நிலா – 8
நேற்று வரைக்கும் சூர்யாவும் நிலாவும் ஆடிய சடுகுடு ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இறைவன் இன்று விஷ்வாவின் மூலம் வைத்தான். உறவினர்கள் அனைவரும் விஷ்வாவிற்கு பெண் கொடுக்க முண்டியடித்துக் கொண்டு வரவும்தான், அவனுக்கு தன் தங்கையும் கல்யாண வயதை நெருங்கி விட்டாள் என்பதே உரைத்தது.
தனக்கென ஒரு வாழ்க்கையை அமைக்கும் முன்பாக தன் தங்கையின் வாழ்வினை சீர்படுத்தி தந்துவிட வேண்டும் என்பதில் விஷ்வா முனைப்போடு செயல்பட்டான். ஆனால் அவனுக்கு தனது திருமணத்தில் இருக்கும் ஆர்வத்தில், கால் பங்கு கூட நிலாவிற்கு அவளின் திருமண விஷயத்தில் இல்லை.
விஷ்வா எத்தனை மாப்பிள்ளைகளின் புகைப்படங்களை கொண்டுவந்து போட்டாலும், அது எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல், “நீ பாரு, உனக்கு ஓகேண்ணா, எனக்கும் சம்மதம் அண்ணா…” என்று சொன்னாள் நிலா.
‘தனது எதிர்கால கணவன் குறித்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி ஒரு இளம் பெண்ணால் இருக்க முடியும்? ஒருவேளை அவள் தனது கனவுகள் பலிப்பதை நினைத்து, திருமணத்தை எதிர் கொள்ள பயப்படுகிறாளோ?!’ என்று குழம்பிய விஷ்வா அதையும் அவளிடம் தெளிவாய் கேட்டு பார்த்தான்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணா..” என்று அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் அவள்.
எப்படி கேட்டாலும் ‘எதுவும் இல்லை..’ என்று நிலா சொல்லச் சொல்லத்தான், ஏதோ இருக்கின்றது என்பதை உறுதியாக உணர்ந்தான் விஷ்வா. அப்பொழுதுதான் முதல் முறையாக அம்மாவின் இழப்பை நினைத்து பெரிதாய் வருந்தினான்.
‘நான் ஆண் என்பதால் நிலா உள்ளதைச் சொல்லாமல் மறைக்கின்றாள். ஒருவேளை இந்நேரம் அம்மா உயிரோடு இருந்திருந்தால், நிலா தன் மனதில் இருப்பதையெல்லாம் வெளியே சொல்லியிருப்பாளோ?’ என்று அவன் மனம் நொடிக்கொரு முறை, நிலையின்றி தடுமாறிக் கொண்டே இருந்தது.
தன் மனம் கொண்ட குழப்பங்களை எல்லாம் விஷ்வா ஒரு வாரத்திற்கு முன் எதேச்சையாய் தன் பால்ய வயது சினேகிதனாகிய சூர்யாவிடம் உளறினான். நிலா தன்னை வெறுத்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு அந்த நொடியில்தான், அவள் இன்னும் தன்னை நினைத்துக் கொண்டு இருப்பது விளங்கியது.
சூர்யா திக்கித்திணறி, “விஷ்வா.. நான் ஒன்னு சொன்னா, நீ தப்பா நினைச்சிக்க மாட்டியே..” என்று பெரிதாய் பீடிகை போட்டான்.
விஷ்வா, “டேய்.. நமக்குள்ள என்னடா? சும்மா சொல்லு..”
“நிலாவ நான் விரும்புறேன்டா..”
“……..”
“ஹலோ… விஷ்வா லைன்ல இருக்கியாடா?”
“உங்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கல சூர்யா..”
“எனக்கு தெரியும், உனக்கு நட்புன்ற பேர்ல இப்டி பிகேவ் பண்ணறது பிடிக்காதுனு. ஆனா இப்ப நான் என்னோட மனசுல இருக்கிறத உன்கிட்ட சொல்லலைன்னா, இனிமே எப்பவுமே சொல்ல முடியாம போயிடும். சரியோ தப்போ, நான் சொல்ல வந்தத முதல்ல சொல்லிடுறேன், முடிவ நீ சொல்லு.”
விஷ்வா அமைதியாய் இருக்க அதையே தனது அனுமதியாய் எடுத்துக் கொண்ட சூர்யா, “நான் வேலைக்காக வெளிநாடு கிளம்புற வரைக்கும் நிலா மேல எனக்கு அப்டி எந்த எண்ணமும் வரல. ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் என் மனசு முழுக்க பழைய ஞாபகங்கள் அலை மோதிட்டே இருந்தது. அந்த ஞாபகங்கள் எல்லாத்துலயும், நிலா எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு மெனக்கெட்டு செஞ்சிருக்கான்றது புரிஞ்சது.”
“………”
“பாவம், ஏற்கனவே ரொம்ப பயந்த சுபாவம் உள்ள பொண்ணு, அதான் வெளிப்படையா சொல்ல பயந்து உள்ளுக்குள்ளேயே விரும்பி இருக்குறா.”
“அப்டியெல்லாம் என் தங்கச்சி ஒண்ணும்..” என்று சொல்லி முடிக்கும் முன்பாக சூர்யா நடுவில் புகுந்து, “நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் நீ எதுவும் பேசாத விஷ்வா. அப்புறம் சொல்ல வந்ததை நான் சொல்லாமலேயே நிறுத்திடுவேன். ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையா கேளுடா..” என்றான்.
விஷ்வா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு, “சரி சொல்லு..” என்றான் சற்றே கோபம் நிறைந்த குரலில்.
“நாம ரெண்டு பேருமே அப்போ சின்ன பசங்க, அதனால அவளோட மனச நம்மால அந்த வயசுல புரிஞ்சிக்க முடியல. அவளுக்கு நம்மளவிட சின்ன வயசு, அதனால அவளுக்கும் அத வெளிப்படுத்த தெரியலடா. ஏதோ ஒரு பயத்துல எங்கிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கான்றதே எனக்கு இப்பத்தான் புரியுது. நான் ஏர்போர்ட்ல இருந்ப்போ அவ சொல்ல வந்தா, நான் அவள ஹர்ட் பண்ற மாதிரி ஏதோ சொல்லிட்டேன், ஆனா நான் மனசறிஞ்சு அன்னிக்கி எதையும் பேசலடா…”
“…..”
“விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து குழந்தையா பார்த்த பொண்ணு, திடீரென கையில லவ் லெட்டரோட என் முன்னால வந்து நிக்கிறத பார்த்ததும் கோபத்துல வார்த்தைய விட்டுட்டேன். அடுத்த நிமிஷமே அவ அழுதுகிட்டு போயிட்டா, என் முகத்த திரும்பிக் கூட பாக்கல. அவ குணம் தெரிஞ்ச நானே அப்படி பிஹேவ் பண்ணி இருக்க கூடாது, அதனாலதான் அவ இன்னிக்கி வரைக்கும் எங்கூட பேசவே மாட்டேங்குறா..”
“இதெல்லாம் உண்மையா இருந்தா, ஏண்டா நீ இவ்வளவு நாளா என்கிட்ட சொல்லாம மறைச்ச?”
“உனக்கு தெரியாம மறைக்கனும்னு நினைச்சு செய்யலடா. நிலாவே என்ன வேண்டாம்னு தூக்கி போட்டதுக்கு அப்புறம், எதுக்காக தேவையில்லாம நான் உங்க ரெண்டு பேரையும் தொல்லை செய்யணும்னு ஒரு எண்ணம். பேசாம விலகி போறதுதான் சரின்னு தோணுச்சு, அதான் இத்தன நாளா எதையும் யாருகிட்டயும் சொல்லாம இருந்துட்டேன். ஆனா இப்போ நீ சொல்றதெல்லாம் கேட்கும்போது, நிலா மனசுக்குள்ள நான் இன்னும் இருக்கேன்னு தோணுதுடா.”
“…….”
“கொஞ்சம் யோசிச்சு பாருடா, சின்ன வயசுல இருந்தே நாங்க நல்லா பழகி இருக்கோம். எங்க அம்மா அப்பாவுக்கும் அவமேல ரொம்பவே இஷ்டம், அவள விரும்புறேன்னு சொன்னா மறுபேச்சு பேசாம ஒத்துக்குவாங்க. அவள கடைசி வரைக்கும் நான் ராணி மாதிரி பாத்துப்பேன்டா..”
“…….”
“முடியாதுன்னு சொல்லிடாதடா விஷ்வா.. ஐ லவ் ஹெர்.. என்னால அவள விட்டுட்டு வேற ஒரு பொண்ண நினைச்சுக் கூட பாக்க முடியலடா. நீ மட்டும் சரின்னு சொன்னா நான் அடுத்த பிளைட்லயே கிளம்பி இந்தியாவுக்கு வர்றேன்டா.”
விஷ்வா, “சரி, வா..”
“என்ன? என்னடா சொன்ன?”
“இந்தியாக்கு வாடா.. வந்து என் தங்கச்சிய சமாதானப்படுத்தி உன்கூட கூட்டிட்டு போ.”
“மச்சா.. தேங்க்ஸ்டா.. தேங்க்யூ சோ மச் டா.. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல பிளைட் புக் பண்ணிடுறேன், எண்ணி ரெண்டு நாளுக்குள்ள உன் கண்ணு முன்னாலே வந்து நிப்பேன்.”
“வா வா, வந்து அவகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கோ..”
“ஹா.. ஹா.. ஹா.. அது என் பாக்கியம்டா. அவ மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சிடுச்சு, இனிமேலும் என்னால சும்மா இருக்க முடியாது. அவ என்ன தூக்கிபோட்டு மிதிச்சாலும் பரவாயில்ல, நான் அவளுக்கு ப்ரபோஸ் பண்ணியே ஆகணும்.”
“நீ மிதி வாங்குறத பார்க்கிறதுக்கு, ஐ ஏம் வெய்ட்டிங்..”
“சீக்கிரமே வர்றேன், உனக்கும் என் மேல ஏதாவது கோபமிருந்து, என்ன அடிக்கனும்னு தோணுச்சுனாலும் அடிச்சுக்கோ விஷ்வா. வருஷக்கணக்கா ஒரு ரகசியத்தை உள்ளுக்குள்ள வெச்சு புளுங்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு, அதுக்கு நான் உங்க கையால அடி வாங்கிட்டே போயிடுவேன்.”
விஷ்வா நிதானமான குரலில், “சூர்யா, நிலாவ பத்தின ஒரு உண்மைய உங்கிட்ட சொல்லனும்..” என்றான்.
சூர்யா, “என்னடா?”
“அவளுக்கு வர்ற கனவெல்லாம் பலிக்கும்.”
“கனவு பலிக்குமா?”
“ஆமாடா, சின்ன வயசுல அவ கனவால ஏதோ ஒரு பெரிய பிரச்சனை வந்ததாம். அதிலிருந்து அவ தன்னோட கனவ வெளியில யாருக்கும் சொல்ல மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்துட்டாளாம். அது எனக்கே அம்மா உடம்பு முடியாம படுத்த படுக்கையானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. இனிமே உனக்கும் அந்த உண்மை தெரிஞ்சிருக்கனும்.”
“வெறும் கனவுதானடா.. அத ஏன் ஆபத்தான விஷயம்ங்கிற மாதிரி இவ்ளோ பில்டப் குடுத்து பேசுற?”
“நிலாவ பொருத்தவரைக்கும் இது ஆபத்தான விஷயம் தான் சூர்யா. ஏதாவது கெட்ட கனவு வந்தா ரொம்ப பயந்திடுவா, அன்னிக்கி ராத்திரி முழுக்க தூங்கவே மாட்டா, அடுத்த இரண்டு நாளுக்கு அவளால சாதாரணமாவே இருக்க முடியாது, கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவா, அர்ச்சனை பண்ணுவா, விளக்கு போடுவா, ஆனா கடைசி வரைக்கும் என்ன கனவு வந்ததுனு யாருக்குமே சொல்ல மாட்டா.”
“புரியுதுடா, இதனால்தான் அவ நம்ம ரெண்டு பேரையும் தவிர, வேற யாருகிட்டயும் நெருங்கி பழகுறதே கிடையாது, இல்லையா?”
“ம்.. குடும்பத்து ஆளுங்களத் தவிர வேற யாருட்டையாவது நெருங்கி பழகினா அவங்களும் கனவுல வருவாங்க. அதனால அவங்களுக்கும் ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு அவ பயப்படுவா.”
“பாருடா அப்பவே அவ என்னையும் குடும்பத்துல ஒருத்தனா நினைச்சிருக்கா. ஆனா நாம ரெண்டு பேரும் அது புரியாம மக்கு மரமண்டையா வாழ்ந்துட்டு இருந்திருக்கோம்.”
விஷ்வா, “சரிசரி, விடு. அதான் இப்போ கண்டு புடிச்சுட்டோம்ல.”
சூர்யா, “ம்க்கும், கழுத வயசுல கண்டுபுடிச்சுட்டு பெரும வேற. இந்த வெக்கங்கெட்ட பொழப்புக்கு நாம ரெண்டு பேரும் பிச்ச எடுக்கலாம்..”
“கவலப்படாத மச்சி, உன்கூட கூட்டு சேர்ந்தது நிலாக்கு தெரிஞ்சதும் நிச்சயம் அதுவும் நடக்கும். எதுக்கும் வரும்போது திருவோடோட வாடா..”
“ஹேய் நான் வர்றத அவகிட்ட சொல்லாதடா, வந்ததுக்கு அப்புறம் சொல்லலாம்..”
விஷ்வா, “ரொமான்ஸ்சாக்கும்..”
“ஏன் நாங்கல்லாம் ரொமான்ஸ் பண்ணக்கூடாதா?”
“முடிஞ்சா பண்ணிக்க.. அப்புறம் அவ திட்டிட்டான்னு அழுதுகிட்டு என் முன்னால வந்து நிக்கக்கூடாது.”
“ஹேய்.. என்ன நீ? வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைன்ற மரியாத இல்லாம ரொம்பத்தான் கேவலப்படுத்துற.”
“இந்த மூஞ்சிக்கி நாங்க பொண்ணு குடுக்க ஒத்துக்கிட்டதே பெருசு, இதுல மரியாத வேற குடுக்கனுமா? டிக்கெட் புக் பண்ணிட்டு காலாகாலத்துல இங்க வந்து சேரு..”
என்று விஷ்வாவும் சூர்யாவும் சேர்ந்து மாமன் மச்சான் விளையாட்டு விளையாட தொடங்கிவிட்டனர். அவர்களின் திட்டப்படி நிலாவிற்கு தெரியாமல் சூர்யா, அடுத்த நான்காவது நாளே இந்தியா வந்து இறங்கி விட்டான். ஆனால் அவனுக்கு முன்பாகவே அவனுடைய பிறவி கிரகம் இந்தியாவிற்கு வந்து விட்டது போலும்..
சூர்யா நிலாவை சந்திக்கும் முன் நிலா சூர்யாவை கனவில் சந்தித்து விட்டாள், போதாமைக்கு முத்தமும் பெற்றுவிட்டாள். ‘இனி எந்த நிமிடம், இந்தக் கனவு பலிக்கப் போகிறதோ?’ என்று அச்சத்தில் இருந்தவளிடம் விஷ்வா, சூர்யாவின் வரவுச் செய்தியைச் சொன்னான்.
அந்த வார்த்தைக்கே உள்ளுக்குள் உடைந்து நொறுங்கி கிடந்தவளை, இன்னும் சுக்கு நூறாகும் படி விஷ்வா, “சூர்யாவுக்கு கல்யாணமாம்டா..” எனும் திரியினை வேறு கொளுத்திப் போட்டு விட்டான். அந்த நொடியிலேயே நிலா இனி தன்னவனை நினைக்கவும் தனக்கு அனுமதி கிடையாது என்றொரு முடிவிற்கு சென்றுவிட்டாள்.
அது தெரியாத அந்த நண்பர்கள் இருவரும் அங்கே காஃபி ஷாப்பில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.
விஷ்வாவின் எதிரில் அமர்ந்திருந்த சூர்யா, “ஏய்.. தடிமாடு.. ஏன்டா கல்யாணம்னு சொன்ன?” என்றான்.
விஷ்வா, “ஹான், இத்தன நாளா என்ன உப்புக்கு சப்பையா உட்கார வச்சு நீங்க ரெண்டு பேரும் கேம் ப்ளே பண்ணீங்கள்ல, இப்போ என்னோட டர்ன். என்னால முடிஞ்ச அளவுக்கு உன் லவ்ல ஒரு இடியாப்ப சிக்கல உருவாக்கி விட்டுட்டேன். போய் முடிஞ்சா சரி பண்ணிக்கோ மச்சான்..” என்றான்.
சூர்யா, “நல்ல குடும்பத்துல வந்து வாக்கப்பட்டேன்டா..” என்று சொல்லிக் கொண்டே எழுந்து தயாராக தொடங்கினான்.
விஷ்வா, “டேய், என்னடா இதான் சாக்குன்னு, பில்லு கட்டாம கிளம்பிட்ட?”
“ஏய்.. சீ.. பாவம்டா, நிலா ரொம்ப பீல் பண்ணுவா. நான் போய் அவள பாத்து பேசிட்டு வர்றேன்டா..” என்று தன் தங்கையைத் தேடி ஓடுபவன் கண்டு விஷ்வாவிற்கு அத்தனை நிறைவாய் இருந்தது.
‘நிலாவின் ஒரு துளி கண்ணீரை காண பொறுக்காதவன், அவள் மரணத்தின் வாயிலை தேடி ஓடினால் அவ்வளவு எளிதில் விட்டு விடுவானா?’ என்று விஷ்வாவின் மனம் சற்றே அமைதி கொண்டது.
