நிஜம் – 5

தரையில் விழுந்த பொருளை குனிந்து எடுக்காமல் வளர்ந்த பெண் அவள். இன்று எத்தனை பேர் இருக்கும் வீட்டில், அவள் அத்தனை பேருக்கும் பம்பரமாய் சுழன்று வேலை செய்வதை அவரால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் உழைப்பினை கண்ணால் பார்த்தே, தனக்கு உடல் நொந்தது போல சோர்ந்து போனார். 

அவர் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் அவள் இவ்வாறு கண் முன்னாலேயே சிரமப்படுவதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஓரிரு நாட்களாக மதி இவ்வாறு கடினமாக உழைத்து வேலை செய்வதும், அவன் மரத்தடியில் அமர்ந்து ஆனந்தமாக அதை வேடிக்கை பார்ப்பதும் என தொடர்ந்து கொண்டு இருந்தது. அதனால் மீண்டும் மகேந்திரனை அலுவலகத்திற்கு கூட்டி வந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார் தாத்தா. 

முதன்முறையாக அவனை தேடி வந்தவர், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் சந்திரன ஆபீஸ்ல இருந்து அனுப்பிட்டேன். இனிமே எல்லா பொறுப்பையும் நீயே பாத்துக்கோ. உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணலாம். ஏன் எதுக்குன்னு நாங்க எந்த எதிர் கேள்வியும் கேட்க மாட்டோம்.” 

பெரியவரே இறங்கி வந்து பேசினாலும் அதை பொருட்டாக கருதாமல் தெனாவட்டாக அமர்ந்து இருந்தான் மகேந்திரன்.

”வேணும்னா கம்பெனிய உன் பேருக்கு எழுதி வைக்கிறேன்டா… தயவுசெஞ்சு திரும்பி வேலைக்கு வா…” என்று சொன்னதும் நிமிர்ந்து அவர் முகம் பார்த்தான். அவர் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, மெலிதாய் ஒரு புன்னகையை உதிர்த்தான்.

அன்று மறுப்பு தெரிவிக்காமல் அலுவலக வேலையை விட்டு நின்றவன், இன்று எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மீண்டும் அந்த வேலையை ஏற்றுக் கொண்டான். இது தாத்தாவிற்கு சற்று குழப்பமாகத் தான் இருந்தது. ஆனால் மதியழகியை இந்த வீட்டு வேலை செய்வதில் இருந்து காப்பாற்றி விட்டோம் என்ற திருப்திக்காக அவனிடம் நிர்வாகத்தை மொத்தமாக கொடுத்துவிட்டார். 

ஆனால் அவர் எதிர்பார்ப்பதற்கு நேர் எதிராக அனைத்தும் நடந்தது. அவன் இருந்தாலும் இல்லை என்றாலும் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செக்குமாடு போல் அயராது செய்துக் கொண்டு இருந்தாள் அவள். தாத்தாவுக்கு அவள் வேர்வை வழிய வேலை செய்வதை பார்த்து உடம்பெல்லாம் ரத்தம் வழிவது போல் அவ்வளவு வருத்தமாக இருந்தது. 

பாட்டி மதியிடம், “அவன்தான் வீட்ல இல்லையே, நீ ஏன்டி கண்ணு இவ்வளவு கஷ்டப் பட்டுட்டு இருக்க? உன்ன நாங்க எவ்ளோ செல்லமா வளர்த்தோம். நீ சாப்பிட்ட தட்ட இதுவரைக்கும் கழுவி இருக்கியா? வேலை செஞ்சிட்டே இருக்கிறவங்களால கூட இவ்வளவு வேலை செய்ய முடியாதே! உன் கையெல்லாம் எப்படி காப்பு காச்சி கிடக்குது பாரு! நீ இப்படி கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல. நீ போய் கொஞ்ச நேரம் படு, மீதி வேலை எல்லாம் நாங்க பாத்துக்கிறோம்.” 

 

“என் புருஷன் இந்த வேலை எல்லாம் நான் தான் செய்யணும்னு எனக்கு பத்திரம் எழுதி கையில குடுத்துட்டு போய் இருக்காரு. அப்போ அந்த வேலை எல்லாம் நான் தானே செய்யணும் பாட்டி? இல்லைனா அவர ஏமாத்துற மாதிரி ஆகிடாதா? இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. எல்லா வேலையும் நானே பாத்துக்கிறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.” 

 

தன் பேரன் மீது அவள் வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு அகம் மகிழ்ந்து போனார் பாட்டி. இருந்த போதிலும் கூட அவள் இவ்வாறெல்லாம் கஷ்டப் படுவதை அவரால் முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்தது. மகேந்திரன் வேலை முடிந்து மாலை வீடு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக இதைப் பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். 

 

அலுவல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மாலை பொழுதில் வீடு வந்து சேர்ந்தான் மகேந்திரன். வீட்டிலேயே அவனுக்கு பிடித்தமான ஒரே ஒரு ஆள் பாட்டி மட்டும் தான். மற்றவர்கள் சொன்னதை கூட தட்டி கழிப்பானே ஒழிய பாட்டியிடம் அவன் இதுவரை அவ்வாறு நடந்து கொண்டது இல்லை. அதனால் தான் சொன்னால் கண்டிப்பாக மகேந்திரன் கேட்பான் என்ற முழு நம்பிக்கையோடு அவனிடத்தில் மதியழகியை குறித்து பேசுவதற்காக அவனது அறையை நோக்கி சென்றார் பாட்டி. 

 

“உள்ள வரலாமாப்பா?” 

 

“அட வாங்க பாட்டி! நீங்க என்ன யாரோ மாதிரி என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க. வாங்க வந்து உட்காருங்க. இங்க காத்து கூட வராது. பேசாம தோட்டத்துக்கு போயிடலாமா? உங்களுக்கு இங்க ரொம்ப அசவுகாரியமா இருக்கும். அதனால தான் கேட்டேன்!” என்று மரியாதை பொங்க மிகவும் பரிவாக கேட்டான் மகேந்திரன்.

 

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. என் பேரன், பேத்தி ரெண்டு பேரும் இந்த ரூம்ல தான் தங்கி இருக்கீங்க. உங்களுக்கே எந்த பிரச்சினையும் இல்லைங்கும் போது எனக்கு மட்டும் என்ன பிரச்சனை வந்திட போகுது? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தேன். கோபப் படாம கேக்குறியா?” 

 

பாட்டி இவ்வாறு புதிர் போல பேசும் பொழுதே மதியழகியை பற்றி தான் கண்டிப்பாக எதோ பேச வந்திருப்பார் என்று உள்ளூர உணர்ந்து கொண்டான் மகேந்திரன்.

 

“முதல்ல விஷயம் என்னன்னு சொல்லுங்க பாட்டி. நீங்க சொல்றத வச்சு தான் கோபப்படனுமா வேணாமானு என்னால முடிவு பண்ண முடியும்.” 

 

“மதியழகி நாங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா. நீ கொடுத்த வேலை எல்லாம் ஒன்னு விடாம நாள் முழுக்க செஞ்சுக்கிட்டே இருக்கா. அவ இப்படி எல்லாம் கஷ்டப்படுறத எங்களால கண் கொண்டு பாக்க முடியல. அவ எப்படி வளர்ந்தான்னு உனக்கே தெரியும்! சின்ன வயசுல இருந்தே ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம். ஏற்கனவே உடம்பு சரியில்லாத பொண்ணு. இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை பார்த்தா, அவ உடம்பு சீக்கிரமே கெட்டுப் போயிடும்.”  

 

பாட்டி சொன்ன பிறகு தான் அவள் எந்த விதமான ஏமாற்று வேலையும் நிகழ்த்தாமல், தான் சொல்லியபடி உண்மையாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டான் அவன். மேலும் இந்த வேலை அனைத்தையும் செய்யச் சொன்னால் மதியழகி ஏதேனும் ஒரு கலவரத்தை உண்டு பண்ணுவாள். அதன் மூலம் தான் காதலித்து வந்த வெண்மதிக்கு என்ன ஆனது என்று கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்! ஆனால் இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டதே என்று உள்ளுக்குள் நொந்துக் கொண்டான். 

 

அவன் யோசிப்பதை பார்த்த பாட்டி, “இத்தன வருஷத்துல நாங்க கூட அவ்வளவு வேலை செஞ்சது இல்ல கண்ணு. அவள பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு” என்று பாட்டி சொல்லி முடிக்கும் முன்பே குறுக்கிட்டான் மகேந்திரன். 

 

“ஓ… ஒரு நாலு நாள் உங்க பேத்தி வேலை செய்றத உங்களால கண் கொண்டு பாக்க முடியலன்னு என்கிட்ட அவளுக்காக பரிஞ்சு பேச வந்து இருக்கீங்க! யோசிச்சு பாருங்க, நீங்க எல்லாரும் எங்க அம்மாவை எப்படி கொடுமைப் படுத்தினீங்க? மாசமா இருக்காங்கன்னு தெரிஞ்சும் வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்த வேலைக்காரங்க எல்லாத்தையும் நிறுத்திட்டு அவங்கள தனியாளா எவ்வளவு வேலை வாங்கினீங்க? உடம்பு சரியில்லாம எழுந்து நிக்கவே தெம்பு இல்லாம இருந்தாங்க. அவங்க சாகறதுக்கு ஒரு நாள் முன்னாடி வரை, ரெஸ்ட் எடுக்க விடாம வேலை வாங்கிட்டு இருந்தீங்க! உங்க டார்ச்சர் தாங்காம, நெஞ்சு வலி வந்து செத்தே போயிட்டாங்க. அப்போல்லாம் நீங்க எங்க போனீங்க? அவங்க சாவு எந்த கணக்குல சேரும்? ” என்று மகேந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய படி மௌனமாக அமர்ந்து இருந்தார் பாட்டி. 

 

அவரின் மௌனத்தை கலைக்கும் வண்ணம், “சொல்லுங்க பாட்டி! உங்ககிட்ட தான் கேக்குறேன். அன்னைக்கு எங்க அம்மாவும் இப்படித் தான கஷ்டப் பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அப்ப எங்க அம்மாவுக்காக நீங்க தாத்தாகிட்ட போய் இப்படி பேசினீங்களா? யாரோ மாதிரி, எதுவுமே கண்ணுல படாத மாதிரி, கண்டுக்காம தான இருந்தீங்க? அதே மாதிரி இப்பவும் இருங்க. நீங்க எல்லாரும் பண்ண தப்புக்கு அது தான் தண்டனை” என சவுக்கால் அடிப்பதுபோல பேசினான்.

 

இத்தனை வருட வலிகளை அவன் வார்த்தையால் சொல்லும்போது, பாட்டியால் என்ன பதில் சொல்ல முடியும்? கண்ணீரை கொட்டியது அவர் விழிகள் இரண்டும். அது அவன் மனதையும் சேர்த்து சுட்டது.

 

“இப்ப கூட நெனச்சா வேலைய விட்டு போனு சொல்றாரு! நினைச்சா வேலைக்கு வானு சொல்றாரு! என்ன பாத்தா உங்க எல்லாருக்கும் எப்படி தெரியுது? நானும் இந்த வீட்டு பேரன் தான? அந்த மரியாதை தர வேண்டாம். அட்லீஸ்ட் மனுஷனா பார்க்கலாம்ல?”

 

“அவங்களுக்கு தான் அறிவு இல்ல. நீயாவது…”

 

“வேண்டாம் பாட்டி. நீங்க என்ன சொன்னாலும் நான் என் பிடியிலிருந்து இறங்கி வர மாட்டேன். என் அம்மாவுக்கு நடந்த கொடுமைக்கு உங்க கண்ணீர் தான் பதில். இனிமே இது விஷயமா பேசறதா இருந்தா என்கிட்ட எப்பவும் பேசாதீங்க” என்று சொல்லி விட்டு மௌனமாக அமர்ந்து இருந்தான். 

 

அவன் பக்கம் நியாயம் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் பாட்டி. அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அந்த அறைக்குள் நுழைந்தாள் மதியழகி. மகேந்திரன் மிகவும் சோகமாக படுத்திருந்ததை பார்த்ததும் அவளுக்கு மனது கேட்கவில்லை. 

 

“என்னாச்சு ஏன் இவ்வளவு சோகமா படுத்து இருக்க? தல ஏதாவது வலிக்குதா?” என்று சொல்லிக் கொண்டே அவனிடத்தில் நெருங்கினாள் மதியழகி. அவள் தனக்கு அருகில் வந்ததுமே நெருப்பில் இட்ட புழுவை போல் துடி துடித்து எழுந்து தள்ளிச் சென்றான் மகேந்திரன். 

 

“எனக்கு ஒன்னும் இல்ல, தள்ளிப் போ..” 

 

“கண்ணெல்லாம் சிவந்து இருக்கு, ஒன்னும் இல்லன்னு சொல்ற?” 

 

அவன் அனுமதியின்றி கழுத்தில் கை வைத்தாள். இவனுக்கு அந்த குளிர் கரம் பட்டதும் உடல் முழுக்க ஷாக் அடித்தது. 

 

“உடம்பெல்லாம் இவ்வளவு சுடுது. காய்ச்சல் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்‌. இரு நான் போய் கஷாயம் போட்டு எடுத்துட்டு வந்துடறேன். அப்போ தான் சரியாகும்!”

 

இத்தனை வருடங்கள் அதிகாரத்தால் அவனை தொல்லை செய்தவள், இப்போது அவனை தனது அன்பால் தொல்லை செய்ய ஆரம்பித்தாள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
250 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
543 6 0
நீ எந்தன் நிஜமா?
380 8 1
என்துணை நீயல்லவா?
464 12 0
கற்றது காதல்
221 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page