நிழல் – 4

ஷாலினியின் மனதில் சந்தோஷத்தை விட பயம் அதிகமாக இருந்தது. இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு அழுத்தம் மனதை பிசைய, டேக்ஸியை புக் செய்து வீடு நோக்கி பயணித்தாள்.

அவள் பயணித்துக் கொண்டிருந்த டாக்ஸி, குறிப்பிட்டிருந்த விலாசத்தின் அருகே வந்து விட்டது. ஆனால் டிரைவருக்கு வீடு எது என்று தெரியவில்லை.

வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்தவர் தெருவின் எல்லை வந்ததும், “மேடம் நீங்க எங்க இறங்கணும்?” என்று கேட்டார்.

பின் சீட்டில் இருந்து பதில் வராமல் போக, “ஏம்மா உன்ன தான் கேட்கிறேன்” என்று கூறியபடி திரும்பியவர், அவள் மயங்கி கிடந்ததை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்.

“ஐயயோ, இது என்ன புது ஏழரையா போச்சு?” தலையில் அடித்துக் கொண்டவர், எதைச்சையாக அங்கு இருந்த ஒரு பெட்டிக்கடையை பார்த்தார்.

இறங்கிப் போய் விசாரிக்கவும் அவளது விலாசம் கிடைக்க, நேராக வாசலில் கொண்டு போய் நிறுத்தினார். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் ஷாலினிக்கு, மயக்கத்தை தெளிவித்து தங்களது வீட்டில் தங்க வைத்தனர்.

பிரபாகரன் போலீசை ஒரு வழியாக சமாளித்து, கேகே ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்த நேரம் அவன் அலுவலக ஆட்கள் யாருமே அங்கு இல்லை. 

ரிசப்ஷன் பெண்ணிடம் விசாரிக்க, “அவங்க கட்டு மட்டும் போட்டுட்டு கிளம்பி போயிட்டாங்க சார்” என்ற பதில் தான் கிடைத்தது. பார்ட்டி செய்யப் போயிருந்த ஹோட்டலிலும் இவன் அலுவலகத்து ஆட்கள் யாரும் இப்போது இருக்கவில்லை.

ஷாலினியின் நம்பர் வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், எங்கே போவது என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு. கடைசியாய் ஒரு முறை கண்ணாயிரம் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

“ஷாலினி எப்பவோ வீட்டுக்கு கிளம்பிட்டா. இப்ப அடிபட்டு உடம்பு சரி இல்லாம போனது பார்வதிக்கு” என்று கூற, இவன் ஆற்றாமை கோபம் அனைத்தும் ஷாலினி பக்கம் திரும்பி விட்டது.

அரை மயக்கத்தில் இருந்த ஷாலினிக்கு அக்கம் பக்கத்தினர் குடிக்க மோர் கொடுத்தனர். ஒரு டம்ளர் மோர் குடித்ததும் தலை சுற்றல் ஓரளவு மட்டுப்பட்டது போல இருந்தது.

“மதியம் சாப்பிட்டது ஒத்துக்கல. அதான் மயக்கம் வந்துருச்சு. நான் வீட்டுக்கு போய் விளக்கு ஏத்தணும். கிளம்புறேன்” என்று அண்டை வீட்டினரிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள். 

காலையில் அவசரமாக புறப்பட்டதால், ராஜம் பொருட்களை வாரி இறைத்துவிட்டு போயிருந்தார். உடல் பிரச்சனையோடு, விளக்கு ஏற்றி, வீட்டை சுத்தப்படுத்தி முடிப்பதற்குள் நேரம் ஒன்பது மணி ஆகிவிட்டது.

“ஹப்பாடா, வேலை முடிஞ்சது” என்று ஆசுவாசமாக அமரும் வேளை, டமால் டமால் என கதவை தட்டினான் பிரபாகரன்.

“இதோ வரேன்…” நடக்கவே முடியாமல் சுவற்றைப் பிடித்தபடி நடந்து சென்று கதவைத் திறந்தாள்.

உள்ளே நுழைந்த மறுகணம், “உன் மனசுல நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க?” என்று பக்கத்து வீட்டிற்கு கேட்கும் அளவு காட்டு கத்தினான் அவன்.

“ஏன் என்னாச்சு?”

“பார்ட்டிக்கு வரலைன்னா என்கிட்ட சொல்லனுமா இல்லையா?”

“இதுக்கு முன்னால இதே மாதிரி ஒரு தடவை சொல்ல வந்தேன். நீ யாரு என்கிட்ட பேசுறதுக்குனு திட்டி விட்டுட்ட.”

“அதுவும் இதுவும் ஒண்ணா? உன்னால எனக்கு ஏகப்பட்ட மண்ட குடைச்சல்.”

“பேசினாலும் திட்டு பேசலனாலும் திட்டு” என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றது அவன் காதில் தெளிவாக கேட்டுவிட்டது.

“நானா இருக்குறதால திட்டுறதோட நிறுத்திக்கிறேன். வேற யாருமா இருந்தா நீ செஞ்ச காரியத்துக்கு, என்ன பண்ணியிருப்பாங்கனு தெரியுமா?”

ஷாலினிக்கு அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் சுருக்கென்று மனதை தைத்தது.

“ஆமா, எல்லா தப்பும் என் மேல தான். நீ எந்த தப்பும் செய்யல. போதுமா?”

“இப்ப எதுக்கு தேவையில்லாம உன் ஃபோனை ஸ்விட்ச் ஆப் பண்ணி என்னை டென்ஷன் பண்ண?”

“தெருத்தெருவா தேடி அலையட்டும்னு நெனச்சேன்.”

உண்மையில் சார்ஜ் இல்லாமல் தான் அவள் போன் ஆப் ஆகி விட்டிருந்தது. ஆனால் அவன் இவளை பற்றி கவலை கொள்ளாமல் வந்ததும் வராததுமாக திட்டியதால் இவளுக்கும் ஆத்திரம். அவனுக்கோ ரெசார்ட்டில் நடந்தது, காவல்துறையில் மாட்டிக் கொண்டது, இவள் போன் ஆப் ஆகி கிடந்தது என எல்லாமே சேர்ந்து மனதை நிலையில்லாமல் மாற்றி இருந்தது.

“அதுதான் தெரியுமே. இன்னும் என் வாழ்க்கையில என்னெல்லாம் பண்ண போறியோ?! யார் கண்டா…”

அழுகை பொத்துக் கொண்டு வர, “ஆமா, உங்க வீட்ல பணம் திருடறேன். ஆபீஸ்லயே நாலு பேரோட இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல இருக்குறேன். அவங்கள வச்சு உன் முதுகுக்கு பின்னால குழி தோண்டுறேன். இன்னும் நிறைய…” என்று சொல்லிக்கொண்டே திரும்ப, இவன் கண்கள் அக்கினியாய் சிவந்திருந்தது.

நொடியில் மனம் பதைபதைத்துப் போனவள், “பிரபா நான்…” என்று பேச வர,

“என் பேரை உன் வாயால சொல்லாத. அதுக்கு உனக்கு எப்பவுமே தகுதி கிடையாது. போ, யார் கூட உனக்கு இருக்க பிடிச்சிருக்கோ அவனோடவே போ. ஏன் இங்கிருந்து என் நிம்மதியை கெடுக்குற?” என்று திட்டிவிட்டு மாடிக்கு போனான்.

இவளுக்கு அழுகை அருவியாய் கொட்டியது.

‘ஒரு வார்த்தை, உனக்கு என்ன ஆச்சு? ஏன் போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்துச்சு? எதும் பிரச்சனையானு கேட்டானா? அட்லீஸ்ட், சாப்பிட்டயானு கேட்க தோணுச்சா?’ ஏற்கனவே விரக்தியின் உச்சத்தில் இருந்தவளை இன்னமும் ஏற்றிவிட்டது அவள் மனசாட்சி.

அடக்க முடியாத அழுகையோடு பூஜை அறையின் அருகே உட்கார்ந்து விட்டாள். உடலும் மனதும் திசைக்கு ஒன்றாய் சுழன்று அடிக்க, அப்படியே அழுதபடி உறங்கியும் விட்டாள். நேரம் பத்து மணியை நெருங்கி இருக்கும் பொழுது பசி தாங்காமல் இறங்கி வந்தான் பிரபாகரன்.

அமர்ந்த நிலையிலேயே உறங்கும் அவளை பார்த்ததும் மனது பிசைந்தது. முன்பை காட்டிலும் ரொம்பவே இளைத்துப் போயிருந்த அவள் தேகம், இவனுள் உருவாகியிருந்த ஆற்றாமையை இரண்டு மடங்காக்க மாற்றியது. சாப்பிடாமல் உறங்கிக் கொண்டிருக்கும் அவளை எழுப்பி, இன்னொரு ரவுண்டு சண்டை போடலாம் என்று நினைத்திருந்த பொழுது அவன் போன் அலறியது.

ஷங்கர், “பிரபா, நாங்க வரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல தெரியுது. ஹெவி ட்ராபிக்… நீயும் ஷாலினியும் சாப்டீங்களா?” என்று கேட்க, 

“ஆச்சுப்பா, அவ டயர்டா இருக்குன்னு தூங்கிட்டா. நீங்க பொறுமையா வாங்க” என்று கூறி காலை கட் செய்தான்.

அவனுக்கு தெரியும்! நிச்சயம் அப்பா வீட்டிற்கு வந்த பிறகு என்ன சாப்பிட்டோம் என்பதை பார்க்காமல் உறங்க போக மாட்டார். பசியால் அவனுக்கும் வயிறு கப கபவென எரிந்தது. எனவே பைக் சாவியை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு போனான். இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தவன், அதை டைனிங் டேபிள் மேல் வைத்தான்.

தன் பங்கினை சாப்பிட்டு முடித்தவன், “ஏய், எழுந்திரி…” அதிகாரமாய் குரல் கொடுத்தான். ஷாலினி தூக்கம் கலைந்து கண் திறந்தாள். 

“கொட்டிக்க…” அவள் முன்னால் பார்சலை போட்டுவிட்டு மாடிப்படி ஏறி போய்விட்டான்.

நாயை விட கேவலமாக அவன் செய்யும் செயல்களால் இவளுக்கு மனதை பிசைந்தது. ஆனால், அதற்க்காக சாப்பிடாமல் கிடந்து தன் கோபத்தை வெளிக்காட்ட நினைக்கவில்லை அவள். பார்சலை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். அந்தோ பரிதாபம்! பாதியிலேயே வாந்தி வந்துவிட்டது.

குடுகுடுவென பாத்ரூமுக்கு ஓடியவள், குடல் மொத்தமும் வெளியே வரும்படி வாந்தி எடுத்தாள். 

“வாந்தி வர்ற மாதிரி இருந்தா, சாப்பாட்டுக்கு முன்னால இந்த டேப்லெட்டை போடுங்க” என்று டாக்டர் கொடுத்த மாத்திரைகள் ஞாபகத்திற்கு வந்தது.

உடனே அவற்றில் ஒன்றை விழுங்கி விட்டு மீதி இருந்ததை, சிரமப்பட்டு சாப்பிட்டாள். நேரம் பனிரெண்டு மணியை நெருங்கிய பிறகு தான் ராஜமும் ஷங்கரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

கைவசம் இன்னொரு சாவியை வைத்திருந்தவர்கள், அதைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். பூஜை அறையில் விளக்கு இன்னமும் எரிந்து கொண்டிருக்க, அவற்றை பார்த்தபடியே படுத்திருந்தாள் ஷாலினி. சாப்பிட்டு முடித்த பிறகு எழுந்து சென்று கைகூட கழுவவில்லை அவள். பார்சலை மட்டும் ஓரமாக சுருட்டி வைத்துவிட்டு, அப்படியே தரையில் படுத்துவிட்டாள்.

ராஜம், “இந்த காலத்து பிள்ளைகளுக்கு ஒரு வேலை கூட உருப்படியா செய்ய தெரியாது போல. சாமி ரூம் முன்னால உட்கார்ந்து சாப்பிட்டதும் இல்லாம, கைய கூட கழுவாம படுத்து கிடக்கிறா. விளக்கையும் அணைக்க காணோம். என்ன பொண்ணோ?!” என்று சப்தமாக புலம்ப, அதில் கண்விழித்து எழுந்தாள் ஷாலினி.

“இதோ பண்ணிடுறேன் அத்த…” என்று கூறிக் கொண்டே எழுந்தவள், நேராக நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அவளை தாங்கிப் பிடித்த ஷங்கர், “பார்த்து பார்த்து… மெதுவாம்மா, விழுந்திடாத. ஏன் டல்லா தெரியிற? உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என்று அனுசரணையாக கேட்டார்.

ராஜம், “இன்னும் இடுப்புல தூக்கி வச்சு கொஞ்சுங்க. நீங்க கொடுக்கிற செல்லத்துல தான், மகாராணி சாப்பிட்டதை கூட எடுத்துப் போடாம படுத்து கெடக்குறா. நட்ட நடு ராத்திரியில நான் வந்து எல்லாத்தையும் செய்ய வேண்டியதா இருக்கு.”

“ராஜம், சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்காத. அவ மத்த நாள்ல இப்படி இருந்திருக்காளா?”

“ச்சே, ச்சே… இதுக்கு மேல ஏதாவது செய்வா.”

இனி பேச்சை குறைக்க வேண்டியது தன் கடமை என்று எண்ணிக் கொண்ட ஷங்கர் ஷாலினியின் பக்கம் தன் கவனத்தை திசை திருப்பினார்.

“என்ன செய்யுதும்மா? ஹாஸ்பிடல்ல ஏதும் போகணுமா?”

“இல்ல அங்கிள், நேத்து ராத்திரி முழுக்க தூங்கல. அதான் மதியத்தில இருந்து கொஞ்சம் தலை சுத்தலா இருக்கு. ஏற்கனவே ஹாஸ்பிடலுக்கு போய் மாத்திரை வாங்கிட்டு வந்துட்டேன். அத முழுங்கிட்டு சோஃபால படுத்துக்குறேன்.”

அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ராஜம் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக தனது அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார். ஷங்கர் ஷாலினிக்கு தண்ணீர் கொடுத்து மாத்திரை போட உதவி செய்தார்.

“வெளியில மழை வர்ற மாதிரி இருக்கு. ஹால்ல தூங்கினா உனக்கு இன்னும் முடியாம போயிடும். நீ அத்தை கூட படுத்து தூங்குமா. நான் இன்னைக்கு ஹால்ல படுத்துக்கிறேன்.”

“ஆனா அத்தை…”

“அவ ஒன்னும் சொல்ல மாட்டா.”

“சரி மாமா, உங்களுக்கு இங்க கம்பர்ட்டபிளா இல்லனா என்னை எழுப்புங்க” என்று சொல்லும் அவளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை ஷங்கருக்கு.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து விட்டான் பிரபாகரன். முதல் நாள் நடந்த சம்பவங்கள், அன்னை தந்தையின் திருமண நாளை ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை என்ற குற்ற உணர்ச்சி அனைத்தும் சேர்த்து அவன் மனதை அலைக்கழித்தது. எனவே உடனே குளித்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான். ஏழு மணிக்கு எழுந்த ஷாலினி அவன் வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரியாமல், துரித கதியில் சமையல் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
309 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
216 1 0
நிழலென தொடர்கிறேன்
212 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page