நிலா – 9

       ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்த நிலா சூர்யாவிற்கு சில அடிகள் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவினை கைநீட்டி நிறுத்தினாள். அவள் அதில் ஏறப்போகிறாள் என்று தெரிந்ததுமே சூர்யா தன்னுடைய டேக்ஸி டிரைவரை நிறுத்தச்சொன்னான்.

 

      ஆட்டோவின் பின்னால் ஓடி வந்த சூர்யா முடிந்த வரையில் குரலை உயர்த்தி, “நிலா.. நில்லு நிலா..” என்று கத்தினான்.

 

      அது அவள் காதில் நுழையும் முன்பே, அவள் ஆட்டோவினுள் நுழைந்து இருந்தாள். நொடிப் பொழுதில் ஆட்டோ மீண்டும் புறப்பட, அவனும் ஓடிப்போய் தன்னுடைய டாக்ஸியை கிளப்பினான். அதிகாலை வேளை என்றாலும் ஏர்போர்ட் பகுதியில் போக்குவரத்து சீராகவே இருந்தது. 

 

      அந்த கூட்டத்தில் டாக்ஸி டிரைவரால் அவள் செல்லும் ஆட்டோவினை பின்தொடர முடிந்ததே அன்றி, முன் வந்து வழிமறித்து நிறுத்த இயலவில்லை. இருந்தும் அவளைத் தன் விழி ஓரத்தில் இருந்து தொலைய விடாமலே தொடர்ந்து கொண்டிருந்தான் சூர்யா. பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு ஒரு சிக்னலில் நிலாவின் ஆட்டோ நிற்க, சூர்யா அதை அடையாளம் கண்டு பிடித்து விட்டான். 

 

      நொடிகூட தாமதிக்காமல் சடாரென்று ஆட்டோவின் முன் வந்து நின்றவன், “நிலா.. ப்ளீஸ் இறங்கி வா..” என்றான் தன்மையான குரலில்.

 

      அவனை அங்கு, அந்த நேரத்தில், அப்படி ஒரு வேகத்தில் சற்றும் எதிர்பாராத நிலா, அதிர்ச்சியில் வாயைப் பிளந்தபடி சிலையென அமர்ந்திருந்தாள். அவன் முகம் விழித்திரைக்குள் நுழைந்த நொடிதனில் அவள் தன்னை மறந்தனள், தான் தனது அண்ணனிடம் இருந்து தப்பித்து ஓடி வந்த காரணத்தை மறந்தனள், இன்னும் சில மணிநேரங்களில் இவ்வூருக்கு நிகழப் போகின்ற கோர விபத்தையும் மறந்தனள்.

 

     அவளின் அதிர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சூர்யா, லாவகமாய் அவளை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்தான்.

 

      சிலையாய் நிற்பவளின் தோள் பற்றி உலுக்கியவன், “என்ன நிலா பண்ற? எங்க போற?” என்றான்.

 

      “……….”

 

      சூர்யா, “இன்னும் அரைமணி நேரத்துல நம்ம பிளைட்டுக்கு செக்கின் டைம் முடிஞ்சிடும் நிலா. அங்க விஷ்வா நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான், சீக்கிரமா வா..” என்று அவளை தன்னுடைய டாக்ஸிக்குள் ஏற்ற முயன்றான்.

 

      அப்போது அவள் பயணித்து வந்த ஆட்டோவின் டிரைவர், “சார் ஆட்டோக்கு மேடம் பணம் குடுக்கலையே..” என்று குரல் கொடுத்தார்.

 

      சூர்யா, “இதோ வர்றேண்ணா..” என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பி பார்க்கையில், நிலா தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தாள்.

 

     சூர்யா, “நிலா.. நிலா.. எங்க போறடி? என்னவிட்டு போகாதடி.. லவ் யூ நிலா..” என்று அவன் கதறிய குரல், அவளின் செவியினை எட்டாமல் காற்றில் கற்பூரமாய் கரைந்து கொண்டிருந்தது.

 

       இதற்கு மேலும் அவள் செவியில் தன் குரல் விழும் என்று நினைத்து நின்று கொண்டிருந்தால், அவள் கண்ணுக்கெட்டும் தூரத்தை விட்டு மறைந்து விடுவாள் என்று புரியவும், சூர்யாவின் கால்கள் அவள் பாதச் சுவட்டை பற்றி அந்த சாலையில் ஓடத் தொடங்கியது. 

 

      இருளும் ஒளியும் மாறி மாறி படர்ந்திருந்த சென்னையின் மாநகரச் சாலையில் அவள் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்க, அவளைப் பின்தொடர்ந்து அவனும் ஓடிக் கொண்டு இருந்தான். சூர்யா நிலாவை நெருங்கிய நேரத்தில் எதிரில் வந்த இரு வழிப்போக்கர்கள், சூர்யா நிலாவிடம் வம்பு செய்வதாக நினைத்து அவனை பிடித்துக் கொண்டனர்.

 

      சூர்யா, “என்ன விடுங்க ப்ரோ, அது என் கேர்ள் ப்ரெண்ட், எங்களுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை.”

 

      அவர்களோ, “அதெப்டி நாங்க நம்புறது?” என்றனர் அவனை விடாமல்.

 

      “ம்ச்ச்.. இப்போ பாருங்க..” என்றவன் அவர்களோடு வெளிச்சம் இல்லாத சாலையின் மூலைக்கு நகர்ந்தான்.

 

     சத்தமாய், “நிலா.. இவங்க என்ன தப்பா புரிஞ்சுகிட்டு அடிக்கிறாங்கடி.. நிலா.. காப்பாத்து நிலா..” என்று கத்தினான்.

 

     எண்ணி இரண்டு நிமிடத்தில் தங்களின் முன் மூச்சிரைக்க வந்து நின்றவளை பார்த்ததும், அவர்கள் இருவரும் சூர்யாவை பிடித்திருந்த கைகளை விடுவித்துக் கொண்டனர்.

 

      சூர்யா, “தேங்க்ஸ்யா.. நானே கூப்டா கூட திரும்பி பார்க்க மாட்டேன்னு ஓடுனவ, உங்க புண்ணியத்துல திரும்பி வந்துட்டா. ரொம்ப நன்றி ப்ரோ..” என்று வலுக்கட்டாயமாய் கைகுலுக்கி நன்றி சொன்னான். 

 

     அவர்கள் இருவரும், ‘காலங்காத்தால இதுங்க விளையாடுற விளையாட்ட பாரு..’ என்றபடி தங்கள் தலையில் அடித்துக் கொண்டு சென்றனர்.

 

       தான் ஏமாந்து போனது புரியவும், துவண்டு விழும் கால்களை தூக்கிக் கொண்டு நிலா மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவள் முக வாட்டத்தில் மனதின் வலியையும், நடையின் வேகத்தில் கால்களின் வலியையும் ஒரு சேர உணர்ந்தான் சூர்யா.

 

       சூர்யா, “நில்லு நிலா.. இப்போ போனாத்தான் ப்ளைட்ட பிடிக்க முடியும். தயவு செஞ்சு நான் சொல்றத கேளு நிலா..” என்று அவள் கரம் பற்றினான்.

 

      அப்போதுதான் அவள் கைகள் கொண்டிருந்த நடுக்கம் அவனுக்கு விளங்கிற்று.

 

      சூர்யா, “நிலா.. என்னடா ஆச்சு? ஏன் இவ்ளோ நடுங்குற?”

 

      “என்ன விடு சூர்யா..” என்று அவன் பிடியில் இருந்து திமிரிக்கொண்டு சென்றாள்.

 

      “நிலா, என்னனு சொன்னதான எனக்கு புரியும்?”

 

      “எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

 

      “அதான் நான் உன் கூட இருக்கேன்ல நிலா, பயப்படாதடா.”

 

      “என்னோட பயத்துக்கு காரணமே நீதான் சூர்யா” என்று அவள் இதழ் உதிர்த்த பதில் வார்த்தைகள், சூர்யாவின் மனதில் சவுக்கடியாய் விழுந்திற்று.

 

      “நிலா..”

 

      “எதுக்காக என் பின்னால வர்ற சூர்யா? யாருக்காக வர்ற? உன் நண்பனுக்காகவா?”

 

       “நிலா, நான்..” என்று அவன் பேசும் முன்பாகவே நிலா முந்திக்கொண்டு,

 

       “தயவு செஞ்சு ஆமான்னு சொல்லி என்ன கஷ்டப்படுத்தாம, இங்கிருந்து போயிடு சூர்யா..”

 

      “நீ இல்லாம நான் எங்கடி போவேன்?”

 

       “இத்தன வருஷமா எங்க போனியோ அங்கேயே போ.. ஏன் என்ன டிஸ்டர்ப் பண்ற, எனக்கு உன் கூட பேச நேரமுமில்லை இஷ்டமுமில்லை, என்ன விட்ரு..”

 

       “உனக்காகத்தான் நான் இங்க வந்திருக்கேன் நிலா..”

 

       “பொய்..”

 

       “உண்மைடி..”

 

       “பொய்.. பொய்.. பொய்.. உன்ன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுட்டயாவது உண்மையா இரு..” 

 

      “ஏய் நில்லு.. அப்டி எத்தன பேர நான் ஏமாத்தினேன்? உன்ன ஹர்ட் பண்ணினது தப்புதான், ஒத்துக்கிறேன். அதுக்காக விஷ்வாவை பார்த்து மன்னிப்பு கேட்டுட்டேன், உங்கிட்டயும் மன்னிப்பு கேக்க தயாரா இருக்கேன். ஆனா நீ ஏன்டி இத்தன வருஷமா என் மேல காதல வச்சுக்கிட்டே வெளியில சொல்லாம மூடி மறச்ச?”

 

      “அப்டியெல்லாம் எந்த கன்றாவியும் இல்ல..”

 

      “அப்புறம் ஏன் நிலா நான் கொடுத்த இன்விடேஷன இப்ப வரைக்கும் நீ பிரிச்சு பாக்கல?”

 

      “நான் பாக்கலன்னு நீ பாத்தியா?”

 

      “பாத்திருந்தாத்தான் உனக்கு அப்பவே தெரிஞ்சிருக்குமே, அது இன்விடேஷன் இல்ல, வெறும் மெனு கார்டுன்னு..”

 

      “………”

 

      “புரிஞ்சுக்கோ நிலா.. நான் எப்போ நீ வேணாம்னு சொன்னேனோ அந்த நிமிஷத்துல இருந்து, என் மனசு நீ வேணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. என் மனசு எனக்கு புரிஞ்சதும் நான் உங்கிட்ட திரும்ப பேசுறதுக்கு பல தடவ ட்ரை பண்ணேன். ஆனா அப்போல்லாம் பேச மாட்டேன்னு விலகி ஓடுனது நீதான் நிலா.”

 

      “ஏன்னா.. எனக்கு.. உன்ன ஃபேஸ் பண்ண பயமா இருந்தது.. எங்க நீ மறுபடியும் வேற யார் மேலயாவது இருக்குற மரியாதைக்காக எம்மேல பாசம் காட்டிடுவியோன்னு..” என்று திக்கித் திணறி அவள் சொல்லி முடிக்கையில், சூர்யாவின் விழிகள் இரண்டிலும் நீர் கோர்த்து இருந்தது.

 

      நிலா, “இப்பவும் பயமா இருக்கு.. எனக்காக என்ன தேடி வந்தியா? இல்ல என் அண்ணன் சொன்ன வார்த்தைக்காக என்ன தேடி வந்தியான்னு..” எனும்முன் சூர்யா அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து இருந்தான்.

 

      அந்த நேரத்தில் அவனின் அணைப்பு அவளுக்கும் தேவைப்பட்டு இருக்க, எவ்வித முரண்டும் செய்யாமல் அவன் மார்போடு பாந்தமாய் ஒன்றிக் கொண்டாள். அவளின் மனம் படும் பாடு புரிந்த சூர்யாவும் வார்த்தை மொழிகளை தவிர்த்துவிட்டு, தன் அணைப்பில் மூலமாகவே அவளுக்கான ஆறுதலை தெரிவித்தான்.

     

      பொது இடமென்றோ, நடு ரோடென்றோ பாராமல் இருவரும் சில நிமிடங்கள் மெய் மறந்து அப்படியே தத்தமது லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். முதலில் நிலா தான் சுதாரித்தெழுந்து அவன் அணைப்பிலிருந்து விடுபட்டாள்.

 

       அவள் மனம் சமநிலை அடைந்து விட்டதை அறிந்ததும் சூர்யா, “சாரி நிலா.. உண்மையில அன்னிக்கி நான் என்ன பேசுனேன்னே எனக்கு தெரியாது. கோபத்துல கண்ணு மண்ணு தெரியாம கத்தினேன்னு மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருந்துச்சு. நெஜம்மா மத்தவங்களுக்காக நான் உன்கிட்ட பாசமா இருக்குற மாதிரி நடிக்கலடா. நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்டா, அதான் ஆயுசுக்கும் உன்ன என் கூடவே வச்சுக்கலாம்னு வந்திருக்கேன். வா, ஏர்போர்ட்டுக்கு போவோம்..”

 

       நிலா, “நான் வரல..”

 

      “அதான் எல்லாத்தையுமே சொல்லிட்டேன்லடா, இன்னும் ஏன் என்ன புடிக்காத மாதிரி அடம்புடிக்கிற?”

 

      “இல்ல சூர்யா, என்னத் தவிர இங்க யாருக்குமே சுனாமி வரப் போறது தெரியாது. நானும் என் உயிர காப்பாத்திக்க நினைச்சு தப்பிச்சு ஓடிட்டா, எல்லாரும் செத்து போயிடுவாங்க. அந்த பாவத்த எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால கழுவ முடியாது. என்னால முடிஞ்சத நான் செய்யனும் சூர்யா, நீ போ. நான் வரல..”

 

      “நீ சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க நிலா..”

 

      “தெரியும், காலைல இருந்து என்ன நல்லா தெரிஞ்சவங்களே நான் சொல்றத நம்பல. ஆனாலும் நான் என் முயற்சியை கைவிட மாட்டேன்..”

 

      “இது உனக்கே பைத்தியக்காரத்தனமா தெரியல? இந்த நேரத்துக்கு நாம ஏர்போர்ட் போனா அட்லீஸ்ட் நாமளாவது சுனாமில இருந்து தப்பிக்க முடியும் நிலா..”

 

      “எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, இத்தன வருஷமா என் கண்ணு முன்னால எத்தனையோ உயிர் போயிருக்கு. அப்போல்லாம் என்னால காப்பாத்த முடியாம போயிடுச்சு. இன்னிக்கு ஒரு உயிரைக் காப்பாத்திட்டாலும் போதும், நான் நிம்மதியா சாவேன். நீ போயிடு..”

 

      அதேநேரம் ஏர்போர்ட்டில் இருந்து சூர்யாவிற்கு கால் செய்த விஷ்வா, “டேய், செக் இன் டைம் முடியப்போகுது. நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க?” என்றான்.

 

      சூர்யா நிதானமாய், “விஷ்வா, எங்களால இந்த ஃபிளைட்ட பிடிக்க முடியும்னு தோணலை. ஒன்னு பண்ணு நீ முன்னால போ, நாங்க ரெண்டு பேரும் அடுத்து எந்த பிளைட் இருக்குதோ அதுல கிளம்பிடுறோம். அப்புறமா நாம சாவகாசமா பெங்களூர்ல மீட் பண்ணிக்கலாம்..”

 

      “……”

 

      “யோசிக்காத விஷ்வா, நிலாவ நான் பாத்துக்குறேன். நீ முதல்ல கிளம்பு..”

 

      விஷ்வா அரை மனதோடு, “சரிடா, எப்படியாவது எட்டு மணிக்குள்ள கிளம்பிடுங்க. நான் பெங்களூர் போனதும் உனக்கு மெசேஜ் பண்றேன்.”

 

      சூர்யா, “சரிடா, பாய்..” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.

 

      நிலா, “என்ன ஆனாலும், நிச்சயமா நான் உன்கூட வர மாட்டேன் சூர்யா”

 

      சிறு குறும்புப் புன்னகையோடு சூர்யா, “நீ எங்கூட வரலன்னா, நான் உங்கூட வருவேன்.”

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
211 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page