நிஜமாகும் நினைவுகள்

அத்தியாயம் 9

    தனக்கு முதுகைக் காட்டியபடி படுத்திருந்த மனைவியை ஏக்கமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சிபி. அந்தப் பக்கம் திரும்பி இருந்தவளின் மனதுக்குள்ளோ பல சிந்தனைகள்.

      சிந்திப்பதற்கே பிறவி எடுத்தவள் போல எண்ண ஓட்டத்தில் தொலைந்திருந்தாள் அகல்யா.’ இப்போது அறிந்தவரையிலும் சிபி நல்லவர் போலத்தான் தெரிகிறார்.’

     ‘இப்போதைக்கு இரு வீட்டில் இருப்பவர்கள் மனம் சங்கடப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும். பிறகு காலப்போக்கில் மனம் மாறுவதென்றால் மாறட்டுமே’ என்று எண்ணினனாள்.

    உடனே அவளது மனசாட்சி அவளிடம் ‘அதென்ன மாறினால்?..மாறித்தானே ஆகனும்?இது என்ன பொம்மைக் கல்யாணமா? யாரு, என்னன்னேத் தெரியாத முரளியை நீ ஏத்துக்கலியா?’

    ‘அவன் உன்கிட்ட அவ்வளவு வெறுப்பைக் காட்டினப்பவும், உனக்கு அவன் மேல வருத்தம் தானே இருந்துச்சு? எப்படியாவது அவன் மனசு மாறாதானு நினைக்கல? ‘என்று இடித்தது.

     ‘ஆமா அது உண்மைதானே? ஆனா சிபி என்னை விரும்பித் தானே கல்யாணம் பண்ணியிருக்காரு? இருந்தாலும் முதல் மனைவிய அவ்வளவு ஈஸியா மறந்துட முடியுமா?’

   ‘ இல்ல இந்த ஆம்பிளைகளே இப்படித்தான், பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்பார்களே? அதுபோலவா? அப்படின்னா உடல் தேவைக்காகத்தான் என்னைக் கல்யாணம் பண்ணினாரா?’

    ‘ச்சேச்சே அப்படி இருந்தா, இந்த வாய்ப்பை ஏன் நழுவ விடப்போறாரு? ஒருவேளை என்னை ஆழம் பாக்குறாரோ?இல்ல முதல் மனைவியோட இதே மாதிரி இருந்திருந்த அந்த நினைவோட அலைக்கழிப்புல தவிர்த்தாரா?’

    ‘அப்படினா விளக்கு சம்பிரதாயம் பத்தி சொல்லும் போது, அவர் கண்ணுல தெரிஞ்சக் குறும்பு,குரல்ல தெரிஞ்ச தாபம்?.. இதுக்கு என்ன அர்த்தம்?’

   ‘  ஒண்ணுமே புரியலயே? முதல் நாளே மூளை சூடாகுற அளவுக் கண்டதையும் யோசிச்சுக்

குழம்பாத அகல். இதே போல அவர் மனசுல உன்னைப் பத்தி யோசிச்சா? என்ன பண்ணுவ? ‘என்று தன் மனசாட்சியை அடக்கிவிட்டுக் கண்களை மூடினாள் அகல்யா.

     லைட்டை ஆஃப் செய்துவிட்டுப் படுத்த சிபிக்கும் பழைய எண்ணங்கள். ‘ம்கூம் என் பலநாள் கனவு நனவாயிருச்சு. அதுக்குள்ள எத்தனை தடங்கல்கள்,மாற்றங்கள். கடைசில சுபம்.’

   ‘ ஆனா இவ மனசு முழுசா என்னை ஏத்துக்கனுமே? இன்னும் முன்னாள் கணவன் நினைவுல அழுந்தறாளோ என்னவோ? பாவம் அவ மனசு சரியாகுறவரைக் காத்திருக்கனும். முடியுமா?’

    ‘முடியனும். அவ உடம்ப வெல்றதில்ல வெற்றி. அவ மனசை வெல்லனும். எனக்கு எப்படி அவதான் என் உலகமோ, அதே போல அவளுக்கும் நான்தான் அவளோட உலகம், வாழ்க்கைனு மாறனும். மாத்தனும். என் அன்பைப் புரிய வைக்கனும்.’

   திரும்பி மனைவியைப் பார்க்க, இப்போது அவள் இவன் புறமாகத் திரும்பி,உறங்கிக் கொண்டிருந்தாள். காலையிலிருந்தே பயம், பதட்டம்,அழுகை என அவளை சோர்வாக்கியிருக்க அசந்து உறங்கினாள்.

    நாடியைக் கைகளால் தாங்கியபடி, உடலைக் குறுக்கி,குழந்தை போல சலனமின்றி உறங்குபவளைக் காண ,அவன் இதழில் மென்நகைப் பூத்தது.

      அவள் உறக்கம் கலையாமல், அவளை மெதுவாகத் தன்பக்கம் இழுக்க, அம்மா மீது கால் போட்டு உறங்கும் பழக்கத்தில் அகல்யா, அவன் மேல் காலைப் போட, முதலில் லேசாகத் திடுக்கிட்டாலும்,அவளை மெல்ல அணைத்து தன் நெஞ்சில் சாய்த்தான்.

    ஏதோ பாதுகாப்பு உணர்வுத் தோன்றிட, அகல்யாவும் அம்மா என்ற பழைய நினைவில்,சிபியைக் கட்டிக்கொண்டு நிம்மதியாக உறங்கினாள்.

    அவள் உச்சியில் மென் முத்தம் பதித்தவன், இந்தப் பொண்ணு எப்படி என் மனசுக்குள்ளப் புகுந்தாள்? என்று பழைய நினைவுகளை அசை போட்டபடி கண்மூடினான்.

    அகல்யா மூன்றாம் வருடம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். அந்த வருடம் கல்ச்சுரல்ஸ்,இவர்கள் கல்லூரியில் நடப்பதாக இருந்தது. அது ஒரு பெண்கள் கல்லூரி.

    பொதுவாக சட்டதிட்டங்கள்,அதிகம் உள்ள கல்லூரி என்றாலும், இது போலப் போட்டிகள், கல்ச்சுரலஸ் சமயங்களில் சில தளர்வுகள் உண்டு.

      மாநில அளவிலானப் போட்டிகளில் வேறு கல்லூரி, மாணவ, மாணவியருடன் இணைந்து ஆடல், பாடல் எனப் பங்கெடுக்கத் தடையில்லை.

   அப்படியொரு போட்டியில் தான் சிபி அகல்யாவை சந்தித்தான். அவன் கல்லூரி மாணவன் நந்தகுமாருடன் அகல்யா பாடுவதாக இருந்தாள்.

    முதல் பார்வையிலேயே சிபி அவளிடம் சரணடைந்திருந்தான். ஆனால் அகல்யா அவனுக்கு மரியாதையாக ஒருமுறை வணக்கம் வைத்ததோடு சரி. மற்றபடி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

     ரிகர்சல் நேரங்களில்,மேற்பார்வை இடுபவன் போல,சற்றுத் தள்ளி அமர்ந்து அவளை ரசித்துக் கொண்டிருப்பான்.

    அன்றைக்கெல்லாம் அகல்யா பட்டாம்பூச்சி போல சிறகடித்திருந்தாள். ஆர்ப்பாட்டம் என்று கிடையாது. ஆனால் தோழிகளுடன் கலகலப்பாக இருப்பாள்.

     இப்போதோ அழுதுவடிந்துகொண்டு என்னவாக மாறிவிட்டாள்?பெருமூச்சுடன், மீண்டும் பழைய நிகழ்வுகளில் மூழ்கினான்.நந்த குமார் பிஜி முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான்.

    அண்ணா, அண்ணா என்று அவனிடம் அன்பாக எந்த அலட்டலுமில்லாமல் பேசியவளை சிபிக்கு மிகவும் பிடித்துதான் போனது. சிபி முதலிலியே நந்தகுமாரிடம் சொல்லிவைத்துவிட்டான்.

     இல்லாவிட்டால் அவன் பாட்டுக்கு, ஏதுவும் கற்பனை செய்துவிடக்கூடாதே? பிறகு முதலுக்கே மோசமாகவிடும். அதனால் முதலிலேயேத் தான் கர்சீப்பைப் போட்டுவிட்டதாக சொல்லிவிட்டான்.

   நந்தக்குமாரை ஒர  சிலவயதே  மூத்தவன் என்பதால், பழகுவதில் பெரியத் தடை இருக்கவில்லை. பொதுவாக மாணவர்கள் பெயரளவுக்கு சார் என்றுக் கூப்பிட்டாலும் நண்பர்கள் போலத்தான் பழகினார்கள்.

     பொதுவாகவே சிபி நல்ல கலகலப்பானவன். அதனால் மாணவர்கள் மத்தியில் அவனுக்கு தனிஇடமுண்டு. பாடத்தைப் புரியும்படி சொல்லிக் கொடுத்து, அதில் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்கும் வித்தையறிந்தவன்.

       அகல்யா அவர்கள் வீட்டில் செய்திருந்தப் பலகாரத்தை தனது தோழிகளுக்காகக் கொண்டு வந்தபோது, கொஞ்சம் நந்தகுமாருக்கும் கொடுக்க, அவன் கூடுதலாகக் கேட்டு வாங்கிக் கொண்டான்.

     பிறகு?, சிபி நிச்சயம் அவனிடமிருந்துப் பறித்துக் கொள்வானே? நந்தகுமார் அவனிடம் கொடுத்தபோது பிரசாதம் போலப் பெற்றுக் கொண்டதைக் கண்ட நந்தகுமார் “சார் இதெல்லாம் ஓவர் “என்றான்.

  “  என்னடா ஓவர்? “என்று கேட்டான் சிபி. “சார் நீங்க ஒரு புரொபஸர். நீங்க இப்படி ஒரு ஸ்டூடன்டை லவ் பண்ணறது அநியாயமில்லையா? “என்றான்.

   “ டேய் நீ சொல்றதப் பாத்தா எந்த புரொபசரும் கல்யாணம் பண்ணவே முடியாது. என்ன முழிக்கிற? எல்லாப் பொண்ணுங்களும் ஏதாவது ஒரு காலேஜ்ல ஸ்டுடென்ட் தானேடா? “என்றவனைக் கடுப்புடன் பார்த்தான் நந்தகுமார்.

   “  நீ சொல்றது சரின்னே வச்சுகிட்டாலும், அவ ஒண்ணும் என்னோட டைரக்ட் ஸ்டுடென்ட் இல்லையே?அதனால உன் வாயக் கொஞ்சம் சாத்திக்கிறியா? “என்றான் சிபி.

   “  ம்ம்ம் அந்த பொண்ணு மூச்சுக்கு முன்னூறு தடவ அண்ணா அண்ணானு அன்பாக் கூப்பிடுது.இதெல்லாம் தெரிஞ்சா,..என்ன சொல்லுமோ?எங்க போய் முடியுமோ?”என்று பெருமூச்சு விட்டவனிடம் “கல்யாணத்துல தான் “என்றான் சிபி. 

   “டேய் உன் தங்கச்சிய கண்கலங்காம நான் பாத்துக்குவேன்டா. நீ மட்டும் அவ ப்ஃரெண்டு சுதாவ டாவடிக்கிற? நான் ஏதாவது சொன்னேனா? நீ என்ன பண்ற, உன் சுதாகிட்ட பேசும் போது அப்படியே என் செல்லத்தைப் பத்தியும் கேட்டு சொல்லு சரியா? “என்றான் சிபி.

   “ சார் அதெப்படி முடியும்?  நானே இன்னும் சைட்டு தான் அடிச்சிட்டு இருக்கேன்.இதுல இன்னொரு பொண்ணைப் பத்தி எப்படி விசாரிக்கிறது? “என்று பதறினான் நந்தகுமார்.

   “அதெல்லாம் செய்யலாம். அதான் மூணுநாள் டைமிருக்கே? இது நீ எனக்கு தரப் போற குருதட்சணை “என்று சொல்லி நந்தகுமாரை நொந்தகுமாராக்கினான் சிபி.

     அப்படியெல்லாம் அவன் கேட்டவுடன்,சுதாவும் சொல்லிவிடவில்லை. ஊர் நாட்டாமை குணம் தெரிந்தவளாயிற்றே? குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அளவில் நிறுத்திக் கொண்டவள், இவர்களது விசாரணை பற்றித் நோழியிடமும் மறைத்துவிட்டாள்.பிறகு அவள் வீட்டில் சொல்லிவிட்டாள், இவள்பாடு என்னாவது?.

     நந்தகுமாரும் சுதாவை சைட்டடித்த அளவில் நிறுத்திவிட்டான். என்று பின்னாளில் தெரிந்து கொண்டான். நந்தகுமாருடன் அகல்யா இணைந்து பாடிய போதும், சிபியின் மனதுக்குள் தானும் அவளும் பாடுவது போலத்தான் நினைத்து கொள்வான்.

    “ ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்

உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே!

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?”

 மனதுக்குள் அந்தப் பாடல் ஓட, அப்படியேக் கண்ணயர்ந்தான்….

        தொடரும்..

    

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page