சென்னையின் வெப்பத்தையும், அந்தப் பழைய நினைவுகளின் பாரத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பேருந்து பெங்களூர் எல்லைக்குள் நுழைந்தபோது மாலை நேரம் மெல்லத் தாளமிட்டுக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே வீசிய அந்த மெல்லிய குளிர் காற்று பவித்ராவின் முகத்தை மென்மையாகத் தழுவியது. சென்னையில் பழகிப்போன அந்த வியர்வை நெடிக்கு பதில், இங்கே ஈரமான மண்ணின் வாசனையும், பூக்களின் நறுமணமும் காற்றில் கலந்திருந்தன. வானம் ஒரு கலைஞனின் தூரிகையால் தீட்டப்பட்டது போல, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் கலந்த ஒரு மாயாஜாலக் கோலத்தைக் காட்டியது.
பெங்களூரின் அந்தப் புகழ்பெற்ற மரங்கள் அடர்ந்த சாலைகள், ஒரு பச்சை நிறக் குடை விரித்தது போலப் பேருந்தை வரவேற்றன. சாலையோரம் எரியத் தொடங்கிய மஞ்சள் நிற வீதி விளக்குகள், அந்தப் பனிமூட்டமான மாலைப் பொழுதில் வைரத் தோடுகளைப் போல ஜொலித்தன. உயரமான கட்டிடங்களின் கண்ணாடிகளில் சூரியனின் பிம்பம் பட்டுத் தெறிக்க, அந்த நகரமே ஒரு கனவு உலகம் போலப் பவித்ராவின் கண்களுக்குத் தெரிந்தது.
“வாவ்.. பெங்களூர் எவ்வளவு அழகா இருக்கு!” – தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.
அவள் அருகில் அமர்ந்திருந்த கௌதம், ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் பெங்களூரின் அழகை ரசிக்கவில்லை; மாறாக, ‘பவித்ரா யாரிடமும் பேசிவிடக் கூடாது.. அவளுக்கு பழைய நினைவுகள் எக்காரணத்தை கொண்டும் திரும்பிவிடக் கூடாது’ என்பதில் மட்டுமே அவனது கவனம் இருந்தது. ஆனால் பவித்ராவோ, அந்த நகரத்தின் அமைதியில் ஒருவிதமான விடுதலையை உணர்ந்தாள்.
அந்த சமயம் பேருந்து நிலையத்தின் இரைச்சலில் பேருந்து நின்றது. மக்கள் கூட்டமும், ஆட்டோக்களின் ஹார்ன் சத்தமும் ஒருபுறம் இருந்தாலும், அந்த நகரத்தின் குளுமை அவளது மனப் போராட்டத்தைச் சற்று தணிக்கவே செய்தது.
“பவி… இறங்கு… ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போகணும்” – கௌதமின் அதட்டலான குரல் அவளை நிகழ்காலத்திற்கு இழுத்தது.
தன் பைகளைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கியவள், ஒரு நிமிடம் அந்த வானத்தைப் பார்த்தாள். அதே வானம் தான்… அதே நிலவு தான்… ஆனால் ஏனோ இங்கே நிழல்கள் இன்னும் நீளமாக விழுவது போல அவளுக்கு ஒரு பிரமை தட்டியது.
அவளுக்குத் தெரியாது… அவளது இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்த சிவாவும் அதே குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தான் என்பது. ஆனால், அவனது கண்களில் அந்த நகரத்தின் அழகு தெரியவில்லை; அந்த அழகிய மாலைப் பொழுதில் தொலைந்து நின்ற பவித்ரா மட்டுமே தெரிந்தாள்.
பெங்களூரின் அந்தப் பரபரப்பான சாலைகளைக் கடந்து, ஒருவழியாகப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து அந்தப் பொறியியல் கல்லூரி விடுதிக்கு (College Hostel) வந்து சேர்ந்தனர்.
வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான கட்டிடம், உயரமான மதில் சுவர்களுடன் ஒரு கோட்டையைப் போலக் காட்சியளித்தது. கேட்டைத் தாண்டி உள்ளே நுழையும்போதே அந்த இடத்தின் இறுக்கமான ஒழுக்கம் (Discipline) பவித்ராவிற்குப் புரிந்தது.
விடுதி வார்டன் சந்திரகலாவின் அறைக்குள் நுழைந்தனர். அவர் கண்ணாடி அணிந்தபடி ஏதோ பதிவேடுகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். கௌதம் முன்னால் சென்று, “மேடம்… எம்.டெக் பவித்ரா… அட்மிஷன் லெட்டர் இதுதான்” என்று நீட்டினான்.
வார்டன் பவித்ராவை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை ஊடுருவிப் பார்த்தார். “ஓகே… ரூம் நம்பர் 302. மூணாவது மாடி. இங்கே ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். லேட் நைட்டுக்கு அப்புறம் வெளில போகக்கூடாது. எப்போ வெளில போனாலும் என்ட்ரி போட்டுட்டுதான் போகணும்…” என்று இயந்திரத்தனமாகக் கூறிவிட்டு சாவியை நீட்டினார்.
அந்த இடத்தின் அமைதியும், வார்டனின் கண்டிப்பான பேச்சும் பவித்ராவிற்கு ஒருவிதப் பாதுகாப்பற்ற உணர்வைத் தந்தாலும், அது அவளை சென்னையில் கண்ட.. தனக்கு தெரிந்த, ஆனால் அறிமுகமில்லா மனிதர்கள் அளவுக்கு இறுக்கத்தை அளிக்கவில்லை.
தனது தங்கையின் லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு அறைக்கு செல்ல தயாராக இருந்த கௌதமை தடுத்தார் வார்டன் சந்திரகலா. “எக்ஸ்க்யூமீ.. இது கேர்ள்ஸ் ஹோஸ்டல்.. பாய்ஸ் நாட் அலோவ்ட்..” என்று கரகரப்பான குரலில் கூற, சற்று தயங்கினான் கௌதம்.
“இல்ல.. இந்த லக்கேஜ அவங்க ரூம்ல வைச்சுட்டு போயிட்றே.. அவங்களால.. இது அத்தனையும் தூக்கிட்டு போக முடியாது..” என்று தன் தங்கையின் மீது இருந்த அக்கறையில் கூறினான் கௌதம்.
“அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க.. நீங்க கெளம்புங்க..” என்று அவர் கூறிவிட, ஆழமாக மூச்சை இழுத்து விட்டான். பவித்ரா தன் லக்கேஜ்களை மிகவும் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு தன் அறைக்கு செல்ல தயாரானாள்.
அந்த சமயம், அவளை நிறுத்தியது கௌதமின் குரல். “பவி.. பாத்து,,, ஜாக்கிரதையா இரு..” அவன் கூறிய அந்த வார்த்தைகளில் தன் தங்கையின் மீது இருந்த மொத்த பாசமும் தெரிந்தது.
பவித்ராவின் மீது சமீப காலமாக கௌதமிற்கு கோபம் இருந்தாலும்.. அவள் முதல்முறையாக தன்னை விட்டு பிரிந்து தனியாக தங்க போகிறாள் என்ற உண்மை கோவத்தை மீறி அவள் மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை வெளியே கொண்டு வந்தது.
தன் அண்ணனின் கண்களில் தெரிந்த அன்பும் அக்கறையும் பவித்ராவை சற்று கலங்க செய்தது. சரி என்று மெல்ல தலையசைத்துவிட்டு தன் விடுதியினுள் நுழைந்தாள் பவித்ரா.
தன் லக்கேஜ்களைச் சிரமப்பட்டு அறைக்குள் இழுத்து வந்த பவித்ரா, கட்டிலில் அமர்ந்ததும் செய்த முதல் காரியம் லீலாவிற்கு அழைத்ததுதான். ஆனால், “தி நம்பர் யூ ஆர் ட்ரையிங் டு ரீச் இஸ் கரண்ட்லி சுவிட்ச்ட் ஆஃப் ” என்ற அந்த இயந்திரக் குரல் அவளது இதயத் துடிப்பை ஏனோ அதிகமாக்கியது.
‘என்ன…? லீலா போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு…? ரீச் ஆனதும் கால் பண்ணுன்னு சொன்னாலே… அப்புறம் ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சுருக்கா…?’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
அந்தச் சமயம், அறையின் கதவு கலகலப்பான ஒரு சிரிப்புடன் திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த அந்த பெண், தன் மொபைலில் யாருடனோ பேசிக்கொண்டு வந்தாள்.
பவித்ராவை கண்டதும் தன் போனை வைத்துவிட்டு, அந்த அறையில் இருந்த மற்றொரு கட்டிலில் அமர்ந்தாள்.
“ஹாய்… நீங்கதான் அந்த நியூ அட்மிஷனா…?” என்று அவள் கேட்க, ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.
“ஐம் ஆர்த்தி… நீங்க…” என்று தன் கையை பவித்ராவின் முன் அவள் நீட்ட ஒரு புன்னகையுடன் பவித்ராவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
அதன் பின் ஆர்த்தி நிறுத்தவே இல்லை. இடைவிடாது பேசிக் கொண்டே இருக்க, பவித்ராவும் அவளது கலகலப்பான பேச்சில் தன் பயண களைப்பை மறந்தாள்.
சில நிமிடங்களிலேயே பவித்ராவும் ஆர்த்தியும் வெகுநாட்கள் பழகிய தோழிகளை போல பேசிக் கொண்டனர்.
ஆர்த்தி அதே கல்லூரியில் பி.டெக் முடித்துவிட்டு இப்போது எம்.டெக் சேர்ந்திருப்பவள். அதனால் அந்த கல்லூரியை பற்றிய ஒவ்வொரு தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தாள்.
இருவரும் கல்லூரி மெஸ்ஸிற்குச் சென்று இரவு உணவை முடித்தனர். ஆனால், அறைக்குத் திரும்பியதும் மீண்டும் அதே மௌனம். பவித்ரா மீண்டும் லீலாவிற்கு கால் செய்தாள்… அதே பதில்.
‘என்ன ஆச்சு இவளுக்கு…? ஏன் இன்னும் போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு…? நாம அங்கிருந்து கிளம்பும் போது… அவ ஏதோ சொல்லணும்னு சொன்னாலே… அது என்னவா இருக்கும்…?’ என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
அவள் கண்கள் முழுவதும் கவலை சூழ அமர்ந்திருக்க, அதை கண்டாள் ஆர்த்தி. தன் உறங்குவதற்காக படுக்கையை தயார் செய்தவாறு , “என்ன பவி? ரொம்ப டல்லா இருக்க?அப்பா.. அம்மா ஞாபகம் வந்துருச்சா…?” என்று கேட்டாள்.
மெல்லிதாக புன்னகைத்த பவித்ரா, “இல்ல ஆர்த்தி… என் ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட் லீலா… அவ நம்பர் சுவிட்ச் ஆஃப்-னு வருது. அத பத்திதான் யோசிச்சு கிட்டு இருந்தே…” என்று கூற ஆர்வமானாள் ஆர்த்தி.
“ஸ்கூல் டைம்ல இருந்து ஃப்ரண்டா…சூப்பர்… அப்போ நெறைய ஸ்வீட் மெமரிஸ் இருக்குமே… சொல்லு… கேட்கலாம்…” என்று அவள் கேட்க, சட்டென்று பவித்ராவின் முகம் மாறியது.
தன் உயிர் தோழி லீலா என்பதை தவிர, வேறு எந்த நினைவுகளும் இல்லை என்ற உண்மை பவித்ராவிற்கு வலியை கொடுத்தது.
தன் தோழியுடன் சிரித்து விளையாடிய நாட்களும், சண்டையிட்டு அழுத நாட்களும் தன் நாட்குறிப்பில் இருந்து மறைந்து போய் விட்ட அந்த துயரத்தை, பார்த்த முதல் நாளே கூறி ஆர்த்தியின் அனுதாபத்தை பெற விரும்பவில்லை பவித்ரா.
“எங்க கதையை பேச ஆரம்பிச்சா… அப்புறம் நமக்கு இன்னைக்கு சிவராத்திரி தான்… சோ, இன்னொரு நாள் சொல்றே…” என்று பவித்ரா கூறிவிட, சரி என்று கூறிவிட்டு தன் படுக்கையில் சாய்ந்தாள் ஆர்த்தி.
அந்த இரவின் குளுமையில், பெங்களூரு மொத்தமும் அயர்ந்திருக்க, புதுமையான சூழ்நிலையினாலும், தன் தோழியை பற்றிய கவலையினாலும் பவித்ரா தூக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
தன் படுக்கையில் இருந்து எழுந்து அறையின் ஜன்னலை நோக்கி சென்றவள், நிலவின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள். ஏனோ அந்த நிலவின் குளுமை ஒருவித அரவணைப்பை பவித்ராவிற்கு அளித்தது.
சில வினாடிகள் அந்த நிலவின் கதகதப்பில் இளைப்பாறிய பவித்ரா தன் படுக்கைக்கு திரும்ப முற்பட்டாள்.
ஆனால் அந்த நிலவின் ஒளியால், எதிரே இருந்த பூங்கா மிகவும் பிரகாசமாக தெரிந்து கொண்டிருக்க, அங்கே தன் பார்வையை நிலை நிறுத்தினாள் பவித்ரா. அங்கே போடப்பட்டிருந்த ஒரு கல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் ஒருவன்.
அவனது முகம் நிழலில் மறைந்திருந்தாலும், அவன் அமர்ந்திருந்த விதம், அந்தத் தனிமை… பவித்ராவின் பார்வையை அவனிடமிருந்து அகல மறுத்தன. அவளது கண்கள் அப்படியே அவனிடம் தன்னை அறியாமல் நிலைத்து நின்றன.
பவித்ராவின் இதயம் அடங்காமல் துடிக்க ஆரம்பித்தது. தன் சுவாச காற்றை சீராக்க முயற்சித்து தோற்றவள் கற்சிலையை போல உறைந்து நின்றாள்.
ஏதோ ஒரு சக்தி தன்னை அவனிடம் அழைத்து செல்ல துடிப்பதை உணர்ந்தாள் பவித்ரா. ‘ச்ச… எனக்கு என்ன ஆச்சு…?’ என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள் பவித்ரா.
முகம் தெரியா இளைஞனை கண்டு இவ்வாறு எதிர்வினை புரியும் தன் ஹார்மோன்களை திட்டித் தீர்த்த பவித்ராவிற்கு நினைவில்லை, சில மாதங்களுக்கு முன் வரை அவன் தான் இவளின் உலகமாக இருந்தான் என்று.
பவித்ராவை போலவே, தூரத்தில் அமர்ந்திருந்த சிவாவின் கண்களும் அந்த ஜன்னலில் தெரியும் அவளது பிம்பத்தின் மீதுதான் தவம் கிடந்தன . இவர்கள் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்க, என்றைக்கு ஒன்று சேர்வார்கள் என்று மேகங்களுக்கு இடையில் எதிர்நோக்கி காத்திருந்தாள் அந்த வானத்து தேவதை.
-நிழல்கள் தொடரும்….
