நினைவு -2

காவல் துணை ஆணையாளர் அலுவலகம், மயிலாப்பூர்…

அந்த மரத்தின் அடியில் இருந்த நிழலில் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு, அதன் சாவியைக் கைகளில் சுழற்றியவாறு உள் நுழையப் போனவளை, புயல் போல இடித்து விட்டு வெளியே ஓடினான் ஒருவன்.

திடீர் தாக்குதலில் தடுமாறி விழப்போனவள், அருகில் இருந்த தூணைப் பிடித்து, தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளின் மனதில்,’யாருடா அது, போலீஸ் ஸ்டேஷன்ல போலீசையே இடிச்சுட்டு ஓடுறது!’ என்று திரும்பிப் பார்க்க, அவளின் கண்கள் அகல விரிந்தன.

“என்னடா இது, இடிச்சுட்டு ஓடறவனும் போலீஸா?!.” என்றவள் வாய்விட்டே சொல்லிவிட்டு, எதையோ உணர்ந்து அவனை உற்றுப் பார்த்தாள்.

“இரு, இரு, இந்தப் பீசை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்க!.” என்றவளுக்கு, அதை யோசிக்க வெகு நேரம் எல்லாம் எடுக்கவில்லை.

” அட இது அந்தத் தற்குறி இல்ல. ஆமா, இவன் ஏன் இப்போ தெரிஞ்சிக்கிட்டு ஓடிட்டு இருக்கான்!.” என்று நினைத்தவள், அவனைப் பின் தொடர்ந்தாள்.

“ஆஆஆஆஆ!”

அந்த டீக்கடையில் இருந்த மரபெஞ்சில், அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவனை, இவள் பிடரியிலே தட்ட உயிர் போகும் பயத்தில் அலறினான் அவன்.

“அட ச்சீ வாயை மூடு!. ஏன் இப்போ காது கிளியிற மாதிரி கத்துற?.”என்றவள் காதை ஒரு கையால் குடைந்தாவாரே அவனின் அருகில் அமர்ந்தாள்.

“அண்ணா!, ஸ்ட்ராங்கா ஒரு காபி.”என்றவளை தன்னால் இயலும் மட்டும் முறைத்தான் அவன்.

” போதும், போதும். பாத்து, நீ பாக்கறதுல நான் அப்படியே தீப்பிடிச்சி எரிஞ்சிர போறேன். “என்றவளை பார்த்தவன்.

” ம்ம்…இருடி நானே பெட்ரோல் ஊத்தி எரிச்சு விடுறேன். ” என்றான் நக்கலாக

” சாரி, எனக்குச் சாகிறதுல  விருப்பம் இல்ல. உனக்கு வேணா நீ போய்ச் சாவுடா கேவலவாதி!. “என்றவள் தனக்கு வந்த காபியை ஒரு மிடறு  விழுங்கியவாறே, கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“கவலைப்படாதே, அப்படி நடந்தா எமன்கிட்ட உனக்கும் சேர்த்துதான் டிக்கெட் போட சொல்லுவேன். ” என்றவனை உதட்டை சுழித்து அலச்சியம் செய்தவள், காபியின் கடைசித் துளி வரை உறிஞ்சி குடித்துவிட்டு எழுந்தாள்.

” எவ்வளவுண்ணா? ” என்ற இவளின் கேள்விக்கு  கடைக்காரன் பதில் சொல்வதற்கு முன்பாகவே, “அண்ணா!, ஒரு டீ அதுக்கும் சேர்த்து அவகிட்டையே காசு வாங்கிக்கோங்க” என்றவனைக் கேவலமாகப் பார்த்தவள், அவனுக்கும் சேர்த்து காசு கொடுப்பதற்கு மட்டும் மறக்கவில்லை.

அவன் டீ குடித்து முடிக்கும் வரை, தனக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை என்பது போல, அவனுக்கு எதிர்திசையில் அவள் திரும்பி நின்று கொண்டிருக்க, அதைப் பார்த்து கடைக்காரரின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

” ஷாதனாமா!, இது எத்தனாவது சண்டை?. ” என்றவர் கொஞ்சம் சத்தம் வரும் அளவுக்குச் சிரித்தே விட்டார்.

அவரின் கேள்வியில், இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே கணம் மட்டும் திரும்பி பார்த்தவர்கள், மீண்டும் முகத்தைத் திருப்பிக் கொள்ள, ” தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது அண்ணா!. இன்னும் ஒன்னு சேர்ந்தா டென் எக்ஸ் செஞ்சுரி அடிக்கப் போறோம் ” என்றாள் பெருமையாக

” அது என்ன மா டென் எக்ஸ் செஞ்சுரி?” என்றவரிடம்

“அதுவா, டென் இண்ட் நூறு ஆயிரம்தான. அதான், ஆயிரத்த கொஞ்சம் வித்யாசமா சொன்னேண்ணா.”என்றாள்.

அவளின் பதிலில் தலையில் அடித்துக் கொண்டவன், டீ டம்ளரை அவரிடம் கொடுத்துவிட்டு, அவளின் கைப்பற்றி அவளை இழுத்துச் சென்றான்.

” டேய்!, டேய்!, விட்ரா, என் கைய விட்ரா.” என்றவளின் கத்தலை சிறிதும் பொருட்படுத்தாமல் அவளை இழுத்துச் சென்றவன், அவள் வண்டியின் அருகில் சென்று அவளை விடுவித்தான்.

” வண்டியை எடு.”என்றவனை வினோதமாகப் பார்த்தவள்

“என்ன விளையாடுறியா? டியூட்டி நேரத்துல வண்டியை எடுனா என்ன அர்த்தம்?.” என்றவளின் கேள்விக்கு

“ம்ம்… இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தா, நான் செத்துருவேன்னு அர்த்தம்.”என்றான்

“ என்னது?, டேய், என்னடா உளறுற?, ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, போலீசையே கொல்ற அளவுக்கு, யாருக்கடா தைரியம் இருக்கு?. அதுவும், இது ஆதி சார் கண்ட்ரோல் இருக்குற ஸ்டேஷன், இங்கே உன்னைக் கொல்றதுக்கு ஒருத்தன் பொறந்து தான் வரணும். ”

“ யாரும் பொறக்கவும் தேவையில்லை, ஆதி சார் தடுக்கவும் மாட்டாரு. ஏன்னா?, என்னைக் கொல்ல போறதே அவர் தான!. ”

” என்ன?, ஆதி சார்!, உன்னைக் கொல்ல போறாரா, என்னடா சொல்ற?, டேய்!, சிந்தனை நீ நல்லா தானே இருக்க?. ” என்றவளை தீயாக முறைத்தவன்

” உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன், என்ன சிந்தனைனு  கூப்பிடாதனு. என் பேரு சிந்தனைச் செல்வன். ஒன்னு முழுசா என் பேரை சொல்லி கூப்பிடு, இல்லையா செல்வானு சொல்லி கூப்பிடு.” என்றவனை இயன்ற மட்டும் முறைத்துவிட்டு

“டேய்!, தற்குறி இப்ப நான் என்ன பேசிட்டு இருக்கேன்?.நீ என்னடா பேசிட்டு இருக்க. உங்க அம்மா எப்படித்தான் உனக்குச் சிந்தனைச் செல்வன் பேரு வச்சாங்கன்னு தெரியல. நீ நல்லா சிந்திக்கணும் இந்தப் பேரு வச்சிருப்பாங்க நினைக்கிறேன். ஆனா, சிந்தனையா?, அது எந்தக் கடையில விக்கிதுங்குற அளவுக்குதான நீ இருக்க.”என்றவளை கண்களால் எரித்து விடுவது போல் பார்த்தவன் “என் பேரை பத்தி, எங்க அம்மா பத்தி ஏதாவது பேசுனா.” என்றவன் விரல் நீட்டி அவளை எச்சரித்தான்.

“டேய், எப்பா!” என்றவள் அவன் முகத்திற்கு நேராகக் கையெடுத்துக் கும்பிட்டு, “உன் பேரைப் பத்தியும், உங்க அம்மாவைப் பத்தியும் மட்டுமில்ல. உன் தலையில் இருக்கிற அந்த… முடியைப் பத்தி கூடப் பேச மாட்டேன். தயவு செஞ்சு சொல்லு, ஆதி சார் ஏன் உன்னைக் கொல்ல போறாரு?” என்றவளின் கேள்விக்கு அவன் அங்கு நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவன் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டே வந்தவள், “ஏய்! இரு, இரு. ஆமா, ஆதி சார் அந்தக் கைதியை, சாகிற அளவுக்கு அடிக்கிற விஷயம், இசை மேம்க்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க, அவளின் கேள்வியில் திருதிருவென முழித்தான் அவன்.

அவன் முழிப்பதை வைத்தே நடந்ததைப் புரிந்துகொண்டவள், “கேவலவாதி, நீ பண்ணுன காரியத்துக்கு எனக்கே கொல வெறி வருது. அவரு உன்னை இவ்வளவு நேரம் விட்டு வச்சிருக்குறதே அதிசயம்தான்.”

“புள்ளைய கிள்ளிவிட்டு தொட்டில்லயும் ஆட்டுற கதைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்போதான்டா பாக்குறேன்.” என்றவள் சொல்லிவிட்டு, வாயின்மேல் கைவைத்து மூடினாள்.

“ நான் கேவலவாதி இல்ல, நீதான்டி கேவலவாதி. நீ இப்படி ரியாக்ஷன் கொடுக்கிற அளவுக்கு, நான் ஒன்னும் பெரிய தப்பெல்லாம் பண்ணல. ”

“எது, இசை மேம்க்கு கால் பண்ணி சாரப் பத்தி போட்டுக் கொடுக்குறது, ஒன்னும் பெரிய தப்பு இல்லை அப்படித்தான?”

“நான் என்ன பண்ண?, இங்க நடக்குறத நான் கால் பண்ணி சொல்லலைனா, இசை மேம் என்ன கொன்றுவாங்குற பயத்த விட, ஆதி சாரே என்ன கொன்றுவாருங்குற பயம்தான் அதிகமா இருக்கு.” என்றவனின் பதிலில் அதிகமாகக் குழம்பியவள்

“இரு, இரு, நீ என்ன சொல்ற?. இசை மேம்க்கு கால் பண்ணி சொல்லலைனா, ஆதி சார் உன்ன கொள்வாரா?”

“ம்ம்.. ஆமாம், இன்ஃபாக்ட் இங்க நடக்குறத மேம்க்கு, கால் பண்ணி சொல்ல சொன்னதே ஆதி சார்தான்.” என்றவனின் பதிலில், தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“என்னடா சொல்ற, எனக்கு ஒண்ணுமே புரியல!. இசை மேம்க்கு போட்டுக் கொடுத்ததாலதான், ஆதி சார் உன்ன கொல்ல போறாருன்னு சொல்ற. அதே நேரம், இசை மேம்க்கு ஆதி சார் தான், போட்டுக் கொடுக்கச் சொன்னாங்கன்னும் சொல்ற, இதுல எது தாண்டா நெஜம்.”

“ரெண்டுமே தான்.”

“புரியல.”

“அது, அன்னைக்கு வேளச்சேரியில ஒரு பொண்ணு மேல ஆசிட் அடிச்ச கேஸ்ல, ரெண்டு காலேஜ் பசங்கள சார் உயிர் போற அளவுக்கு அடிச்சாரு இல்ல.”

“ஆமா. அன்னைக்குக் கூட, ஒரு முக்கியமான கேஸ் வேலையா நான் வெளிய போயிட்டேன், சரி அதுக்கு என்ன?”

“அன்னைக்குச் சார், அந்தப் பசங்கள சாகுற அளவுக்கு அடிக்கிறப்போ, யாருக்குமே என்ன பண்றதுன்னே தெரியல. அவருக்குப் பக்கத்துல போகக் கூட, யாருக்குமே தைரியமும் வரல. எல்லாரும் என்ன பண்றதுன்னு தெரியாம, கைய பிசைஞ்சிட்டு நின்னுட்டு இருக்கும்போதுதான், எதேச்சையா இசை மேம் அங்க வந்தாங்க.”

“வந்தவங்க, சார் அந்த ரெண்டு பேர அப்படி அடிச்சுட்டு இருக்குறத பாத்து, அவங்களுக்குப் பயங்கர ஷாக்.”

“ஆதி!, என்ன பண்ணிக்கிட்டு இருக்க?, எதுக்கு இப்போ இவங்கள காட்டுமிராண்டி மாதிரி அடிச்சு கிட்டு இருக்க?.”

“அப்படி, அவங்க கத்துனதும் சார் எதுவுமே பேசல. கையில் இருந்து தடியை போட்டுட்டு, அவர் ரூமுக்கு போய்ட்டாரு. மேமும் கண் ஜாடையிலே என்கிட்ட, அவங்கள பார்த்துக்கச் சொல்லிட்டு சாரோட ரூமுக்கு போய்ட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்தவங்க, டேரக்ட்டா என்கிட்ட வந்தாங்க.”

“அவன் இப்படி உயிர் போற அளவுக்கு ஒருத்தவங்கள அடிச்சுகிட்டு இருக்கும்போது, உங்களுக்கு யாருக்குமே தடுக்கனும்னு தோணலையா?. நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா, இந்நேரம் அந்த ரெண்டு பேரும் செத்துப் போயிருப்பாங்க.

இங்க பாருங்க மிஸ்டர், நீங்க யாரு, உங்க பேர் என்னானுளான் எனக்குத் தெரியாது. இது பிடிங்க, இதான் என்னோட விசிட்டிங் கார்டு. இதுக்கப்புறம் இந்த மாதிரி யார்கிட்டயாவது உங்க சார் நடந்துக்கிட்டா, எதைப் பத்தியும் யோசிக்காம எனக்குக் கால் பண்ணுங்க.”

“அப்டின்னு படப் படன்னு பேசிட்டு, என் கையில் அந்த விசிட்டிங் கார்ட கொடுத்துட்டு போயிட்டாங்க. அவங்க போன அடுத்த நிமிஷம் சார் என்ன கூப்பிட்டாரு. கூப்பிட்டு நாங்க ரெண்டு பேரும், என்ன பேசணும்னு சொல்லி கேட்டாரு. நான் மேம் என் கிட்ட சொன்னது அப்படியே அவர்கிட்ட சொல்லிட்டு, அந்த விசிட்டிங் கார்டுயும் மேஜமேலையே வச்சுட்டேன்.”

“ப்பா!, என்ன அப்போ ஒரு பார்வை பார்த்தாரு பாரு. உயிரே நடுங்கி போச்சு. பயத்துல கை கால் எல்லாம் கிடு கிடுன்னு ஆட ஆரம்பிச்சுருச்சு. பயத்துல அவர்கிட்ட என்ன பேசறதுன்னு கூட எனக்குத் தெரியல.”

“சார், மேமாதான் வந்து என்கிட்ட பேசினாங்க. சத்தியமா சொல்றேன் சார், அவங்களை இப்பதான் நான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்.”

“அப்படின்னு நான் சொல்ல, என்ன நெனச்சாருன்னே தெரியல. விசிட்டிங் கார்ட என்கிட்ட தள்ளி வச்சிட்டு ஒன்னு சொன்னாரு பாரு!.” என்ன என்பதுபோல் இவள் அவனைப் பார்த்திருக்க

“இங்க பாருங்க மிஸ்டர் செல்வா, அவ சொன்னதச் செஞ்சுருங்க. அப்படிப் பண்ணலைனாலோ, இல்ல அவ சொன்னதை நீங்க மறந்துட்டாலோ,உங்க உயிரை நீங்க மறந்துருங்க. அதே நேரம், அவகிட்ட என்ன பத்தி ஏதாவது போட்டு கொடுத்தீங்கனு வச்சுக்கோங்க. பின்விளைவுகள் ரொம்பப் பயங்கரமா இருக்கும், அதை மறந்துடாதீங்க.”

“ஏய்!, இரு, இரு. இப்ப அவர் சொல்லணும்னு சொல்றாரா, இல்ல சொல்லக்கூடாதுன்னு சொல்றாரா?!.”

“அது தெரியாம தாண்டி, ஒவ்வொரு தடவை இப்படி நடக்கும்போதும், உயிர் கையில பிடிச்சுட்டு ஓடிக்கிட்டு இருக்கேன்.” என்றவனைத் தீவிரமாகப் பார்த்தவள்.

“டேய்!, ஆமா, ஆதிசார் இசை மேமும் லவ் பண்றாங்களா என்ன?.” அவளின் கேள்வியில் கண்கள் அகல விரிய, அவளின் வாயை தன் கைகளால் அவசரமாக மூடியவன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான்.

மரணப் பீதி அவன் முகத்தில் தாண்டவமாடியது.…

 

                                        தொடரும்.…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page