நினைவு -21

சுட்டெரிக்கும் வெப்பத்தை என்னால்தான் சுமக்க முடியும் என்ற கர்வத்தில்,

சூரியன் தனது மொத்த வெப்பத்தையும் பூமித் தாயின் மேல் கொட்டிக் கொண்டிருந்த மதிய நேரம்…

அந்த வெப்பத்தில் சிக்கித் தவிக்காதவர் யாருமில்லை… வீசும் காற்று கூட அந்த சுட்டெரிக்கும் சூட்டின் தாக்கத்தை சுமந்தபடியே வீசியது…

ஆனால் அங்கு மட்டும் அதற்கு நேர்மாறாக இருந்தது…

ஆம்… கோடையிலும் குளுமையின் வரத்தை அளித்துக் கொண்டிருந்தது அந்த இடம்…

தரையின் மீது காதல் கொண்டு அதிலிருந்து வளர்ந்த புற்கள்…

வானைத் தொட முயன்றனவோ என எண்ணத் தூண்டும் அளவுக்கு நீண்டு நின்ற மரங்கள்…

மரங்களின் மீது அழகாகப் படர்ந்த கொடிகள், அக்கொடிகளின் இடையே பூத்துக் குலுங்கிய மலர்கள்…

அம்மலர்களின் மீது காதல் கொண்டோ, இல்லை தேனைச் சுவைக்க வந்ததோ என பார்க்கும் யாவரையும் குழப்பும் வகையில் அவற்றைச் சுற்றி வட்டமிட்ட வண்ணத்துப்பூச்சிகள்…

இவ்வாறே… ஒரு அழகிய வனமாக காட்சியளித்தது அந்த தோட்டம்…

அரண்மனை போன்று பிரமாண்டமாக காட்சியளித்த அந்த வீட்டின் பின்புறம் தோட்டம்தான் அது…

அந்த அறையின் பால்கனியில் இருந்து பார்த்தால், அவ்வளவு அழகாகத் தெரியும் அந்த தோட்டம்…

அப்படிப்பட்ட அந்த பால்கனியில், கூடை ஊஞ்சலில் கால்களை மடக்கி அமர்ந்தவாறு, அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் இசை…

அவள் கைகளில் ஒரு பென்சிலும், ஒரு நோட்டுப் புத்தகமும் இருந்தது…

இயற்கை தரும் ஆறுதலையும் அமைதியையும் வேறு யாராலும் தந்துவிட முடியாது என்பது எவ்வளவு ஆழமான உண்மை…

ஆம்… மனதின் சஞ்சலங்களால் அழைப்புற்றிருந்தவளுக்கு,

மயில் இறகால் வருடுவது போல… இந்த இயற்கையின் காட்சி ஒரு மென்மையான ஆறுதலாக இருந்தது….

எவ்வளவு நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லை…

ஆனால் சில நிமிடங்களில்,

மீண்டும் அவளின் கவனம் கையில் இருந்த பென்சிலும்… நோட்டுப் புத்தகத்தையும் நோக்கி மெதுவாக இடம்பெயர்ந்தது…

அந்த நோட்டின் திறந்திருந்த அந்தப் பக்கத்தை பார்த்தவளுக்கு,

மீண்டும் மனதில் ஒரு வெறுமையும்… விளங்காத குழப்பமும் வந்து ஒட்டிக் கொண்டது…

அழித்து அழித்து வரையப்பட்ட, முழுமை பெறாத அந்த ஓவியம்… அவளை பார்த்து கேலியாகப் புன்னகைப்பது போல ஒரு பிரம்மை…

இப்போது மட்டுமல்ல… சிறுவயதிலிருந்தே… அந்த புன்னகை மட்டும் தான் அவளை நோக்கி வீசப்படுவது போல ஒரு உணர்வு…

அதற்கு முன்பு இருந்த பக்கங்களை மெதுவாக புரட்டினால்… ஒவ்வொன்றும்… ஒரு கலைஞனின் நுணுக்கத்தோடு, முழுமையாக உயிர் பெற்ற ஓவியங்களாய்… அவள் விழிகளில் ஒன்றன்பின் ஒன்றாக விரிந்தன…

அந்த காட்சிகளை… 

இதுவரை நேரில் பார்த்தவர் எவரும் இல்லை…ஏன்… இதுவரை அவளே கூட பார்த்ததில்லை…

அது… அவள் கனவுகளுக்கு மட்டுமே சொந்தமானது…

ஆம்… அவையெல்லாம் அவள் கனவில் தோன்றிய காட்சிகள்…

ஒவ்வொரு ஓவியனும் ஒவ்வொரு ரகம்…

நேரில் பார்ப்பதை அப்படியே வரைபவர் சிலர்… வெறும் கற்பனையில் மட்டுமே காட்சிகளை உருவாக்கி அதற்கு உருவம் கொடுப்பவர் சிலர்…

ஆனால் இவளோ… கனவின் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பவள்…

சிறுவயதிலிருந்து தொடர்ந்து துரத்தும் கனவின் காரணம் அறியாமல் தவித்தவள்…

அதை மற்றவருக்கு தெரியப்படுத்த, அவள் எடுத்துக் கொண்ட பாதை… இந்த ஓவியம்…

அதனால் மட்டும்தானா அவள் வரைக்கிறாள் என்று கேட்டால்… பதில்… அவளுக்கே முழுமையாக தெரியாத ஒன்று…

ஆனால் அவள் இதுவரை வரைந்த அனைத்தும் அவள் கனவை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது…

அதுவும் அது அந்த ஒரு கனவை மட்டுமே உரக்கச் சொல்லிக்கொண்டிருக்க…

அந்த கனவில் இருந்த ஒரு காட்சியையும் விடாமல் தத்ரூபமாக வரைந்தவளுக்கு, அந்த ஒற்றை ஓவியத்தை வரைய முடியவில்லை…

இன்னும் தெளிவாகச் சொன்னால்… அவனை மட்டும் வரைய முடியவில்லை…

யாழன்…

யார் அவன்…?

தெரியாது…

கனவில் மட்டுமே அவளிடம் அறிமுகமானவன்…

அன்புக்காக ஏங்கி நிற்கும் சிறு குழந்தையென, ஒவ்வொரு முறையும் கனவில் கேட்கும் அவனின் உயிரை உளுக்கும் குரல், அவளுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடும்…

ஆனால்… எதற்காக அவள் கனவில் வருகிறான் என்ற கேள்விக்கு பதில்தான் இன்றுவரை கிடைக்கவில்லை…

எவ்வளவோ முறை முயற்சி செய்து விட்டாள்… அவன் பிம்பத்தை வடிக்க…

ஆனால் கனவில் தெளிவாகத் தெரியும் அவன் முகம்,

விழித்தவுடன் ஒரு இருளுக்குள் சிக்கிக் கொள்வதைப் போல மாயையாகத் தோன்றிவிடும்…

ஏன்…

எப்படி…

எதனால்… எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை என்பதே உண்மை…

ஆனால்… அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது…

அதுவும் இன்று அவள் கனவில் கண்ட காட்சி, அவள் புத்தியை பேதளிக்கும் வகையில் இருந்தது…

அந்த யோசனையிலே மூழ்கி இருந்தவளை, தொலைபேசியின் நோட்டிபிகேஷன் சத்தம் சுயநினைவுக்கு கொண்டு வந்தது..

திரையில்…

“மாயவனின் காதல் உலகத்தின் அடுத்த பாகம் வெளியிடப்பட்டது” என்று தோன்றிய அந்த நொடி, ஏற்கனவே குழப்பத்தில் சிக்கி இருந்தவளுக்கு, இன்னும் குழப்பமே சேர்ந்து ஒட்டிக் கொண்டது…

காதல் உலகம்… அவள் கனவில் கண்ட அதே காதல் உலகம்…

அவளைத் தவிர, காகிதங்கள் மட்டுமே அறிந்த அந்த உலகத்தைப் பற்றி…

இவரால் எப்படி எழுத முடிகிறது…?

உண்மையில், அவள் அவரைத் தேட முயற்சிப்பதற்கான முக்கிய காரணமே இதுதான்…

கனவில் காதல் உலகத்தில் தோன்றும் யாழனுக்கும்…

நிஜத்தில் காதல் உலகத்தை எழுதும் மாயவனுக்கும்…

ஏதோ ஒரு மறைபொருள் கொண்ட தொடர்பு இருப்பது போல, அவளின் ஆழ்மனம் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தது…

மாயவனை கண்டுபிடித்தால்… யாழன் நிச்சயமாக கிடைத்துவிடுவான்… என்ற உறுதியான நம்பிக்கை அவளுள் வேரூன்றியிருந்தது…

அதற்காகத்தான், அவனைத் தேடச் சொல்லி ஆதியை அவள் வற்புறுத்தினாள்…

ஆதி…

ஆனால்… எதற்காக அவனும் இன்று திடீரென்று அவள் கனவில் தோன்ற வேண்டும்…?

அந்த கேள்வி… அந்த குழப்பம்… அவளை இன்னும் இன்னும் அலைக்கழித்துக் கொண்டே இருந்தது…

ஏற்கனவே,

யாழனுக்கும் மாயவனுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பியிருந்த அவளுக்கு,

மேலும் குழப்பத்தை விதைப்பது போல…ஆதியும் அந்த மர்மத்தில் இணைந்து கொண்டான்…

அதீதமான குழப்பத்தில் ஆழ்ந்து யோசித்தவளுக்கு, தலைவலி உயிரை பிழியும் அளவுக்கு அதிகரிக்க,

அப்படியே அந்த ஊஞ்சலில் பின்சாய்ந்து…கண்களை மூடியாள்…

 

 

 

                                            தொடரும்.…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page