நிஜமாகும் நினைவுகள்

அத்தியாயம் 11

    பாதக் கொலுசு சங்கீதமாய் கூட வர, அகல்யா வீட்டின் பக்கவாட்டு இடத்தை சுற்றிக் கொண்டு, முன்புறம் வந்தாள்         வேலைகளுக்கு

உதவிக்கு வரும் பாப்பாத்தி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்.

     அகல்யாவைக் கண்டவள் “என்னம்மா நீயே எழுந்து வந்துட்டியா? யாராவது எழுப்ப வருவாங்களே? பச்சத் தண்ணிலயாக் குளிச்ச? என்கிட்ட சொல்லக்கூடாதா? வெந்நி வச்சுத் தந்துருப்பேன்ல?”என படபடத்தாள்.

     “இருக்கட்டும்க்கா. எனக்கு எப்பவும் பழக்கம் தானே? இப்போ என்ன புதுசா? பாவம் எல்லாரும் வேலைல அசந்துருப்பாங்க. வீண் தொந்திரவு.” என்று புன்னகைத்தாள்.

     “அதில்லத் தாயி அசதி உனக்கும் தானே இருக்கும்? “என அவள் நமுட்டு சிரிப்பை உதிர்க்க, கவனியாதவள் போல, “அம்மா எழுந்துட்டாங்களா? கோலம் நீங்கப் போடுறீங்களா? இல்ல நான் போடவா?” எனப் பேச்சை மாற்றினாள் அகல்யா.

    “அம்மா எந்திரிச்சாச்சு. நீ போம்மா. நான் போடுதேன்” என்றபடி கோலமாவு டப்பாவை எடுத்தாள் பாப்பாத்தி.அகல்யா நேராக அடுக்களைக்கு சென்றாள்.

      உள்ளே வாசுகி காபி பில்டரின் தலையில் குட்டிக் கொண்டிருக்க, பின்புறமாக சென்று அன்னையை அணைத்துக் கொண்டாள்.

     மகளை வாஞ்சையோடுப் பார்த்த வாசுகி, மகளின் தோற்றத்தில் மனம் நிறைந்து, “அதுக்குள்ள எந்திரிச்சிட்டியாமா?” என்று கேட்டாள்.

    “நீ பழக்குன பழக்கம் தானேம்மா? தானாவே முழிப்பு வந்துட்டு. சரி சும்மா என்ன பண்றது?அதான் உனக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு வந்தேன்” என்றாள் அகல்யா.

   “ஒண்ணும் செய்யாதே. கடையில சொல்லிக்கலாம்னு, உங்க அண்ணனும், அண்ணியும் ஒரேப் படுத்தல். அம்பது பேருக்கு சமைக்கிறவ, இருபது பேருக்கு செய்ய மாட்டேனா? கேட்கவே மாட்டேனுட்டாங்க” என்று குறைபட்டாள் வாசுகி.

     “உனக்கு உடம்பு முடியலில்லம்மா? அதான் சொல்லிருக்காங்க. இப்போ நானும் கிளம்பிருவேன் அப்புறம் நீ தனியா.. “ என்று முடிக்க முடியாமல் கண் கலங்கினாள் அகல்யா.

    குபுக்கென கண்ணீர் வாசுகிக்கும் வந்தது. “எந்தங்கம் நீ போறது கஷ்டமா இருக்குனாலும், உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சதுல எனக்கு ரொம்ப நிம்மதிம்மா” என்று மகளின் கன்னத்தோடு கன்னம் வைத்துக் கண்ணீர் விட்டாள் வாசுகி.

    “அய்ய, யக்கா, நீ எதுக்கு அந்தப் புள்ளைய அழவிட்டு, நீயும்,அழுது உடம்பக் கெடுத்துக்கிற? எல்லாம் புள்ள நல்லா இருக்கும் பாரு” என்றபடி பாப்பாத்தி உள்ளே வந்தாள்.

    கண்ணீரைத் துடைத்தவளுக்கும் சேர்த்துத் தானே காபி கலந்து கொடுத்து விட்டு , தனக்கும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் பாப்பாத்தி.

    “ஏந் தாயி அங்க டவுனுல பசும்பாலெல்லாம் கிடைக்குமா? பாக்கெட்ல வாரதெல்லாம் பவுடராமே? மேலத் தெரு காமாட்சி சொன்னா “என்று பேச்சை மாற்றினாள் பாப்பாத்தி.

    “கிடைக்குமா இருக்கும்கா. தெரியல. “என்றாள் அகல்யா. “கிடைக்கலைன்னாலும் பழகிக்கோ அகலுமா. “என்ற தாயின் வார்த்தைகளில் லேசாக முகம் சுருங்கினாள் அகல்யா.

    இப்படி பழகிக்கோ என்று சொன்னதால் தானே பலப் பிடித்த விசயங்களைக் கூட மறந்தே போனாள். ஆனால் அன்னையின் அடுத்தக் கேள்வியில் முகம் மலர்ந்தாள்.

     “ஏம்மா மாப்ள உன்கிட்ட அன்பா பழகுறாரா? நல்ல மனுஷங்களாத் தெரியுறாங்க. வேற ஒருத்தங்களா இருந்தா, உஙக அத்தைக்காரி செஞ்ச வேலைக்கும், அவ மவன் பேசுனதையும் பொருட்படுத்தாம இருப்பாங்களா? “என்றாள் வாசுகி.

     முகம் மலரக் காபியைக் குடிக்கும் மகளைக் கண்டு நிம்மதியுற்றவளாகத் தானும் காபியை அருந்தியபடி, “கூட ரெண்டு நாள் இருந்து போகலாம்னா மாப்ளைக்கு லீவு இல்லையாமே? ஒரு கல்யாணத்துக்குக் கூடவா லீவு தர மாட்டானுக?”

         “அப்பாவும் பெருசா சடங்கு, சம்பிரதாயம் வேண்டாம்னுட்டாரு. எனக்கு தான் மனசுக் கேக்கல. உன்னைக் கொண்டு விடறதுக்கு அண்ணனும், அண்ணியும் வருவாங்க. ரெண்டாம் மறுவீடுலாம் மருமகன் சௌகர்யம் பாத்து வருவாங்களாம்”என்று அங்கலாய்த்தாள் வாசுகி.

     மீண்டும் ஒரு புலம்பெயர்தல். லேசாக பயம் எட்டிப்பார்த்தது.சென்ற முறையின் தாக்கம் இன்னும் குறையவில்லை.

     மீண்டும் பழகி அறிந்திடாத ஆட்களுடன் வாழவேண்டும். ‘கூடுதலாக ரெண்டு நாள் லீவு கூட ஏன் எடுக்கல? அப்படி என்ன அவசரம்?எக்ஸ் ஃவைபோட ஹனிமூன் எல்லாம் போயிருக்கலாம். இப்போ அது போல வேண்டாம்னு நினைக்கிறாரோ?ஏன்?’

     ‘அட மனம்எனும் குரங்கே காலையிலேயேக் கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டியா?’என்றுத் தன்னையேத் திட்டிக் கொண்டாள். வாசுகி அவள் போக்கில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள் ஏதாவது அகல்யா காதில் விழுந்தால் தானே?

   ‘ புதுசா என்ன சொல்லப் போறாங்க. அதே பழையப் பாட்டு தான். மாமியார் மாமனார் மெச்சும்படி நடக்கனும். புருசன்கிட்ட அனுசரனையா நடக்கனும். பொறந்த வீட்டுக்கு களங்கம் உண்டாக்கிறாதே இதுதானே’ என்று சலித்துக் கொண்டாள்.

      காலடி அரவம் கேட்டு நிமிர்ந்தால், ரூபிணி அவசரமாக அங்கு வந்துகொண்டிருந்தாள். “அட அகல் நீயே எழுந்து வந்துட்டியா?சாரிம்மா கொஞ்சம் அசதிலக் கண்ணசந்துட்டேன் “என்றாள்.

    “பரவால்ல அண்ணி. வழக்கம் போலவே முழிப்பு வந்துட்டு. அதான் நானே வந்துட்டேன். எவ்வளவு வேலை பார்த்தீங்க,அசதியாத்தானே இருக்கும்? “ என புன்னகைத்தாள் அகல்யா.

    செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டி விட்டு, ஃப்ரெஸ்ஸாகி வந்தவளுக்கு வாசுகி கையில் காபியைக் கொடுத்தாள். வாங்கியபடியே நாத்தனாரை கூர்ந்து அளந்தாள் ரூபிணி.

     “என்ன அண்ணி அப்படிப் பார்க்குறீங்க? “என்று கேட்டவளிடம் “இல்ல முகத்துல அப்படி ஒரு ஒளிவட்டம் தெரியுதே அதான் என்ன ரகசியம்னு பார்த்தேன் “என்றாள் ரூபிணி.

    “அ.. அதெல்லாம் இல்லையே நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். “என்று சமாளிப்பாக சொன்னாள் அகல்யா. “இல்லவே இல்ல நல்ல வித்தியாசம் தெரியுது வேணும்னா அத்தையக் கேளு, ஏன் பாப்பாத்தி அக்காட்டக் கூட கேளு “என்றபடி காபியை உறிஞ்சினாள் ரூபிணி.

     மருமகளின் கேலியை ரசித்தபடி புன்னகையோடு நின்றாள் வாசுகி.”நான் அப்பவே கவனிச்சிட்டேன் ரூபிம்மா” என்று கிளுக்கினாள் பாப்பாத்தி.

    “இதோ அண்ணா வந்துட்டான். அவனுக்கு காபியைக் குடுங்க அண்ணி”என்று சமாளித்து தனது அறைக்குள் சென்றவளைக் கண்டு மற்றவர்கள் கேலியாக சிரிக்க, வாசுகிக்கு பூரித்துப் போனது.

     ஏதோ இந்தப் பெண்ணின் புண்ணியத்தால் பட்டு போனதாக நினைத்த,தனது மகள் வாழ்வு துளிர் விட்டதில் நிம்மதி ஏற்பட மருமகளை நன்றியோடுப் பார்த்தாள்

     அறைக்குள் ஓடிய அகல்யாவுக்கோ திணறியது.அதேநேரம் அவர்களின் கேலியும் இனிக்கத்தான் செய்தது. ‘அவர்கள் சொல்வது போல உண்மையாக ஏதேனும் நிகழ்ந்திருந்தால், சந்தோசம் இன்னும் அதிகமா இருந்திருக்குமோ?’என நினைத்தவள் திடுக்கிட்டாள்.

      ‘என்ன இது ஒரே நாள் இரவில் இப்படி மாற முடியுமா? எப்படி? ஒருவேளை இதோட சக்தியா?’ என்றுத் தன் தாலியைத் தொட்டுப் பார்த்தாள்.

     ‘பக்கத்து வீட்டு ராணியக்கா தன் சின்ன பிள்ளைங்கத் தாலி பற்றிக் கேட்டப்ப, “நடுவுல இருக்கிறது உங்க அப்பா, வலதுபக்கம் இருக்கது நீ அரவிந்து, இடதுபக்கம் இருக்கிறது நீ ஆனந்தி உங்க மூணுபேரையும் அம்மா நெஞ்சுக்குள்ள சுமக்கிறதாலத்தான் நெஞ்சுலத் தாலியப் போட்டிருக்கேன்” என்று சொன்னாளே?’

     என்ன அழகான விளக்கம்? அவளுக்கும் அதேபோலக் கற்பனை செய்யத் தோன்றியது. ‘அதுதான் நேத்து ராத்திரி சீக்கிரம் உங்க அம்மா கூப்பிடுற மாதிரி நீயும் என்னைக் கூப்பிடனும்னு சொன்னாரே?’

     அதை எண்ணிய போது நாணம் அவளை செம்மையாக்கியது.”அகலு “என்ற அன்னையின் அழைப்பில் தன்னிலை அடைந்தவள்,வெளியே வந்தாள்.

     “அத்தை, மாமாலாம் எழுந்துட்டாங்களானு பாரு. எல்லாருக்கும் காபி குடுக்கனும்ல? அப்படியே மருமகனுக்கும் கொண்டு போயிக் குடுத்திரு” என்றாள் வாசுகி.

    அவள் தலையசைக்க ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். கூடத்தில் அனைவரும் அமர அகல்யா அனைவருக்கும் காபி கொடுத்தாள். எளிமையான அலங்காரமானாலும் சுடர்விடும் ஜோதியாக மின்னிய மருமகளுக்கு நெட்டிமுறித்துத் திருஷ்டி கழித்தாள் சாவித்திரி.

    “தங்கம் எங்கண்ணேப் பட்டுடும் “என்று சொல்ல, “ஹச்”சென தும்மினான் தீபக். “ஜலதோஷம் உனக்கு தும்மல் வரலியா மா? அதான் நம்ம அத்தை ஐஸ் வச்சாங்களே? “ என அகல்யாவிடம் கேட்டு, சாவித்திரியை வம்பிழுத்தான்.

    “போடுக்கா தலையிலேயே இன்னும் நாலு ஐஸ” என்று பதிலடிக் கொடுத்தாள் வளர்மதி. சிரித்தபடியே “துரை இன்னும் எழுந்து வரலியாக்கும்? “என்ற போதே”எதுக்குடா என்னைத் தேடுற? “என்றபடி நண்பன் அருகில் அமர்ந்தான் சிபி.

    அவன் கையில் காபியைக் கொடுத்த அகல்யாவிடம்,” என்ன அண்ணி விளக்க அணையாமப் பார்த்துக்கிட்டீங்களா?” எனக் கண்ணடித்தாள் ஷன்மதி.

    கூட்டத்துக்கு நடுவே வைத்து இப்படிக் கேட்டதில் திடுக்கிட்ட அகல்யா, மலங்க மலங்க விழித்தபடி கணவனைப் பார்க்க, “ஹே லூசு சின்னப்பசங்க இருக்காங்க பாரு “எனக் கண்டித்தாள் சாவித்திரி.

    “அடேயப்பா அவனுக ஒண்ணுமே தெரியாத பாப்பாங்க, விட்டா அவனுக மச்சானுக்கே டியூசன் எடுப்பானுக” என்று தீபக்கும் கூற செய்வதறியாது முழித்தாள் அகல்யா.

     அவளை அப்படிப் பார்க்கவும் அனைவருக்கும், சிபி உட்பட சிரிப்பு வந்தது. “அணைஞ்சிருக்காது போல மதி. காலையிலேயேக் கவனிச்சுட்டேன். முகம் பல்பு போட்ட மாதிரி பிரகாசமா இருக்கே? “ என்று தன் பங்குக்கு ரூபிணியும் வார,அகல்யா திண்டாடிப் போனாள்.

      “சும்மா கிண்டல் பண்ணுவாங்க அகி. அதெல்லாம் நாமக் கண்டுக்கக்கூடாது” என மனைவிக்குப் பரிந்து வந்தான் சிபி.” அட அகியாமே? நல்லா இருக்கே இது நீங்க மட்டுமே கூப்பிட அனுமதியாண்ணா? “ என ரூபிணி கேட்டாள்.

    சிரித்தபடி தலையை ஆட்டினான் சிபி. “ம்க்கும் நான் நேத்து சாயங்காலம் நமக்குள்ள மட்டும் விளையாடல் நிகழ்ச்சி வச்சுக்கனும்னு பொருள் எல்லாம் எவ்வளவு ஆசையாக் கொண்டுவந்தேன். எதுவும் நடக்கல “என சிணுங்கினாள் ஷன்மதி.

      ஏனோ ஒரு ஏக்கம் அவள் கண்ணில் வழிந்தது….

        தொடரும்..

 

   

    

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page