அத்தியாயம் 4
ராஜாத்தியின் கர்ணக் கொடூரமான குரலில்,ஒலித்ததை கேட்ட அனைவரும், ஒரு கணம் திகைத்துப் போயினர். முதலில் சுதாரித்தது ஆனந்த் தான்.
“அத்தை எந்த நேரத்துல என்ன பேசுறீங்க?” எனப் பற்களை கடித்த படி கேட்டான் மெல்லிய சலசலப்பு கூட்டத்தில் எழும்பியது
வளர்மதி ராஜாத்தியை நோக்கி “என்ன பொம்பளைமா நீ?ஒரு நல்ல காரியம் நடக்குற இடத்துல,அச்சாணியும் பிடிச்ச மாதிரி இப்படி பேசிக்கிட்டு இருக்க, யாரு நீ?”என்று அதட்டினாள்
“ இந்தா, பொம்பளை கிம்பளைன்னு சொன்னே,மரியாதை கெட்டுப் போயிடும். நான் உள்ளதத்தானே சொன்னேன்?,இப்ப புதுசா என்னத்த சொல்லிட்டேன்.? அவ ராசி தான் ஊருக்கேத் தெரியுமே?அதனால தான் சொன்னேன்” என்றாள் ராஜாத்தி.
அகல்யாவின் உடம்பு மெல்ல நடுங்க தொடங்கியது.
மனைவியின் நடுக்கத்தை கண்ட சிபிக்கு,லேசான கோபம் ராஜாத்தி மீது ஏற்பட்டது.
அவன் ஆனந்தை நோக்கி “அத்தான்,யார் இந்த அம்மா?ஏன் இப்படி பேசிட்டு இருக்காங்க?”என்று கேட்டான். “எங்க அத்தை தான் மாப்ள. எங்க அப்பாவோட தங்கச்சி “என்று தேய்ந்தக் குரலில் சொன்னான் ஆனந்த்.
“ என்னங்க இழுத்துட்டு இருக்கீங்க? பெரியம்மா நீங்கல்லாம் ஒரு பெரிய மனுஷியா? எப்படி உங்களால இப்படிப் பேச முடியுது?”என்று படபடத்தாள் ரூபிணி.
“இந்தா, ஏதோ நாலு எழுத்தப் படிச்சிட்டோம்னு ஆடாத,இந்த அகல்யாவும் படிச்சிட்டோம்னு ஆணவத்துல அலைஞ்சா,கடைசில என்னாச்சு?ஏதோ பழையக் கதை மாதிரி ஆயிடக்கூடாதேங்கிற அக்கறையில சொன்னா, சாமியாடிக்கிட்டு வர்ற?”என்றுக் கத்தினாள்.
மாப்பிள்ளை வீட்டினர் முன், இப்படி சண்டையிடுவதைக் கண்டு, ஆனந்த் அவமானத்தில் குன்றினான்.
அகல்யாவின் நிலையோ, அதற்கும் மேல். நிலைக்கனுமே என்ற வார்த்தை,அவளுக்குள் அச்சத்தை விதைத்தது.கண்ணீர் விழிகளோடுக் கலவரமாகக் கணவனை ஏறிட்டாள் அகல்யா.
சிபி ஆத்திரமாக ராஜாத்தியை முறைத்துக் கொண்டிருந்தான். “இந்த அம்மா உங்க அத்தையா? மச்சான்,அன்னைக்கு ஒரு அம்மா இந்தக் கல்யாணத்த நிறுத்துறதுக்காக ஏதோதோ சொல்லுச்சுனு சொன்னேனே அது இந்த அம்மா தான் என்று தீபக் சிபியிடம் சொன்னான்.
அவ்வளவு தான், அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்தக் கோபத்தில் வெடித்தே விட்டான் ஆனந்த். “ஏன் அத்தை அப்படி செஞ்சீங்க? கூடப் பொறந்த அண்ணன் மகளுக்கு, ஒரு நல்ல வாழ்க்கை அமையறதுல,உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க மகன் நல்லவனா இருந்தா எப்பவோ, எங்க பொண்ணைக் குடுத்திருக்க மாட்டோமா? அப்போ, இவ்வளவு நாளும் வந்த வரன்களையெல்லாம் விலக்கி விட்டது நீங்க தானா? கூடவே இருந்துக் குழி பறிச்சிருக்கீங்களே? ச்சை “…என்று ஆங்காரமாக வெடித்தான்.
“அவங்க செஞ்சதுல உருப்படி இது ஒண்ணுதாங்க. மத்தவங்கள விலக்கினதாலத் தானே நம்ம அகலுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு? அதுக்காக அவங்களை மன்னிச்சிடலாம்.” என்று ஏளனமாக சொன்னாள் ரூபிணி
“என்னண்ணே, உம் மவனும்,மருமகளும் இந்தாப் பேச்சு பேசுறாங்க,நீ வாயமூடிட்டு, இடிச்சப்புளியாட்டம் இருக்க?” என்று அண்ணனை உதவிக்கு நாடினாள் ராஜாத்தி.
கூடப் பிறந்தவர்களில் ராஜாத்தி மட்டுமே தங்கினாள். மற்றவர்கள் ஏதேதோ காரணங்களினால் அற்ப ஆயுளில் போய் சேர, மிஞ்சியது ஒரே தங்கை என்பதால் அவளிடம் பாசம் அதிகம்.அவள் சொல்வதேற்ப ஆடுகிறவர்தான்.அதிலும் அவள் கணவர் இறந்த பிறகு,பாசம் மேலும் கூடியது என்றே சொல்லலாம்.
அதற்காக அவள் மகனின் சண்டியர் தனத்தைக் கண்ட பிறகும் பெற்ற மகளை பலி கொடுக்கும் தைரியமும் அவருக்கில்லை.
அதனால்தான், தான் தவறே செய்த போதும் கூட தைரியமாக அண்ணனை சப்போர்ட்டுக்கு அழைத்தாள் ராஜாத்தி.
“ கூடப் பொறந்த பாவத்துக்காக, உன்னை மன்னிச்சிட்டேன். நானேக் கழுத்தப் பிடிச்சி வெளியத் தள்ளுறதுக்கு முன்னாடி,நீயே போயிட்டா, மானம் மரியாதையாவது மிஞ்சும் “என்றுக் கர்ஜித்தவரைக் கண்டு லேசாக நடுங்கித்தான் போனாள் ராஜாத்தி.
“அடப்பாவிகளா, என் மேல உயிரையே வச்சிருந்த,எங்க அண்ணனையே இப்படி மாத்திட்டீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா? “என்று சபித்தாள் ராஜாத்தி.
“ எங்க அப்பாவுக்காகத் தான், உங்களைப் பொறுத்திட்டு இருந்தேன். அவரே இப்போ உங்களை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரு. இனி எனக்கு எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்ல. மரியாதையா,வெளிய போங்க.. இல்ல” என்று பற்களைக் கடித்தான் ஆனந்த்.
“ ஓகோ அவ்வளவுக்காகிப் போச்சா?, உன் தொங்கச்சி, ராசி லட்சணம் இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும்ல? அப்போ உன் மூஞ்சை எங்க கொண்டு வச்சுக்கிறேன்னு பார்க்குறேன்” என்று இறுமாப்புடன் சொன்னவளை அடிக்கவேப் பாய்ந்து விட்டார் ரத்னவேலு.
வாசுகியும், ஆனந்தும் சேர்ந்து, அவரைக் கட்டுப்படுத்தினர். அகல்யா கதறியபடி வெளிப் பிரகாரத்தை நோக்கி ஓடிவிட்டாள். ராஜாத்தியின் வார்த்தை அவளை ஆட்டமேக் காணவைத்து விட்டது எனலாம்.
கொதித்துப் போன ரூபிணி “லூசாம்மா நீ?ராசியில்லாதவன்னு,சொல்ற அவளை நீ எதுக்கு உம் மகனுக்கு கட்டி வைக்க நினைக்கிற? வீணா அடிவாங்கி சாகாம, வீடு போய் சேருர வழியப் பாரு” என்று எச்சரித்துவிட்டு, நாத்தனாரைத் தேடி சென்றாள்.
தெப்பக் குளத்தின் படிக்கட்டில் இருந்து அழுதுக் கொண்டிருந்தவளை சமாதானம் செய்து அழைத்து வந்தாள். கோவில் சிலை போல இருந்தவள், வாடிய மலராக வருவதைக் கண்ட அனைவருக்குமே மனதுக்குள் வேதனைப் பரவியது.
“என்ன பாப்பா இது? அத்ததான் அறிவுகெட்டத்தனமா ஏதோப் பேசுனான்னு, இப்படியா நீ நடந்துக்கிறது? எல்லாரும் என்ன நினைப்பாங்க? “என்று மகளைக் கடிந்தார் ரத்னவேலு.
அவளை நெருங்கிய ஷன்மதி” அண்ணி, வயித்தெறிச்சல்ல, யாரோ, என்னவோ சொல்லிட்டுப் போறாங்கன்னு விடுவீங்களா? இதுக்கு போய் அழுதுகிட்டு…இருங்க மை கலைஞ்சிருக்கு நான் தொடைச்சு விடுறேன் “என்று தன் கர்சீப்பால் அகல்யா கண்ணிலுள்ள மையை அவள் சரி செய்ய, ரத்னவேலு கருவறையை நோக்கிக்,கையெடுத்துக் கும்பிட்டபடி குலுங்கினார்.
அதைக் கண்ட வாசுகியின் கண்களும், உடைப்பெடுக்க, ஆனந்தும் கலங்கினான். “அட என்ன சம்பந்தி நீங்க? பிள்ளையை சொல்லிட்டு நீங்க கண்கலங்கிட்டு இருக்கீங்க “ என்று ராகவன் சொன்னார்.
“இது ஆனந்தக் கண்ணீர் சம்பந்தி. இப்படியொரு மனுசங்களை சம்பந்தியாத் தந்தக் கடவுளுக்கு நன்றி சொல்றக் கண்ணீர்” என்று தழுதழுத்தார் ரத்னவேலு.
“ தங்கச் சிலையாட்டம் உள்ள பொண்ணை எங்கப் பையனுக்குக் குடுத்திருக்கீங்க. அப்படி பெருமையா நின்னு மீசையை முறுக்காம இது என்ன குழந்தைத்தனமா?.. “என்றார் சங்கரன்.
பெண்வீட்டாருக்கு
மனதே நிறைந்துவிட்டது. அந்த சந்தோசத்தில் வந்தவர்களின் வயிறை நிறைக்க, தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.
ரத்தன வேலு வீட்டின் பின்புறம் இருந்த காலியிடத்தில்,பந்தலமைத்து,உணவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவருடைய வீடு,முற்றம் வைத்தக் கிராமத்துப் பெரியக் காரை வீடு.
சிட்டியில் வளர்ந்த சிபி குடும்பத்தாருக்கு, அது அதிசயம். அன்னையின் பின்னோ, இல்லை ரூபிணியின் பின்னோடோ ஒட்டிக் கொண்டிருந்தாள் அகல்யா.
மற்றவர்களும், அவள் மனநிலையைக் கருத்தில் கொண்டு பெரிதுபடுத்தவில்லை.
ஷன்மதி ரூபிணியிடம் ‘அக்கா,அக்கா ‘என்று ஒட்டிக் கொண்டு சுற்ற, அவளுடன் பேசுவதில் அகல்யாவுக்குத் தடையிருக்கவில்லை.
சிம்பிள் கல்யாணம் என்றாலும், மறுநாள் மறுவீடு கழிந்தே அனைவரும், கிளம்புவதாக இருந்தது. சாயங்காலம் ரத்னவேலுவின் குலதெய்வத்தைக் கும்பிட்டு வரலாம். உண்ட களைப்பு தீர ஓய்வெடுக்கும்படி கேட்டுக் கொண்டான் ஆனந்த்.
மதிய உணவு பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்து உண்ட போதும், அகல்யா குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவது போல பேர் பண்ணினாள். ஷன்மதி ஏதாவது சொல்லி சிபியைக் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
கூடவே வளர்மதியின் மகன்கள் பிரவீனும், நவீனும் சேர்ந்து கொள்ள கலாட்டா களைக் கட்டியது.
திடுமென நவீன், ஆனந்திடம் “ஏன் அத்தான் உங்களுக்குத் தோப்பெல்லாம் இருக்குதா? “என்று கேட்டான்.
“ ஏன் நீ அதை விலைக்கு வாங்கப் போறியா? “என்று கேட்டாள் ஷன்மதி. “இல்லக்கா, எங்க கிளாஸ்ல இருக்கானே பிரபு, அவன் அவங்க பாட்டி ஊர்ல பம்ப் செட்ல குளிச்சேன்னு பீத்துனான். அதான் இருந்தா நானும் சீன் போடலாம்ல? “என்றான் நவீன்.
“அதுக்கு குளிக்கனுமே நவீன்? நீ தீபாவளிக்கு தீபாவளிக்குத் தானே குளிப்ப?” என்று வாரினான் தீபக். அவனை முறைத்த நவீனிடம் “சாயங்காலம் கோவிலுக்கு போறோம்ல? அது தோப்பு க்குள்ள தான் இருக்கு. கொஞ்சம் நேரமேப் போனாக் குளிச்சிட்டு பூசாரி வரவும் சாமிக் கும்பிட்டுட்டு வரலாம் “என்றான் ஆனந்த்.
“ஹே “என்று உற்சாகக் குரல் எழுப்பினர் பிள்ளைகள். வாசலில் ஏதோ சலசலப்புக் கேட்க, எட்டிப் பார்த்த ஆனந்த் முகம் மாறினான்.
தொடரும்..
