பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கொண்ட ஒரு மாபெரும் நகரப் பகுதி அது…
ரகுநாதன் இன்டஸ்ட்ரியல்ஸ்…
பெரிய நுழைவாயிலுடன் கூடிய பத்து மாடிகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடிக் கட்டிட நிறுவனம். பத்து மாடியின் பத்தாவது தளத்தில் இருந்த ஒரு அறையில் ஜன்னல் வழியாக, வெளியே வெறித்துப் பார்த்தவாறு கையில் ஒரு துப்பாக்கியோடு நின்றிருந்தான் ஒருவன்.
“சார்!, ப்ளீஸ் சார்!. தெரியாம பண்ணிட்டேன் சார். இதுக்கு மேல இப்படிப் பண்ண மாட்டேன் சார். நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை சார். அப்பா அம்மாவ நான்தான் பார்த்துக்கணும், தயவுசெஞ்சி என்ன விட்ருங்க சார்.
இனிமே உங்க கண்ணுலயே படமாட்டேன். அப்பா அம்மாவோட வேற எங்காயாவது போய்ப் பொலச்சிக்கிறோம் சார், ப்ளீஸ் சார்!.” என்று ஒருவனது கதறல் சத்தம் அவன் செவிகளை மட்டுமல்லாது, அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்தது…
கடந்த ஒரு மணி நேரமாக அவன் கெஞ்சிக் கொண்டிருக்க, அதை எதுவும் காதில் விழாதது போல வெளியே வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தவன், சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கையில் இருந்த துப்பாக்கியால் அவன் நெற்றிப் பொட்டிலே சுட்டிருந்தான்.
கைகளால் அவன் சொடுக்கிட, அடுத்த நொடி அதற்காகவே காத்திருந்தவர்கள் போல, இருவர் வேகமாக நுழைந்து அவனது இறந்த உடலை அள்ளிச் செல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கு அப்படி ஒரு விஷயம் நடந்ததற்கான தடயமே இல்லாமல் அந்த இடம் மாற்றப்பட்டது.
நிதானமாக அருகே இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தவன், இதழ்களில் மெலிதான புன்னகை இருந்தது. அவன் அப்படித்தான் எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தைக் கைவிட்டுவிட மாட்டான்.
“எப்படி, எப்படி?, உன்னால எல்லாத்தையும் சரியா கண்டுபிடிக்க முடியுது. இப்படி ஒரு விஷயம் நடக்கப் போறது என்னைத் தவிர வேற யாருக்குமே தெரியாது. அப்படி இருக்கும்போது எப்படி உன்னால அத சரியாகக் கணிக்க முடியுது.
நீ என்ன நெருங்கிட்டனு நெனைக்குற மிஸ்டர். ஆதித்த கரிகாலன். ஆனா, நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட. நீ மோதுறது இந்தப் பிளாக்வோட!.
நீ என்ன தேடி வரதுக்கு முன்னாடி நானே உன்கிட்ட வரேன் உன் உயிரை என் கையால எடுக்குறதுக்கு. உனக்குப் பிறகு என்ன ஒருத்தன் எதிர்க்கவும் கூட யோசிக்கணும்டா!.” என்றவன் மிஸ்டர்.பிளாக் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன். மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைவன்தான் அவன்.
அவன் பெயரைப் போலவேதான் அவனும். ஆம், உண்மையில் கருப்பு நிறம் மட்டுமே அவனின் அடையாளம்..கருப்பு நிற கோட்சூட் பேண்ட், தலையில் கருப்பு நிற தொப்பி, முகத்தை எப்போதும் மறைத்திருக்கும் கருப்பு நிற துணி, கண்களுக்குக் கருப்பு கண்ணாடி, காலில் கருப்பு நிற ஷூ, கையில் கருப்பு நிற க்ளவுஸ் என்று அவனைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் இந்தத் தோற்றம் மட்டுமே.
ஆம், இதுவரை அவனின் முகத்தை யாரும் நேரில் பார்த்ததே இல்லை. அப்படிப் பார்த்தவர்கள் யாரும் இதுவரை உயிருடன் இருந்ததும் இல்லை.
தன்னை எதிர்ப்பவர்களை அல்ல தன்னை எதிர்ப்பதற்கு நினைப்பவர்களைக் கூட, அவன் இதுவரை உயிரோடு விட்டதே இல்லை.
அப்படி இருக்க அவனின் நிலைமை என்னவோ?…
_ _ _ _ _ _ _ _ _ _ _ _
சென்னை விமான நிலையம்…
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் போன்ற பாவனையோடு, கையில் சூட்கேசுடன் இளம் யுவதி ஒருத்தி அந்த விமான நிலையத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தாள்.
சரியாக முகப்புப் பகுதியை அவள் எட்டிய அந்த நேரம், அவளின் முன்னே வந்து நின்றது ஒரு உயர்தர மகிழுந்து…
கோபத்தில் பற்களை நரநரவெனக் கடித்தவாறு நின்றிருந்தவளை பார்த்தவாறே, அந்தக் காரின் உள்ளே இருந்து ஒரு இளம் வயது வாலிபன் வெளியே இறங்கினான்.
வேகமாக அவளை நோக்கி வந்தவன், அவள் கையில் இருந்த சூட்கேசை வாங்கி டிக்கியில் அதைப் பத்திரப்படுத்தியவன், அவளுக்காகக் காரின் முன்பக்கக் கதவை திறந்து கொண்டு நிற்க, கொலைவெறியில் அவனை முறைத்து பார்த்தவள், முகத்தைத் திருப்பிக் கொண்டு காரின் பின்பக்கக் கதவை திறந்து அதில் ஏறிக்கொண்டாள்.
அவளின் செயலில் புன்னகைத்துக் கொண்டவன் அவன் திறந்திருந்த கதவை சாத்திவிட்டு, வேகமாக ஓட்டுநர் இருக்கையில் ஏறி அதைச் செலுத்தலானான்.
சிறிது நேரம் மௌனத்திலே கழிய, பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவள் வெளிப்புறம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டே வர, இவனோ வாகனத்தைச் செலுத்திக் கொண்டே முன்பக்க கண்ணாடியில் தெரிந்து அவளது முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
“என் செல்லத்துக்கு என் மேல கோவமா?!.”அவர்களிடம் நிலவி இருந்த மௌனத்தை முதலில் கலைத்தது அவனே.
அவனின் கேள்வியில் தலையைத் திருப்பி இவனைப் பார்த்தவள்,” கடுப்பேத்தாத அகிலா!. இப்ப எதுக்கு நீ அங்க இருந்து இங்க வந்த?.”என்றவளைப் பார்த்தவன்,
“சிம்பிள், நீ ஸேபா பத்திரமா போறியான்னு தெரிஞ்சுக்கறதுக்காக.” சொன்னவன் தோளை குலுக்கிவிட்டு வாகனத்தைச் செலுத்துவதில் கவனத்தைச் செலுத்தினான்.
“அதுக்காக, நியூயார்க்ல இருந்து யாராவது கூட வருவாங்களா?. ஒரு கால் பண்ணி கேட்டா தெரிஞ்சிர போகுது.”என்றவளுக்குச் சத்தியமாய்க் கோபத்தை அடக்க முடியவில்லை.
“நியூயார்க்ல இருந்து மட்டும் இல்ல, இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்திருந்தாலும் உனக்காகனா நான் வந்து இருப்பேன்.” என்றவனின் அழுத்தம் நிறைந்த பதிலில், புன்னகை தோன்றினாலும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தாள்.
” மேடம்!, கொஞ்சம் சிரிப்பு வந்தா சிரிக்கலாம். நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்.” என்றவன் கன்னக்குழி விழ அழகாகச் சிரிக்க, அவள் புன்னகையில் மனம் மயங்கினாலும், முகத்தில் இருந்த கடுமையை மட்டும் மாறவே இல்லை.
“மதி!.” என்று அழைத்தவன் பெருமூச்சை இழுத்து விட்டு,
“என்னால அங்க உனக்கு என்ன ஆயிடுமோனு பயத்தோட எல்லாம் இருக்கவே முடியாது. ஒருவேள நான் உனக்குக் கால் பண்ணி அது ரீச் ஆகலனா?. அந்த ஒரு கேள்வியே என்னை எவ்வளவு பயமுறுத்துச்சு தெரியுமா?. அதுக்கு அப்புறமும் உன்ன இங்க தனியா அனுப்பிச்சு வச்சுட்டு என்னால நிம்மதி இருக்க முடியாது புரிஞ்சுக்கோ மதி!.” என்றவனைப் பார்த்தவள் மனதுக்குள் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
“இருந்தாலும் எங்க வீட்ல இருக்க யாராவது உன்னைப் பார்த்துட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் நான் உன்ன பாக்கறது அதுதான் கடைசித் தடவையா இருக்கும்.
அதே நேரம், எங்க அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இதுக்கு அப்புறமும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுல அவர் இருக்கிற மாதிரியும் தெரியல. அவருக்குக் கல்யாணம் ஆகலைன்னா நானும் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அதனாலதான் நான் உனக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்கக் கூடாதுனுதான் நான் இதுவரைக்கும் உன் காதலுக்குக் கூட ஓகே சொல்லல.”என்றவள் பேசிக்கொண்டே போகக் காதை இடது கையால் குடைந்தவாறே, சலிப்பான முகபாவனையோடு அந்தக் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவனது முகபாவனை அவளுக்குள் அதிக எரிச்சலைக் கிளப்ப, “நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் அகிலா!” என்றவள் அவள் கையில் இருந்த பர்ஸை தூக்கி அவனின் மீது அடித்தாள்.
“அஹ்ஹ்… வலிக்குதுடி ராட்சசி,” என்றவன் கைகளைத் தோள்பட்டையில் தேய்த்தவாறே,
“பின்ன என்னடி?. எத்தனை தடவை ஒரே புராணத்தைப் பாடுவ. நானும் எத்தனை தடவைதான் அதுக்குப் பதிலை சொல்லறது. இங்க பாரு நல்லா புரிஞ்சுக்கோ. எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன் கூடதான். அப்படி ஒருவேளை நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு முடிவு எடுத்தா நம்பக் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கலாம் போதுமா?.
அது மட்டும் இல்ல, என் மேல உனக்கு லவ்வே இல்லனு நீ சொல்றது எல்லாம் என்னால எந்தக் காலத்துலயும் ஏத்துக்க முடியாது. ஏன்னா எனக்கு நல்லாவே தெரியும் என்ன விட நீ தான் என்ன அதிகமா நேசிக்கிறன்னு. ஸோ திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைப் பேசி என்ன டென்ஷன் பண்ணாத!.” என்றவன் அவ்வளவுதான் என்பது போலச் சாலையில் கவனத்தைச் செலுத்தி விட, இவளும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
நாராயணச் சேதுபதி இல்லம் என்ற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட, அரண்மனை போன்ற பங்களாவின் முன்பு காரை நிறுத்தினான் அவன்.
நல்ல தூக்கத்தில் இருந்தவள் கண்களைத் திறக்க, நாராயணச் சேதுபதி இல்லம் என்ற அந்தப் பெயர் பலகையைப் பார்த்தவள், கண்கள் அகலவிரிய அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“பயப்படாத மதி!. காரோட நம்பர் பிளேட்ட டாக்ஸி நம்பர் பிளேட்டா மாத்திட்டேன். ஸோ அத அவங்க செக் பண்ணாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது மட்டும் இல்ல, வந்ததுல இருந்து நீ என்னைக் கவனிக்கவே இல்லைனு இதுலையே தெரியுது.
அவங்களுக்கு என்ன பாத்து எந்தச் சந்தேகமும் வந்திடக் கூடாதுன்னு தான் நான் சாதாரணப் பார்மல் சட்டையில வந்தேன்.” என்றவனின் பேச்சை கேட்டவள் நிம்மதி பெருமூச்சோடு வெளியே இறங்க முயல, வேகமாக டிரைவர் சீட்டில் இருந்து பின் சீட்டுக்கு தாவியவன் அவள் கையைப் பிடித்து அவனை நோக்கி இழுத்தான்.
அவனின் திடீர் செயலில் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், என்னவென்று கண்களாலே அவனிடம் வினவ, புன்னகை முகமாக அவளிடம் இன்னும் நெருங்கி அமர்ந்தவன், அவளின் கன்னத்தைத் தன் இரு கைகளில் தாங்கி,” இன்னும் ஒரு வாரத்துக்கு நான் உன்னைப் பார்க்க முடியாதுனு வருத்தத்துல இருக்கேன். நீ என்னடானா நீ பாட்டுக்கு இறங்கி போற.” என்றவனைப் பார்த்தவள்,
“அதுக்கு இப்ப என்ன பண்ணனும்?!.” குழப்பமான முகப் பாவனையோடு அவனிடம் வினவினாள்.
“ஒன்னும் பண்ண வேணாம்.” என்றவன் அவளை இறுக்க அணைத்து அவளின் தோளில் முகம் புதைத்தான். சரியாக ஐந்து நிமிடங்களில் அவளை விட்டு விலகியவன், நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து, அவளைப் போகச் சொல்லுமாறு சைகை செய்ய, அவனைத் திரும்பி, திரும்பி பார்த்தவாறே இறங்கியவளை பார்த்து அங்கிருந்த வாட்ச்மேன் பதறிக் கொண்டு ஓடி வந்தார்.
அவரோ டிக்கியிலிருந்த சூட்கேஸை எடுத்துக் கொள்ள அந்தக் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது, அது கண்ணை விட்டு மறையும் வரை பார்த்தவள், அந்தப் பிரம்மாண்ட கேட்டை திறந்துக்கொண்டு உள்நுழைந்தாள் மதியவள். அவள் வெண்மதி என்ற பெயருக்கு சொந்தக்காரி…
தொடரும்.…
இனிமேல் இரண்டு நாட்களுக்கு ஒரு அத்தியாயம் தொடர்ந்து பதிவிடப்படும். சோ படிச்சு எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ். மறக்காம லைக் பண்ணுங்க. நன்றி.
