நினைவு -6

“நாம ரெண்டு பேரும் பிரிஞ்சறலாம் யாழா.” என்றவளின் கூற்றில் அதிர்ச்சிக்கு பதிலாக, அவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்திருந்தது.

ஆனால், அந்தப் புன்னகையின் பின்னால் மறைந்திருக்கும் வலியை அவன் மட்டுமே அறிவான். அது வலி என்று சொல்வதை விட, விரக்தியின் உச்சம் என்று சொல்வதே, அவனின் தற்போதைய மனநிலைக்குச் சரியாக இருக்கும். 

ஏதேதோ நினைவுகள் அவன் எண்ணங்களில் அலைமோத, அதை மறைக்க அவன் கையில் எடுத்த புன்னகை என்னும் ஆயுதம், எதிரில் இருந்தவளை கொலை வெறியாக்கியது. 

ஆம், கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவள், அடுத்த வினாடி அவனைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள். 

இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்ட, நேரம் ஆக ஆக அவளின் வேகம் கூடியதே அன்றித் துளி கூடக் குறையவில்லை.

அவள் இவ்வளவு நேரம் தவித்த தவிப்பின் வேதனை அனைத்தும் கோபமாய் மாறி இருக்க, அவள் அடித்த அத்தனை அடிகளையும் அவன் மனமுவந்து ஏற்றுக்கொண்டான். 

கோபம் தீரும் வரை அவள் அடித்து முடிக்கட்டும் எனக் காத்திருந்தவன், திடீரென எதையோ உணர்ந்து வேகமாக அவளைக் கட்டுப்படுத்த முயன்றான்.

” மகிழ்!, மகிழ்!, இங்க பாருமா என்ன பாரு!. ” என்றவன் அவள் இரு கைகளையும் அவன் இடது கையால் இறுக்கப் பிடித்து, அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் அவன் வலது கையால் அவள் கன்னத்தைத் தட்டினான். 

கோபத்தில் கண்களில் கண்ணீர் வழிய அடித்துக் கொண்டிருந்தவளின் கண்கள் சிறிது நேரத்திலே மேலே செல்ல தொடங்க, அதைப் பார்த்து கொண்டிருந்தவனுக்கு நன்றாகவே புரிந்தது அது வலிப்பு நோயின் முதல் அறிகுறி என்று.

பதட்டத்துடன் அவளைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவனின் முயற்சிகள் எதுவும் வீண் என்பதுபோல, அவள் உடல் முழுதும் விரைத்துக் கண்கள் முழுவதுமாக மூடிவிடப் போக, “மகிழ்!.” என்றவனின் உரத்த சத்தமான அதட்டலில் கனவு கண்டவள் போலத் திடுக்கிட்டுக் கண் திறந்தாள் அவள்.

கண் திறந்தவளின் உடல் பழைய நிலைக்குத் திரும்பும் முயற்சியில் அவள் உடல் முழுவதும் நடுங்க தொடங்க, அடுத்த வினாடி அவளை இழுத்து அணைத்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தே விட்டது. 

கண்களில் கண்ணீர் வழிய அவளை அணைத்துக் கொண்டிருந்தவனின் இறுக்கம் மெல்ல மெல்ல கூடிக்கொண்டே போக, சிறிது நேரத்திலே கைகள் நடுங்க பதிலுக்கு அவனை அணைத்தவள் அவன் மார்பிலே முகம் புதைத்தாள்.

நிமிடங்கள் சர்க்கரையாகக் கரைய எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியாது. ஆனால், அவள்தான் முதலில் அவனிடமிருந்து விலகினாள். 

தன்னிடமிருந்து விலகியவளை அருகில் இருந்த சோபாவில் அமரவைத்தவன், அவசரமாக அருகில் இருந்த சமையலறை நோக்கி ஓடியவன், அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

குடித்து முடித்தவள், தன் முன் கண்கள் கலங்க நின்றிருந்தவனைப் பார்த்தவள் மெல்ல பேசத்தொடங்கினாள்,” நான் தோத்துப் போய்ட்டேன் யாழா!, தோத்துப் போய்ட்டேன். இந்த மூணு வருஷமா என் காதல உனக்குப் புரிய வைக்க, முயற்சி பண்ணி, பண்ணி, நான் தோத்துப் போய்ட்டேன். 

ஏன், ஏன், ஏன் யாழா!, உனக்கு ஏன் எப்பவும் என் காதல் புரியவே மாட்டேன்குது?. நெனைவு தெரிஞ்ச நாளுல இருந்து உன்ன என் நெஞ்சுல சுமக்கிறேன்டா. ஆனா, எனக்கு ஏன் எப்பவும் பதிலுக்கு வலி மட்டும்தான் கிடைக்குது. 

மூச்சு முற்ற மாதிரி இருக்குடா. முடியல யாழா!, சத்தியமா முடியலடா. நெஞ்சுக்குழில யாரோ கத்திய வச்சு கிழிக்குற மாதிரி இருக்குடா. எப்பவும் எனக்கு இந்த வலிதான்.” என்றவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வடிந்தே விட, இவனோ உயிரை வெறுத்துக் கற்சிலையாக நின்றிருந்தான். 

“மகிழ்!.” என்றவன் அவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் முகத்தைக் கையிலேந்தி, அவள் இரு கண்களையும் அழுத்த துடைத்து விட்டவன், அவள் கண்களை நேராய் பார்த்துப் பேசத் தொடங்கினான்.

” சாரிம்மா, இதைச் சொல்றதுக்கு எனக்குத் தகுதி இருக்கானு தெரியல. ஆனா, இத தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியலடி, வேற எதுவும் சொல்ல முடியாத நிலைமையில இருக்கன்டி.

கண்ணுக்கு முன்னாடி இருந்த பொக்கிஷத்தைக் காக்க தவறுன பாவி நான். எதெல்லாம் நிரந்தரம் இல்லையோ அதை நோக்கி ஓடி ஓடியே வாழ்க்கையைத் தொலைச்ச முட்டாள் நான். 

இப்போ என்னையே தொலைச்சுட்டு நிக்கிறேன்டி. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுருமா. ” என்றவன் அவள் கால்களைப் பற்றிக்கொள்ள, அவன் பேசுவதில் பாதிப் புரிந்தும் பாதிப் புரியாமலும் இருக்கக், குழப்பத்துடன் அமர்ந்திருந்தவள் அவன் செயலில் பதறி விலக முயன்றாள்.

ஆனால், அவன் பிடி அவளை அசைய மறுக்க, “யாழா!, என்ன பண்ற?. என் கால விடு, மொதல்ல ஏந்திரிடா!.” என்றவள் அவனை எழுப்ப முயல “என்ன மன்னிச்சுருமா, தயவு செஞ்சி மன்னிச்சுருமா!.” என்றவன் அதையே ஜபம் போலச் சொன்னவன், அவள் கால்களை இன்னும் இறுக பற்றிக் கொண்டான். 

“ஐயோ யாழா!, ப்ளீஸ் எழுந்திரி!.”  என்றவள் மெல்ல அவனை எழுப்பி, அந்தச் சோபாவில் அவளுக்கு அருகில் அமர வைத்தாள்.

மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாவாரு அமர்ந்தவளுக்கு , உண்மையிலே உள்ளுக்குள் ஆயிரம் பரிதவிப்பு இருக்கத்தான் செய்தது.

என்னதான் அவன் மீது கோபம், ஆதங்கம், இருந்தாலும் அவளால் அவனை வெறுத்துவிட முடியவில்லை. வெறுத்துவிட முடியவில்லை என்பதைவிட, வெறுப்பதைப் பற்றி அவளால் யோசிக்கக் கூட முடியாது என்பதே உண்மை. அந்த அளவிற்கு அவன் என்ன செய்துவிட்டான் என்று கேட்டால், அதற்கான பதில் அவளிடம் இல்லை. 

ஆனால், ஏதும் அறியா சிறு வயதில் இருந்து இப்போது கண் முன்னால் நிற்கிறானே இந்த வயது வரை, அவன் மீதான நேசம் ஆலமர விருட்சம் போல வளர்ந்திருக்கிறது. அது அவ்வளவு எளிதில் மங்கி மறைவதென்பது நடவாத காரியம்… 

இப்போது கூட, இத்தனை வருடம் அவன் மீது அவள் கொண்ட காதலினால் அவள் கண்ட வலியை விட, அவன் கண்கள் கலங்க நின்ற அந்த வலித்தான் அவளுக்குப் பெரிதாய்த் தெரிந்தது. 

அதுதான் எல்லாவற்றையும் மறந்து அவனிடம் மீண்டும் சரணடைய, அவளை ஒவ்வொரு தடவையும் தயார் செய்கிறதோ என்னவோ.

“யாழா!” என்றவள் அவன் முகத்தைக் கையிலேந்தி அவன் நெற்றியில், மெதுவாக அதே நேரம் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தாள். அதுதான் அவள் அவனை மன்னித்து விட்டதற்கான முதல் அறிகுறி. 

அந்த முத்தத்தைக் கண்களை மூடி ஆழ்ந்து அனுபவித்தவன் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவன் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்து ஓடியது. 

ஏனோ, அவளின் கண்களில் கூடக் கண்ணீர் தரையை நனைக்க, மெதுவாக அவன் கண்களைத் துடைத்துவிட்டவள், அவள் கண்களையும் அவளே துடைத்துக் கொண்டு அவன் தோளிலே தலை சாய்ந்தாள்.

நிமிடங்கள் நொடிகள் எனக் கரைய அவன்தான் முதலில் வாயைத் திறந்தான், “மகிழ்!, ஒரு லாங் வாக்  வெளியே போயிட்டு வரலாமா?.” 

அவனின் கேள்வியில் தோளில் சாய்ந்திருந்தவள், மெல்ல நிமிர்ந்து அமர்ந்தவள் தயக்கத்தோடு, “இல்லை, அம்மா அப்பா எப்ப வேணாலும் வரலாம். நம்ப வேணா மொட்டை மாடிக்கு போவோமா?.” என்று கேட்டவளுக்கு, எங்கே மீண்டும் அவன் கோபப்பட்டு விடுவானோ என்ற பயம் இருக்க, அதை அவளின் கண்கள் அப்படியே பிரதிபலித்தது.

அவளின் கேள்வியில் மென்னகை புரிந்தவன், அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு நடக்க, அவனின் இந்தத் திடீர் செயலில் கண்கள் அகல விரிய அவனைப் பார்த்தவள், புன்னகையோடு அவனின் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டாள். 

பௌர்ணமி இரவு…

வானத்தில் நிலவு மகள், மாதம் மாதம் வரும் தனது பிறந்த நாளில் மட்டும் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, தன் முழு அழகையும்  காட்டி நிற்பதால்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதோ என்று எண்ணம் தோன்ற வைக்கும் பௌர்ணமி இரவு.

கைகளில் அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவன், மாடியில் ஒரு மூலையில் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த கல்தூணில் அவளை அமரவைத்தவன், பதிலுக்கு அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.

சில்லென்ற காற்று அவள் மேனியை தழுவி செல்ல உடல் சிலிர்த்தவள், அவன் கைகளோடு இவள் கையை இறுக்கப் பிணைத்துக் கொண்டு அவன் தோளில் தலை சாய்ந்தவள், வானத்தில் தெரியும் நிலவு மகளை ரசிக்கத் தொடங்கினாள். 

அவள் மனம் இறக்கையே இல்லாமல் பறப்பது போல தோன்றியது. வாழ்க்கையை வாழ்வதற்கான ஆதாரம் மீண்டும் கிடைத்துவிட்ட நிறைவு அவளின் மனதில். வாழ்க்கையில் கிடைக்காது என்று தொலைந்துவிட்டது என்று நினைத்த பொக்கிஷம் மீண்டும் அவள் கைகளில் கிடைத்த திருப்தி அவள் முகத்தில் தெரிய அவள் கண்களோ இழந்த ஒளியை மீண்டும் பெற்றதுபோல ஜொலித்தது.

நேரம் அதிகாலை நாலு மணியைத் தொட்டாதற்கான அடையாளமாய், அவள் வீட்டில் இருந்த அந்தக் கடிகாரம் ஒலி எழுப்ப, நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள் அவ்வாறே அவனுடன் பேசத் தொடங்கினாள்.

” மொட்டை மாடியில இப்படி உன் தோளுல சாஞ்சிகிட்டே நிலாவ பாக்கணும்கிறது, இதெல்லாம் என்னோட எத்தனை வருஷ கனவு தெரியுமா?.

இதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கவே நடக்காதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இதெல்லாம் இன்னைக்கு உண்மையாவே நடக்குது. இதேமாதிரி என்னோட எல்லா கனவையும் நீ நிறைவேத்துவியா ?. ” என்றவள் அவனின் பதிலை எதிர் பார்த்திருக்க அவன் பதில் பேசுவதற்கு முன்பாக 

“ஏய் யாழா!, இரு இரு போன மறந்து கீழே வச்சுட்டு வந்துட்டேன். நான் போய் எடுத்துட்டு வரேன். இல்லனா அப்பா அம்மா போன் அடிச்சு நான் எடுக்கலைனா பயந்துருவாங்க.” என்றவள் அலைபேசியை எடுக்கக் கீழே இறங்க, சரியாக அவள் ஹாலை அடைந்த நேரம் அவள் தொலைபேசி அடித்தது…

“ஹலோ!, சொல்லுடி நிலா என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டிருக்க?!” என்றவளின் கேள்விக்கு எதிர் திசையில் சொல்லப்பட்ட பதிலில், அதிர்ச்சியில் உறைந்தவளின் செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது… 

அதேநேரம், மாடியில் இருந்தவனின் இதழ்களிலும் விரக்திப் புன்னகை ஒன்று பரவ, அவனின் நினைவுகளோ மெல்ல பின்னோக்கி அசைபோடத் தொடங்கின… 

சரியாக நான்கு மணி நேரத்திற்கு முன்பு…       

  

 

                                                        தொடரும்…. 

 

மறுபிறவி, மறுஜென்மம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க நண்பர்களே… இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா இல்லை கற்பனைகளுக்கு மட்டும் உரித்தானதா?…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page