நிலா – 7
விஷ்வா என் அறைக்கு வரும் பொழுது நானும் அவனோடு பயணிக்க தயார் என்பதைப் போல நின்றிருந்தேன். இயற்கையிலேயே நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட பெண் என்பதால், வரப்போகும் சுனாமியை நினைத்து நான் பயந்து விட்டதாய் அவன் நம்பினான். நாங்கள் புக் செய்த கார் வந்ததும் நான் மெதுவாய் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.
“அண்ணா, இப்போ நாம எங்க போறோம்?”
“ஏர்போர்ட்டுக்கு” என்று சொல்லிக்கொண்டே எங்களுடைய லக்கேஜ்களை காரின் பின்புறத்தில் நிறைக்க தொடங்கினான்.
“மணி அஞ்சரை தான் ஆகுது, இந்நேரத்துல பிளைட் இருக்குமா? அப்படியே பிளைட் இருந்தாலும் நமக்கு டிக்கெட் கிடைக்குமா அண்ணா?”
“எல்லாமே ரெடியா இருக்குதும்மா, ஆறரைக்கி கிளம்புற பெங்களூர் பிளைட்ல ஏறி நாம பெங்களூர் போகப் போறோம். டிக்கெட்டும் ஏற்கனவே புக் பண்ணியாச்சு. நாம இங்கிருந்து கிளம்பி போய் செக்கின் பண்றதுக்கு, அது சரியா இருக்கும். வா வந்து சீக்கிரமா கார்ல ஏறு” என்று உத்தரவிட்டான்.
இருவரும் காரில் ஏறி அமர்ந்த நொடி முதலே, அவன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் பேசுவதைக் கேட்ட டிரைவர் சற்று சத்தமாகவே சிரிக்க, விஷ்வாவோ பார்வையாலே எனக்கு எங்களின் நிலையை உணர்த்தினான். ஆனால் அதில் என் மனம் கவலை கொள்ளவில்லை, நானும் என்னுடைய செல்போன் மூலம் அலுவலக நண்பர்களை தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தேன்..
ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர், “இதெல்லாம் எவனாவது கிளப்பிவிட்ட கட்டுக்கதையா இருக்கும், பேசாம போய்த் தூங்கு..” என்பதோடு தொடர்பை துண்டித்து விட்டனர்.
விஷ்வா, “இங்க பாரு நிலா, நம்மள நல்லா தெரிஞ்சவங்களே நாம சொல்றதை நம்பல. இதுல நீ என்னடான்னா மீடியாவுக்கு போறேன், ஃபேஸ்புக்ல போடுறேன்னு சொல்லிட்டு இருந்த. முன்னப்பின்ன தெரியாத உன்னை யார் நம்புவா சொல்லு?”
“…..”
நான் தலை குனிந்து இருப்பதைக் கண்டதும் விஷ்வா குரலை சற்று இலகுவாக்கி, “சரி, முடிஞ்ச வரைக்கும் உன் கான்டாக்ட்ல இருக்குற எல்லாருக்கும் விஷயத்த சொல்ல ட்ரை பண்ணு. நம்புறவங்க நம்பட்டும், நம்பாதவங்க இருக்கட்டும்” என்றான்.
எனக்கும் இப்பொழுது இவர்கள் நான் சொல்வதை நம்பவில்லை என்று உட்கார்ந்து வருத்தப்படுவதை விட, முடிந்த அளவிற்கு வேகமாக மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முயல்வதே புத்திசாலித்தனம் என்று தோன்றியது. என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று, என் தொலைபேசியில் இருக்கும் அத்தனை பேருக்கும் தொடர்பு கொண்டு, சுனாமி பற்றிய தகவலை அறிவித்துக் கொண்டே இருந்தேன்.
அதிகாலை வேளை என்பதால் கூட்ட நெரிசலின்றி பயணித்த எங்களின் கார், வெகு விரைவிலேயே ஏர்போர்ட்டை அடைந்து விட்டது. விஷ்வா இன்னமும் தன் நண்பர்களுக்கு தகவலை சொல்லி முடிக்கவில்லை, ஆதலால் அவன் கவனம் முழுவதும் போன் பேசுவதிலும், லக்கேஜை எடுத்து வைப்பதிலுமே இருந்தது.
அவன் அசந்து இருக்கும் இந்த நொடியினை நான் எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவன் லக்கேஜ் ட்ராலியில், எங்களின் லக்கேஜ்களை அடுக்கி வைக்க ஆரம்பித்த நேரம் மெதுவாக வேறு திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
அவன் கண்ணில் படாத அளவு தூரத்திற்கு சென்று, ஒரு மறைவிடத்தில் மறைந்து நின்று எட்டி பார்த்தேன். அதி முக்கியமான பொருட்கள் நிறைந்த ஐந்தாறு லக்கேஜுகள் என்பதனால், அவற்றை எல்லாம் விஷ்வா மிக ஜாக்கிரதையாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
இதுவரை அவன் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, என்னுடைய செல்போன் மூலமாக அவனுக்கு அழைத்தேன். தொடுதிரையில் என் பெயரினை கண்ட பிறகே, அவன் என்னைத் தேட ஆரம்பித்தான். நான் அவன் அருகில் இல்லை என்பது உறுதியானதும், யோசனையோடு என் அழைப்பினை அட்டர்ன் செய்தான்.
நான், “அண்ணா.. நீ ஜாக்கிரதையா இங்கிருந்து கிளம்பு. நான் வரல” என்றதுதான் தாமதம்.
இதுவரை இல்லாத அளவிற்கு கோபம் நிறைந்த விஷ்வாவை அந்த நொடியில் நான் கண்டேன். லக்கேஜ் ட்ராலியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அருகிலிருந்த தூண்களின் பின்னால் எல்லாம் என்னைத் தேடத் தொடங்கினான் அவன்.
நான் இல்லை என்றதும் மீண்டும் என் எண்ணிற்கு தொடர்பு கொண்ட விஷ்வா, “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு நிலா? இப்போ உடனே நீ இங்க திரும்பி வரல, என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..”
“அண்ணா..”
“பேசாத நிலா.. உடனே இங்க வா..” என்றான் கடும் கோபத்தோடு.
“……”
“நிலா.. பேசு..” என்று அரற்றினான்.
“……..”
“நிலா..”
“……..”
“சரி நீ சொல்ற மாதிரி நாம மீடியாவுக்கு தகவல் கொடுக்கலாம். திரும்பி வா..”
“இல்ல நீ பொய் சொல்ற.. நான் அங்க வந்தா, என்ன நீ கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போகத்தான் நினைப்ப. என்னால உன்ன மாதிரி சுயநலமா யோசிக்க முடியல, நீ போ..” என்று சொல்லிக்கொண்டே நான் என் இடத்தில் இருந்து வேறு ஒரு மறைவான இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினேன்.
“உனக்கு அறிவில்லையா நிலா? சின்ன புள்ளைக்கு சொல்ற மாதிரி எவ்வளவு தெளிவா சொன்னேன்? இருந்தும் மறுபடியும் ஏன் இப்படி நடந்துக்குற?”
“……”
“நீ சொன்ன உடனே எல்லாரும் சுனாமி வரும்னு நம்பிடுவாங்களா? இல்ல நீ கேட்டதும் கவர்மெண்ட்ல இம்மீடியட்டா ஸ்டெப் எடுப்பாங்கனு நினைச்சிகிட்டு இருக்கியா? ஒரு மண்ணும் கிடையாது. உன் பேச்ச கேட்டு அத்தனை பேரும் தப்பிக்க நினைச்சாக்கூட, ஒரே நேரத்தில ஒரே பாதையில போய் முட்டி மோதிட்டு இருப்பானுங்க, எல்லா ஊருக்கும் தகவல் பரவியிருந்தா சுனாமிக்கி முன்னால இதுவே ஒரு பேரழிவா உண்டாகிடும் தெரியுமா?”
“……”
“நான் சொல்றதக் கேளு, மரியாதையா திரும்பி வா. இல்லனா நானும் இங்கிருந்து கிளம்ப மாட்டேன்.”
“அண்ணா.. என் மேல நீ எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு எனக்கு நல்லா புரியுது. நானும் சின்ன வயசுல இருந்து உன்ன அண்ணனா பார்க்காம அப்பாவாத்தான் பார்த்தேன். ஒவ்வொரு விஷயத்துலயும் நீ என் மேல காட்டுற அக்கறையும், பாசமும், தியாகமும், அத அனுபவிச்ச என்னத் தவிர வேற யாருக்குண்ணா தெரியும்?”
“எல்லாம் தெரிஞ்சும் ஏன் நிலா என் பேச்சை கேட்க மாட்டேங்கிற?” என்றான் குரல் உடைய..
“நீ எப்படியாவது என்ன காப்பாத்தணும்னு நினைக்கிற, அது எனக்கு நல்லா புரியுது. ஆனா அப்படி தப்பிச்சு போய் என்னால நிம்மதியாக வாழ முடியாது அண்ணா. ஒருத்தர் ரெண்டு பேர்னா என்னால தாங்கிக்க முடியும். இத்தனை லட்சம் பேர் சாகப் போறாங்கன்றத, என்னால தாங்க முடியல. அவங்களோட மரண ஓலத்த நீ கேக்கல, நான் கேட்டேன், அந்த கதறல கேட்டுட்டு என்னால இங்கிருந்து வர முடியாது அண்ணா.”
விஷ்வா, “சரி, எத்தனை லட்சம் பேர உன்னால காப்பாத்த முடியும் நிலா?”
“நிச்சயமா எல்லாரையும் என்னால காப்பாத்த முடியாது, அதுக்காக எதுவுமே செய்யாம நான் மட்டும் தப்பிச்சி போறது ரொம்ப பாவம் அண்ணா. எனக்கு ஒரே ஒரு உயிரை காப்பாத்தினாலே போதும், அதுக்கப்புறம் நான் செத்தா கூட என் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.”
“அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா நிலா? எனக்காக நீ வரமாட்டியா? அம்மா அப்பா ஸ்தானத்துல இருந்து உன்ன வளர்த்ததுக்கு, என்ன நீ அனாதையாக்கி பாக்க போறியா?”
“எனக்கும் உன்ன விட்டா யாரு இருக்கா? நான் உயிரோட இருந்தா நிச்சயமா உன்ன தேடி வருவேன், இப்ப நீ போ. எனக்காக வெயிட் பண்றதும், என்ன தேடி வர்றதும் வேஸ்ட் ஆஃப் டைம். பாய் அண்ணா..” என்றவள் தன் செல்போனை தூக்கி தூர எறிந்துவிட்டு, நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறி ஓடிவிட்டாள்.
அதேநேரம் விஷ்வாவிற்கு தொடர்பு கொண்ட சூர்யா, “டேய் வெளக்கெண்ண பத்து நிமிஷமா என்கேஜ்டா இருக்கு உன் நம்பர், அவ்ளோ நேரமா யாருகூட பேசிட்டு இருக்க? சரி, நான் ஏர்போர்ட்க்கு வந்துட்டேன்.. நீ எங்க இருக்க?” என்றான்.
விஷ்வா கோபமாய், “சூர்யா நிலாவ காணும், மக்கள காப்பாத்த போறேன், மண்ண காப்பாத்த போறேன்னு பைத்தியம் மாதிரி உளறிட்டு இங்கிருந்து தப்பிச்சு ஓடிட்டா. இவ சொன்னா எவன்டா நம்புவான்? எங்க போய்த் தொலஞ்சான்னு தெரியலடா..” என்று முடிக்கையில் அவன் குரல் உடைந்துவிட்டிருந்தது.
சூர்யா, “ஹேய் நான் நிலாவ பாத்துட்டேன். இப்போத்தான் ஏர்போர்ட்ட விட்டு வெளியில வர்றா, நீ செக்கின் பண்ணிட்டு வெயிட் பண்ணுடா. நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்டா..”
விஷ்வா, “தயவு செஞ்சு அத மட்டும் செய்டா, அவ வரலன்னா அடிச்சாவது இழுத்துட்டு வந்துடு, விட்ராத மச்சான்..”
சூர்யா, “நீ போன வை, நான் பாத்துக்குறேன்..” என்பதோடு பேச்சை நிறுத்திவிட்டு தன் செல்லை அணைத்து பாக்கெட்டினில் போட்டான்.
விஷ்வாவிற்கு இப்போது நிலா திரும்பி வந்து விடுவாள் என்று கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது. சூர்யாவிற்கு இத்தனை வருடங்களாய் காத்திருந்து கைகூடி இருக்கும் காதல் இது. அப்பேற்பட்ட பெண்ணை அவ்வளவு எளிதில் அவன் விட்டு விட மாட்டான் என்பது விஷ்வாவிற்கு தெரியும். இக்கட்டான சூழ்நிலையில் காதலியை கை விடும் காதலன் எங்காவது உண்டா என்ன?
ஆம்! சூர்யா காதலிப்பதும், அவன் மணம் கொள்ள விரும்புவதும் நிலாவைத்தான். அவள் சிறுமியாய் இருந்த போது காதலைச் சொன்ன நொடியில் அவன் மனதில் நிலாவின் மேல் எந்த ஒரு அபிப்ராயமும் இருந்திருக்கவில்லை. சிறுமி எனும் நிலை மறந்து, காதல் கடிதம் கொண்டுவந்து நீட்டியவளைக் கண்டு அன்று அவனுக்கு உண்மையில் அளவில்லா கோபம்தான் வந்தது.
அந்தக் கோபத்தின் விளைவாய்த்தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அன்று பேசிவிட்டான். அவனது வார்த்தை எனும் சவுக்கினால் சரமாரியாய் வதைத்து அனுப்பப்பட்ட நிலா, அந்த நொடி முதலே அவனை விட்டு விலகி நிற்கக் கற்றுக் கொண்டாள். இத்தனை வருடங்களில் அவனே பலமுறை வருந்தி அழைத்தாலும், அவள் அவனோடு ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை…
ஆரம்பத்தில் நிலா மீது தான் கொண்டிருந்த கோபம் நியாயம் என்றே நினைத்திருந்தான் சூர்யா. காரணம் அன்றைய நாளில் அவளின் வயது அப்படி. திரைப்படங்களில் வரும் பள்ளிக்கூட காதலை கண்டு அவளும் தடம்புரண்டு போய் இருக்கின்றாள் என்று தனக்குத் தானே முடிவு செய்து கொண்டான்.
ஆனால் வெகுவிரைவிலேயே வெளிநாட்டு வாழ்க்கையின் சாபமாகிய தனிமையெனும் அரக்கன் சூர்யாவிற்கு தன் கோர முகத்தை காட்ட துவங்கினான். அந்த நேரங்களில் தன்னை தானே சமநிலைப் படுத்தி கொள்ள அவன் பழைய பள்ளி நினைவுகளை எல்லாம் தோண்டிப் பார்க்க ஆரம்பித்தான்.
அப்பொழுதுதான் அவனுக்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலா தன் மீது மட்டும் தனிக்கவனம் கொண்டிருப்பது விளங்கிற்று. அவனுக்கு இது மிக மிக காலதாமதமான ஞானோதயம்..
அந்த வயதில் அவளின் ஆத்மார்த்தமான காதலை உணரும் பக்குவம், அவனுக்கு இல்லாமல் போனதற்கான தண்டனையை இன்று இங்கே தனிமையில் அனுபவித்தான். அதன் பிறகுதான் அவளை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றான். ஆனால் நிலா அப்பொழுது முற்றிலும் உடைந்து போயிருந்தாள்.
அவன் தன்னை நெருங்க நினைப்பது புரிந்தும், ‘எங்கே மீண்டும் பிறருக்காய் அன்பு செலுத்தினேன் எனச் சொல்லி விடுவானோ?..’ என அஞ்சியே அவள் ஒதுங்கி சென்று விட்டாள்.
அந்த ஒதுக்கமே சூர்யாவின் மனதில் வேர் ஊன்றிய காதல் செடியினை விருட்சமாய் உருமாற்றி விட்டது.
