மயக்கம் -தயக்கம் 5

மயக்கம் -தயக்கம் 5

 

சந்தனா என்ற பெயரை சொல்லும்பொழுது மகனின் குரலில் தெரிந்த உற்சாகத்தை புரிந்து கொண்டது தந்தையின் மனது. நல்ல பெண் தான். திருமண வயது. தனது மகனுக்கு ஏற்ற ஜோடி பொருத்தம்.அழகி. குடும்ப பாங்கான பெண் தான். இப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் சரியாக இருக்கும். ஆனால், இங்கே இவன் அம்மா  நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டாளே! என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வேறு வழி இல்லை.சப்தமாக சொல்லிவிட யார் வாங்கிக்கட்டிக்கொள்வது?

மாலை ஏழு மணி சுமாருக்கு அப்பாவும் மகனுமாக பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு சந்தனாவின் வீட்டுக்கு வந்தார்கள். இன்னமும் லேசாக வெளியே வெளிச்சம் இருந்தது.ராகினி ட்யூஷன் சென்றிருக்க அப்போது தான் சந்தனாவின் அம்மா கீதா வீட்டுக்குள் நுழைந்து இருந்தார். அவருக்காக  தேனீர் தயாரித்துக்கொண்டிருந்த சந்தானா இவர்கள் இருவரும் வருவதை பார்த்தவள் வேகமாக வெளியே வந்தாள். 

 

” வாங்க மாமா, வாங்க டாக்டர் ” என்று அவள் வரவேற்றதை பார்த்து விட்டு கீதாவும் அறைக்குள்ளிருந்து வெளியே வர , ரங்கனுக்கு அலுவலகம் முடிந்து வீடு வந்து சேர்ந்து விட்டார். வெளியே பெரியவர்கள் பரஸ்பர விசாரிப்புகளுடன் பேச்சை தொடங்க சந்தனா எல்லோருக்குமான தேனீர் தயாரித்து எடுத்துவந்து தந்தாள்.

அதுவரை வேறு ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அரவிந்தனின் அப்பா,” ஏம்மா சந்தனா,என்னை மாமா ன்னு கூப்பிடுறே.என்னோட மகனை டாக்டர்னு சொல்றே.சின்ன வயசில அரவிந் அத்தான்னு  கூப்பிட்டது தானே.ஹாஸ்பிடல்ல டாக்டர் சரி.வீட்டுலையுமா? முறை வச்சு கூப்பிடலாம் தானே?”என்றுவிட்டார்.

சட்டென அங்கே ஒரு அமைதி . சந்தனாவால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. ” இல்ல..அது வந்து.. ஏற்கனவே ஹொஸ்பிடல்ல கூப்பிட்டு பழகிடுச்சு.அதோடு சின்ன வயசும் இப்ப்பவும் ஒன்னில்லையே மாமா. அப்போ அறியாத வயசுல கூப்பிட்டது.”என்று ஏதேதோ உளறி கொட்டினாள். அவளது பேச்சை ஆழ கவனித்த அரவிந்தனுக்கு அவள் மனதில் என்ன இருக்கிறது என்று புரியவில்லை.தனது பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு அவள் சிறுமி இல்லை என்று அரவிந்தனுக்கு நிச்சயம் தெரியும். அப்படியென்றால் என்னை பிடிக்கவில்லையா?என்ற கேள்வி அவன் மனதை பாரமேற்றியது.

அவனது கடன்,குடும்பம்,அம்மாவின் இவர்கள் குடும்பம் மீதான அலட்சியம் என்று எதுவுமே அவன் மனதில் பதியவில்லை. மனதுக்குள் பேசுவதாக நினைத்துக்கொண்டு,”என்னை நீ ஹாஸ்பிடல் தவிர வெளியே அத்தான்னு கூப்பிடு சந்து “என்றுவிட்டான்.

மொத்த குடும்பமும் அவனது வார்த்தைகளில் திகைத்துப் பார்க்க அரவிந்தன் அப்பா மனதுக்குள் மீண்டும் யோசனைகள். சுதாரித்துக்கொண்டவர் தனது கைகளில் இருந்த மகளின் திருமண பத்திரிக்கையை எடுத்து ஒரு தட்டில் பழங்கள்,குங்குமம் என்று வைத்து கொடுத்துவிட்டு, “ரெண்டு நாளும் குடும்பத்தோட வந்து கல்யாணத்தை நடத்திக்கொடுக்கணும் ” என்று விட்டு கிளம்பினார்.சூழ்நிலை கொஞ்சம் சுமூகமானாலும் சந்தனா மனதில் பொங்கி எழும் நினைவுகளை அலட்சியம் செய்துவிட அவளால் முடியவில்லை . திருமணம் அன்று காலையில் சென்று ஒரு அட்டென்ட்டேன்ஸ் போட்டு விட்டு வரலாம் என்று முதலில் யோசித்து வைத்திருந்தவள் இப்போது முடிவை மாட்டிக்கொண்டாள் ‘தான் திருமணத்திற்கு செல்ல வேண்டாம்’ என்று.

ஒருவேளை தான் திருமணத்திற்கு செல்லாமல் இருந்தால் அரவிந்தனால் தன்னை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தினால் தான் அவள் போகாமல் இருக்க முடிவு செய்ததே!

திருமணத்திற்கு முதல் நாள் நிச்சய தாம்பூலமும், மாலை ரிஸப்ஷனும் நடந்தது.அதற்க்கு ராகினியை வீட்டில் விட்டுவிட்டு ரங்கன் கீதா இருவரும் சென்றார்கள். அங்கே அரவிந்தனுடன் வேலை செய்யும் நிறையபேர் வந்திருந்தார்கள்.சில நர்ஸுகளும் கூட வந்திருக்க அங்கே அரவிந்தனின் மனமோ சந்தனாவை தேடியது. அவள் வரவில்லை என்றதும் அவளது பெற்றவர்களிடம் கேட்கக் கூட ஒரு தயக்கம்.

வெகு நேரம் அவள் வரக்கூடுமோ என்ற எண்ணத்தில் வாசல் பக்கமாக நொடிக்கொருமுறை அவன் பார்வை சென்று மீண்டது.ஒரு வினோதமான அவஸ்தை. மாலை வரவேற்பு தொடங்கியதுமே,”வீட்டுல பாப்பா தனியா இருக்கா. இன்னமும் சந்தனாவும் வீட்டுக்கு வந்திருக்க மாட்டா. நாங்க கிளம்புறோம்” என்றுவிட்டு சந்தனாவின் பெற்றவர்கள் கிளம்ப, அரவிந்தனின் அப்பாவோ,”நாளைக்கு முகூர்த்தத்துக்கு கண்டிப்பா வரணும்.சந்தனாவையும் கூட்டிட்டு வரணும்.காரணம் எதுவும் சொல்லக் கூடாது “என்று கேட்டுக்கொண்டார்.அவர் அருகில் நின்றிருந்த அரவிந்தனின் அம்மா ஒப்புக்கு கூட அழைக்கவும் இல்லை.பேசவும் இல்லை.அவ்வளவு ஏன் அலட்சிய பார்வையுடன் ,மருந்துக்கும் அறிமுக புன்னகையும் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தவரை கண்டவர்கள் ,”நிச்சயமா “என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.அரவிந்தனின் அம்மா தான் வைத்திருந்த தாம்பூலப் பையை கூட அவர்களிடம் தரவில்லை.அவர்களும் தாம்பூலம் வாங்காமலே கிளம்பிவிட்டார்கள்.இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அரவிந்தனின் அப்பாவும் அவனும் இல்லை.வந்திருக்கும் நண்பர்களை அரவிந்தனும், உறவினர்களை அவன் அப்பாவும் கவனிக்கவே நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தில் கல்யாணம் செய்வது பெண் வீட்டு முறை வேறு.வேலைகளுக்கு சொல்லவா வேண்டும்?

வீட்டுக்கு நுழைந்த கீதா ரங்கன் இருவருக்கும் மனதே சரியில்லை. மால் நேரம் சாப்பிட்ட ஒரு செட் போண்டாவும்,கப் தேநீரும் எங்கே சென்றது என்றே தெரியவில்லை. ராகினி சாதம் வைத்து துவையல் அரைத்து வைத்திருந்தாள். நிச்சயமாக மூன்று பேர் சாப்பிட முடியும். சந்தனாவுக்கு அரை ஆழாக்கு சாதம் குக்கரில் வைத்துவிட்டு மூன்று பேரும் சாப்பிட்டார்கள். அவர்கள் இருவரது முகமும் அங்கே ஏதோ சரி இல்லை என்று சொல்லியது. ராகினி எதுவும் கேட்கவில்லை.

சந்தனா வீடு வந்தவள் வழக்கம் போல் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டாள். உடல் அப்படி ஒரு சோர்வு காண்பித்தது. சில நர்ஸுகள் டாக்டர் வீட்டு விழாவுக்கு பரீஷனில் சென்று இருக்க அந்த வேலைகள் இவள் தலையிலும் விழுந்தது. முடித்து விட்டு வந்தவளுக்கு தூங்கினால் போதும் என்று இருந்தது. பெற்றவர்களிடம் சென்று வந்தார்களா என்று கூட விசாரித்திருக்கவில்லை.

மறுநாளும் அவர்கள் வீடு வழக்கம்போல் இயங்கியது.ராகி எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கு கிளம்பிவிட கீதாவும் பள்ளிக்கு கிளம்பிவிட்டாள். ரங்கனுக்கு மதியம் ஷிப்ட்.பத்து மணிக்கு சந்தனாவும் வேலைக்கு கிளம்பிவிட்டாள் .வீட்டில் ஒருவரும் அரவிந் வீட்டு திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை.

திருமண நாள் அன்றும் சந்தனா வரவில்லை என்பதை அரவிந்தனின் மனமும், அவர்கள் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை என்பதை அரவிந்தின் அப்பாவின் மனமும் குறித்துக்கொண்டது. அவ்வளவு வேலைகள் மட்டும் இல்லை என்றால் நிச்சயம் அரவிந் தனியே சென்று அமர்ந்திருப்பான் .அவனுக்கு சந்தனாவின் மனம் லேசாக புரிவது போல்தான் இருக்கிறது.

 

தனியாக அமர்ந்து கத்த வேண்டும் போன்ற ஒரு உணர்வு அரவிந்தை வெகுவாக தாக்கியது. சிறுவயதிலிருந்தது பழகிய பெண்.மனதிற்கு பிடித்தவள். இந்தக் கணம் அவளை திருமணம் செய்துகொண்டால் என்ன? என்றெல்லாம் பைத்தியக்கார தனமாக யோசித்தது மனது.தான் ஒரு மருத்துவன் .நிதானம் தவறக்கூடாது என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவே இல்லை. எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு புதியதாக திருமணம் ஆன தங்கையுடன் கிளம்பினான்.

முதலில் மணமக்கள் மாப்பிள்ளை வீடு சென்று பாலும் பழமும் சம்பிரதாயங்கள் முடிந்து மாலை பெண் வீடு வந்து சேர்ந்தார்கள். இரவு சடங்கு பெண் வீட்டில்தான் என்பதால் அதற்க்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்தது. மனம்  ஒன்றி எந்த வேலையும் செய்ய முடியாமல் அரவிந்தனின் மனம் தவித்தது. ஒரு சுதாரிப்பில்தான் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் மணமக்கள் இருவரும் இங்கேதான் இருக்கப் போகிறார்கள். தங்கையும் இன்னமும் ஒருவாரத்தில்  தேன் நிலவு செல்கிறாள்.பிறகு ஒரே மாதம் இந்தியாவில்.அதற்குப் பிறகு அவளது வாழ்க்கை கணவனுடன் நியூசிலாந்தில் தான். அது வேறு அரவிந்தனை அறுத்தது.இத்தனை வருஷங்களாக ஒன்றாக வளர்ந்த தங்கை. இனிமேல் அவளது வாழ்க்கை வேறு ஒருவருடன் என்றாகி விட்டதே! என்று வேறு எண்ணங்கள்.இரு வெவ்வேறான விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு மருகினான். இதென்னங்க குழப்பம் என்றால் ‘மனம் அப்படிதான்.ஒரே சமயத்தில் பல விஷயங்களை கொண்டு வந்து நம்மை கீழே தள்ளும்’ சரிதானே!

எப்படியோ நேரத்தை இல்லை,நாட்களை தள்ளியவனால் நிச்சயம் சந்தனாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை.தான் எந்த விதத்திலும் அவளை பாதிக்கவே இல்லை என்பதை அரவிந்தன் மனம் ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என்று ஆட்டம் காட்டியது. இரண்டு மாதங்களுக்கு முன்புவரை இவ்வளவு தாக்கம் நிச்சயமாக இல்லை. அவளை மருத்துவ மனையில் பார்க்கும் நேரத்தில் ஒரு சன்னமான சிரிப்புடன் கடந்து விடுவதும்,அவள் தனக்கு அஸ்சிஸ்ட் செய்ய வரும் நேரத்தில் பனி நிமித்தமான பேச்சுகளும் மட்டும் தான். எந்த நொடியில் இவ்வளவு வேகமாக இன்னமும் சொல்லவேண்டும் என்றால் விஷம் போல வேகமாக மனத்திலும் மூளையிலும் வேகமாக ஆக்கிரமிப்பு செய்துகொண்டாள் என்றெல்லாம் தெரியவில்லை. இப்போதெல்லாம் அவளது முகம் பார்க்காமல் இருப்பதும்,குரல் கேட்காமல் இருப்பதும் பெரும் அவஸ்த்தையாக போனது.

ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தனாவுக்கு ட்யூட்டி வரும் . ஆனால், சிறப்பு மருத்துவனுக்கு அன்று விடுமுறை. திங்கள் கிழமை இவன் மருத்துவ மனை செல்லும் பொழுது அவளுக்கு விடுப்பு நாளாக இருந்தால் மருத்துவனுக்கு காய்ச்சல் கண்டுவிடும். இதுதான் காதலா என்று அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.பிடித்திருக்கிறது.இந்த ஆழமாக கிழிக்கும் உணர்வு அவனை இன்னமும் ஆழமாக அவளை நினைக்க வைக்கிறது. என்ன அழகு! நேர்த்தி!உடலமைப்பு!என்று அவளை சொட்டு சொட்டாக ரசிக்கும் மனதையும்,அதற்கு ஏற்றாற்போல சதிசெய்யும் ஹார்மோன்களையும் கட்டுக்குள் வைப்பதே பெரும்பாடு.

தங்கை கிளம்பிப்போன பிறகு வீட்டில் இருக்க பிடிக்காமல் இன்னமும் ஒருநாள் இருக்கும் விடுப்பை விடுத்து மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான். எப்படியாவது சந்தனாவிடம் நேராக பேசியே விடவேண்டும் என்று துடித்தது அவன் இதயம்.

ஆனால் அவன் மருத்துவ மனைக்கு சென்ற பொழுது அவள் அங்கு இல்லை.  பெரிய மாநிலக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலுக்காக இவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்க அவருக்கென சிறப்பு மருத்துவப்பிரிவு கவனிக்க நியமிக்கப் பட்டிருந்தது.இருப்பது நான்கு மணி நேரமும் கண்காணிப்பதற்காகவென மருத்துவர்களும்,சிறப்பு செவிலியர்களும் அடங்கிய அந்தக் குழுவில் சந்தனாவும் உண்டு. அந்த மனிதர் மீண்டும் வீட்டுக்கு செல்லும் வரை செவிலியர்கள் வீட்டுக்கு செல்வது கொஞ்சம் கடினம் தான் என்னும்பொழுது சந்தனாவை அரவிந் பார்ப்பது எப்படி?

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page