நிஜமாகும் நினைவுகள்

அத்தியாயம் 10

   

     அகல்யாவும், நந்தகுமாரும் இணைந்து பாடிய அந்தப் பாடலை டூயட் போல அடிக்கடிப் பாடிக் கொண்டிருந்தான். 

“சார் உஙக இன்வால்வ்மென்டை,

ரொம்பவும் பாராட்டுறேன்” என்று வேறொரு மாணவன் சொன்ன போது சிபி சிரித்துக் கொண்டான்.

     உண்மையில் அவன் நிலையும் அதேதான். ஒருதலையாக மனதுக்குள் அவளிடம் காதலாகிக் கசிந்துருகிக் கொண்டிருந்தான்.

     சுதாவும் தன் பங்குக்கு நந்தகுமாரிடம் கிட்டதட்ட மிரட்டலாகவே ரத்னவேலுவைப் பற்றி சொல்லி வைத்தாள். “எங்க ஊரு நாட்டாமை மாதிரி அவரு. கௌரவத்துக்கு ஒரு பிரச்சனை வந்தா அவ்வளவுதான் “

   “ போதாக்குறைக்கு அவ அண்ணன் மிலிட்டரி. சுட்டுப் பறத்திட்டுத் தேசத்துரோகினு உங்களுக்குப் பட்டத்தை வாங்கிக் குடுத்துருவாரு பார்த்துக்கோங்க.

ஜாக்கிரதை ” என்றாள்.

    பதறியடித்து “அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா பார்த்தாரு,அவ்வளவுதான் வேற எதுவுமில்ல “என்று மழுப்பினான் நந்தகுமார்.

   பிறகு அந்தக் கல்லூரிப் பெண்களிடமிருந்தே டூ ஸ்டெப் பேக்கடித்தான் நந்தகுமார். நம் நாயகன் அப்படி பயந்து ஒதுங்குகிறவனில்லை.”போடாடேய் அதெல்லாம் உன்னை மாதிரி டாவடிக்கிறவங்களைத் தான் நொங்கைக் கழட்டிருவாங்க. நான் கல்யாணம் பண்ண பொண்ணு கேட்டுல்லப் போகப் போறேன்?’என்றான்.

     “சார் உசுரு முக்கியம். ஊரு ஒரு மாதிரி போலத் தெரியுது சார். வந்தோமா, பாடுனோமா, ஆடுனோமா பரிசுக் கிடைச்சா வாங்கினோமோனு,உருப்படியா ஊரு போய் சேருவோம் சார்.”

     “எல்லாத்தையும் விட இப்போ நீங்க ஒரு வாத்தியார். ஏதாவது ஏடாகூடமாகிப் போச்சுன்னா நம்ம காலேஜ்க்கு கெட்ட பேராயிடும் “என்று நந்தகுமார் சொல்ல அதிலிருந்த உண்மை சிபியை மௌனமாக்கியது.

     கல்சுரலஸ் முடிந்து செல்லும் வரையிலும்,சிபிக்கு தனது காதலை சொல்ல தயக்கம். காரணம் கல்லூரி வேலை.’ சரி பிற்பாடு,நேரடியாக பெண் கேட்டே செல்லலாம்’ என்று விட்டுவிட்டான்.

     இருந்தாலும் வீட்டில் சொல்லும் போது, ஓரளவுக்கு அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்று எண்ணி, நேரம் கிடைக்கும் போது,தன் உயிர் நண்பன் தீபக்குடன் காலேஜ் பஸ் ஸ்டாப்புக்கு நேரில் இருந்த டீக்கடையில் ஆஜர் ஆவதுண்டு.

   அப்படி அவளைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்த பிறகு,வீட்டில் சொன்னால், அதற்கு முன்னமே விதி விளையாடிவிட்டிருந்தது. பிறகு நெஞ்சில் அவள் மீதான நேசத்தை மறைத்துப் பாதுகாத்து வைத்தான்.

    ஓராயிரம் கனவுகளோடு அவளுடனான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டவனுக்கு, கிடைத்ததோ ஏமாற்றம். விதியை நொந்து, வெந்துக் கிடந்தவனின் வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க செய்தவன் அதே நொந்தகுமார் ச்சீய் நந்தகுமார்.

    முரளி இறந்துவிட, அகல்யா மீண்டும் அம்மா வீட்டில் வாசம் என்ற சேதியை சொன்ன போது,‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொன்ன போது, ராமர் அடைந்த அதேப் பரவசத்தை அடைந்தான் சிபி.

    “ சார் நீங்க ரெண்டு பேர்தான் இணையனும்னு விதிச்சிருக்கு. இல்லாமப் போனா,இடையில யாரோ மாத்த நினைக்கப் போய் அது தப்பா முடியுமா? என்ன அந்த ஊருல மறுகல்யாணம் அவ்வளவு சுலபமில்ல. அதான் கொஞ்சம் இடிக்குது “என்றான் நந்தகுமார்.

   “ யாரு சாமி நீ?இவ்வளவு நாளா எங்க இருந்த? என் வாழ்க்கைல வசந்தத்தை கொண்டு வர அந்தக் கடவுளே உன்னைப் படைச்சாரு போல “என்று அவனைக் கட்டிக் கொண்டான் சிபி.

    பிறகு நடையாய் நடந்து செருப்புத் தேய, ஆனந்தை தற்சமயமாக சந்திப்பது போலப், பேசியது எல்லாம் சிபியின் மேற்பார்வையில் தீபக் செய்தது.

     ‘அப்போதும் ஏகப்பட்டத் தடைகள். ஏன் அகல்யாவை சம்மதிக்க வைக்கவே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்ததே? இதோ இப்போ பூக்குவியலா என் கையில் ‘என்று கனவிலும் தனது பழைய நினைவுகளில் கரைந்தான் சிபி.

    பொதுவாக அகல்யா வீட்டில் அவளும், அம்மாவும் சீக்கிரம் எழுவதுதான் வழக்கம். “வேலை இருக்குதோ இல்லையோ காலைல எந்திரிக்கது நல்ல பழக்கம் “என்று அம்மா சொல்வதுண்டு.

     அதேப் பழக்கத்தில் அதிகாலை விழிப்புத் தட்டக்,கண் திறந்தவள் திடுக்கிட்டுப் போனாள்.  ‘இது என்ன? இவரை நான் கட்டிப்பிடிச்சிட்டுத் தூங்கியிருக்கேன்?

கடவுளே அவரு என்ன நினைச்சிருப்பாரு? சீய்ய் ‘என்று தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

      படக்கென எழுந்து அவனிடம் காட்டிக் கொள்ளாமல், மெல்ல அவன் உணர்ந்து விடாதவாறு எழுந்தாள். மெதுவாகத் திரும்பி அவன் உறங்குவதை உறுதி செய்தவளாகக் குடுகுடுவென பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

     காலைக் கடன்களை முடித்துக்,குளித்து வெளியே வந்தவளுக்கு,அடுத்த சங்கடம்.பொதுவாக வீட்டில் அம்மாவும், அவளும் மட்டுமே இருப்பார்கள். அகல்யா வீடு திரும்பியதிலிருந்து ரத்னவேலு வேறு அறையில் வாசம் செய்தார்.

     எனவே குளித்து உடை மாற்றுவதில் அவளுக்கு எந்த சங்கடமும் இருந்ததில்லை. பகலில் நைட்டிக்கு அனுமதி கிடையாது. எனவே டவலைச் சுற்றிக் கொண்டு வந்து, சுடிதாரோ, இல்லை சேலையோ விருப்பத்துக்கேற்றபடி அணிந்து கொள்வாள்.

    இன்று தர்மசங்கடமான நிலைமை. ஒற்றை அறைதான். அதற்குள் தான் அவள் உடை மாற்றியாக வேண்டும். ரவிக்கை, சேலை என்று மாற்ற வேண்டும். சும்மா ஏனோதானோவெனக் கட்டுவதும் இன்றைக்கு ஆகாத காரியம்.

    எப்போதும் போல டவலை சுற்றிக் கொண்டு வருவது சாத்தியமில்லை. பாவாடையை ஏற்றிக் கட்டியவள், டவலால் மூடியபடிக் கட்டிலின் அருகே வந்து அவன் உறங்குகிறானா?என்றுக் குனிந்து பார்த்தாள்.

     கண்களை மூடியபடி இருந்த,அவனிடமிருந்து சீரான சுவாசம் வர,சற்றே ஆசுவாசமாக உணர்ந்தவள், போர்வையை எடுத்து அவன் தலைவரை மூடிவிட்டாள்.

     எந்த சலனமும் அவனிடமிருந்து வராமல் போகவும், நிம்மதிப் பெருமூச்சை விட்டவள், திரும்பியபடி தனது உடைகளை மாற்றத் துவங்கினாள்.

    சேலையைக் கட்டி முடித்துத்,தலையை ஈரம் போகத் துவட்டியவள், குளிப் பின்னலிட்டுத்,தனது நீண்ட கூந்தலின் அடியில் சிறு முடிச்சிட்டாள்.

     கொஞ்சக் காலமாக மறந்து விட்டிருந்த அலங்காரத்தை செய்தாள். கண்ணுக்கு மையெழுதி, லேசாகப் பவுடர் ஒற்றிப் பொட்டு வைத்தாள். கண்ணுக்கு மையிடும் போது, முரளியின் அம்மா வசை பாடியது, நினைவில் வந்தது.

    அகல்யா பெரிதாக அலங்காரம் செய்பவளல்ல. ஆனால் பெரிய விழிகளில் கண்மை இடும் போது மேலும் அழகாகத் தெரிவதாக வாசுகி சொல்ல அதை ஆசையுடன் செய்வாள்.

     அப்படி அவள் மையிட்ட போது,”புருசன் அங்க கிடந்து,பனியிலயும் வெயில்லயும் காஞ்சுட்டு கிடக்கான். இங்க இவ மை போட்டு சிங்காரிச்சுட்டு அலையுதா. கொஞ்சமாவது இங்கிதம் வேண்டாம்? புருஷன் இல்லாத நேரத்துல இப்படி சீவி சிங்காரிச்சா, நாலுபேரு நாக்கு மேலப் பல்லப் போட்டு பேசுவாளேனு பயம்பத்து வேண்டாம்? “ என்று வார்த்தைகளால் தீயாய் சுட, மை டப்பாவை தூர எறிந்தாள் அகல்யா.

    இப்போதும் லேசாக பயம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் இன்று யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.தலையைப் பின்னிய பிறகு, ஸ்டூலில் வைத்திருந்தப் பூவை தலையில் வைத்தவளுக்கு மென்நகைப் பூத்தது.

   மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தாள். போர்வை மூடியது மூடியபடி,அப்படியே

இருந்தது. சத்தம் வராமல் கதைவைத் திறந்து,வெளியேறினாள்.

     அவள் வெளியேறியதும் போர்வை மெல்ல விலக, குறும்புடன் சிரித்தபடி திரும்பிப் படுத்தான் சிபி.தன் கையில் கனம் குறைந்தது போலத் தோன்றியதுமே விழிப்பு வந்தவனுக்கு முன், வெட்கமாய் தலையடித்துக் கொண்ட அகல்யாவைக் காணவும் கண்களை மூடியபடி நடப்பதைக் கவனித்தான்.

    மீண்டும் கண்ணயரந்தவனை,பாத்ரூம் தாள்ப்பாழ் விலகும் சத்தம் எழுப்பி விட,அரைக்கண் மூடியபடிக் கிடந்தான். யோசனையாய் அகல்யா அவனருகே வரவும்,இமைகளை இம்மியளவுத் தெரியும் படி மூடிக் கொண்டான்.

    மங்கலாய் தெரிந்தவள் உற்று உற்று அவனைப் பார்த்த போது, ஈரம் மினுமினுத்த அவள் சரீரம் காலையிலேயே அந்தக் குளிரிலும் அவனை சூடாக்கியது. கட்டுப்படுத்தியவனாக அமைதியாக் கிடந்தவனை, போர்வையால் மூடிவிட,உள்ளுக்குள் சிரிப்புக் குமிழியிட்டது.

   ஓட்டைக்கண் போட்டு அவளை ரசித்தபடி,அவன் படுத்திருந்தான்.முதுகுக் காட்டியபடி உடைமாற்றியபோது “ரொம்பத்தான்” என்று மனதுக்குள் சலித்தான்.’இருந்தாலும் கண்ணுக்கு அவ மையிட்டப்போத் தயங்கி அவ முகம் கலங்குச்சே?’

     ‘ஏதாவதுபழைய நினைவோ? ம்கூம் எப்போ தான் எல்லாம் சரியாகுமோ?’ என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டவன், விட்ட உறக்கத்தைத் தொடர்ந்தான்….

        தொடரும்..

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page