காரிருள்…
நிசப்தமான ஓர் இரவு…
மயானத்தை விட அமைதியான இடம் இந்த உலகில் உண்டோ, என்ற கேள்விக்கு அந்த அறையே சாட்சி என்பதுபோல் அமைதியாக இருந்தது அந்த அறை.
“டப்… டப்… டப்…” தண்ணீர் சொட்டுவதைப் போலச் சத்தம் மட்டும், அந்த அறை எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது…
கருமையான இருள் மட்டுமே நிறைந்திருந்த அந்த அறையில், செவியின் திறன் மட்டுமே அதைத் தண்ணீர் என்று உருவகப்படுத்த, ஆனால், நிச்சயமாக அது தண்ணீர் இல்லை என்பதை அவன் மட்டுமே அறிவான்.
ஆமாம், யார் அவன்?…
இருங்கள், இருங்கள் அவன் யார் என்பதை அறிவதற்கு முன், நீங்கள் இன்னொரு விடயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஆம், அந்த அறையில் அந்த ஒலியைத் தவிர, வேறொரு ஒலியும் மெதுவாக மிக, மிக, மெதுவாகக் கேட்கிறது.
ஆனால், கூர்ந்து கவனித்தால் அது ஒலி இல்லை. நிச்சயமாக ஒலியில்லை , பிறகு என்ன?.…
நீங்களும் உங்கள் காதைக் கூர்மை தீட்டிக் கேளுங்களேன்…
“இ…சை!”.
“இ…சை, இ…சை, இ…சை!”. ஆம், ஓர் ஆடவனின் மெல்லிய முனகல் சத்தம்தான் அந்த அறை எங்கும் நிறைந்திருக்க, அவன் கைகள் இரண்டும் அந்த நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் தலை தொங்க அமர்ந்திருந்தான் அவன்.
அவன் முகம் உடல் இரண்டும் ரத்தத்தால் நனைந்திருக்க, அந்தத் தண்ணீர் சொட்டும் சத்தம் எதனால் என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது.
ஆம், அவன் உடம்பிலிருந்து சொட்டும் அந்த ரத்தத் துளிகளின் சத்தம்தான், தண்ணீர் சொட்டும் சத்தம் போலக் கேட்டுக் கொண்டிருந்தது அங்கே.
சரி, இப்போது வருவோம் அந்தக் கேள்விக்கு. ஆமாம், யார் அவன்?, இது என்ன இடம்?, அவன் ஏன் இங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான்?!.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவோ, இல்லை வேறு ஏதோ காரணத்திற்கோ தெரியாது. ஆனால், அந்த அறையின் மூலையில் இருந்த ஒரு கதவு, டமார் என்ற சத்தத்துடன் வேகமாகத் திறந்து கொண்டது.
“டக்…டக்…டக்…” அந்தக் கதவின் வழியாக ஷூ லேஸ் அதிர வேகமாக நடந்து வந்தான் அவன். ஆதித்த கரிகாலன் என்ற பெயருக்குச் சொந்தக்காரன்.
ஆம், அவனேதான். நடந்து வந்தவன் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் முன்பு நேராகச் சென்று நின்றவன், அவன் தலைமுடியை கொத்தாகப் பிடித்து அவனுக்கு நேராக அவன் முகத்தைத் தூக்கினான்.
“ஆஹ்!.” வலியில் மெல்லிய முனகல் சத்தத்தோடு கண்களைத் திறந்தவன், எதிரில் இருந்தவனைப் பார்த்து பேச தொடங்கினான்.
” ஆதி!, ப்ளீஸ் என்ன விட்ரு ஆதி!.நீ நினைக்கிற மாதிரி நான் எந்தத் தப்பும் பண்ணல. எனக்கு இசையோட வாழணும்டா ப்ளீஸ்!.” என்றவன் கைகள் இரண்டும் கட்டப்பட்டதால் கண்களாலே இறைஞ்சி நிற்க, எதிரில் இருந்தவனோ அவன் இறுக பற்றியிருந்த, அவன் தலை முடியை விட்டுவிட்டு பேய் போலச் சிரிக்க ஆரம்பித்தான்.
“ஹா… ஹா… ஹா..” வயிறு வலிப்பது போன்ற பாவனையுடன், வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தவன், திடீரெனச் சிரிப்பை நிறுத்திவிட்டு வேகமாக அவனை நோக்கி வந்தவன், அந்த நாற்காலியின் இரு கைகளிலும் தனது கையை ஊன்றி அவன் முகத்திற்கு நேராக நின்றான்.
“நீ!, என்ன நெனச்சிட்டு இருக்கத் தேவ்?. நான் தப்பான புரிதலோடு உன்ன அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கன்னு நெனச்சியா?!.” இல்லையா என்பது போல அவன் பார்த்திருக்க, இல்லை எனும் விதமாகத் தலையசைத்தான் அவன்.
“ஒரு உண்மைய சொல்லவா நீ எந்தத் தப்பும் பண்ணலன்னு எனக்கும் நல்லாவே தெரியும்.” என்றவனின் பதிலில் குழப்பத்தோடு, கண்கள் அலைபாய அமர்ந்திருந்தான் அவன்.
“அப்பறோம் எதுக்கு நம்பள அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துருக்குறான்னு பாக்குறியா?!.” என்றவனின் கேள்விக்கு ஆமாம் என்பதுபோல அவன் இவனைப் பார்த்திருக்க, நாற்காலியில் ஊன்றியிருந்த கையால் மீண்டும் அவன் தலை முடியை, இறுகப் பற்றியவனின் முகம் அக்னி ஜூவாலைகளைப் பிரதிபலித்தது.
” உனக்கு என்னோட இசை கேட்குதாடா?. ” என்றவன் பற்களை நர நரவெனக் கடித்தான். அவனிடம் இப்படி ஒரு முகத்தை எதிர்பார்க்காதவன், விதிர்விதிர்த்து போய் அமர்ந்திருக்க மீண்டும் இவனே பேசலானான்.
” இசை…!” அந்தப் பெயரில் அழுத்தம் கொடுத்தவன், “ இசை எனக்கு யாருனு தெரியுமாடா?!. இ…சை, இ…சை என்னோட தேவதைடா. என் உயிருல சுமக்குற என்னோட தேவதைடா. இருப்பத்தி ஏழு வருஷமா, என் உடம்போட ஒவ்வொரு அணுவுலயும், கலந்த என் உயிர்டா அவ!. என் உலகமே அவதான்டா!.”
“இத்தனை வருசமும், அவளை என் நெஞ்சு கூட்டுல வச்சி நான் பாதுகாத்தா, எங்கிருந்தோ வந்த நீ அவளைச் சொந்தம் கொண்டாடுவியா?!. அப்பறோம் என்ன, என்னது, என்னடா?, சொல்லி வச்சுருக்க அவகிட்ட.
நீ!, அவளுக்காக, அவளோட காதளுக்காக மட்டுமே மறுபிறவி எடுத்து வந்துருக்கியா?!. அவளோட காதல அடையறுதுக்காக மட்டுமே மறுஜெனனம் எடுத்திருக்கியா?!. அவளோட வாழ்ந்தா மட்டும்தான் இந்தப் பிறவி உனக்கு முழுமை பெறுமா?!. இல்லனா நீ உயிரோட இருந்தும் பொணமா?!. உண்மையிலே உன்ன பொணமாக்காவா?!.சொல்லுடா சொல்லு?!.” என்றவன் அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்க, எதிரில் இருந்தவனோ உயிர் நடுங்கிப் போனான்.
அவன் உடல் நடுங்குவதை, இவன் துப்பாக்கியின் அசைவிலே உணர்ந்துகொண்டவன், மெல்ல அவனின் காதின் அருகே குனிந்தவன், ” உனக்குக் கடைசியா ஒரு வாய்ப்பு தரேன். இந்த ஊர விட்டு, என் இசைய என் கிட்டயே விட்டுட்டு, ரொம்பத் தூரம் போயிடுறேனு சொல்லு, உன்ன உயிரோட விட்டுறேன்டா. ” என்றவன் அவனின் பதிலை எதிர்பார்த்திருக்க
” உயிரே போனாலும் என் இசைய விட்டு போக மாட்டேன்டா. ” என்றவனின் பதிலில்
“அப்போ உன் உயிர விட்டுருடா. ” என்றவன் அடுத்த வினாடி, கையில் இருந்த கன்னால்(gun) அவனின் நெத்திப் பொட்டிலே சுட்டிருந்தான்.
“ஆதி……..!” என்ற பெரும் அலறலோடு எழுந்து அமர்ந்தாள் அவள்…
நெஞ்சுக்கூடு ஏறி இறங்க மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்டு அமர்ந்திருந்தவளுக்கு, அது கனவு என்று உறைக்கவே சில நொடிகள் எடுத்தது.
“இசை, என்னமா என்னாச்சுடா?!.” என்ற கேள்வியோடு அன்னையும், தந்தையும், இருவரும் இரு பக்கமும் அமரும் வரை சிலை போல அமர்ந்திருந்தவள், அவர்களின் உலுக்கலில் சுயநினைவை பெற்றாள்.
“ஹான்!, ஒன்னும் இல்லப்பா… ஒன்னும் இல்லை. ஒரு கெட்ட கனவு அதான்!.” என்றவள் அவளின் தந்தையை அணைத்துக்கொள்ள, அவரும் பதிலுக்க அணைத்தவர் அவளின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
“இந்தாடி இந்தத் தண்ணிய குடி!.” என்ற அவளின் அன்னை நீட்டிய தண்ணீரை வாங்கிக் குடித்தவள்,
“அப்பா!, நான் உங்க மடியில படுத்துக்கிட்டா?. ” என்றவள் தந்தையின் மடியிலே படுத்துக் கண் அயர்ந்தாள்.
அவள் நன்றாகத் தூங்கிய பின், மகளைத் தலையணைக்கு மாற்றியவர் மெல்ல கதவை சாத்திவிட்டு செல்ல, அவர் போகும் வரை தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தவள், அவர் சென்ற அடுத்த நிமிடம் தொலைபேசியில் வேகமாக அந்த எண்ணிற்கு அழைக்கலானாள்.
தொலைபேசியின் முதல் ரிங்கிலே அந்த அழைப்பு ஏற்கப்பட, “ ஆதி!. ”என்றவளின் கலக்கமான குரலில்,
“எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன் இசை!.” என்றான் அவன்.
” ஆதி!, எனக்கு இப்போ உன்ன பாக்கணும்.” என்றவள் அழத் தயாராக,
” சரி, அப்போ கீழ இறங்கி வா இசை!. ” என்றவனின் பதிலில் கண்கள் அகல விரிய, வேகமாகப் பால்கனி வழியாக எட்டி பார்த்தாள்.
அவனோ, அவனின் காவல் வாகனம் மேல் ஏறி அமர்ந்தவாறு இவளிடம் பேசிக்கொண்டிருந்தவன், இவள் மேலிருந்து எட்டிப் பார்க்கவும் அவளை நோக்கி கைகளை அசைத்தான்.
அவனைப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர, வேகமாகக் கீழே இறங்கி வந்தவள் அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
தொடரும்.…
