நிலா – 4

      காதல் என் வாழ்வில் கற்றுகொடுத்த சென்றதெல்லாம் ஆறாத காயங்கள் மட்டுமே. இப்போது மீண்டும் ஓர் முறை அக்காயங்களை அனுபவிக்கச் சொல்லி ஆண்டவன் எனக்கு ஆணை இடுவதைப் போல அவன் திருமணச் செய்தி… 

 

      என் மனம் படப்போகின்ற பாடு புரியாமல் விஷ்வா, “சூர்யாவுக்கு கல்யாணமாம்டா…” என்றான் அகமகிழ்வோடு.

 

      அந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே என் உலகம் நின்று விட்டதை போல, எனைச் சுற்றி வெளிச்சமாய் ஒரு வெறுமை சூழ்ந்து விட்டது.

 

      “சூர்யா தன்னோட கல்யாணத்துக்கு நம்மள இன்வைட் பண்றதுக்காக ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு வறேன்னு சொன்னான். அவங்கூட அவன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணும் வரும் போல இருக்குது, அதான் வீட்ல நீயும் இருந்தா நல்லா இருக்குமேன்னு….” என்று முடிக்கும் முன்,

 

     நிலா, “இல்லண்ணா… இன்னிக்கி எனக்கு இங்க வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குது. நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் பேசுங்க, நான் முடிஞ்சா சீக்கிரம் வரப் பாக்குறேன். முடியலன்னா சாவகாசமா இன்னொரு நாள் அவங்கள பாத்துக்குறேன்…” என்று அண்ணனுடைய பேச்சினுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து முடித்து விட்டாள்.

 

      விஷ்வா சங்கடமாய், “ஓ… அப்டியாம்மா. அவன் உனக்கும் சேர்த்து இன்விடேஷன் கொடுக்கணும்னு ஆசைப்பட்டான்.”

 

     அன்றொரு நாள் சூர்யா, ‘தயவு செஞ்சு இன்னொரு முறை, இதே நினைப்போட என் முன்னாடி வந்து நிக்காத நிலா… அது நம்ம ரெண்டு பேரோட உறவுக்குமே அசிங்கம்….’ என்று சொன்ன வார்த்தைகள் என் நினைவுகளில் படமெடுத்து ஆட, என் அண்ணனிடம் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

 

      என் மௌனம் நீள்வது கண்டதும் இறுதியில் விஷ்வாவே மனம் மாறி, “சரி பரவாயில்ல நிலா, நான் அவன பார்த்து பேசிக்கிறேன். நாங்க வெளியில் எங்கேயாவது ஒரு ரெஸ்ட்டாரன்ட்ல மீட் பண்ணிக்கிறோம். ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றதால என்ன சீக்கிரம் விடுவானான்னு தெரியல, மே பி நான் நைட்டு வீட்டுக்கு வர முன்னப்பின்ன ஆகலாம். நீ வீட்டுக்கு போனதும் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிடு, பாத்து ஜாக்கிரதையா இரும்மா….” என்றான்.

 

      “சரிண்ணா… நான் பாத்துக்குறேன்…” என்று தொடர்பை துண்டித்தவளுக்கு சூர்யாவின் இரக்கமில்லா இச்செய்கையை நினைத்து இதயம் முழுவதும் பற்றி எரிந்தது.

 

      பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் இயன்றவரையில் தன் மூச்சினை இழுத்துப் பிடித்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள். இரண்டு மணி நேரம் கடந்து இருக்கும் பொழுது நிலாவின் செல் போனிற்கு, அவளுடைய அலுவலகத்தின் ரிசப்ஷன் எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது.

 

       நிலா யோசனையோடு, “ஹலோ…” என்றாள்.

 

      வாயிற் பகுதியில் இருக்கும் ரிசப்ஷனிஸ்ட், “மிஸ் நிலா… உங்கள பாக்குறதுக்கு ஒரு விசிட்டர் வந்திருக்காங்க…” என்றாள்.

 

      நிலா, “என்ன பாக்குறதுக்கா?….”

 

      “எஸ் மேம்….”

 

     இது அவனாய் இருக்குமோ என்ற சந்தேகம் எழ, தனது கருநிற வானவில் புருவங்களைச் சுளித்து யோசித்தவள் மெதுவாய், “யாரு வந்திருக்கா?…” என்றாள்.

 

      “பேரு சூர்யானு சொன்னாரு மேம்…” என்றாள்.

 

      நிலாவிற்கு, ‘தான் நிற்கின்ற இடத்திலேயே புதைந்து போய் விடக் கூடாதா?….’ எனுமளவிற்கு உயிர் உறைந்து போனது.

 

      ரிசப்ஷனிஸ்ட், “ஹலோ… ஹலோ…” என்று இங்கு இல்லாத என் உயிரினைத் தொடர்பு கொள்ள முயன்றாள்.

 

     நிலா, “ஹான்… அது வந்து… எனக்கு ஒரு உதவி செய்ங்களேன், அவருகிட்ட நான் இங்க இல்லனு சொல்றீங்களா ப்ளீஸ்?” என்று இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

      ரிசப்ஷனிஸ்ட்டோ தர்ம சங்கடமாய் ஒரு பொய்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, “மேம் அவரு என் பக்கத்துல தான் நிற்கிறாரு… உங்களுக்கு மீட்டிங் இருக்குதா? முடிய எவ்ளோ நேரமாகும்? ஓ… மூணு மணி நேரமாகுமா? ஓகே… ஓகே… சரி நான் அவர்கிட்ட சொல்லிடறேன் மேம்…” என்று வரிசை வாரியாய் கேள்விகளையும் பதிலையும் அவளே சொல்லிவிட்டு தொடர்பினை துண்டித்தாள்.

 

      நிலா, “ஷப்பா….” என்று பெருமூச்சு விட்ட அடுத்த நொடி மீண்டும் அவளின் செல்போன் அலறத் தொடங்கியது.

 

      இம்முறை ரிசப்ஷனிஸ்ட் கெஞ்சும் குரலில், “மேம்… இவரு போக மாட்டேங்கிறாரு….” என்றாள்.

 

      “என்னது?…”

 

      “அவரு ஏதோ இன்விடேஷன் வைக்கத்தான் வந்திருக்காராம், நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் வந்துட்டு போனாலே போதும்னு சொல்றாரு. நீங்க வர லேட்டாகும்னு சொன்னா சாயங்காலம் வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுவேன்னு சொல்றாரு, தயவு செஞ்சு வாங்க மேம்…” 

 

      இதற்கு மேல் சப்பைக்கட்டு கட்ட இயலாது என்று நிலாவின் சிந்தைக்கு எட்டியதும், அவள் மூச்சை இழுத்துப் பிடித்து இதயத்தை திடப்படுத்திக் கொண்டு, “சரி வர்றேன்…” என்றாள்.

 

      எந்த நாளை.. எந்த நொடியை.. எந்த தகவலை… என் வாழ்வில் தெரிந்து கொள்ளவே கூடாது என்று நினைத்தேனோ, அது இன்னும் சில நிமிடங்களில் நான் நினைத்ததை விட கொடூரமாக என்முன் நிகழ இருக்கின்றது. அவன் திருமண அழைப்பு மடலை, இன்முகத்தோடு நான் எனது கைகளில் வாங்கிக் கொள்ள வேண்டுமாம்! எத்தனைக் கொடியவன் இந்த இறைவன்?! 

 

      ‘இந்தச் சூழ்நிலையை நீ நிச்சயமாக எதிர்க்கொள்ள வேண்டுமா? இப்படியே உலகில் ஏதாவது ஒரு மூலைக்கு ஓடி விடலாமா?…’ என்று இதயம் கேட்க, 

 

மூளையோ, ‘நீ எங்கு சென்றாலும் நாளை உன்அண்ணன் ஏன் ஓடி ஒளிந்தாய் என்று உன்னை நிற்க வைத்து கேள்வி கேட்பான். அப்போது உன் கடந்த கால காதலை நீயே அண்ணனிடம் கூறும்படி கதையாகிவிடும். அதற்கு பதிலாக இப்போதே மரியாதையாய் சென்று இரண்டு நிமிடம் பேசிவிட்டு வந்துவிடு…’ என்று பதில் உரைத்தது. 

 

இதயம் மூளை இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தேன் நான்.

 

      ‘நடப்பது நடக்கட்டும், துணிந்து எதிர்கொள்வேன் நான். இதுவரை எத்தனையோ பிரச்சினைகளை பார்த்தவள் இந்த நிலா… இன்றைய பொழுதினை சமாளிக்க இயலாதா?’ என்று இதயமும் மூளையும் செய்த பட்டிமன்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அலுவலகத்தின் ரிசப்ஷன் ஏரியாவிற்கு சென்றேன்.

 

     நினைவில் என் மனதை ஆட்கொண்ட ஒருவன், நிஜத்தில் இன்னொருத்தியை ஆட்கொள்ள போகின்றான் எனும் செய்தியை அவன் வாயால் சொல்லப் போகிறான். என் செவியால் அதைக்கேட்ட பிறகும் என் முகத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு, ‘என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று சொல்லப் போகின்றேன். 

 

     இதோ வந்துவிட்டது என்னவன் அமர்ந்திருக்கும் இடம்… கனவில் வந்தவன் என் கண் முன்னால், தன் முதுகை காட்டியபடி என் வரவை அறியாமல் அமர்ந்திருந்தான். இத்தனை வருடங்களுக்குப் பிறகும், மாறாத அவன் சிகை அலங்காரம் இன்னமும் அப்படியே இருந்தது…

 

     இவ்வளவு நேரம் நான் கொண்டிருந்த உறுதி அனைத்தும் உடைந்து போக, ‘சூர்யா…’ என என் அடிமனம், தன்னிச்சையாய் அவன் பெயர் சொல்லி அழைத்தது. அதை அவன் செவிகள் இரண்டும் கேட்டது போல, சடாரென்று தன் இருக்கையிலிருந்து திரும்பிப் பார்த்தான்.

 

      குழந்தை முகம் மறைந்து, மெல்லிய தாடி வளர்ந்து ஆண்மை நிறைந்த முகமாய் மாறி இருந்தது. அன்றைய அரும்பு மீசை, இன்று அவன் கட்டுப்பாட்டையும் மீறி அத்தனை அழகோடு முறுக்கிக் கொண்டு விரைத்து நின்றது. முருங்கைக் காயைப் பொல் மெலிதாய் இருந்த அவனின் தோள்கள் இரண்டும் சதைப் பற்றோடு வலுவான புஜங்களாய் உருக் கொண்டிருந்தன. காந்தப் பார்வை, ஆளை மயக்கும் புன்னகையென்று மொத்தமாய் மாறிப் போயிருந்தான் சூர்யா. 

 

      ஒரே நொடியில் பார்வைகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள, அடுத்த நொடியே நிலா தன் விழியைத் தரையை நோக்கித் தாழ்த்தி இருந்தாள்.

 

      சூர்யா, “ஹாய் நிலா… ஆளே மாறிப்போயிட்ட…” என்று சொல்லிக்கொண்டே எழுந்து என் அருகில் வந்து நின்றான்.

 

     அவனது இயற்கையான வாசனையை மறைக்கும்படி, ஏதோ உயர்ரக செயற்கை திரவியத்தினை அள்ளித் தெளித்துக் கொண்டு வந்திருப்பதை, இரண்டடி தூரத்திலிருந்தே என்னால் உணர முடிந்தது. 

 

      சூர்யா, “மேடம் ரொம்ப பிஸியோ?…”

 

      ஒரு நொடி மறந்து போய் தலை நிமிர்த்தி, “ஹான்?… என்ன?…” என்று கேட்டுவிட்டு பார்வைகள் இரண்டும் மோதியதுமே, மீண்டும் தலை குனிந்து கொண்டேன்.

 

      “இல்ல.. மீட்டிங்னு சொன்னாங்க…”

 

      “ம்… ஆமா… மீட்டிங் போயிட்டு இருக்கு… சீக்கிரம் போகனும்…”

 

      “இன்டேரக்ட்டா எதுக்குடா என்ன தொல்ல பண்றன்னு சொல்ற…”

 

     “சே… சே… அப்டியெல்லாம் இல்ல…” என்று எதேச்சையாய் நான் தலை நிமிர அங்கே மீண்டும் ஒரு பார்வை மோதல்.

 

      “ஓகே மேடம், புரியுது. இந்தாங்க, என்னோட மேரேஜ் இன்விடேஷன்…” என்று கட்டாயப்படுத்தி என் கையில் ஒரு கவரினை திணித்தான். 

 

     அதைக் கையில் வாங்கியதும் நான் நிற்கின்ற இடத்தில், ஏசிக் காற்றினையும் மீறி சூடு அதிகமானதை போல் உணர்ந்தேன். ‘நெருப்பில் நிற்பது’ என்று பலரும் சில நேரங்களில் சொல்வார்களே, அது இதுதானோ?

 

       அவன் என் பதில் மொழிக்காக காத்து நிற்பது தெரிந்ததும், மெல்லிய குரலில், “தேங்க்யூ… மை பெஸ்ட் விஷ்ஷஸ்…” என்றேன் வேண்டா வெறுப்போடு.

 

“தேங்க் யூ” என்று கூறிக்கொண்டே தன் வலது கையை நீட்டினான், தர்ம சங்கடமாய் நானும் என் கரந்தனை அவன் முன் நீட்டினேன்.

 

என்ன நினைத்தானே, என் கையை அழுத்தமாய் பற்றிக் கொண்டு கை குலுக்கினான். 

 

“என்ன நியாபகம் வச்சு இன்வைட் பண்ணினதுக்கு நான்தான் தேங்க்ஸ் சொல்லனும்” என்று கூறிவிட்டு, வலுக்கட்டாயமாய் என் கையை அவனது பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டேன் நான்.

 

      “ஒரு தடவ இன்விடேஷன ஓப்பன் பண்ணி பாரு நிலா…” என்று என்னை சீண்டினான்.

 

      “இல்ல… நான் அப்புறமா பாக்குறேன்.”

 

      “ம்….”

 

      “நீங்க எதுக்கு இவ்வளவு தூரம் அலஞ்சுகிட்டு? எனக்குரிய இன்விடேஷனையும் என் அண்ணன் கையிலேயே கொடுத்திருக்கலாம்ல. தேவையில்லாம எதுக்கு கஷ்டப்பட்டு…” என்று நான் முடிக்கும் முன்பாக,

 

     சூர்யா முந்திக் கொண்டு, “எனக்கு உன்ன ஸ்பெஷலா இன்வைட் பண்ணனும்னு தோணுச்சு நிலா, அதான்.”

 

      “ஓ…. சரி ஓகே, எனக்கு டைம் ஆச்சு, நான் உள்ள போறேன்.”

 

      “கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடு நிலா… என்னோட வைஃப் கிட்ட உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்கேன். அவ உன்ன கண்டிப்பா பாக்கணும்னு சொன்னா…” என்றதும் கழிவிரக்கத்தில் எனக்கு ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது.

 

      அலுவலகத்தில் அனைவருக்கும் முன்னால் அழ முடியுமா? அழுவதெற்கென்றே அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு நிலா வீட்டிற்கு சென்றாள். தனது படுக்கையில் போய் பொத்தென்று விழுந்தவள், தன் மனம் கொண்ட குறை தீரும் மட்டும் வாய் விட்டு அழுது தீர்த்தாள்…

 

     ‘நீ ஏண்டா இப்படி பண்ற? இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது நீ நல்லா இருக்கியா இல்லையான்னு நான் எட்டி பார்த்திருப்பேனா? அட்லீஸ்ட் உனக்கு ஒரு போன் பண்ணி பேசி இருப்பேனா? நான் உன்னை காதலிச்சதை தவிர, உனக்கு வேற எந்த கெடுதலும் பண்ணலையே… 

 

என் முகத்துல முழிக்காதன்னு நீ சொன்ன பிறகு நான் உன் போட்டோவைக்கூட பாக்கலையே! அப்புறமும் ஏன்டா என்ன தேடி வந்து உன்னோட கல்யாண பத்திரிக்கையை கொடுக்குற? என் மனச கஷ்டப்படுத்தி பாக்குறதுல உனக்கு அவ்வளவு ஆசையாடா?…’ என விருப்பம்போல் புலம்பித் தள்ளியவளுக்கு, இறுதியில் தலைவலி வேறு இலவச இணைப்பாய் வந்து ஒட்டிக் கொண்டது.

 

     மாலை நேரம் வந்ததும் தன் ஒட்டு மொத்த மன பாரங்களையும் கரைக்கும் வகையில் சுடு தண்ணீரில் தலை முழுகிவிட்டு, தனக்கு மிகவும் இஷ்டமான கோவிலுக்குச் சென்று சூர்யாவின் பெயரில் ஒரு அர்ச்சனை செய்தாள். அதுதான் நிலா, அவள் மனமறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்க மாட்டாள். 

 

     கோவிலுக்குச் சென்றதுமே அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் மனம் சற்றே அமைதி கொள்ள, வீடு திரும்பும் வழியில் எதற்கும் இருக்கட்டும் என்று நிறைய தலைவலி மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தாள். அவன் திருமணம் முடியும் வரையில் அடிக்கடி தேவைப்படும் என்ற நல்லெண்ணம்தான். 

 

     மாத்திரையைப் போட்டுக்கொண்டு தூங்கி எழுந்திட நினைத்து படுக்கையில் விழுந்தாள். இரவு பத்து மணிபோல வீடு திரும்பிய விஷ்வா தன் தங்கை அசதியின் காரணமாக உறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு, தானும் தன் அறைக்குச் சென்று விட்டான்.

 

      ஆனால் நிலா உறங்கவில்லை, தனக்கு மிகவும் பிடித்தமான அந்த சுற்றுலா நாட்களை நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
225 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
305 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
211 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page