நிழல் – 1

மேகங்கள் ஒன்றோடோன்று சண்டையிட்டுக் கொள்ள, அதை தாங்கமுடியாமல் வானம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. அதை பெரிதாக கண்டு கொள்ள முடியாத மக்கள் கூட்டம் தங்கள் கடமைகளுக்காக ஓடிக் கொண்டிருந்தன.

 

அந்த கொட்டும் மழையை கண்டு கொள்ளாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சென்னை மாநகரின் மத்தியில் அமைந்திருந்த அந்த தனியார் மருத்துவமனை மின்னல்  கீற்றுக்களில் பளபளத்துக் கொண்டிருந்தது.

 

அந்த மருத்துவமனை வளாகம் முழுவதும், நோயாளிகளாலும் அவர்களை காண வந்தவர்காளாலும் நிறைந்திருந்தது. ஒவ்வொருவரும் ஒரு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

 

அந்த கட்டிடத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவள் உடல் மட்டும் அங்கே நிலைத்திருக்க, அவள் மனம் எங்கோ அலைந்து கொண்டிருந்தது.

 

கண்கள் பார்த்த காட்சியை, மூளை பதிவு செய்ய மறுத்தது. அவள் நெற்றியின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிய பேண்டேஜ், அவள் சந்தித்த கோர விபத்தின் சாட்சியாக மாறியிருந்தது.

 

அவள் கண்களில் தேங்கி இருந்த சோகம், ‘நீ அதை இழந்துவிட்டாய். நீ அதை தவறவிட்டாய்..” என்று உரக்க கூறிக் கொண்டிருக்க, அது என்னவென்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவளை சுற்றி ஒரு நீண்ட மௌனம் மட்டுமே சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது.

 

“பவித்ரா… பேஷண்ட் பவித்ரா!” அந்த குரல் அங்கே வெகு நேரமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது. பவித்ரா காதுகளில் அந்த சத்த கேட்டதும் அவள் மனம் அவளை அந்த குரல் வந்த பாதைக்கு இட்டு செல்லவில்லை.

 

அந்தப் பெயர் அவளுக்கு மிகத் தூரமாகத் தெரிந்தது. அவர்கள் அழைப்பது தன்னைதான் என்ற எண்ணம் கூட அவளுக்கு ஏற்படவில்லை. அதற்கு காரணம் நினைவுகளில் அவள் தொலைந்ததனால் அல்ல. அந்த விபத்தில் தன்னையே தொலைத்ததானால், பல வருடங்களாகப் பழகாத ஒரு அந்நிய மொழியின் வார்த்தையைப் போல ‘பவித்ரா’ என்ற பெயர் அவளுக்குள் விழுந்திருந்தது.

 

அருகில் அமர்ந்திருந்த அவள் அம்மா கமலா, மெல்ல அவளது தோளைத் தொட்டு, “பவி… நம்மளைத் தான் கூப்பிடுறாங்க… வா போலாம்.” என்று அழைத்த பின்பே தன் பெயர் பவித்ரா, என்று சில மாதங்களுக்கு முன்னால் அவளை சுற்றி இருந்தவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது.

 

பவித்ரா மெல்ல எழுந்து மருத்துவரின் அறையை நோக்கி நகர்ந்தாள். அந்த கண்ணாடிக்கதவுகள் திறக்கப்பட பவித்ரா உள்ளே நுழைந்தாள். தனது நாற்காலியில் பவித்ராவின் ரிப்போர்ட் ஃபைலுடன் அமர்ந்திருந்த டாக்டர். சந்திரா அவர்களை ஒரு புன்னகையுடன் வரவேற்று அமரச் சொன்னார்.

 

“என்ன பவித்ரா..? இப்போ எப்படி இருக்கு? தலைவலி ஏதாவது இருக்கா?” என்று கேட்க இல்லை என்று தலையசைத்தாள் பவித்ரா. இதை கேட்டு மெல்ல புன்னகைத்த டாக்டர் சந்திரா, கமலாவிடம் பேச ஆரம்பித்தார்.

 

“ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டேன் கமலா அம்மா. பிசிக்கலா பவித்ரா 100% நார்மல் ஆகிட்டா. அந்த விபத்தோட காயங்கள் எல்லாம் இப்போ ஆறிடுச்சு. இனி மெடிசின்ஸ் எதுவும் தேவையில்லை.” என்று மருத்துவர் கூறியதும்,  

கமலாவின் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி தெரிந்தது. ஆனால் பவித்ராவின் முகத்திலோ எந்த மாற்றமும் இல்லை.

“ஆனா டாக்டர்.. எனக்கு இப்போவரைக்கும் எதுவுமே ஞாபகம் வரவே இல்லையே.. இவங்கதான் உன் அம்மா, இதுதான் உன் அப்பா, இது உன் அண்ணான்னு எல்லாரும் அறிமுகபடுத்திக்கிறாங்க.. ஆனா எனக்கு எதுவுமே நினைவுக்கு வர மாட்டிங்குதே… எல்லாமே மறந்து போய் மூணு மாசத்துக்கு மேல ஆகுது… ஆனா இப்போ வரைக்கும் என் பேரு என்னன்னு கூட எனக்கு நினைவில்ல… பட் நீங்க என்னன்னா.. நா நார்மல் ஆகிட்டேன்னு சொல்றீங்க..?” என்று கேள்வி எழுப்பினாள் பவித்ரா.

 

“பவித்ரா… உனக்கு நினைவுகள் திரும்பலன்றது உண்மைதான்.. பட் நீ ஃபிசிகலா சரியாகிட்ட..” என்று மீண்டும் அவளுக்கு தெளிவுபடுத்தினார் சந்திரா.

 

“அப்போ மெண்டல்லா எப்போ சரியாவேன்..? எனக்கு எப்போ மறுபடியும் நினைவு திரும்பும்..?” என்று கேட்டாள் பவித்ரா. சில வினாடிகள் அமைதியாக இருந்த சந்திரா, “அத.. என்னால கண்ஃபார்மா சொல்ல முடியாது பவித்ரா.. ஒரு சிலருக்கு ஒரு வாரத்துல திரும்பும்.. ஒருசிலருக்கு வருஷ கணக்காகும்.. இன்னும் ஒரு சிலருக்கு வாராமலேயே கூட போகலாம்..” என்று கூற, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவி போல வழிய ஆரம்பித்தது

 

“என்ன டாக்டர் சொல்றீங்க..? நினைவுகள் திரும்பி வராம போகுமா..? என்னால இந்த மூணு மாசத்தையே சமாளிக்க முடியல.. எங்க போனாலும்.. யாராவது ஒருத்தர்.. என்ன தெரியலையா மறந்துதடியான்னு  கேட்டு சாகடிக்கிறாங்க…அதுமட்டுமில்லாம.. எதையோ இழந்த வலி எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.. நா இழந்தத தேடி போக சொல்லி மனசு துடிக்குது.. ஆனா.. நா எதை தேடி போகணும் எத இழந்தேன்னு ஒன்னும் ஞாபகம் வர மாட்டிங்குது.. இப்படியே என்னால எவ்ளோ நாள் வாழ முடியும்..?” என்று கதறியவளை கண்டு கமலாவும் அழ ஆரம்பித்தாள்.

 

“பவித்ரா ரிலாக்ஸ்..! மெமரி லாஸ்.. ரொம்ப கொடுமையான விஷயம் தான்.. பட் அத ஏன் நீங்க நெகட்டிவா எடுத்துகிறீங்க.. இந்த ஊர்ல இருந்தாதான உங்களுக்கு சிரமம்.. புது இடத்துக்கு போங்க.. புதுசா லைஃப ஸ்டார்ட் பண்ணுங்க.. உங்களுக்கு நடந்தது ஒன்னும் சாதாரண ஆக்சிடென்ட் இல்ல.. அந்த ஆக்சிடென்டால நீங்க மூணு நாள் கோமால இருந்துருக்கீங்க… உடனே எல்லாம் நினைவுக்கு வரணும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். அதுமட்டுமில்ல.. நினைவுகள் திரும்பவே திரும்பாதுன்னு நா சொல்லவே இல்லையே.. ஷோ டோன்ட் வொர்ரி.. கொஞ்ச கொஞ்சமா நினைவுகள் திரும்பி  வரும்னு நம்புவோம்..” என்று சமாதானம் கூறினார் டாக்டர் சந்திரா.

 

நீண்ட நேர யுத்தத்திற்கு பிறகு, ஓர் வழியாக மேகங்கள் சமாதானம் கொள்ள, அந்த அமைதியை இவ்வுலகிற்கு பறை சாற்றும் விதமாக  பிறை மகள் வானில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

போரின் காயங்களாக இலைகளில் படிந்திருந்த மழை துளிகளை ஆற்றும் விதத்தில் தென்றல் மருந்திட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஆனால் பவித்ராவின் மன காயங்களை ஆற்ற, அந்த தென்றுலுக்கு வலிமை இல்லாமல் அவள் கலைந்திருந்த கூந்தலை மற்றும் சரி செய்ய முயற்சித்தது.

 

தெருக்களில் தேங்கி இருந்த மழைநீரில் நிலவின் பிம்பம் அலையாடிக் கொண்டிருக்க, அந்த சாலையில் லீலா தன் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்டு சிறிது முகம் மலர்ந்தாள் பவித்ரா.

 

பவித்ராவின் வீட்டு வராண்டாவில் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் லீலா. சில விநாடிக்களிலேயே மாடிபடிக்களில் லீலாவின் காலடி சத்தம் கேட்க, வேகமாக தன் அறை கதவை திறந்தாள் பவித்ரா.

 

அதை கண்ட லீலா, “என்ன..? மேடம் எனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல..?” என்று கேள்வி எழுப்பினாள்.

 

அதை கேட்டு மெல்லியதாக புன்னகை செய்த பவித்ரா, “நாள் முழுக்க வீட்டுக்குள்ளே அடஞ்சு கிடக்குறே.. நீ வர கொஞ்சம் நேரம் தான்.. நா.. நானாவே ஃபீல் பண்றே.. அப்படிபட்ட நேரத்துக்காக நா வெயிட் பண்றதுல என்ன தப்பு..?” என்று கேள்வி எழுப்பினாள் பவித்ரா.

 

“ஒரு தப்புமில்ல தாயி.. உன்ன இவ்வளவு நேரம் காக்க வச்ச என் மேல தப்பு..” என்று கூறியவாறு அறையினுள் நுழைந்த லீலா கட்டிலின் மீது களைப்பாக அமர்ந்தாள்.

 

லீலா, பவித்ராவின் பள்ளி பருவம் தொடங்கி இருந்தே உயிர் தோழி. விபத்திற்கு பிறகு தன் சொந்த குடும்பத்தையே அந்நியமாக பார்த்த பவித்ராவின் மனம் ஏனோ லீலாவை மட்டும் ஏற்றுக் கொண்டது.

 

லீலாவுடனான நட்பு பவித்ராவின் உயிர் வரை வேரூன்றி இருந்ததே அதற்கு காரணம். அந்த கோரமான விபத்திற்கு பிறகு லீலா, பவித்ராவை ஒருநாளும் காணாமல் இருந்ததே இல்லை. எந்த நேரமாயினும் பவித்ராவை பார்த்து விட அவளை தேடி வந்துவிடுவாள் லீலா. பவித்ராவை காணாமல் லீலாவின் நாள் முழுமை பெறாது.

 

“இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்..?” என்ற பவித்ராவின் கேள்விக்கு, சாலிபாக பதிலளித்தாள். “அதை ஏண்டி கேட்குற..? அந்த மேனேஜர்.. சொட்ட மண்டையன்.. பாடாபடுத்துறான்.. இன்னைக்கு இந்த ப்ராஜக்ட்ட முடிக்காம போக கூடாதுன்னு.. எங்க மொத்த டீம்மையும் பிடிச்சு வச்சுகிட்டு விடவே மாட்டேன்னு சொல்லிட்டான். அவன சமாளிச்சு, தப்பிச்சு வறதுக்கு டைம் ஆகிடுச்சு..” என்று தன் அலுவலக கதைகளை கூற ஆரம்பித்தாள் லீலா.

 

பவித்ரா அதிகம் பேசவில்லை என்றாலும், விடாமல் பேசிக் கொண்டிருந்த தன் தோழியையும் நிறுத்தவில்லை. அமைதியாக அவள் கூறுவதை கேட்ட பவித்ராவின் மனப் போராட்டம் எப்போது போல அன்றைய நாளும் லீலாவின் வருகையால் முடிவடைந்தது.

 

சில வினாடிகள் கலகலப்பாக தொடர்ந்த அந்த உரையாடல் மெல்ல பவித்ராவின் பக்கம் திரும்பியது. “இதெல்லாம் இருக்கட்டும் பவி.. நீ இன்னைக்கு ஹாஸ்பிடல் போனியே.. டாக்டர் என்ன சொன்னாங்க..?” என்று கேட்டதும், பவித்ராவின் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை மெல்ல மறைய ஆரம்பித்தது.

 

அவள் டாக்டர் கூறிய அனைத்து விஷயங்களையும் லீலாவிடம் கூறினாள். இதை கேட்ட லீலா, “எனக்கென்னமோ.. டாக்டர் சொல்றதும் சரின்னுதான் தோணுது பவி.. நீ ஏன் இடத்த மாத்தி பாக்க கூடாது..? புதுசா ஆளுங்கள பாத்தா உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்ல..” என்று கூறினாள்.

 

“என்ன சொல்ற லீலா..? எனக்கு இப்போ இருக்குற ஒரு சின்ன சந்தோஷமே நீ மட்டும் தான்.. உன்னையும் விட்டுட்டு நா தனியா போறது..?” என்று கவலையுடன் கேட்டாள் பவித்ரா.

 

“ஏய் பவி.. உன்ன விட்டுட்டு என்னால மட்டும் எப்படி இங்க சந்தோஷமா இருக்க முடியும்.. பட்.. இப்போ நீ இருக்குற மன நிலைக்கு.. கண்டிப்பா ஒரு மாற்றம் தேவை.. அதுமட்டுமில்ல.. என்னாலையும் உன்கூட அதிக நேரம் ஸ்பெண்ட் பண்ண முடியலைல.. அதுக்காகத்தான் சொல்றே.. அதுமட்டுமில்ல.. இடம் புதுசா இருந்தா மனசுல இருக்குற குழப்பம் தீரும்ன்னு சொல்லுவாங்க.. அதுனால கூட உன் பழைய நினைவுகள் திரும்பி வர வாய்ப்பிருக்குள்ள..!” என்று லீலா கூற சிறிது சிந்திக்க ஆரம்பித்தாள் பவித்ரா.      

 

“நீ.. சொல்றதகெல்லாம் சரித்தா லீலா.. பட்.. நா எங்க போறது..? என்ன பண்றது..?” என்று பவித்ரா குழப்பமாக கேட்க, சில வினாடிகள் சிந்தித்த லீலாவிற்கு ஒரு யோசனை கிடைத்தது.

“பவி, நீ எம்.டெக் படிக்கணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்த… நீ ஏன் அத ட்ரை பண்ண கூடாது.. நீ பேச்சுலர்ஸ்ல எடுத்த மார்க்குக்கு கண்டிப்பா, பெங்களூர் யுனிவர்சிட்டில கண்டிப்பா சீட் கெடைக்கும்.. உன் மனச படிப்புல கவனம் செலுத்தி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.. பெங்களூரும் உன் மனசு நிதானமாகுறதுக்கு நல்ல சிட்டி..” என்று லீலா  கூற, அந்த யோசனை பவித்ராவுக்கும்  பிடித்திருந்தது.

 

அவளும் சரியென்று கூற, மேலும் லீலா, “அப்புறம்.. பவி..” என்று தயங்கியவாறு லீலா ஏதோ கூறவற, அந்த சமயம் பவித்ராவின் அண்ணன் கௌதம் அறையினுள் நுழைந்தான்.

 

“என்ன லீலா..? உன் ஃப்ரெண்ட் கிட்ட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்குற..? போதும் பேசுனது.. கீழ வாங்க அம்மா சாப்பிட கூப்பிட்ராங்க..” என்றவன் லீலாவை  முறைத்தான்.

 

பதிலுக்கு லீலாவும் அவனை முறைத்து பார்த்துவிட்டு, “ஓகே பவி.. நீ சாப்பிட்டு நிம்மதியா தூங்கு.. நா கெளம்புறே..” என்று கூற, அவளை தடுத்த பவித்ரா, “நீயும் சாப்பிட்டு போ லீலா..” என்று தன் தோழியை அழைத்தாள்.

 

“இல்லடி.. ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு.. அம்மா எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. நா கெளம்புறே..” என்று கூறியவாறு தனது கைப்பையை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள் லீலா.

 

வீட்டு வாசலை அடைந்த லீலாவை  தடுத்து நிறுத்திய கௌதம், “ஏய் லீலா.. ஒரு தடவ சொன்னா அறிவிருக்காதா..? பவி கிட்ட தேவையில்லாம பேச ட்ரை பண்ணாதன்னு எத்தன தடவ சொல்லிருக்கே.. எதுக்காக சொல்றத கேட்க மாட்டிங்குற..?” என்று பற்களை கடித்துக் கொண்டு கர்ஜித்தான்.

 

“உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..? நா எத தொலச்சே.. நா எத தொலச்சேன்னு கதறிக்கிட்டு இருக்காளே.. உங்களால முழுசா சொல்ல முடியலைனாலும்… சிவாவ பத்தி மட்டுமாவது சொல்லுங்க.. ப்ளீஸ்..” என்று தன் தோழிக்காக கெஞ்சினாள் லீலா.

 

“அவ எங்க வீட்டு பொண்ணு.. எங்களுக்கு தெரியும்.. எத சொல்லணும்.. எத சொல்ல கூடாதுன்னு.. நீ உன் வேலையா மட்டும் பாத்துட்டு கெளம்பு.. இதுக்கப்புறம் நீ பழைய விஷயங்கள் எதையாவது சொல்ல ட்ரை பண்ண.. அவ்வளவுதான் உனக்கு..” என்று மிரத்தினான் கௌதம்.

 

அதற்குமேல் எதுவும் பேச முடியாமால் மூட்டிக்கொண்டு வந்த அழுகையை விழுங்கிக் கொண்டு வராண்டாவில் நடக்க ஆரம்பித்தாள் லீலா.

 

வராண்டாவில் நின்று கொண்டிருந்த தன் இரு சக்கர வாகனத்தை இயக்க முயற்சித்தாள். பவித்ராவிடம் அவள் உண்மையை கூறாததாலோ என்னவோ அது இயங்க மறுத்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தவள் முடியாமல்  அடக்கிவைத்த அழுகை வெடித்துக் கொண்டு கண்ணீராக  கரை மீறியது.          

 

அந்த சமயம் அங்கு வந்த சிவா, அவள் அழுவதை கவலையுடன் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். “சாரி சிவா.. என்னால… உன்ன பத்தி எதுவுமே பவிகிட்ட பேசவே முடியல..” என்று கூறி விம்மி அழ ஆரம்பித்த லீலாவின் தோளில் கைவைத்து ஆறுதல்படுத்தினான் சிவா.

 

பின்பு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் தன் இரு சக்கர வாகனத்தை இயக்க, இப்போது அது கிளம்ப தயாரானது. ஒரு முறை பவித்ராவின் அறையை அண்ணாந்து பார்த்த லீலா, அங்கிருந்து கிளம்பினாள். சிவா மட்டும் கண்கள் முழுவதும் வலியுடன் பவித்ரா நின்றிருந்த அந்த வெற்று பால்கனியை பார்த்தவாறு நின்றிருந்தான். 

                                   – நிழல்கள் தொடரும்…. 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page