மயக்கம் -தயக்கம் 4

மயக்கம் -தயக்கம் 4

காலையில் எழுந்துகொள்ளும் பொழுதே வாணிக்கு உடம்பு படுத்த ஆரம்பித்து இருந்தது. இங்கே அமெரிக்காவின் சீதோஷண நிலை அவருக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை. சளியும்,ஜூரமுமாக ஒரு அவஸ்தை. கணவரோ மகளின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.இவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேர கார் பயணம். சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. கணவரும் வேலை விஷயமாக கனடா சென்று விட்டார்.நீங்கள் இருவரும் இங்கே எனக்கு துணைக்கு வாருங்கள் என்று மகள் அழைக்கவும் அந்த சமயம் லேசாக சளித்தொந்திரவு இருக்கவே கணவரை மட்டும் அனுப்பி வைத்தும் ஆயிற்று.

இரண்டு நாட்களாக பரவாயில்லாமல் இருந்தது.இப்போது இன்று காலையிலிருந்து இனிதே ஆரம்பம். நிதானமாக எழுந்து பல் துலக்கும் முன்னே வயிற்றை பிரட்டியது. வயிற்றில் ஒன்றும் இல்லைதான்.ஆனாலும், உள்ளே இருக்கும் பித்தநீர் மொத்தமும் ஒரே ஓக்கரிப்பில் வெளியே வரவும் அதற்கு மேல் முடியாமல் அங்கிருந்த மவுத் வாஷில் வாயை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்துவிட்டார்.

சற்று நேரம் சென்று மீண்டும் எழுந்து கெட்டிலில் நீரை சூடு செய்து முதல் நாள் இரவு மேசையில் வைத்த பிரட்டை சாப்பிட்டுவிட்டு மாத்திரையை விழுங்கிவிட்டு தூங்கியவர் தான். மாலை தான் மீண்டும் விழிப்பு தட்டியது.இப்போது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கவே மீண்டும் எழுந்து பல் துலக்கி ஒரு காக்கா குளியல் போட்டுவிட்டு அடுக்கலைக்குள் சென்று ஒன் பாட்  ரசம் சாதத்தை குக்கரில் வைத்து கூடவே கொஞ்சம் துவையலும் அரைத்து சாப்பிட்டுவிட்டு மாத்திரையை விழுங்கும் நேரம் மகன் விஜயராகவன் அழைத்து விட்டான். வீடியோ காலில் அம்மாவை பார்த்தவனுக்கு  மனம் தாங்கவில்லை.

அருகில் அப்பா இருக்கிறாரா என்று தேடியவனை  கண்டுகொண்ட வாணி,”எனக்கு ஒண்ணுமில்லடா விஜய். கொஞ்சம் கோல்டு அண்ட் பிவேர். மெடிசின் எடுத்தாச்சு. இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு. அப்பா உன்னோட தங்கச்சி வீட்டுக்கு போயிருக்காரு.மாப்பிளை கனடா போயாச்சு.சோ அவளுக்கு ஒரு வாரம் துணைக்கு அப்பாவை அனுப்பி வச்சிருக்கேன். குட்டிக்கு உடம்பு சரி இல்லை. உன்னோட தங்கச்சி ரொம்பவே பயந்துட்டா ” என்று நீண்ட விளக்கத்தை சொன்ன பிறகே அவனது பார்வை மாறியது.

“உங்களுக்கு இப்போ என்ன வந்துச்சுன்னு அங்கே போய் செட்டில் ஆகினீங்க. ஓகே..நா  செஞ்சது மன்னிக்க முடியாத தப்புதான்.அதுக்கு,என்னை  அம்போன்னு விட்டு நீங்க ரெண்டு பேரும் கிளம்பியாச்சு. இங்கே எனக்கும் கூட குழந்தையும், பெரிய பொசிஷன்ல வேலையும் இருக்கும்மா. எங்கயாச்சும் இப்படி பெத்த மகனை விட்டு பேரண்டட்ஸ் இருப்பாங்களா?நீங்களே சொல்லுங்க..”என்று தனது ஆதங்கத்தை கொட்டினான் விஜய்.

மகனது நிலைமை ஒரு பெண்ணாக வாணியால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால், கணவர் மகனை விட முக்கியம் என்று நினைப்பவர் வாணி. அதனால் கணவரின் முடிவை மீறி ஒரு  அடிகூட எடுத்து வைக்கவோ கணவரின் மனதை மாற்றவோ வாணி விரும்பவில்லை.

இன்று இவ்வளவு பேசும் தங்கள் மகன் , இவ்வளவு தங்களை தேடுபவன்  அன்று அவ்வளவு பெரிய முடிவு எடுத்து அதை செயல்படுத்தும் வரை ஏன் பெற்றவர்களிடம் சொல்லவில்லை’என்ற கேள்வியை முழுங்கிக்கொண்டு மகனிடம்,”பாரு விஜய்,நடந்த விஷயங்களை மாற்ற முடியாது.அதோட அப்பா ஓகேய் சொல்லாம நா அங்கே வரவும் மாட்டேன்.உனக்கே தெரியும். வேறே ஏதாவது நல்ல விஷயமா பேசு.ஏற்கனவே melukku முடியாத கடுப்புலயும்,சோர்வுலயும் இருக்கேன். இல்ல..கொஞ்சம் உடம்பு ரெக்கவர் ஆன பிறகு பேசறேன் “என்றுவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். ஒரு ஆறு வருஷங்களுக்கு முன்பெல்லாம் இப்படி இல்லை.

மகனது குரலை கேட்டால் கூட பெற்றவர்களின் குரல் குழைந்து விடும். இப்போதெல்லாம் அவன் செய்த விஷயம் மட்டும் தான் ஞாபகத்தில் வருகிறது.மகன் ஒரு காலத்தில் தங்களை ஒதுக்கியது தானே! இப்போது என்ன என்ற எண்ணம் பெற்றவர்கள் இருவருக்குமே உண்டு.

ஒருவருக்கு சரி என்று படும் விஷயங்கள் மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லையே !

அம்மாவிடம் பேசிவிட்டு வைத்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. முன்பெல்லாம் தினமும் அழைத்துக்கொண்டிருந்தான். அம்மாவே ஒரு நாள் சொல்லிவிட்டாள். “டேய், வாரத்துக்கு ஒரு முறை பேசினா போதும். ரோஷினியும் மாப்பிள்ளையும் எங்களை நல்லாவே கேர் பண்ணிப்பாங்க.அதோட அப்பாவுக்கு ஆபிஸ் போகணும் எனக்கும் வேலைகள் இருக்கு. இந்திய நேரமும் இங்கே நேரமும் வேறே மாறுது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ” என்றுவிடவே அதற்குப்பிறகு மாதத்தில் ஒருநாள் அழைத்து பேசுவது என்று விஜயனும் மாற்றி கொண்டான். அவர்களது ஆதங்கமும்,உணர்வுகளும் புரிகிறது. அதற்க்காக இப்படி ஒதுக்கத்தை காண்பித்தால் அவனும் என்ன செய்ய முடியும்?

தங்கை ரோஷினிக்கு குழந்தை பிறந்து  எட்டு மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்தவுடன் தயாவையும் அழைத்துக்கொண்டு சென்று பார்த்துவிட்டு வந்தான். இதோ இப்போது குழந்தைக்கு உடம்பு முடியவில்லை என்றதும் விஜயன் மனமும் அடித்துக்கொண்டது

ரோஷினியை அழைத்தான் .ரிங்  சென்று கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. மீண்டும் அழைக்க தயக்கமாக இருந்தது. குழந்தைக்கு எப்படி இருக்கிறதோ,மீண்டும் அவளே அழைக்கட்டும் என்று முடிவு செய்துவிட்டு  தூங்க சென்றான்.

தயா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை பள்ளியில் இந்த ஆண்டு சேர்த்துவிட வேண்டும் என்றெல்லாம் அவனுக்குள் யோசனைகள் ஓடியது. கண்களை இறுக்கமாக மூடினான்.எதிலிருந்தோ தப்பிப்பது போல இருந்தது அவனது உடல்மொழி.ஒருவாறாக தூங்க ஆரம்பித்தான்.

நடுநிசை சென்றிருக்கும். ஒரு பெண்ணின் பிங்க் நிற உதடுகள் அவனது உதடுகளில் அழுத்தமாக பதிவதும் ஆழ்ந்த அந்த சூடான முத்தத்துடன் அவளது பிறை நெற்றியும் கூரான மூக்கும் இவனது இளமையை சோதிப்பதாக தோன்றும் அளவுக்கான அந்தரங்க காட்சிகள் இப்போதெல்லாம் நித்தமும் அவனது உறக்கத்தை களவாடிக் கொள்கிறது.

இளமைக்கு உறவாக நிச்சயம் அவனுக்கு ஒரு பெண் துணை தேவைப்படுகிறது.மறுக்க இயலாது.ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் அவனது உணர்வுகள்.அது அவளுக்கு மட்டும் சொந்தம்  என்று என்றோ நினைத்து விட்டானே! இந்தக் கனவில் வரும் பெண் நிச்சயம் ஒரு கனவுக் கன்னி மட்டும்தான். நிஜத்தில் அப்படி ஒருத்தி இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றே நம்புகிறான்.

அதனால்,அவள் தனது கனவில் தரும் முத்தங்களையும், அவளது உடல் வெம்மையையும், அது தரும் சுகத்தையும் கனவாகவே விரும்புகிறான்.  அவன் அருகில் தயாவின் சீரான மூச்சுக்காற்று அவனை நடப்புக்கு அழைத்து வந்தது. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் முழு நாளும் குழந்தை தயாவுடன் தான் என்று நினைத்துக்கொண்டே கண்களை மூடினான்.

மறுநாள் காலை விழிக்கும் பொழுதே தங்கை ரோஷினியின் அழைப்புடன் தான் எழுந்தான்.பொதுவான விசாரிப்புகளுடன் ரோஷினியின் குழந்தை உடல் நலம் பற்றிய  விசாரிப்புகள்.”அம்மாவுக்கு உடம்பு சரியில்ல.அப்பாவை கிளம்ப சொல்லு.அவரோட நீயும் குழந்தையும் அங்கே போய்டுங்க.அம்மா தனியா சமாளிக்க முயற்சி செய்யுறாங்க. ஆனா அவங்களுக்கு அது கஷ்டம் ரோஷி ” என்ற தமையனிடம் “சரி , பாக்கறேன். அது சரி ,நீ எப்போ அம்மாவுக்காக யோசிக்க ஆரம்பிச்ச? அவங்க இப்படி உறவுகளை விட்டு, தாய் மண்ணை விட்டு எங்கேயோ வந்து ஸ்டெ பண்ணவே நீ தானே காரணம் ? இப்போ என்ன புதுசா இருக்கு?” என்று நக்கலடித்து விட்டாள்.

போன முறை பெற்றவர்களை பார்க்க சென்றபொழுது அம்மாவின் வருத்தம்,அப்பாவின் மவுனம் இப்போது அண்ணனிடம் வார்த்தைகளாக  உருப்பெற்று வந்துவிட்டது.

தங்கையின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான் விஜயராகவன்.இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது அவன் வாழ்வில் அடிக்கடி இடம்பிடிக்கிறது.அவனிடம் மாற்று இல்லை.கேட்டுத்தான் ஆகவேணும்.

 

அரவிந்தனின் வீட்டில் கல்யாணக் களை கட்டிவிட்டது . அவன் தங்கைக்கு இன்னமும் ஒரு மாதத்தில் திருமணம். தங்கைக்கு பார்த்திருக்கும் வரன் நியூசிலாந்தில் வேலை. இங்கே சென்னையில் அடிப்படை பொறியியல் படித்துவிட்டு மேற்படிப்புக்காக அங்கே சென்று , பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற வரன்.நல்ல சம்பளம், சொந்த வீடு, கார் என்று  மேல்தட்டு வாழ்க்கை.

வயது முப்பது. அரவிந்தனை விடவும் இரண்டு வயது மூத்தவர். இப்போதெல்லாம் சம வயதில் இருக்கும் துணையை தேடும்பொழுது அதிசயமாக அரவிந்தனின் தங்கை தன்னைவிட ஏழு வயது மூத்தவனை திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டிருக்கிறாள்.

வீட்டில் சொன்ன ஜாதக பொருத்தம், வேலை படிப்பு எல்லாவற்றையும் விட பேசிப்பார்த்த பொழுது பிடித்தது. இன்னமும் பேசும்பொழுது இவனை விட வேறு யாரும் தன் வாழ்க்கையில் நுழைய முடியாது என்பது வரை உணர்ந்ததால் சொன்ன சம்மதம்,உணர்வுகளால் ஆன முடிவு.

அரவிந்தன் பலமுறை கேட்டுவிட்டான்,” டேய்  அமுதா,நிச்சயம் உனக்கு அந்த பையன பிடிச்சிருக்கா?என்னையும் விட வயசில மூத்தவர் டா. இப்போல்லாம் யாரும் இவ்ளோ வயசு வித்தியாசத்துல கல்யாணம் செஞ்சுக்கறது இல்ல. வேணாம்னா சொல்லு. அப்பா நல்ல வரனா உனக்கு பாப்பாரு ” என்றவனை நெற்றிக்கண் திறந்து பார்த்தாள் அமுதா.

“அண்ணா, இனிமே அவரை பத்தி ஏதாவது குறைச்சலா என்கிட்டே பேசாதே. நா டிசைட் பண்ணியாச்சு.இனிமே மனசை மாத்திக்க முடியாது.அவருதான் இந்த வீட்டு  மாப்பிள்ளை. அண்ணனா,லட்சணமா ஒழுங்கா வேறே எதுவும் யோசிச்சு மண்டைய குழப்பிக்காம கல்யாண வேலைய ஆரமிக்குற வழிய பாரு.”இதுதான் அமுதாவின் எண்ணம் .

தங்கையை புரிந்தவனாக வீட்டில் அப்பாவுடன் சேர்ந்து கல்யாண வேலைகளை தொடங்கிவிட்டான். இதோ இப்போது திருமணம் இன்னமும் ஒரே மாதத்தில் என்று வந்து நிற்கிறது. நாட்கள் நெருங்க தங்கையின் திருமண பத்திரிக்கையை மருத்துவமனையில் உடன் வேலை செய்பவர்களுக்கு கொடுத்துவிட்டு திருமணம் நெருங்கும் கடைசி ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டான்.

பத்திரிக்கை கொடுக்கும் பொழுது தனக்கும் சந்தனாவுக்கும் திருமணம் ஏற்படாகி அதை எப்போது கொடுக்க போகிறேன் என்ற ஏக்கம் அவனையும் அறியாமல் தோன்றிவிட்டது. அதை அடக்க முடியாமல் வெகுவாக தவித்தான்.

வீட்டில் அரவிந்தனின் அப்பாவோ மகனிடம், ” அரவிந் , ரங்கனோட வீட்டுக்கு நேரே போயி பத்திரிகை வைக்கணும். உங்கம்மா வரல்லன்னு சொல்லிட்டா. நீ வரியா?”என்றார்.

“போலாம்பா, அவங்க வீட்டுல எல்லாரும் எப்போ இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு போகலாம். ம்ம், போகணும்.”என்றுவிட்டு தனது அலைபேசியில் யாருக்கோ அழைத்து பேசினான். பிறகு மீண்டும் அப்பாவிடம் வந்தவன்,”மாமாவும் அத்தையும் எப்போ வீட்டுல இருப்பாங்கன்னு கேட்டுக்கோங்க ப்பா.இன்னிக்கு சந்தனாவுக்கு நைட் ஷிப்ட். எட்டு மணிக்கு தான் கிளம்புவா ” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page