நிழல் – 3
இன்னொரு வீட்டில் பிறந்து வளர்ந்த அந்தப் பிள்ளை தங்களைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு, தாங்கள் பெற்று வளர்த்த மகன் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஷங்கருக்கு தோன்றிற்று.
அதையும் அறிந்து கொண்டவள் போல, “அவன பத்தி என்ன விட உங்களுக்கு நல்லா தெரியும். இப்ப ஏதோ கோபத்துல கண்ணு மண்ணு தெரியாம நடந்துக்கிறான். சீக்கிரம் பழைய பிரபாவா மாறி நம்ம கிட்ட திரும்பி வந்துடுவான். அதுவரைக்கும்…” என்று இழுக்க,
“அவன் பண்றத எங்களால தாங்கிக்க முடியும். நீதான் எப்படி தாக்குப் பிடிக்க போறியோனு பயமா இருக்கும்மா” என்று புலம்பிவிட்டு போனார் அவர்.
அந்த புதிருக்கு பதில் அவளுக்கும் தெரியவில்லையே! கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு, தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.
நல்லவேளையாக இன்றைக்கு மேனேஜர் சீக்கிரம் வந்திருக்கவில்லை. கணினியில் அமர்ந்தவள் முடித்து வைத்திருந்த ப்ராஜெக்ட்டில் ஏதாவது பிழை இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஷாலினி, வேலை எந்த அளவுல இருக்கு?…” அவள் முதுகுக்கு பின்னால் இருந்து ஒலித்தது கண்ணாயிரத்தின் குரல்.
விருட்டென தன் இருக்கையில் இருந்து எழுந்தவள், “முடிஞ்சிருச்சு சார். நான் ஜஸ்ட் ஏதாவது மிஸ்டேக் இருக்குதானு செக் பண்ணிட்டு தான் இருந்தேன். அதையும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ள முடிச்சி உங்க மெயிலுக்கு அனுப்பிடுவேன்” என்று கூற, அவருக்கு அப்பாடா என்று இருந்தது.
“இன்னிக்கி மதியம், கன்பார்ம்மா கிளையன்ட் மீட்டிங் வச்சிடலாமா?”
“எஸ் சார்..”
“அப்போ உன்னால முடியுது. ஆனா, செய்ய மாட்டேங்குற. அப்படித்தானே?”
அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இடம் வலம் என எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள். ஒத்துக்கொண்டால் வேலைப்பளு அதிகரிக்கும். இல்லை என்றால், அவசரத்திற்கு எதையோ செய்து தூக்கி வந்திருக்கிறாய் என்ற அவப் பெயர் கிடைக்கும்.
“அடுத்த ப்ராஜெக்ட் டெட் லைன் வர முன்ன முடிச்சுடுவ தானே?”
“எஸ் சார்…”
“குட், நாளைக்கு அத பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். இன்னைக்கு நீயே க்ளையண்ட் கிட்ட இதுக்கு ஒரு ப்ராப்பர் க்ளோஸர் கொடுத்திடு” என்று கூறியபடி விறுவிறுவென சென்று விட்டார்.
சொன்ன மாதிரியே அரை மணி நேரத்திற்குள் அந்த வேலையை முடித்து அவருடைய மெயில் ஐடிக்கும் அனுப்பி விட்டாள். அவரும் மதியம் ஒரு மணிக்கு கிளைன்ட் மீட்டிங் வைக்க மேலிடத்தில் பேசி அனுமதி வாங்கிவிட்டார்.
ஆனால் ஷாலினிக்கு காலையிலிருந்து திடீர் திடீரென தலை சுற்றல் வந்து போனது. நேற்று இரவு சாப்பிடாமல் படுத்தது தான் காரணம் என்று அவளே முடிவு கட்டிக் கொண்டாள்.
‘மதியம் நடக்க இருக்கும் மீட்டிங்கை முடித்துவிட்டால், முழுதாக இந்த ப்ராஜெக்ட்டுக்கு முழுக்கு போட்டு விடலாம். உடல் நலம் சரியில்லை என்று சொன்னால் இன்னும் இரண்டு நாளைக்கு இழுத்துக் கொண்டு கிடக்கும். அதற்கும் சேர்த்து கண்ணாயிரம் தன் ஆயிரம் கண்களால் என்னைத்தான் முறைப்பார்!’ என்று நினைத்தவள், அந்த தலைசுற்றலை துச்சமாய் தூக்கி எறிந்தாள்.
ஒரு வழியாக கிளெண்ட் மீட்டிங் ஆரம்பமானது. ஷாலினி ஏற்கனவே வாய் வித்தையில் ஜெகஜால கில்லாடி. எனவே, ஒரு மாத தாமதத்தை மிக சுலபமாக பேசி சமாளித்து, மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்து விட்டாள்.
பெரும் மலையைப் புரட்டியது போல திருப்தி கொண்ட கண்ணாயிரம், “க்ளையண்ட் ரொம்ப ஹாப்பி. பல நாளா இழுத்துட்டு இருந்தது, கிட்டத்தட்ட கல்யாண சாவு மாதிரி இன்னைக்கு முடிஞ்சு போச்சு. இத கொண்டாடுறதுக்கு ஈவினிங் பார்ட்டி பண்ணிடுவோமா?” என்று கேட்க, அவருக்கு கீழ் இருந்த அத்தனை பணியாளர்களும் ஜே! ஜே! என கத்தி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
“அப்போ சரி, ஆறு மணிக்கு எல்லாரும் ரெடியா இருங்க. கிளம்பிடுவோம்…” என்றிட, ஷாலினிக்கோ முகம் வாடிவிட்டது.
ராஜம்மிடம் நல்ல பேர் வாங்குவதற்கு கையில் கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விடுவதா என்று யோசித்தாள். ஏற்கனவே தலை சுற்றல் வேறு படாதபாடு படுத்தி எடுத்ததால், அவள் பார்ட்டிக்கு போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
மேனேஜரை தனிமையில் சந்தித்தவள், “நேத்து நைட்டு ஃபுல்லா தூங்காம ஒர்க் பண்ணேன் சார். அதனால இப்ப தல சுத்தல் வாந்தினு என்னமோ பண்ணுது. நான் ஹாஸ்பிடல் போகனும்” என்றாள்.
ஏற்கனவே அவள் கண்கள் சிவந்திருப்பதையும், சோர்வோடு சுற்றிக் கொண்டிருப்பதையும் அவரும் கவனித்திருந்தார்.
“ஓகேம்மா, டேக் ரெஸ்ட். இன்னொரு நாள் பார்ட்டி கொண்டாடிக்கலாம்.”
“எனக்காக எதுக்கு சார் நீங்க போகாம இருக்கணும்? நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன். நீங்க மத்தவங்கள கூட்டிட்டு போங்க.”
“ஆர் யூ ஷ்யூர்?”
“எஸ் சார், எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. அதை நாம கெடுக்க வேண்டாம்…”
“ஓகேம்மா, யூ மே லீவ்.”
கிளம்புவதற்கு முன் பிரபாகரனிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று தோன்றியது ஷாலினிக்கு.
‘நாம போய் சொன்னாலும், பத்திரமா வீட்டுக்கு போ. ரீச் ஆனதும் கால் பண்ணுனு பாசமாவா பேச போறான்? எங்கேயோ போ, எப்படியோ இரு. எங்கிட்ட எதுக்காக சொல்ற?னு விட்டேத்தியா கேட்க போறான். ஏற்கனவே என்னவோ மாதிரி இருக்கு. எதுக்கு அவன் கிட்ட பேச்சு வாங்கணும்? மேனேஜர் சார் அவனுக்கு இன்பார்ம் பண்ணுவாரு. நாம பேசாம வீட்டுக்கு கிளம்பி போவோம்…’ என்று மனம் கூற சிறிதும் யோசிக்காமல் புறப்பட்டு விட்டாள்.
பிரபாகரனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்படாமல் இருக்க, அவன் தன் குழுவோடு பார்ட்டிக்கு சென்று விட்டான். எல்லோரும் பாட்டு கூத்து என கத்தி கூச்சல் போட்டு கொண்டாடினர். அவனுக்கு மட்டும் அந்த இடத்தில் மனம் ஒட்டவே இல்லை. ஒரு மதுக் குவளையை எடுத்துக்கொண்டு ஓரமாய் போய் உட்கார்ந்து விட்டான்.
கூட்டத்தில் திடீரென குழப்பம் உருவானது! இவன் அலுவலக ஆட்களும் இன்னும் சில இளைஞர்களும் சரமாரியாக திட்டிகொள்வது போல தெரிந்தது.
தன் ஜூனியரான சதீஷிடம், “டேய் இங்க வா, அங்க என்ன பிரச்சனை? எதுக்காக சண்டை போடுறாங்க?” எனக் கேட்டான்.
“காலேஜ் பசங்க, ஃபுல் போதையில் இருக்கானுங்க. நம்ம ஆபீஸ் பொண்ணு எதுவோ பாத்ரூம் சைடு போயிருக்கு. அவனுங்க கைய புடிச்சு இழுத்து மிஸ் பிஹேவ் பண்ணிருக்காங்க. அந்த பொண்ணு சத்தம் போடவும், அடிச்சு கீழ தள்ளிட்டானுங்களாம். அதுல அந்த பொண்ணுக்கு தலையில அடிபட்டு ரத்தம் வந்திருச்சு. மத்த பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து அந்த பொண்ண ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்களாம்.”
அவன் சொல்லச் சொல்ல பிரபாகரனுக்கு இரத்தம் சூடேறிக் கொண்டிருந்தது.
“அடிபட்டது யாருக்கு? ஷாலினிக்கா?”
“அஞ்சாறு பேர் கூட்டமா வெளிய போனதால யாருக்கு அடிபட்டதுன்னு தெரியல சீனியர்.”
உடனே கூட்டத்தில் கலந்து தன்னவளை தேட ஆரம்பித்தான் பிரபாகரன். அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவள் தெரியவில்லை என்றதும் இதயம் வேகமாக துடிக்க துவங்கியது. அதற்கு மேல் யோசிக்காமல் உடனே அவள் எண்ணுக்கு அழைக்க நினைத்து போனை கையில் எடுத்தான்.
இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையே அவள் பெயரை போட்டு பதிவு செய்திருந்தான். இருவரும் இரு உடல் ஒரு உயிர் போல ஒட்டிக்கொண்டு இருந்த காலம் அது. அவளுக்காகத்தான் வெளிநாடு போக வாய்ப்பு கிடைத்தும் இந்தியாவிலேயே வேலை செய்ய முடிவு எடுத்தான் பிரபாகரன்.
அப்படியெல்லாம் காதலித்தவனை, அவன் விதி இப்பொழுது இந்த நிலையில் நிற்க வைத்திருக்கிறது. புகைப்படத்தில் சிரித்த முகமாக நிற்கும் ஷாலினியை பார்த்தான். அந்த புன்னகையை சமீபத்தில் அவன் பார்க்கவே இல்லை. உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி தலை தூக்கினாலும், தன்மேல் தவறில்லை எனும் தலைக்கனத்தின் காரணமாக அதை அடக்கி விட்டான்.
சதீஷ், “அடிபட்டது ஷாலினிக்கா?” என்று கேட்ட பிறகுதான் அவளுக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை என்ற ஞாபகமே வந்தது இவனுக்கு.
உடனே டயல் பட்டனை தொட்டான். எதிர் முனையில் இருந்து ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் குரல் வரவும் இவனுக்கு பதட்டம் கூடிப்போனது. கூட்டத்தில் இருந்த இன்னும் சிலரை பிடித்து யாருக்கு அடிபட்டது என்று விசாரித்தான். யாரிடமும் சரியான விடை கிடைக்கவில்லை.
‘அஞ்சாறு பொண்ணுங்க இருந்தாங்க. யாருக்கு அடிபட்டதுன்னு தெரியலையே!’ என்பதே மீண்டும் மீண்டும் பதிலாக கிடைத்தது.
“அட்லீஸ்ட் எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்கனாவது சொல்லுங்க” என்று கேட்க,
“கேகே ஹாஸ்பிடல். அதுதான் பக்கத்துல இருக்குனு சொல்லி மேனேஜர் சார் அங்க அனுப்பினாரு” என்றொரு ஜீவாத்மா கூறியது.
உடனே பிரபாகரன் பைக்கை கே கே ஹாஸ்பிடல் நோக்கி விரட்டினான். குறைவான அளவு என்றாலும் அவனும் மது அருந்தி இருந்ததால் வழியில் இருந்த டிராபிக் போலீஸ் அவனை அங்கேயே பிடித்து வைத்துக் கொண்டது.
“சார், நான் ஹாஸ்பிடல் போகணும் சார். என் மனைவிக்கு அடிபட்டுருச்சு…” என்று கூறியதை அவர்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
“இது மாதிரி தினம் நூறு பேர நாங்க பார்க்குறோம். நீ போய் ஓரமா நில்லு” என்று விரட்டி விட்டார்கள்.
அதே நேரம், தலைசுற்றல் காரணமாய் டாக்ஸியில் பயணித்துக் கொண்டிருந்த ஷாலினி, உட்கார்ந்த நிலையிலையே மயங்கி சரிந்தாள்.
ஷாலினி தலை சுற்றல் காரணமாக, ஸ்கூட்டியை அலுவலகத்திலேயே விட்டு விட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றாள்.
டியூட்டி டாக்டரிடம் இவள் பிரச்சனைகளைச் சொல்ல, “கிட்னி ஃபெயிலியர் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். நீங்க எதுக்கும் ஒரு ஸ்கேன் பாக்குறீங்களா?” என்று அவள் தலையில் இடியை இறக்கினார்.
“இல்ல டாக்டர், நான் பேசிக்காவே நிறைய தண்ணி குடிப்பேன். இதுக்கு முன்ன எந்த சிம்டமும் வந்தது கிடையாது. திடீர்னு எப்படி கிட்னி இப்படி ஆகும்?” என்று இழுக்க,
“இதெல்லாம் சொல்லிட்டு வராதுங்க. ஏற்கனவே டேமேஜ் ஆகி இருந்திருக்கும். நீங்க சாப்பிட்டது ஏதாவது சேராம போய், உடனே உடம்பு ரியாக்ட் பண்ணுது. பிரச்சனை இருக்குதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம், என்ன ஏதுனு ஸ்கேன் பார்த்து கன்பார்ம் பண்ணிக்கிறது பெட்டர் இல்லையா.”
அவள் அப்போதும் யோசித்தபடி இருக்க, “உங்களுக்கு கடைசியா எப்போ பீரியட் வந்தது? எதுக்கும் பிரக்னன்சி டெஸ்ட் எடுத்து பாருங்களேன்” என்று கேட்க, அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“இல்லீங்க, ஒருவேளை பிரக்னன்சியால கூட இருக்கலாம் இல்லையா?”
ஷாலினிக்கு இதயம் இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் துடித்தது. ஏனெனில் கடைசியாக தீபாவளிக்கு வீட்டிற்கு தூரமானாள். அதன் பிறகு அதைப்பற்றி யோசிக்க நேரம் இல்லாத அளவுக்கு ப்ராஜெக்ட் வேலையில் மூழ்கி விட்டாள். இப்போது டாக்டர் கேட்ட பிறகு தான் அவளுக்கு அந்த ஞாபகமே வந்தது.
“பிரக்னன்சி டெஸ்ட் பார்க்கணும் டாக்டர்” என்று கூற, உடனே அவர் அவளை அந்த பிரிவிற்கு மாற்றிவிட்டார். பரிசோதனையின் முடிவு அவளுக்கு முன்பே தெரியும் என்றாலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சென்றாள். அவள் நினைப்பை பொய்யாக்காமல், ஆம்! என்ற பதில் கிடைத்தது.
