே வர்மாவைப் பார்க்க, அவன் பார்வை போன இடத்தை இவனும் பார்த்தான் ஆரண்யா சங்குப் பூ நிற புடவை அணிந்திருந்தாள். அவள் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளோ இவன் பார்வையை சந்திக்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்.
அதிர்ந்த விஜய் ‘இவ என்னமறுபடியும் சேலை கட்டிட்டு ஆபீஸ் வந்திருக்கா, இவன் பார்வையே சரி இல்லையே, அவ முன்னாடி எனக்கு பதில் சொல்றான் இந்த பதில் யாருக்கு?? யோசித்தவன் அப்படி இருக்குமா எப்படி யோசிச்சாலும் சரி வரலையே எதுக்கு யோசிச்சிக்கிட்டு இவன் கிட்டயே கேட்போம் ‘
வர்மாவின் தோளை சுரண்டியவனிடம் “என்ன கேட்கணுமோ கேளு டா ” அப்போதும் அவன் பார்வை நகரவே இல்லை.
“நீ தெரிஞ்சு தான் இதெல்லாம் பண்றியா” இவன் தெரிந்து கொள்ள கேட்க,
“என்ன பண்றேன் ” இவனோ தெரியாதது போல் கேட்டான்.
“ஹான் இப்போ பண்ணிட்டு இருக்கியே அதை தான் கேட்குறேன் “
“இதுல உனக்கு என்ன டா கஷ்டம் “
“கஷ்டமா, கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு, தோ பார்த்துட்டு இருக்குறதுக்கு ஒரு பொண்ணுன்னு வாழ்றியே மச்சான் நான் பாரு இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கேன் ” எரிச்சலாக வந்து விழுந்தது வார்த்தைகள்
“உன்னை யாருடா சிங்கிளா சுத்த சொல்றது, வீட்ல பொண்ணு பார்க்க சொல்லு கல்யாணம் பண்ணிக்க இல்லையா லவ் இருந்தா சொல்லு வீட்ல கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன் “
வர்மா திருமணம் என்றதும் விஜய்க்கு ஒருவளின் முகம் வந்து போனது ஒரு நொடி சந்தோஷப்பட்டவன் அடுத்த நொடி யோசித்தான் இந்த நினைப்பு ஏன் எனக்கு அடிக்கடி வருகிறது இது தப்பு, கண்ணை மூடி திறந்தவன்,
“ஆரண்யா என்ன ஆச்சு ” அவள் இவனின் பார்வைக்கு சமாளிக்க முடியாமல் நிற்பது கண்டு அவளிடம் கேட்க,
“சார் போக சொல்லலையே ” என்றாள் அப்பாவியாக
“ஏன் டா கொலு பொம்மை மாதிரி நிக்க வச்சிட்டு இருக்க, சைன் போட்டாச்சுல அனுப்பு டா வேலை இருக்கும் “
“விஜய் நீ போய்ட்டு பேக்டரில இன்னைக்கு வரைக்கும் எவ்ளோ ப்ராசஸ் முடிஞ்சி இருக்கு டீடெயில்ஸ் வாங்கிட்டு வா “
‘இவன் என்ன என்னை துரத்துறான் எதோ ராங்கா இருக்கே, வந்து பேசிக்கலாம் ‘ வர்மாவை முறைத்த படி வெளியே சென்றான்.
“சார் நான் போகட்டுமா ” இவ்வளவு நேரம் இருந்தவளுக்கு தனிமையில் அவனுடன் இப்போது இருப்பது பதட்டமாக இருந்தது. அவள் கேட்க நினைத்த கேள்விக்குத் தான் பதில் கிடைத்து விட்டதே இதுவே போதும் என்று மனம் அவளிடம் பதில் சொன்னது.
“உங்களுக்கு தேவையானது தெரிஞ்சிடுச்சு ல” அவன் புருவம் உயர்த்தி வினா தொடுக்க,
மின் மினி போல் கண் இமையினை மூடித் திறந்தவள், அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் முழிக்க,
“பேக்டரிக்கு போனீங்களே அதை கேட்டேன் “
“தெரிஞ்சிகிட்டேன் சார் ” தலை அசைத்தால் அழகாய்
அதை சற்று தலை சாய்த்து பார்த்தவன் “அப்புறம் புரிஞ்சிடுச்சில”
“ம்ம் புரிஞ்சிடுச்சு சார் “
அவள் வெளியே சென்றாள் மெல்லிய புன்னகையுடன் அதை அவனும் உணர்ந்து கொண்டவன் தன் உதடுகளை மெல்ல வருடினான் நேற்றைய நிகழ்வினை எண்ணி
ஆரண்யாவின் வீட்டிற்கு முன் வந்ததும் காரினை நிறுத்தி விட்டு அவள் இறங்குவாள் என்று பார்க்க, அவள் இருக்கையில் சாய்ந்த படி இருந்தாள். வெளியே யாரும் இல்லை. இவள் போன் இருக்கிறதா என்று பார்த்தான் அவள் மடியில் இருந்தது.
‘என்னாச்சு இவளுக்கு தூங்கிட்டு இருக்காளா ‘ யோசித்தபடி “ஆரண்யா ” இரண்டு முறை அழைத்ததும் அவளிடம் பதில் இல்லை, அவள் தலையினை தன் புறம் திருப்ப கண் மூடி இருந்தாள் எழுப்பிப் பார்க்க அசைவு இல்லை, கைகள் கொஞ்சம் சில்லிட்டு இருக்க லேசான பதட்டம் இவனுக்கு, அவள் போனை எடுத்து வீட்டில் இருப்பவருக்கு அழைக்க நினைத்தான் போன் லாக் செய்யப்பட்டு இருந்தது இறங்கி சென்று அழைக்கலாமா என்று யோசித்தான். வேண்டாம் முதலில் இவள் விழிக்க வேண்டுமே அதை முதலில் செய்வோம் என்று முடிவெடுத்தவன்
கன்னத்தைத் தட்டி அவள் பெயரினை உச்சரித்தும் அவளிடம் அசைவில்லை, தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் அவள் முகத்தில் தெளித்தான் அப்போதும் அவள் அப்படியே இருக்க, பாட்டிலைப் பார்த்தான் சிறிதளவு நீர் மட்டுமே இருக்க அதுவும் அவள் முகத்தில் தெளித்து விட பாட்டில் காலியாகி விட்டது,
அவளின் பூ போன்ற மென்மையான கைகளை தன் வெம்மை மிகுந்த கரங்கள் கொண்டு தேய்த்து விட்டவன் அவள் கன்னத்திலும் தேய்த்து விட்டான், அன்றும் இப்படிதானே மயங்கி இருந்தாள், பயத்தில் மயக்கம் வந்திருக்கலாம் என்று நினைத்தவன் அவள் முகம் அருகே சென்றான் புதிதாய் பறித்த ரோஜாவின் இதழ்கள் போன்று தன் கன்னதுக்கு அருகே இருக்கும் அவள் இதழ்கள் கண்டவனுக்கு படங்களில், பாடத்தில் படித்த அறிவியல் நினைவுக்கு வர முதல் உதவியை முத்தத்தில் செய்து பார்க்க முடிவெடுத்தவன்
இருளில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவள் பால் நிலா முகத்தினை பார்த்துக் கொண்டே அவள் கன்னத்தினை மெதுவாக பிடித்தவன் அவனை கட்டி இழுத்த ரோஜா இதழ்களில் வெம்மை தாங்கிய அடர்ந்த தன் இதழ்களால் மருத்துவ முத்தம் வழி தன் சுவாசக் காற்றினை அவள் இதழ்கள் வழி அவளுக்குள் செலுத்தினான் இடையே மென்மையான கனி இதழினை சுவைக்கவும் செய்தான்
அவனின் முயற்சிக்கு பலன் அவளிடம் இருந்து வெளிப்பட்ட முனகலுடன் கூடிய அசைவு கண்டு சட்டென விலகியவன் அவள் முகத்தினை தன் கை குட்டையால் துடைத்து விட்டவன் மீண்டும் அவள் கன்னத்தை தட்டி “ஆரண்யா ஆரண்யா ஆர் யூ ஓகே “
அவனின் வார்த்தைகளும் அவன் கையின் வெம்மை அவள் கன்னத்தில் உணர்ந்து மெதுவாக இமைகளைத் திறந்து எதிரில் பதட்டத்துடன் இருக்கும் வர்மாவின் முகம் பார்த்தவள் “சார் ” என்ற வார்த்தையில் தான் அவனின் இதயத் துடிப்பு சீரானது.
அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டவள் “ஐ ஆம் ஓகே சார் ” என்றாள். அவளை அணைத்து நெஞ்சில் சாய்த்து கொள்ள துடித்த கரங்களை அடக்கிக் கொண்டவன் காரின் கதவினைத் திறந்து கொண்டு மறுபுறம் வந்து திறந்து விட்டான் மெதுவாக மூச்சு வாங்கியவள் காரினை விட்டு மெல்ல இறங்கினாள்.
நேற்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தவன் “வெரி டேஸ்டி ” என்றான் மெதுவாக
“என்னை விட்டு என்னடா சாப்ட ” விஜயின் குரலில் முறைத்த வர்மாவிடம்
“சொல்லு டா என்ன சாப்ட அதுவும் டேஸ்ட்டா”
வர்மா சொன்ன பதிலில் அவன் மேலே சாய்ந்தான் விஜய்
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
