நெஞ்சம் 1

 

ஒரு பைக் இரவில் அந்த வீட்டின் முன் நின்றது. அந்த இடமே நிசப்தமாக இருக்க சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டின் பைப்பை பிடித்து ஏற ஆரம்பித்தான். 

 

பால்கனியில் யாரோ இருப்பது போல தெரிய மறைவாய் சத்தத்தை வெளிப்படுத்தாமல் மேல் மாடியை நோக்கி ஏற ஆரம்பித்தான். 

 

அங்கே ஒருத்தி புத்தகத்ததை கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். 

 

அவள் முன் சென்று அவன் குதிக்க “ஆ…” என்று அலறினாள். 

 

“ஏய்… அம்மு கத்தாத பேபி. நான் தான்” என்று கிசுகிசுப்பான குரலில் “ஹேய் கௌதம்” என்று உற்சாக குரலில் கத்தினாள். 

 

“கொஞ்சம் அமைதியா இரு. அப்றம் உன் வானரங்கள்லா வந்தா நீ பாட்டுக்கு போய்டுவ.  என் பாடு திண்டாட்டம் தான்” என்று சொல்லியவன் “ஆமா… இந்த இருட்டுல தான் வந்து படிப்பியா?” என்று அவளை கடிந்தான். 

 

“இல்லடா. அங்க ஒரே சத்தமா இருந்தது. அதான் மேல வந்தேன்” என்று விளக்கம் தந்தாள். 

 

“ஏன்டி அதுக்குனே இந்நேரத்துக்கு தான் படிப்பியா? உன் சின்சியாரிட்டிக்கு அளவே இல்ல?” என்றதும் அவள் புன்னகைத்தாள். 

 

“எதுனாலும் சிரிச்சே மழுப்பு” என்று சலித்தவன் “எப்படி உன் வானரங்கள்லா உன்ன தனியா விட்டாங்க?” என்று புருவம் உயர்த்தினான். 

 

“டேய் என்ன நீ இதே சொல்லிட்டு இருக்க?” என்று கடுப்பாக கேட்டாள். 

 

“பின்ன என்னடி? அதுங்க தான் உன்ன பிச்சு எடுத்துக்குதுங்களே.. எனக்குனு ஒரு நாளாவது டைம் ஸ்பென்ட் பண்ற‌ நீ?” என்றவனை முறைத்தாள். 

 

“ஹலோ… எங்கப்பாம்மா என்ன படிக்க தான் அனுப்பியிருக்காங்க. ஊர் சுத்த இல்ல” என்றாள். 

 

“ஹையோ… அப்படியா செல்லக்குட்டி… என்‌ செல்லத்துக்கு எவ்ளோ கோபம்?” என்றவன் அவளருகில் வந்து அவளை இறுக அணைத்தான். 

 

“அப்படியே இந்த சப்ஜெக்ட்டும் படி பொண்ணே” என்று கண்ணடித்தான். 

 

அவனுடைய அருகாமையிலும், குரலிலும் தன்னை மறந்து நிற்க “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்ணே….” என்றவனின் வாழ்த்தில் அவனது கன்னத்தில் ஆசையாய் இதழ் பதித்தாள். 

 

 அவளது செய்கையில் மெய் மறந்தவன் அவளை இன்னும் இறுக அணைத்தான். 

 

இருவரும் ஒரு வித மோன நிலையில் இருந்தனர். பிறகு ஞாபகம் வந்தவனாக தனது கையில் இருந்த ஒரு பார்சலை எடுத்து அவளிடம் கொடுத்தான். 

 

“டேய் என்னடா இது?” என்று அவள் அவசரம் அவசரமாக பிரித்தாள். 

 

“ஹேய் அறிவே… உனக்குனு தானே நான் வாங்கிட்டு வந்தேன். இப்போ ஏன் உனக்கு இவ்ளோ அவசரம் ஜெனி?” என்று கடிந்தான். 

 

“டேய் உன் கிப்ட் என்ன இருக்கும்னு நான் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்? நீ என்னடான்னா இப்படி சொல்ற?” என்று கடுப்பாக கேட்டாள். 

 

“இது மட்டும் தான் என் கிஃப்டா என்ன? நாளைக்கு வா… உனக்கு என்ன சப்ரைஸ் வெச்சிருக்கேனு தெரியும்” என்றவனை கண்கள் விரிய பார்த்தாள். 

 

“டேய் என்ன சப்ரைஸ்டா?” என்று ஆர்வம் பொங்க கேட்டவளை நெற்றியில் முட்டியவன் “நீ நேர்ல வா. அப்போ உனக்கு தெரியும்” என்று கண் சிமிட்டினான். 

 

“சீக்கிரம் பிரிடி” என்றவன் சொல்ல அவள் அதை கையில் எடுக்கையில் “லவ் யூ பொண்ணே” என்று கௌதமின் காதல் குரல் அவளை மெய் மறக்க செய்தது. 

 

“இனி காலைல நீ என் குரல் கேட்டு தான் எழுத்துக்கனும்” என்று கண் சிமிட்டி கட்டளையாக சொல்ல அவனின் குரலில் ஜெனிஃபர் அவனை முறைத்தாள். 

 

“என்னடி முறைக்கற? போடி” என்றவன் நகர 

“இரு கௌதம். விளையாட்டா கூட எதும் பண்ண கூடாது. எவ்ளோ கோபம் வருது உனக்கு?” என முறைத்தாள். 

 

“ஓகே. ஓகே. கூல் பர்த்டே பேபி. நாளைக்கு நான் லொகேஷன் அனுப்பறேன். ஈவ்னிங் கரெக்ட் டைமுக்கு வந்துடு” என்றவன் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தான். 

 

ஜெனிஃபர் அவன் போவதையே புன்னகையுடன் பார்த்து கொண்டு நின்றிருந்தாள். 

 

வந்தது போல தனது பைக் நிறுத்தும் இடத்திற்கு சென்றவன் அவளுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் ஜெனிஃபர் தனது ஸ்டாப்பில் நிற்க அங்கே வந்த கௌதம் அவளை கல்லூரியில் விட்டு விட்டு தனது அலுவலகத்திற்கு வந்தான். 

இது அவர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம்.  கவுதம் ஊரில் இல்லை என்றால் மட்டுமே அவள் கல்லூரிக்கு பேருந்தில் செல்வாள். 

 

கௌதம் பிரபாகரன் – பெயரில் மட்டுமே பிரபாகரன் சொந்தம். அவனுக்கு அவனது குடும்பத்தை பற்றி ஏதும் தெரியாது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன். மாணிக்கத்தின் வளர்ப்பில் வளர்ந்தவன். மாணிக்கம் அவனது சித்தப்பா. 

 

மாணிக்கம் ரிட்டையர்ட் ஆர்மி ஆபிசர். அவர் ஆர்மியில் வேலை செய்ததால் பெரும்பாலும் கௌதம் ஹாஸ்டலிலேயே வளர்ந்தான். அதனால் அவனுக்கு சொந்தம் இருந்தும் இல்லாதது போல உணர்வு. 

 

பெரும்பாலும் அவன் யாரிடமும் அவ்வளவு உரிமை எடுக்க மாட்டான். அவனுக்கென 4,5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி அவன் வைத்து கொள்வதில்லை. 

 

கூடவே பிடிவாதமும், கோபமும் அதிகம். அவ்வளவு சீக்கிரம் தனது உணர்வுகளை காண்பித்து கொள்ள மாட்டான். அப்படிப்பட்டவனையும் இந்த காதல் கொஞ்சம் மாற்றி தான் இருக்கிறது. 

 

விசிலடித்தப்படியே சென்றவன் பல்வேறு கனவுகளுடன் தனது வேலையை ஆரம்பித்தான். 

 

வேலை மும்முரத்தில் நேரம் தெரியாமல் வேலை செய்தவனுக்கு வயிறு கத்த லஞ்ச் சாப்பிட்டு வந்தவன் பார்ட்டி வேலைகள் பொருட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் கண்களில் ராகுல் பட்டான். 

 

“டேய் உன்ன நான் வர சொன்னேனா? இல்லையா? இன்னும் என்னடா நோண்டிட்டு இருக்க?” என்று கோபமாய் கேட்டான். 

 

“உன் லவ்வர்க்கு பர்த்டேனா நீ கொண்டாடுடா. என்ன ஏன்டா உயிர வாங்குற?” என்று கேட்டான். 

 

“இப்போ நீ  வரப்போறியா? இல்லையா? உன்னய‌ டெக்ரேஷனலா பாக்க சொன்னேன்ல‌. நீ என்ன‌ பண்ற பக்கி?” என திட்டினான். 

 

“அதெல்லாம் சொல்லியாச்சு. செஞ்சிட்டு இருக்காங்க” என்று சலித்தவன் “ஒரு பத்து நிமிஷம் வேல இருக்கு. நீ செய்ய விட்டினா உங்கூட வருவேன். இல்லேனா நீ என்னவோ பண்ணிக்க” என்று சொல்ல அவனை முறைத்தபடி உட்கார்ந்தான் கௌதம். 

 

“ஷாலினி எங்கடா ஆள காணோம்?” 

 

“அவ நைட் டைரக்டா ஃபங்க்ஷனுக்கு வந்தரேனு சொன்னா. கிளையன்ட்ட மீட்‌ பண்ண வெளிய போயிருக்கா” என்றான். 

 

இருவரும் பேசியபடியே வேலையை முடித்தபடி அங்கிருந்து கிளம்பினார்கள். 

 

பர்த்டே பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தவர்கள் அனைத்தையும் பார்வையிட்டனர். 

 

இடையில் ஒரு முறை ஜெனிஃபருக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை. கல்லூரியில் இருக்கலாம் என யோசித்தவன் கட் செய்தான். 

 

நேரம் ஆறு மணியாக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஆனால் அவள் இன்னும் வந்த பாட்டை காணவில்லை‌. அவளுக்காக தனியாக கால் டேக்ஸி புக் செய்திருந்தான். இங்கிருந்த வேலைகளின் நடுவே தான் செல்ல முடியாத காரணத்தினால். 

 

அவளுக்கு திரும்ப கூப்பிட்டு பார்த்தான். அப்போதும் அவள் எடுக்கவில்லை. 

கால் டாக்சி டிரைவருக்கு கால் செய்தான். 

 

“அண்ணா அங்கே போயிட்டிங்களா?” என்று கேட்டான். 

 

“அங்க தான் வெயிட் பண்றேன் தம்பி. நீங்க சொன்ன பொண்ணு இன்னும் வரல” என்று சொன்னார் அவர். 

 

ஏதேனும் உடல்நிலை சரியில்லையோ என்று அவனுக்கு பதட்டம் அதிகம் ஆகியது.  

 

அவனுடைய பதட்டமான முகத்தை பார்த்த ராகுல் அவனருகில் வந்தான். 

 

“என்னடா? என்னாச்சு?” 

“நத்திங்டா”  

“ஜெனிஃபர் கிளம்பிட்டாங்களா? இந்நேரம் வந்திருக்கணுமே?” என்று கேட்டான். 

 

“அவ வந்துருவாடா. நீ வந்தவங்கள கவனி” என்று சொன்னவன் வாயிலையே கவனித்து கொண்டிருந்தான்.

 

நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருக்க வந்தவர்களின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. 

 

“ஏய்… கௌ… ஏன்டா இப்படி உட்கார்ந்திட்டு இருக்க? ஜென்னி எங்க? இன்னும் நான் அவள பாக்கல” என்று சொல்ல அவனுக்கு தன் முகம் மாறாமல் காட்டி கொள்வதே பெரிய போராட்டமாக இருந்தது. 

 

அவனின் முகத்தை வைத்தே நிலைமை சரியில்லை என்று கண்டு கொண்டவள் அவன் கைகளை பிடித்து ஆறுதலாக அழுத்தினாள். 

 

அதில் வலிய புன்னகையை கொண்டு வந்தவன் சிரித்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ராகுல் வர 

 

“மச்சி எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸும் ஓகேவா?” என்றவனை முறைத்தான் ராகுல். 

 

“டேய் பொறுடா. அவ வந்துடுவாடா” 

 

“என்னடா பொறுமையா இருக்கறது? நீ எவ்ளோ பேர் கூப்ட்டு எவ்ளோ ஃபுட் ஆர்டர் பண்ணி… இந்த இடமே பாக்க தேவலோகம் மாதிரி இருக்கு. ஆனா நீ மூணு மணி‌‌ நேரமா இப்டியே வெய்ட் பண்ணிட்டு இருக்க? வந்திருக்கவங்க என்னடா நினப்பாங்க?” என்றவனை அடிபட்ட‌ பார்வை பார்த்தான். 

 

“நீ எப்போ அவகிட்ட பேசின?” 

 

“மார்னிங்” என்றவனை “கௌதம்” என்று கத்தினான். 

 

“அவ வந்துருவேனு சொன்னாடா” 

 

“திரும்ப கால் பண்ணியா?” 

“பண்ணேன்டா. பட் அவ ரிப்ளை பண்ணல” 

 

“நீ இப்டியே இரு. இதுக்கு நீ ஒரு நாள் அனுபவிப்ப” 

 

“ராகுல்” 

 

“ச்சே… என்ன தான் லவ்வோ?” என்று ராகுல் திட்டிக் கொண்டே அவ்விடம் விட்டு அகன்றான். 

 

கௌதம் ராகுல் திட்டியதை ஜீரணிக்க முடியாமல் சிலையாய் நின்றான். 

பின் தலையை உலுக்கியவன் தன்னை மீட்டெடுத்து அவளுக்கு போன் செய்ய அப்போதும் அவள் போனை எடுக்கவில்லை. 

 

கோபம் கரையை கடக்க செல்போனை உடைக்கும் அளவுக்கு வெறி வர இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு தன்னை அமைதியாக காட்டி கொண்டான். 

 

ஏதோ ஞாபகத்தில் செல்போனை நோண்டியவன் ஸ்டேட்டஸ் சென்று பார்க்க அங்கே பார்த்த காட்சியில் அவனது கண்கள் நிலைகுத்தி நின்றது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page