விஜயராகவன் பழைய விஷயங்களை நினைப்பதே இல்லை.அதன் தாக்கம் அவனிடத்தில் அதிகம்.மனதின் காயங்கள், ஏமாற்றம் என்று அவன் அனுபவிக்கும் உணர்வுகளை சக மனிதர்களிடம் கூட சொல்லிவிட முடியாது.அந்த அளவுக்கு கடுமையான சேதாரம்.ஏன்டா அளவுக்கு என்றால் கனவில் கூட தனக்கு இன்னொரு முறை திருமணம் என்ற வார்த்தையை அவன் கேட்க விரும்பாத அளவுக்கு .
ரோஷினி திருமணத்திற்கு என்று அமெரிக்கா சென்றிருந்த பொழுது ரோஷினியின் மாமியார்,’தனது தங்கை மகளுக்கு விஜயனை கேட்டார்கள்.அந்த பெண்ணும் திருமணம் முடிந்து இருபதே நாட்களில் வாழ்க்கை பொய்த்துப்போனதில் அதிலிருந்து விடுதலை வாங்கி வந்தவள் தாம்.
விஜயனின் மனதில் ,’இந்த பெண்ணிடமும் தவறு இருந்திருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்லி விடுவார்களா?’ என்று தோன்றவும் தனது எண்ணம் போகும் போக்கு குறித்து வெட்கியவனாக தமது பெற்றவர்களிடத்து,’இனி இன்னொருமுறை திருமணம் குறித்து தன்னிடம் பேசவேண்டாம் ‘என்றே தீர்த்து சொல்லிவிட்டான்.
அவர்களும் இவன் தனியாக குழந்தையை வளர்க்க படும்பாடுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் , இப்படியே விட்டால்,ஒன்று தனியாகவே மகளை வளர்க்க கற்றுக்கொண்டு விடுவான்.அல்லது இன்னொரு திருமணம் குறித்து யோசிப்பான்.அவர்களின் உதவி ,இடையீடு இருக்கும் பட்சத்தில் இதற்க்கு முடிவு என்பதே இல்லாமல் சென்றுவிடும்.’
மகனிடம் எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும்,அவர்களது மறைமுக கவனிப்பு இன்று வரை இருக்கிறது. எவ்வளவோ புத்திசாலியான மகன் இப்படி ஒரு பெண்ணின் அதுவும் மனைவியின் விஷயத்தில் அடிபட்டு இருப்பது அவர்களால் இந்த நொடி வரை ஒப்புக்கொள்ளவே முடியாத விஷயம் .
அவனைப் பொறுத்தவரை,தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியை படிகளாக்கி,இன்று இவ்வளவு பெரிய கம்பனியை நிர்வகிக்கும் பொறுப்புக்கு வந்துவிட்டான்.அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில். சேர்ந்த கம்பனியில் தாம் இன்றுவரை வேலை செய்கிறான். மாற்றமில்லை.
இவனது தனிப்பட்ட வாழ்க்கை என்பது அங்கே அத்தனை பேருக்கும் அத்துப்படி.ஆரம்பத்தில் இவனிடம் துக்கம் விசாரித்தவர்கள்,ஏளனம் செய்தவர்கள், புறம் பேசியவர்கள்,எல்லோருக்கும் இன்று இவனைக் கண்டாலே அதிருகிறது. அத்தனை ஆளுமையை வளர்த்துக்கொண்டான். நெருங்கவே பதறும் அளவுக்கான பிரம்மாண்டமான வளர்ச்சி.
இவனைப் பார்த்து உண்மையாகவே பரிதாபம் கொண்டவர்கள் கூட இன்று இவனிடம் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டார்கள். ஒரு அதிகாரியாக அவன் தனக்கு கீழே வேலை செய்பவர்களிடம் நன்மதிப்பை பெற்றுவிட்டான்.
சரி,இன்றைய நடப்புக்கு வருவோம்!
திவ்யாவுக்கு எரிச்சல் மண்டியது. காலையிலிருந்து இன்னமும் வயிற்றுக்கு எதுவும் போட்டிருக்கவில்லை. விடாமல் நான் இருக்கிறேனே’என்றது.அதை பொருட்படுத்த முடியாத அளவுக்கு வேலை அவளை நெருங்கியது.போன வாரம் தாம் ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்தாள். அங்கே ஒரு மருத்துவமனையின் மென்பொருள் வடிவமைப்புக்கவென்று சென்று ஆறுமாதங்கள் வேலை செய்து அதை இந்தியாவிலிருந்து நிர்வகிக்கும் குழுவின் இவளும் ஒரு உறுப்பினர். அங்கே இருக்கும்பொழுது அவ்வளவு தொந்திரவு செய்யாத அந்த மென்பொருள் சரியாக இவர்கள் குழு இந்தியா வந்த பிறகு பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டது.
தினமும் ஒரு விதமான பிரச்னையை கொடுத்து குடைகிறது.அதை சரி செய்வதற்கே நாட்கணக்கில் சுருட்டிக் கொள்கிறது.வேறு ப்ராஜெக்ட் கேட்டாலும் கொடுக்க அவர்கள் அலுவலகத்தில் தயாராக இல்லை. சென்று வந்த குழுவினர்தாம் செய்தாக வேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிடவே, இவர்கள் குழுவில் இருக்கும் மென்பொருள் பொறியாளர்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை பற்றி அங்கே இருக்கும் மருத்துவமனையில் மேல்மட்ட குழுவில் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் பொறுப்பு இவளுடையது. இரவு -பகல் என்று இல்லாமல் எனத நேரத்திலும் அழைக்கிறார்கள்.
தீபனுடன் கூட சரியாக நேரம் செலவழிக்க முடியாத கடுப்பு.ஏற்கனவே ஆறுமாதங்கள் தனிமையை அனுபவித்தவள் ,இப்போதும் தனியாக அலுவலக வேலைகளுடன் போராட வேண்டும் என்றால் என்னதான் செய்வது?
இவள் இப்படி யோசிக்க தீபன் அப்படியே இவளுக்கு எதிர்மாறான மனநிலையில் இருந்தான்.மனம் முழுவதும் மல்லிகைப்பூ வாசனை . வீட்டில் இவனுக்கென்று பார்த்திருக்கும் பெண்.இதுநாள் வரையில் திருமணம் பற்றி பெரியதாக எந்த கருத்தும் இல்லாமல் இருந்தவனை பார்த்த ஒற்றைப் பார்வையில் அவளது கண்களோடு கட்டிக்கொண்டவள்.
திவ்யா ஆஸ்திரியா சென்றிருந்த பொழுது தீபன் வீட்டில் பார்த்த பெண். ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள் மல்லிகா. பேரழகி வரிசையில் எல்லாம் இல்லை.ஆனால், அவளிடம் ஆத்மார்த்தமான உணர்வை அனுபவித்தான் தீபன். தன்னுடன் வாழ்நாள் முழுவதும் இவளே என்று தீர்மானம் செய்தவன் திருமணத்திற்கு ஒப்புதல் சொல்லிவிட இதோ இன்னும் மூன்று மாதங்களில் திருமணம்.
இன்னமும் திவ்யா பற்றி மல்லியிடம் தீபன் சொல்லவில்லை.சொல்லவும் விரும்பவில்லை.இந்தமாதிரி ஒரு வாழ்வில் இருக்கிறேன் என்று வருங்கால மனைவியிடம் எப்படி சொல்ல முடியும் என்ற தயக்கம் அவனை செல்லவிடாமல் தடுத்தது.
அதே சமயம் எப்படி மல்லியுடனான திருமண ஏற்பாடுகள் பற்றி சொல்லுவதற்கு சமயம் வேறு பார்த்துக்கொண்டிருந்தான். முடிந்த வரையில் சீக்கிரமாக திவ்யாவிடமிருந்து பிரிந்து சென்றுவிட வேண்டும்.இல்லாவிட்டால்,திருமணம் முடிந்தபிறகு தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்று பயம் வேறு.
தினமும் இரவு நேரத்தில் தனது அறையிலேயே முடங்கி விடுகிறான். திவ்யாவுக்கு தீபனின் அறைக்கு தேடி வரும் அளவுக்கு நேரம் இன்மை.இப்போதுகூட கணினியுடன் போராடிக் கொண்டு இருப்பவளின் நிலையை சொல்ல வேண்டியது இல்லை.
தீபன் திவ்யாவின் தொந்திரவு இல்லாமல் நிம்மதியாக ஒருபுறம் தனது மல்லியுடன் காதல் பயிர் செய்து கொண்டிருக்கிறான். எண்ணம் -வண்ணம் என்று வகைதொகை இல்லாமல் மல்லிகையின் வாசத்தில் கொள்ளையிடப்பட்டிருக்க , அவனுக்கு திவ்யாவுடனான இந்தவிதமான வாழ்க்கை கசக்கிறது.
இரவு வேலையிலிருந்து வீடு திரும்பும்பொழுதே மல்லி அழைத்துவிடுவாள்,”என்னங்க, வீட்டுக்கு வந்துடீங்களா? வீட்டுல சாப்பிட ஏதாச்சும் இருக்கா.. வெளியே சாப்பிட்டு உடம்பை கெடுத்துகாதீங்க. தோசை மாவு வாங்கிட்டு போய் ஊத்திக்கோங்க.” என்று அவளிடமிருந்து ஆயிரம் உத்தரவுகள். அவற்றை கேட்கும்பொழுது,”என்னுடைய சுதந்திரத்துல தலையிட உனக்கு உரிமை யார் கொடுத்தது ?” என்று கோவம் வந்திருக்கவேண்டும். ஆனால் ,அவளது அந்த வார்த்தைகளின் பின்னால் இருக்கும் அக்கறை அவனை மயக்கியது.
இவ்வளவு வருஷங்களில் திருமணம் செய்துகொள்ளாமல் விடுத்தோமே!என்ற ஆதங்கம் கரைகட்டியது.திருமணம் என்றால் இவ்வளவு தித்திக்குமா! ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் முப்பதுகளின் மத்தியில் மனமும் உடலும் வெகுவாக சோர்ந்து போகும். அப்போது நம்மை புரிந்துகொள்ள யாரவது கிடைப்பார்களா எண்டு மனம் தேடும். தீபனுக்கு இப்போது முப்பத்தி ஐந்து வயது ஆகப்போகிறது. மல்லிக்கு இருபத்து ஒன்பது வயது.அவள் தனது கீழே இருக்கும் உடன்பிறப்புகளை படிக்கவைத்து ஆளாக்கி விட்டு நிமிர்வதற்குள் வயது கூடிப்போனது. அவளது இருபத்து நான்காவது வயதில் திருமணத்திற்க்கு பார்க்கத்தொடங்கிய நேரத்தில் அவளது அப்பா இறந்துவிட,வீட்டின் தலைமகனாகி கடமைகளை ஏற்றுக்கொண்ட பெண்ணவள்.
ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் நிமிர்ந்த நன்னடையும்,நேர்கொண்ட பார்வையும்,யாரைக்கண்டும் அஞ்சாத அவளது குணமும் குடும்பத்தின்மீது அவளது அக்கறையுமாக தன் அம்மாவின் வாய்வழியே அவளைப்பற்றி கேட்டிருந்தவனுக்கு நேரில் பார்த்தவுடன் பிடித்துவிட்டது.
மல்லிக்குமே தோள் சாய தோள் தேவை. இளைப்பாறுதலுக்கு நல்ல தோழமை தேவை.இதை சொல்லித்தான் இவனிடம் அவள் பேசியதே! அவள் சொன்னவவற்றை கேட்டவனுக்கு அவளை வெகுவாகப் பிடித்தும் போனது. அவளும் “எனக்கு அவரை பிடிச்சிருக்கு.அவருக்கும் விருப்பம் இருந்தா,மேற்கொண்டு பேசலாம்” என்று அங்கேயே சொல்லிவிட்டாள்.
பிறகு என்ன,”இதோ திருமணமலர்கள் தருவாயா!” என்று இருவரும் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமண நாட்களை எண்ணிக்கொண்டே இருவரும் ஒருபுறம் கழித்துக்கொண்டிருக்க,தீபன் தாங்கள் இருவரும் திருமணம் முடிந்தபிறகு இருப்பதற்கென்று புதியதாக ஒரு பிளாட் விலைக்கு வாங்கிவிட்டான்.மனைவி முதன்முதலில் வரும்பொழுது சொந்தவீட்டில் காலடி எடுத்து வைக்கவேண்டும் எண்டு அவன் மனம் வெகுவாக விரும்பியது.
திருமண நிகழ்வையும் அந்த வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் பிடிவாதமாக சொல்லிவிட்ட மல்லிகையின் வீட்டினருக்கு அவ்வளவு சந்தோசம். ஆடம்பரமாக இல்லாமல் வெறும் ஐம்பது நபர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றுவிட்டான் தீபன்.
வருங்காலக் கணவனின் ஒவ்வொரு அசைவையும் மனதில் ரசித்தது மல்லியின் மனம். திருமணம் நடக்க இன்னமும் ஒரே மாதம் மீதம் எனும் நிலையில் தீபன் திவ்யாவிடம் தனது திருமணம் பற்றிய விஷயங்களை சொன்னான்.
இடிந்துதான் போனாள் திவ்யா. சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.தீபன் இவ்வளவு விரைவாய் முடிவுகளை எடுத்து தன்னை விட்டுவிடுவான் என்று திவ்யா எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் மீது கோவமாக வந்தது.
“யு சீட், என்னைய நம்பவைச்சு கழுத்தறுத்திட்டே. நாம ரிலேஷன்ஷிப் நல்லாதானே போய்கிட்டு இருக்கு.இப்போ திடீர்ன்னு வந்து எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.நா அதனால தனியா போறேன்னு சொல்றே.ஏன்,என்கிட்டே முதல்லயே சொல்லணும்னு ஒனக்கு தோணல? உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?என்று கேட்டுக்கொண்டே வந்தவளின் குரல் இடறியது. தன்னை விட்டு தீபன் பிரிந்து செல்ல போகிறான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.இவன் என்னை இப்படி இந்தமாதிரி விட்டு செல்லமுடியும்?என்று கேள்வி. ஆற்றாமை. எதிர்பார்ப்பு. எந்த பெயரவேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளுங்கள். தீபன் அவளது கேள்விகளுக்கு என்ன சொல்லியிருக்கக் கூடும்? எனி கெஸ்?
அவளது கோவமும்,அதற் வலியும் வார்த்தை வடிவங்களும் அவனை அசைக்கவே இல்லை என்பதுதான் நிஜம்.
பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்தவன் அங்கே டேபிளில் இருந்த லைட்டரை எடுத்து நிதானமாக பற்றவைத்துக்கொண்டே கேட்டான்.,” என்ன நீ, நாம என்னவோ கல்யாணம் செஞ்சுக்கிட்ட மாதிரியும்,இப்போ உன்னைய நா ஏமாத்திட்டு கழற்றி விட்ட மாதிரியும் பேசற? அக்சுவலி, எனக்கு கல்யாணம் ஏற்பாடு ஆகியிருக்குற விஷயத்தை கூட உன்கிட்டே சொல்லவேண்டிய அவசியமே இல்லை. பட், வருஷ கணக்கா சேர்ந்து இருந்ததால சொன்னேன். நீ ஏற்கனவே கல்யாணம் senju,குழந்தையும் பிறந்த பிறகு சுதந்திரம் வேணும்னு வெளியே வந்தே.
நானு,சுதந்திரமா இருக்கணும்னு நினச்சு இருந்திட்டு,இப்போ என் வாழ்க்கைக்கு துணை வேணும்.அர்த்தம் வேணும்னு கல்யாணம் செஞ்சுக்க போறேன்.எனக்கு இந்த லிவ் இன் வாழ்க்கை பிடிக்கல.சலிப்பு தட்டுது. எனக்குன்னு மனைவி,குழந்தைகள் வேணும்.என்னோட கனவுகள் ரொம்ப பெரிசு.எதிர்பார்ப்புகளும் தான்.” என்றவன் ஏற்கனவே முடிவெடுத்து தயாராக வைத்திருக்கும் தனது டிராலிகளை தனது அறையிலிருந்து ஹாலுக்கு நகர்த்தினான்.
அவனது ஒவ்வொரு அசைவையும் இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள் திவ்யா.இங்கே நடப்பவற்றை நம்பவோ,ஜீரணிக்கவோ அவளால் முடியவில்லை.
தனது கையிலிருக்கும் வீட்டின் இன்னொரு சாவியை திவ்யாவிடம் கொடுத்தவன்.இந்த மந்த்துக்கான என்னோட பங்கு பணம் எண்டு ஒரு தொகையை அவளது வங்கி கணக்குக்கு அனுப்பியும் வைத்தான்.
எதையோ யோசித்தவனாக ஒரு நிமிடம் கண்மூடி நின்றவன்,”உனக்கு விருப்பம் இருந்தா நல்ல ஒருத்தரை திரும்ப கல்யாணம் செஞ்சுக்கோ. கொஞ்ச வருஷம் கழிச்சு துணை தேவைப்படும்,உடம்புக்கு இல்ல…மனசுக்கு. அப்போ தனியா நிக்கதே. டேக் கேர்,என்றுவிட்டு அவளை இறுக்கி ஒருமுறை அணைத்து விடுவித்தவன் அங்கிருந்து கிளம்பினான்.
உடலால் பின்னிப் பிணைந்திருந்த சமயங்களும் இப்போதைய அணைப்பிற்குமான வித்தியாசத்தினை உணர்ந்துகொண்டது அவளது மனம்.
