நிஜமாகும் நினைவுகள்

அத்தியாயம் 6

    அகல்யாவின் “ஐயோ “என்ற அலறலில்,ஷன்மதிக்கு மாற்றுத்துணி எடுத்து வந்து கொண்டிருந்த ரூபிணி, கலக்கமடைந்து ஓடி வந்தாள்.

    கேனிலிருந்து டீயை ஊற்றிக் கொண்டிருந்த ஆனந்தும், பதறி அடித்து என்னவோ ஏதோ என்று பார்க்க, நவீனும் சிபியும் விழுந்து கிடப்பதை பார்த்து,மற்றவர்கள் கைகொட்டி சிரித்துக்

கொண்டிருந்தனர்.

   “அட, என்ன மாப்பிள்ளை நீங்க ,பார்த்து வரக்கூடாதா? “என்றபடி எழுவதற்காக,அவனுக்கு கை கொடுத்தான் ஆனந்த். “இல்ல அத்தான், எதிர்பாராம இந்தப் பய வந்து இடிச்சிட்டானா, வழுக்கிட்டு” என்று அசடுவழிந்தான் சிபி.

   “ நீ ஏன்டி அப்படி அலறுன?, நானேப் பயந்துட்டேன்” என்று ரூபிணி, அகல்யாவிடம் கேட்டாள். “இல்ல தொட்டி இடிச்சிட்டோ?ன்னு நானும் பயந்துட்டேன்.அதோட என் ராசி…”என்று முடிக்காமல் மெலிதாக முணுமுணுத்தவளை ரூபிணி முறைத்து சும்மா இருக்கும்படி சைகை செய்தாள்.

   “ அண்ணி உங்க அவரு உங்களைப் பார்த்த அன்னைக்கே விழுந்துட்டாரு. இது சும்மா டுபாகூர் “என்று சிரித்தாள் ஷன்மதி.

   “சரி சரி ரொம்ப வாராம,டவல் எடுத்து தா” என்றான் சிபி.”ஹான் நான் ஏன் எடுத்துத் தரணும்? அதுக்கு தான் ஆள் வந்தாச்சே? அப்புறம் என்னோட அவருக்கு செய்ய நீ யாருன்ன  என்கிட்ட சண்டைக்கு வரவா? நான் துணிமாத்தப் போறேன்பா” என்று அகல்யாவை சீண்டிவிட்டு அகன்றாள் ஷன்மதி.

    ரூபிணி அகல்யாவிடம் டவலை எடுத்து தர,அதை தயங்கியபடி, சிபியிடம் நீட்டினாள். புன்னகையோட  அவன் அதை வாங்கிக் கொண்டான். “அண்ணா அவருக்கு வேற டீ கொடு. இது ஆறிபோச்சு. நான் குடிச்சிக்கிறேன் “என்று நகர்ந்தாள்.

    அவள் செய்கை அவனுக்கு மேலும் புன்னகையைப் பெரிதாக்கியது. ஆறிய டீயை தான் குடிக்க வேண்டாம் என்ற அவளது கரிசனம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

   “அடி எதுவும் படலியே மாப்பிள்ளை? சப்புனு உட்காந்துட்டீங்களோ?, குறுக்குல அடி எதுவும் பட்டுச்சா?” என அக்கறையாக விசாரித்தான் ஆனந்த்.

     “இல்லத்தான், இப்போ இல்ல. அப்போதான் லேசா வலிச்சது “என்றான்.” கும்புடுறேன் சாமி,நான் ஒருத்தன் இங்க இருக்கேன். நானும் அதேபோலத்தான் விழுந்தேன் “என்று நவீன் பவ்யமாக ஆனந்திடம் சொல்வது போல நக்கலடித்தான்.

    “எருமைக்கெல்லாம் வலிக்காது நவீன். “என்று ப்ரவீன் அவனை வாரினான்.” நீதான் நல்லாக் குட்டையில ஊறுற எருமையாட்டம் தண்ணிக்குள்ளேயேக் கிடந்த” என்று  பதிலுக்கு அவனை வாரினான் நவீன்.

    அதற்குள் மோட்டார் ரூமுக்கு சென்று,உடை மாற்றி வந்த ஷன்மதி, அகல்யாவிடம்,

“டிரெஸ்,கரெக்டா இருக்கு அண்ணி. சூப்பர். எனக்குப் பிடிச்சிருக்கு.நல்லா இருக்கா? “ என்று கேட்டாள்.

   “ நல்லா இருக்கு அண்ணி. உங்களுக்குப் பிடிச்சிருந்தா, நீங்களே வச்சுக்கோங்க.” என்றாள் அகல்யா. “இருக்கட்டும் அண்ணி. தேவைப்படும் போது போட்டுக்கிறேன் “என்றாள் ஷன்மதி

    அதற்குள், அகல்யாவும், ரூபிணியும் சேர்ந்து,அனைத்து ஈரத் துணிகளையும் அலசிக் காயப் போட்டனர். “காத்துலயேக் காஞ்சிடும் அப்புறம் போகும் போது எடுத்துக்கலாம் “என்றாள் ரூபிணி.

    தனது உள்ளாடையைக் கூட, எந்த சங்கடமும் இல்லாமல் அலசிப் பிழிந்துக் காயப் போட்ட அகல்யாவைக் கண்டதும்,ஷன்மதிக்கு கண்கள் நிறைந்தது.

    மெல்லத் தன் அண்ணன் அருகில் சென்று “நீ ரொம்ப லக்கிண்ணா. அவங்களை நல்லாப் பாத்துக்கோ.

எதுக்காகவும் கஷ்டப்படுத்தாதண்ணா. “என்று ஆழ்ந்துக் கூறினாள்.

   “ நீ சொல்றதப் பார்த்தா, நான் என்னமோ உன்னை கஷ்டப்படுத்துற மாதிரில்ல இருக்கு? “என்றான் தீபக். அவனை முறைத்த ஷன்மதி ‘மூடு ‘என்பது போல சைகைக் காட்டினாள்.

   “ வரவர நான் புருஷனா, நீ புருஷனான்னே சந்தேகமா இருக்கு”. என்று அங்கலாய்த்தவனிடம் சிபி “டேய் சும்மா வாய் கிழியப் பேசுறியே? ஒரு நாள், அவளை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா? “என்று கேட்டான்.

    “அதென்ன மச்சான் அப்படி சொல்லிட்ட? ஒரு நாளென்ன, ஒரு மணிநேரம் கூட அவ இல்லாம இருக்க முடியாது. இந்த பேக்டரிக்குப் பக்கத்துல வீடு இருக்கிறவங்க சங்கு சத்தம் இல்லாம தூக்கம் வரலைன்னு சொல்வாங்களே? அது மாதிரி என் செல்லத்தோட தொணதொணப்பு

இல்லாம வாழ்க்கையே போரடிச்சுடும் “என்றான் தீபக்.

   ஷன்மதி அவனை முறைக்க,” ப்ராமிஸ் மதிம்மா “என்று அவள் தலையில் கை வைத்தான். அவள்,அவன் முதுகில் செல்லமாக ஒன்று போட,அனைவரும் சிரித்தபடியே, கோவிலருகே வந்தனர்.

   அவர்களைக் கண்ட வளர்மதி “யக்கா நம்மக் குடும்பமே நல்ல கலரா வெளுத்துட்டுதுகப் பாரு. வருஷக் கணக்கா இருந்த அழுக்கெல்லாம் ஊறித் தண்ணி அடிச்சிட்டு போயிட்டு போலேயே?” என்று கேலி செய்தாள்.

     “ஆமா சின்னத்தே நவீனும், ப்ரவீனும் ஒரு கிலோக் குறைஞ்சுட்டானுக. பாருங்க, காக்காய்ங்க எவ்வளவு சைனிங்கா இருக்கானுகன்னு” என்று தீபக்கும் கேலி செய்தான்.

    “அட ஆமா. ஆனா நம்ம தீபக்குத் தலைக்கு அடிச்ச சாயமும் போயிருச்சே? “என்று வளர்மதி பதில் கேலி செய்ய, “நீலச்சாயம் வெளுத்து போச்சு டும்டும்டும்” என்று நவீனும், ப்ரவீனும் பாடினார்கள்.

     அனைவரும் சிரித்தனர். அகல்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது போன்றக் கேலி, கிண்டல் எல்லாம் அவளுக்கு அதிசயமாக இருந்தது. நட்பு வட்டாரங்களில் கேலி கிண்டல் இருக்கும்.

    ஆனால் குடும்பத்துக்குள் கேலி, கிண்டல் எல்லாம் அவளுக்குப் புதியது. அவர்கள் வீட்டில் பழக்கமற்றது. ரத்னவேலு, வாசுகி இருவரும் கண்டிப்புடன் கூடிய பாசமேக் காட்டுவார்கள்.

    ஆனந்துக்கு அவள்மீது பாசம் மட்டுமே. அவன் அவளுக்கு விபரம் தெரிந்த நாள் முதல், வருடத்துக்கு ஒருமுறை, மாத விருந்தாளியாக வீட்டுக்கு வருபவன். அதனாலேயே அவளிடம் எந்தக் கண்டிப்பும் காட்டுவதில்லை.

     அவளும் அதற்கு வழிவைக்கவில்லை. ரூபிணி வந்த பிறகு சற்று கலகலப்பு வந்ததுதான், ஆனால் எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே சிக்கிக் கிடப்பவளுக்கு,அந்த கலகலப்பு எட்டவில்லை.

    ‘இவர்களானால் சித்தி, மகன்,மாமியார்,மருமகன்,என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சகஜமாகக் கிண்டல் செய்து வேடிக்கையாகப் பேசிக் கொள்கிறார்களே? என்னால் இவர்களோடுப் பொருந்திப் போக முடியுமா?’ என்றுக் குழம்பினாள்.

    அதேநேரம் கோவிலுக்கு பூசை செய்யும் குருக்கள் வெங்கடேசன் வந்து ரத்னவேலுவைக் கும்பிட்டார்.

  “  நமஸ்காரம் குருக்களே, இது நம்ம பாப்பாவோட வீட்டாளுங்க. இன்னைக்கு மலக்கோவில்ல வச்சு சிம்பிளா நம்ம பாப்பாவுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு. பெருசா யாருக்கும் சொல்லிக்கல.இவருதான் நம்ம மாப்பிள்ளை. அதான் சாமி கும்பிடலாம்னு கூட்டிட்டு வந்தேன்“என்று சிபியை அறிமுகம் செய்தார் ரத்னவேலு.

     குருக்களை நோக்கி, சிபி கும்பிட, “நல்லது. ரொம்ப சந்தோசம்.நல்லா இருக்கீங்களாய்யா? “என்று கேட்டபடியே பதில் வணக்கம் வைத்தவர், “ஒரு பத்து நிமிஷம் இருங்கோ, அதுக்குள்ள, பெருமாளுக்கு வஸ்திரம் மாத்தி, அலங்காரம் பண்ணிடுறேன்” என்றபடி, ரத்னவேலு வைத்திருந்த பைகளை எடுத்தபடி, கருவறைக்குள் சென்றார் குருக்கள்.

   அதற்குள் டீக்கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு வந்த ஆனந்த். “அப்பா நைட்டுக்கு டிபன் என்ன சொல்லட்டும்? “என்றபடி வந்தான்.”என்கிட்ட ஏன்டா கேக்குற?சம்பந்திக கிட்ட கேளு” என்றார் ரத்னவேலு

     “என்ன மாமா வேணும்? “ என்று ராகவனிடம் ஆனந்த் கேட்க” மதியம் சாப்பாடே நல்ல ஹெவி. காணாக்குறைக்கு இப்போ, வடை, பஜ்ஜி வேற. பஜ்ஜி நல்லாயிருக்குன்னு நாலஞ்சை உள்ள தள்ளிட்டேன். எனக்கு ரெண்டு இட்லி மட்டும் போதும்பா” என்றார் அவர்.

     “எனக்கும் அதே போதும்” என்று இட்லிக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகமாக, இளசுகளின் முகம் அஷ்டக் கோணலானது. அதைக் கவனித்த ஆனந்தும் “பெரியவங்க இட்லி போதும்னுட்டாங்க. நம்ம சின்னவங்களுக்கு என்ன சொல்லட்டும் புரோட்டாவா? சப்பாத்தியா? “ என்று கேட்டான்.

    “அப்பாடா எங்க இட்லி தான் நமக்கும் கிடைக்குமோன்னு பயந்துட்டேன் அத்தான் “என்றான் ப்ரவீன்.” உனக்கு என்ன வேணுமோ, சொல்லு ப்ரவீன். பீட்சா ஆர்டர் கூட இப்போ எங்க ஊருக்கும் வரும் “என்றான் ஆனந்த்.

     தீபக்குக்கு காலையில் காருக்குள் நடந்த சம்பாஷணை நினைவில் வர, சாவித்ரியை நோக்கி சிரித்தான். அவளும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு “இந்த ராத்திரில எதுக்கு அந்த காஞ்ச ரொட்டியை சாப்பிட்டுட்டு.., பேசாம சப்பாத்தியே சொல்லுப்பா “என்றாள்.

    “பெரியம்மா” என்று ப்ரவீன் சிணுங்கிட, “பொழுதுக்கும் அதேதான திங்கிற? அலுக்கவே இல்லையாடா? எல்லாம் சப்பாத்தி போதும். வேணும்னா புரோட்டா சொல்லிக்க”என்றாள் வளர்மதி.

    “என்னன்னு தான் அந்தக் காஞ்ச ரொட்டியத் திங்குதுகளோ?” என்று அலுத்தவர் “நீ சாப்பிடுவியாம்மா? “ என்று அகல்யாவிடம் சாவித்ரி கேட்க,” இல்லத்த எனக்கும் அவ்வளவாப் பிடிக்காது” என்றாள்.

     அதற்குள் கருவறையிலிருந்து மணி சத்தம் ஒலிக்க, அனைவரும் கோவிலுக்குள் சென்றனர். வெறும் பீடம் மட்டுமிருக்க, அதில் தங்க முலாம் பூசிய கண்கள், முக்கு, வாய் என அனைத்தும் சாற்றியிருந்தது.

     வண்ணக் கற்களாலான பட்டைப் பொருத்தப்பட்டு, அதன் நடுவில் சிறிய நாமமும் சாற்றியிருந்தது, அனைவர் மனதையும் கவர்ந்தது.

    பெண், மாப்பிள்ளை பெயரில் அர்ச்சனை செய்து, தீபாராதனைக் காட்டினார். சிபியின் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டவர்”எங்க பொண்ணு மகாலெட்சுமி. அவளை என்னைக்கும் நீங்காம இருங்கோ” என்று ஆசிர்வதித்தார்.

     அகல்யாவிடம் பூச்சரத்தைக் கொடுத்தவர்,” பெருமாள் மார்புலயேக் குடி கொண்ட மகாலெட்சுமி மாதிரி நீ உன் புருசனோட மனசுல என்னென்னைக்கும் நீங்கா இடம் பிடிக்கனும் “என்று அவளையும் புத்திமதியோடு,

ஆசிர்வதித்தார்.

    அனைவரின் மனமும் சந்தோசத்தில் நிறைந்தது. மற்றவர்களை வீட்டுக்கு போக சொல்லி ஆனந்த் இரவு டிபன் வாங்கி வருவதாக சொல்ல,அவனுடன் தீபக்,தானும் வருவதாக சென்றான்.

   “ ஏங்க சாமானெல்லாம் ஒத்தரூம்ல ரெடியா வச்சுட்டீங்களா? டிபனை லேட் பண்ணிராதீங்க. 9மணிக்கு குருக்கள் நேரம் குறிச்சுத் தந்தார்.”

     “நீங்க சீக்கிரம் வந்தாதான் நானும் மதியும், சாப்பிட்டு, ஒரு எட்டு மணிக்காவது ரெடி பண்ண ஆரம்பிக்கனும் “என்றாள்.”எதுக்கு? “ என்று ஆனந்த் கேட்க அவனை முறைத்த ரூபிணி,  “குருக்கள் ராத்திரில எதுக்கு நேரம் குறிச்சுத் தருவாரு?” என்று கேட்டாள்.

    அதன்பிறகே அவனுக்கு உறைத்திட, அசடு வழிந்தவனாக “சரி சரி சீக்கிரம் வந்துடுறேன். நீ எதுக்கும் எல்லா சாமானும் இருக்கான்னு செக் பண்ணிரு. ஏதாவது வாங்கனும்னா போன் பண்ணு” என்றபடி அவன் பைக்கை உதைக்க, தீபக் பின்புறம் தொற்றிக் கொண்டான்.

    அகல்யாவுக்கு லேசாகத் திகில் பரவ ஆரம்பித்தது….

         தொடரும்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page