நினைவு -8

“இல்ல!.” என்ற பெரும் அலறலோடு எழுந்து அமர்ந்தான் அவன். நினைவலைகளில் அவன் கடைசியாகப் பார்த்த காட்சி, தோன்றி மறைய விதிர்விதிர்த்துப் போய் அமர்ந்திருந்தவன், அவசரமாக அவனை முழுமையாக ஆராய்ந்தான்.

” ச்சே!…கனவா இது?!.”அவன் உடம்பில் சிறு கீறல் கூட இல்லாததை உறுதி செய்த பிறகே, அவனுக்குள் நிம்மதி பரவ பெருமூச்சை வெளியிட்டவன் மெல்லிய புன்னகையுடன் தலை நிமிர்ந்தான். தோன்றிய புன்னகை சட்டென்று மறைய, கண் முன்னே தெரிகின்ற காட்சி அவனுக்குள் அதீத குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

“என்ன இது, நான் கண்ணு முன்னாடி பாக்குறதெல்லாம் உண்மையிலேயே நிஜமா?. இல்லை, நான் இன்னும் கனவுல இருந்து முழிச்சுக்கவே இல்லையா?.” என்றவன் மெல்ல எழுந்து நின்று கண்களைக் கசக்கிவிட்டுப் பார்க்க, மீண்டும் அவன் கண்களில் அதே காட்சிதான் தெரிந்தது.

அந்தக் காட்சி… 

வானளவு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்புகளை, இதய வடிவில் கொண்ட ஒரு மாபெரும் நுழைவாயில்…

ஆம், நெருப்பு வளையங்களால் ஆன இதய வடிவ நுழைவாயில் ஒன்று அவன் கண் முன்னே இருக்க, அதற்குள் ஒரு மாய உலகம் இருப்பது போல இவனுக்குப் பிரம்மை தோன்றியது… 

இது எப்படிச் சாத்தியம் என்று அவன் யோசிக்கும் முன்னே, அவன் செவிகளைத் தீண்டியது அந்தக் குரல்,” யாழா! டேய் மச்சான்! எழுந்திரிடா! ” அழுகையுடன் ஒலித்த அவன் நண்பனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

பிரதான நெடுஞ்சாலையில் வாகனங்கள் அங்கும் இங்குமாகச் சென்று கொண்டிருக்க, சாலையின் ஒரு ஓரத்தில் ஒரு பெரிய கூட்டம் அரும்பியிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்துதான் தன் நண்பனின் அழுகைச் சத்தம் கேட்பதை உறுதி செய்தவன், மெல்ல அவர்களை நோக்கி நடை போட்டான். 

ஆனால், அவன் மனதில் இது அனைத்தும் கனவாகத் தான் இருக்க வேண்டும் என்ற கலக்கம் இருக்க, அவன் கால்களோ அசைய மறுத்துப் பின்னிக்கொண்டன.

உடலோ ஒருவித நடுக்கம் எடுக்க, முயன்று தன்னைச் சமன் செய்து கொண்டவன், மெல்ல அந்தக் கூட்டத்தை நோக்கி செல்லத் தொடங்கினான்.

அவன் அருகே செல்லச் செல்ல, அவன் நண்பனின் கதறல் சத்தம் அவனின் செவிப்பறையைக் கிழிக்க, கிட்டத்தட்ட ஓடாத குறையாக அந்த இடத்தை அடைந்தவன், மெல்ல எம்பி கூட்டத்தினருள்ளே தன் கண்களைப் படர விட்டான்.

” யாழா, மச்சான் எழுந்திரிடா!. “அவனின் நண்பன்தான் மடியில் இவனது இரத்தத்தால் குளித்திருந்த உடலை கிடத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தான்.

சுற்றிக் குழுமி இருந்த மக்களின் சலசலப்புச் சத்தத்தில் இருவரின் பேச்சு வார்த்தை மட்டும் இவன் காதுகளில் தெளிவாக விழ மூளை செயலிழந்தது போல உணர்ந்தான் அவன்.

” எப்படி ஆச்சு?.” என்று ஒருவரின் கேள்விக்கு, 

“ஹை ஸ்பீட்ல லாரியை ஓவர் டேக் பண்ண முயற்சி பண்ணி இருக்காரு. இதுல லாரி திடீர்னு மண் ரோட்டுக்கு திரும்பவும் அடிச்சுத் தூக்கிருச்சி. ஆளு ஆன் தி ஸ்பாட்டிலேயே முடிஞ்சுருச்சு.”

கண்கள் மரணக் களையைப் பிரதிபலிக்க, தன்னையும் கூட்டத்தின் உள்ளேயும்  மாறி மாறி பார்த்தவன்,” இல்ல, இது எதுவும் உண்மை இல்ல. இது கனவுதான், இது கனவுதான்!.” என்றவன் கன்னத்தைக் கைகளால் தட்டி விழித்துக் கொள்ள முயல, அவன் பின்னே அரக்கத்தனமான சிரிப்பொலி ஒன்று அவன் செவியைத் தீண்டியது. 

அதீத பயத்துடன் வேகமாகத் திரும்பியவன் விழிகளுக்கு அந்த நுழைவாயிலைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

அதே நேரம் அந்தச் சிரிப்பொலி அவன் செவிப்பறையைக் கிழிப்பது போல வலியெடுக்க, காதை இரு கைகளால் இறுக்க மூடியவன், மீண்டும் அந்தக் கூட்டத்தை நோக்கி திரும்பியவனின் கண்கள் அதீத அதிர்ச்சியில் அகல விரிந்தன.

ஆம், முன்பிருந்த காட்சி மொத்தமாக மறைந்து அவன் விழிகளுக்கு வெறும் இருள் மட்டுமே காட்சியளிக்க, அந்தச் சிரிப்பொலியோ அவன் செவியை மட்டுமல்லாமல் அவன் உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் வலியை ஊடுருவ செய்தது.

“என்ன நடக்குது இங்க, இதெல்லாம் எப்படி நடக்குது?!.”என்றவன் கைகளைக் காதுகளில் மேலும் இறுக்கிக் கொண்டவன், கால்கள் நிற்கத் தொய்வின்றி அப்படியே மடங்கி அமர்ந்தான். நேரம் செல்ல செல்ல அந்தச் சிரிப்பொலி அப்படியே மங்கி மறைய, அவன் செவியைத் தீண்டியது அந்தக் குரல்.

யாழ் இனியன்!.” அவன் முழுப் பெயரை நிறுத்தி நிதானமாக அதேநேரம் அழுத்தமாக உச்சரித்த அந்தக் குரலில் அதிகக் கோபம் இருப்பது அவனுக்குத் தெளிவாகவே புரிந்தது.

ஆனால், அதற்கான காரணம் தான் அவனுக்கு விளங்காமல் இருக்க, மெல்ல எழுந்தவன் திரும்பி அந்த நுழைவாயிலை நோக்கி நடைபோடத் தொடங்கினான்.

அந்த நுழைவாயிலுக்குள் செல்வதற்காகத் தான் இத்தனையும் நடப்பது போலவும், அந்த நுழைவாயிலுக்குள்ளே இருந்துதான் யாரோ அவனை அழைப்பது போலவும், அவனுக்கு எண்ணம் தோன்ற, மெல்ல அந்த நுழைவாயிலை நெருங்கியவன், அதற்குள்ளே செல்வதற்காகத் தன் முதல் அடியை எடுத்து வைக்கச் செல்ல, மின்சாரம் தாக்கியது போலத் தூக்கி எறியப்பட்டான்.

பத்தடி தொலைவு தள்ளிப் போய் விழுந்தவன் அதிர்ச்சி மேலிட்டு அந்த நுழைவாயிலைப் பார்க்க, “ஹா… ஹா… ஹா..” மீண்டும் அதே அரக்கத்தனமான சிரிப்பொலி அவன் செவியைத் துளைத்தது.

முதல் முறை அந்தச் சிரிப்பொலி அவனுக்குப் பயத்தைத் தந்தது போல இந்த முறை அது அவனுக்குப் பயத்தைத் தரவில்லை.

மாறாக அதிக எரிச்சலைக் கிளப்ப அதிகக் கோபத்துடன் பேச வாயைத் திறந்தவன் கண் முன்னே தெரிந்த காட்சியால் பேச்சற்றுப் போனான்.

“மகிழ்!.” உதடோ மெல்லமாய் முணுமுணுக்க, திரையரங்கத்தில் பெரிய திரையில் படம் ஓடுவது போல அந்த நுழைவு வாயிலின் உள்ளே காட்சிகள் தெரிய மெல்ல அதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு… 

கண்களில் கண்ணீர் திரையிட மூச்சடைப்பது போன்ற பாவனையுடன் நின்று கொண்டிருந்தான் அவன். உண்மையில் மூச்சடைத்து இறந்து விட்டால் கூடத் தான் செய்த பாவத்திற்குத் தகும் என்று தான் அவனுக்குத் தோன்றியது.

சத்தியமாய் அவன் எதிர்பார்க்கவில்லை.அதிலும் இப்படி ஒரு விடயத்தை அவன் கனவிலும் கூட நினைத்ததில்லை.

அவள்… 

நினைக்கும்போதே நெஞ்சுக் கூடு ஏறி இறங்க மூச்சு விடுவதற்கே கடினம் ஆகிப்போனது அவனுக்கு…சிறு வயதில் இருந்து அவனின் மீதான அவளின் காதல் இப்போது அவனுக்குள் கரையான் செல்லாக அரித்துக் கொண்டிருந்தது.

எப்படி, எப்படி? இதைக் கவனிக்கத் தவறினான் அந்த ஒரு கேள்வியே ஆழிப் பேரலையாய் அவனுள் தோன்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்க, அதில் மூழ்கவும்  முடியாமல் அதை விட்டொழியவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்…

வாழ்க்கையில் பணம், பணம்தான் மூலதனம். அதுதான் வாழ்க்கை வாழ்வதற்கான ஆதாரமும் என்றெல்லாம் நினைத்திருந்தவனுக்கு இப்படி ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமாக இருந்தது. கடினம் என்பதை விட அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே  நிதர்சனமான உண்மை.

காதல்… 

பொழுதுபோக்கிற்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயம் என்று நினைத்திருந்தவனுக்கு அதன் உண்மைத் தன்மையின் நெருப்பு அவனைச் சுட்டு எரித்துக் கொண்டிருந்தது…

அதிலும் அவளின் காதல் அவனை அணுஅணுவாய் சிதைத்துக் கொண்டிருக்க எப்படி இதைக் கையாள்வது என்று அவனுக்குத் துளியும் விளங்கவில்லை.

திக்பிரம்மை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தவனுக்கு அவனின் ஆழ் மனதில் தோன்றிய ஒரே ஒரு எண்ணம் அவளைச் சந்தித்து அவளிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டுமே. 

பல நினைவுகள் மின்னல் போல வெட்டிச்செல்ல நினைவலைகளில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் காதுகளில் மீண்டும் ஒலித்தது ஒரு குரல்.

ஒரு குரல் என்ன ஒரு குரல் அது அவனின் குரல் தான் என்று அவனுக்குத் தெளிவாகவே விளங்கியது.

ஆம், அந்த இதய வடிவ நுழைவு வாயிலில், முன்பு ஓடியது போல மீண்டும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கின. கண்கள் இடுங்க கண்முன்னே தெரிந்த காட்சிகளை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகமோ ஆயிரம் அதிர்ச்சி அலைகளை ஒன்றாகப் பிரதிபலித்தது.

ஆம், இவ்வளவு நேரம் காண்பதெல்லாம் கனவு என்றுதான் நினைத்து, அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தவித்துக் கொண்டிருந்தவனுக்கு முதல் முறையாக இது கனவல்லவோ என்ற சிந்தனை மேலோங்கத் தொடங்கியது.

ஆனால், அந்தச் சிந்தனையே அவனுக்கு மரணப் பயத்தைக் கொடுக்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே அவன் சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த காட்சியான நண்பன் மடியில் இரத்தக் களறியோடு இறந்து போனதோடு அந்த நுழைவாயிலுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்சியும் நிறைவடைய அவன் முன்னே இருவர் தோன்றினர்.

முழுவதும் வெள்ளை நிற உடையில் இடது புற இதயத்தின் அருகே சிவப்பு நிற இதய வடிவ டிசைன் பொருத்தப்பட்டிருந்த ஆடையை ஒருபோலவே இருவருமே அணிந்திருந்தனர்.

இடது கையில் செங்கோல் ஒன்று இருக்க அதன் முனைப் பகுதி இதய வடிவத்தில் இருந்தது. தலையில் அணிந்திருந்த வெள்ளை நிற தலைப்பாகையிலும் இதய வடிவ பேட்ச் ஒன்று இருந்தது.

” செல்லலாம் மானிடா!. ” இருவரில் ஒருவர் சொல்ல,

” எங்…க? ” கலக்கம் நிறைந்த விழிகளுடன் வினவினான் அவன்.

” காதல் நீதிமன்றம். “அவன் கேள்வியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பதிலைச் சொல்ல தயங்கவில்லை அவர்கள்.

“ காதல் நீதிமன்றமா?…”

 

 

                                                     தொடரும்…

இனிமேல் இரண்டு நாட்களுக்கு ஒரு அத்தியாயம் தொடர்ந்து பதிவிடப்படும். சோ படிச்சு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ். மறக்காம லைக் பண்ணுங்க. நன்றி.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page