நிலா – 5

      மனதில் வேதனை மிகுந்திட நேர்ந்தால், வாழ்வில் மகிழ்ச்சியான பக்கங்களை புரட்டிப் பார்த்து, நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் அம்மாவின் அறிவுரை. அதே முயற்சியில் தான் நான் இப்போதும் இறங்கி இருக்கின்றேன். என் வாழ்க்கையின் மிக மிக மகிழ்ச்சியான பகுதி என்னுடைய பள்ளிச் சுற்றுலா….

 

    நான் ஒன்பது வகுப்பு பயில்கையில் எங்களுடைய பள்ளியில் சுற்றுலாவிற்கான ஏற்பாடு நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

      ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளை மட்டும் அழைத்துச் செல்வதாய் சொல்லியிருந்தால், தந்தையில்லா பெண் பிள்ளையாகிய என்னை, நிச்சயம் என் அம்மா டூர் செல்ல அனுமதித்து இருக்க மாட்டார்கள். ஆனால் சுற்றுலா அறிவிப்பு ஒன்பதாம் வகுப்பிற்கும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் சேர்த்து வந்திருந்தது. அதன் காரணம்  இரு வகுப்பு மாணவர்களும்  ஒரே சுற்றுலா தலத்தை தேர்ந்தெடுத்தது தான்.

 

      பனிரெண்டாம் வகுப்பில் என் உடன்பிறப்பு விஷ்வா இருப்பதனால் எனக்கு நிச்சயம் இந்த டூருக்கு அனுமதி கிடைக்கும் என்று உள்மனம் அடித்து சொல்லியது. வீட்டிற்கு வந்ததும் நல்ல பிள்ளையாக நான் அமைதியோடு இருக்க, என் அண்ணன் விஷ்வாவே டூர் பற்றிய பேச்சை ஆரம்பித்தான். 

 

     விஷ்வா, “அம்மா… எங்க ஸ்கூல்ல ஊட்டிக்கு டூர் கூட்டிட்டு போகப் போறாங்கம்மா…”

 

     அம்மா, “எத்தன நாள்டா?…”

 

     “ரெண்டு நாள் தான்மா, நயன்த்தும், டுவெல்த்தும்… நாங்க போகட்டுமாம்மா…” என்று எனக்கும் சேர்த்தே அண்ணன் கோரிக்கை விடுத்தான்.

 

     அம்மா, “நீ போயிட்டு வர்றதுல எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா நிலா வீட்டுலயே இருக்கட்டும்…”

 

     என் முகம் வாடியது கண்டு என் அண்ணன், “ஏம்மா அவளும் வரட்டுமே…”

 

     அம்மா, “டேய்… அவ பொம்பள புள்ள டா, போற இடத்துல எப்படி இருக்குமோ என்னமோ? திடீர்னு வயசுக்கு வந்துட்டான்னா என்ன பண்றது? உடனே தீட்டு கழிக்கனும், அதெல்லாம் உங்க டீச்சருக்கு தெரியாது. மலைப்பக்கம் காத்து கறுப்பு நிறைய இருக்கும், வயசுக்கு வந்த பொண்ணுக்கு ஆகாதுடா. எதுக்கு தேவை இல்லாம ரிஸ்க் எடுத்துக்கிட்டு?” என்றார்.

 

     “ம்மா… என்னம்மா நீங்க ரெண்டுநாள் டூருக்கு இவ்வளவு தூரம் யோசிக்கிறீங்க? அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அவள நான் பாத்துக்குறேன்மா, கூடவே சூர்யாவும் இருக்கப் போறான். அப்புறம் என்னம்மா?  இதுக்கு முன்னாடி டூர்  அனவுன்ஸ்மெண்ட்  வந்த நேரமெல்லாம் பொம்பள புள்ளையா தனியா அனுப்ப பயமா இருக்குன்னு சொன்னீங்க, இப்போ இப்படி சொல்றீங்க. இப்பவும் விட்டுட்டா அடுத்து எப்போ அவ டூர் போவா? ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா…” என்று அம்மாவை நச்சரித்தே அண்ணன் அனுமதி வாங்கி விட்டான். 

 

      அம்மா ஒத்துக் கொண்டதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம், முதலாவது முதல் முறையாக டூருக்கு செல்வது, இரண்டாவது என்னவனோடு ஊட்டிக்கு செல்வது. அப்போதிருந்தே டூருக்கான ஒவ்வொரு வேலைகளையும் அதீத அக்கறை எடுத்து செய்து கொண்டிருந்தேன்.

     

     டூர் நாள் அன்று அனைவரும் மகிழ்ச்சியாக பயணப் பேருந்துக்கு காத்திருக்க, நான் அவன் வரவிற்காக காத்திருந்தேன். இதோ வந்துவிட்டான், என் அண்ணனின் ஆருயிர் தோழன், என் மானசீக காதலன் சூர்யா… 

 

    இன்று எனக்கு சுக்கிரதிசை உச்சத்தில் இருக்கிறது போல, எங்கள் வகுப்பு மாணவிகள் ஏறிய பேருந்தில் நிறைய இடம் மீதமிருந்ததாலும், மற்ற வகுப்பினரெல்லாம் மிகச்சரியாக மற்ற பேருந்துகளில் ஏறிவிட்டதாலும், கடைசி பேருந்தில் இடமில்லாத பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலரை எங்களோடு ஏற்றினார்கள். 

 

     ஆசிரியர்களின் அந்த முடிவால் அண்ணனும் அவனின் நண்பர்கள் குழுவும் மொத்தமாய் என் பேருந்தில் ஏறிற்று. அதிலும் அவன் என் பின் இருக்கையில்… இதற்கு மேலும் சொர்க்கம் வேண்டுமா எனக்கு?

 

      ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியின் சித்தி விநாயகருக்கு பெரும் பூஜையை போட்டுவிட்டு, சுற்றுலா வாகனத்தை கிளப்பினார்கள். என்னவனது அருகாமையால் ஏகபோக குஷியோடு நானும் கிளம்பினேன். அவ்வப்போது பின் இருக்கையை நான் திரும்பி பார்ப்பதனை அவன் அறிந்திருந்தாலும், பய மிகுதியால் என் அண்ணனின் அருகாமையைத்தான் தேடுகின்றேன் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

 

      பேருந்தின் டிவியில் மெல்லிசைப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டதும், பின் இருக்கையில் இருந்து அவன் பாடும் குரல் எனக்கு மெதுவாய் கேட்டது. இன்றிலிருந்து இவைகள்தான் என் விருப்பமான பாடல்களாக என் இதயத்தில் இடம் பெறப் போகின்றன, என்பதை அறியாமல் அவன் அவனுக்கு பிடித்த பாடல்களை எல்லாம் பாடிக் கொண்டே வந்தான்.

 

      இரவின் குளிர் தந்த மயக்கமா, அல்லது என் இதயம் கொண்டவனின் குரல் தந்த கிறக்கமா என்று அறியாமல், என்னை மறந்து தூங்கிப் போனேன் நான்.

 

      அடுத்த நாள் நான் கண் விழித்த போது எங்களின் பேருந்து ஊட்டியை நெருங்கியிருந்தது. சென்னையின் சுக்கிர வெயிலுக்கு பழங்கப்பட்டிருந்த என் உடல், இந்த மலைக்காட்டு குளிரை ஏற்க மறுத்து உதறித் தள்ளியது. குளிரை எங்களின் உடல் தாங்கப் பழகிடும் முன்பே, கொண்டை ஊசி வளைவுகள் தன் பங்கு வேலையை செவ்வனே செய்து முடித்தது.

 

     பேருந்து மலைப்பாதையில் முக்கால்வாசி தூரம் கடந்திருந்த பொழுது, பேருந்தில் முக்கால்வாசி பேர் கிறக்க நிலைக்குச் சென்று இருந்தனர். இனி இப்படியே பயணித்தால், மற்றவர்களுக்கும் ஒட்டுவாரொட்டி போல வாந்தி வரத் துவங்கி விடும், என உணர்ந்திருந்த வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவர், தற்சமயம் பேருந்தை ஒரு ஓரமாய் நிறுத்தும் முடிவிற்கு வந்தார்.

 

      ஆசிரியர், “ஸ்டூடன்ட்ஸ், எல்லாரும் இறங்கி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. வெளியில பாத்ரூம்,  டீக்கடை, ஸ்னாக்ஸ் கடை, கூடவே உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் நிறைய இருக்கு…” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

 

      அதாவது நிறைய குரங்குகள் வெளியே இருக்கின்றன, என்று சூசகமாய் தெரிவிக்கின்றாராம்.

 

     “அரை மணி நேரம்தான்டா பிரேக், அதுக்குள்ள எல்லாரும் மறுபடியும் இங்க வந்துடனும். தனியாவோ, ரொம்ப தூரமோ போயிடாதீங்க, பஸ் ஜன்னல் எல்லாத்தையும் நல்லா க்ளோஸ் பண்ணிட்டு இறங்குங்க…” என்று ஏகப்பட்ட அறிவுரைகளை அள்ளி தெளித்த பிறகே, எங்களை இறங்கிட அனுமதித்தார்.

 

      பேருந்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் அவிழ்த்துவிட்ட கன்று குட்டிகளைப் போல அனைவரும் துள்ளித் தாவி வெளியே ஓடி வந்தோம். என்னை அருகில் காண வான் மேகமே தரை இறங்கி வந்து விட்டதைப் போல, அதிகாலை நேரத்து பனிக்காற்று என்னை நெருங்கி வந்து தொட்டு தழுவிச் சென்றது. அந்தத் தழுவலின் குளிர் தாளாமல் ஒரு நொடி உடல் சிலிர்த்து போனேன் நான்.

 

      சூடான ஏலக்காய் டீயும், சுவையான பிரட் ஆம்லெட்டும், குளிருக்கு இதமான வரப்பிரசாதமாக அங்கே கடைகள் எங்கிலும் குவிக்கப்பட்டு இருந்தது. என் அண்ணன் விஷ்வாவும், சூர்யாவும் தமது நண்பர்கள் குழுவோடு ஒரு கடையை முற்றுகையிட்டனர். புதுவித உணவினை உடனடியாக ருசி பார்த்து விடும் பொருட்டு எல்லாக் கடைகளிலும் ஆண் பிள்ளைகளே அணிவகுத்து நின்றதால், பெண் பிள்ளைகள் தற்சமயம் இயற்கை ருசியினை தேடிச் சென்றோம்.

 

      நானும் மற்ற பெண் தோழிகளோடு இணைந்து, மலையின் ஏற்ற இறக்கங்களை ரசித்துக் கொண்டிருந்தேன். குளிரில் நடுங்கிய கால்கள் நடை தளர்ந்து தள்ளாடிய நேரத்தில், திடீரென்று என் இடது தோளில் சூடான ஒரு கை பட்டது. 

 

      என் உள்மனம் உரக்க சொல்லிற்று இது அவன்தான் என்று…

 

      சூர்யா, “நிலா… இந்தா ஏலக்கா டீ… டேஸ்ட் பண்ணி பாரு, செமயா இருக்கு. நீ குளிர் தாங்க மாட்டியாமே, அதான் விஷ்வா குடுத்துட்டு வர சொன்னான்… உனக்கு பிரட் ஆம்லேட், சிப்ஸ், பிஸ்கட் இல்ல வேற ஏதாவது ஸ்னாக்ஸ் வேணுமா நிலா, அங்க விஷ்வா அடுத்த ஆர்டர் கொடுக்க போறான், உனக்கு புடிச்சத சொன்னா சேர்த்து வாங்கிட்டு வருவோம்” என்றான் அக்கறையாய்.

 

       அவனே தன் கைப்பட வாங்கிக் கொண்டு வந்து, என் கையில் தரத் தயாராக காத்திருக்கும் பொழுது, அதை மறுத்திட நான் என்ன முட்டாளா?

 

      நான் கொஞ்சம் தயக்கம் நிறைந்த குரலில், “குளிர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு சூர்யா, சூடா ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது. அங்க காலிபிளவர் ரோஸ்ட் இருக்குதா?”

 

      “ம்… பக்கத்து கடையில இருக்குறத பார்த்தேன், இரு டூ மினிட்ஸ்ல வாங்கிட்டு வந்து தரேன்…” என்று சென்றவன் சொன்னதை போலவே இரண்டு நிமிடங்களில் வந்தான்.

 

      காலிப்ளவரின் சூடு பொறுக்காமல் அதை இடக்கையிலும் வலக்கையிலும் மாற்றி மாற்றி பிடித்தபடி வருபவனைக் கண்டு எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. என் அருகில் வந்து நின்றதும் நான் சிரித்துக் கொண்டே என் வலது கையை அவனை நோக்கி நீட்டினேன். 

 

     சூர்யா, “என்ன சிரிப்பு? ரொம்ப சுடுது தெரியுமா… எனக்கே இப்படின்னா நீ எப்படி இத கையில பிடிப்ப?” என்றான்.

 

      நான் அவன் சட்டை பாக்கெட்டில் நீட்டிக் கொண்டிருந்த சில டிஷ்யூ பேப்பர்களை எடுத்து என் கையில் விரித்து வைத்து, இப்போது என் கையில் அதை வை என்பதை போல கண் ஜாடை காட்டினேன்.

 

      சூர்யா அவமானமாய் தன் பின்னந் தலையை கோதிக்கொண்டே, “அடச்சே… பிரட் ஆம்லெட் கடையில டிஸ்யூ பேப்பர் கொடுத்தாங்க, கடைசியில கை துடைக்க யூஸ் பண்ணிக்கலாம்னு பாக்கெட்ல வச்சேன். அதை சுத்தமா மறந்து போயிட்டேன், இப்படித்தாண்டா சூர்யா நீ அவமானப்படுறது…” என்று வெட்கம் விட்டு புலம்பித் தள்ளினான்.

 

      நான், “விடு விடு… இதெல்லாம் உங்க டீமுக்கு புதுசா என்ன? இந்தா காலிஃப்ளவர் ரோஸ்ட். சூப்பரா இருக்கு, சூடா இருக்கும் போதே சாப்பிடு…” என்று அவன் முன் நீட்டினேன்.

 

      ஏற்கனவே எங்களுக்குள் பகிர்ந்துண்டு பழக்கம் உண்டு என்பதனால், அவன் சங்கோஜம் கொள்ளாமல் ஒரு துண்டு காலிஃப்ளவரை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அடிக்கும் குளிருக்கும் அந்த சூடான சுவையான காலிஃப்ளவர் மிக ருசியாய் தோன்றிற்று.

 

     கண் முன்னால் விரிந்து கிடக்கும் இயற்கை அழகினை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் உண்டோம். 

 

     சூர்யா, “உனக்கு வேற ஏதாவது வேணுமா நிலா?”

 

      “வந்து… வாட்டர் பாட்டில்…” என்றதும் என் தலையில் செல்லமாக தட்டியவன்,

 

      “ஏன் இப்டி பயப்படுற? வாங்கித் தாடான்னு சொன்னா வாங்கிட்டு வரப் போறேன்…” என்று சொல்லிவிட்டு வாட்டர் பாட்டில் வாங்கி வரச் சென்றான்.

 

     வாட்டர் பாட்டில் வந்ததும் இருவரும் பகிர்ந்து குடித்தோம். சொர்க்கம் போன்றதொரு இடத்தில் என்னவனோடு நிற்கும் இந்த நிமிடம் என் வாழ்வின் பொக்கிஷப் புதையல். நிகழ்வது எல்லாம் கனவா நினைவா என்று அறிய அப்போதைக்கு என் மனம் என் அறிவோடு ஒத்துழைக்க மறுத்து விட்டது. நடுவில் குளிர் காற்று வந்து தேகம் தழுவியதும், நான் மீண்டும் ஒருமுறை உடல் சிலிர்த்து அடங்கினேன்.

 

     என் நடுக்கம் பார்த்து பதறிய சூர்யா, “ஹேய்… என்ன இப்டி நடுங்குற? ரொம்ப குளிருதா நிலா?” என்றான் பதற்றம் குறையாமல்.

 

     நான் அணிந்திருந்த உல்லன் வகையறா ஸ்வெட்டர், ஊட்டியின் குளிருக்கு போதுமானதாக இல்லை, என்பதை நான் அறிய மறந்தாலும் அவன் அறிந்திருந்தான்.

 

     சூர்யா, “நான் லெதர் ஜாக்கெட் கொண்டு வந்திருக்கேன், பஸ்ல ஏறினதும் அத எடுத்து தரேன், டூர் முடியிற வரைக்கும் நீயே அத போட்டுக்கோ…” என்று என் பதிலைக் கூட கேட்காமல், அவன் போக்கில் பேசிக் கொண்டே சென்றான்.

 

      முதன் முதலாக அவன் ஆடையை அணிவதற்கு ஆசையாய் இருந்தாலும், ‘அவன் குளிர் தாங்க முடியாமல் தவிப்பானோ?’ என்றொரு வருத்தம் வேறு அடிமனதில் உருவாயிற்று. 

 

என் மனக்குமுறலை அவனிடம் அறிவிக்கும் முன்பே ஆசிரியர் அனைவரையும் பேருந்தில் ஏற சொல்லி ஆணை பிறப்பித்து விட்டார். என்னவன் எனக்காக பார்த்து பார்த்து உதவிடும் இந்த நேரத்தை நான் இழக்க விரும்பவில்லை என்று எவ்வாறு மற்றவர்களுக்கு விளங்கவைக்க? 

 

      முண்டியடித்துக் கொண்டு அனைவரும் தத்தமது இருக்கையை பிடிக்க முன்னேறிச் செல்ல எனக்கும் பேருந்தில் ஏற வேண்டிய கட்டாயம். நானும் ஏறினேன், பேருந்து மீண்டும் பயணிக்க தொடங்கியது….

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
230 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
305 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
211 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page