மயக்கம் -தயக்கம் 6

தனது மனதை அடக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எப்படியாவது சந்தனாவை ஒருமுறையாவது தொலைவிலிருந்தே பார்த்துவிட வேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டான் அரவிந்தன்.ஆனால் பாவம் அதற்க்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அவன் விடுப்பு எடுத்திருந்த நேரம் அவனிடம் மட்டும் பிரத்யேகமாக தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பெற்றவர்கள் இவனுக்காக காத்திருக்க மருத்துவமனைக்கு வந்து மூன்று நாட்கள் அவனுக்கான நேரம் அவனுக்கென்று  இல்லை.அவ்வளவு பரபரப்பு.போதாத குறைக்கு சீசனால் வரும் சளித்தொந்திரவு மற்றும் ஜுரம் என்று குழந்தைகள்.

மருத்துவமனையே ஏதோ இரண்டாக பிளவு பட்டது போலத்தான் இருந்தது. அந்த அரசியல் பிரமுகருக்க்காக நல்லவேளையாக மருத்துவ நிர்வாகம் அதன் அடுத்த தெருவில் இருக்கும் வி ஐ பி கதவை திறந்து வைத்திருந்தது. இல்லாவிட்டால்

மருத்துவர்களை கூட பரிசோதித்துதான் உள்ளே அனுப்புவார்கள்.

ஒருவழியாக அந்த வாரம் முழுவதும் குழந்தைகளுடன் பிசியாக அவனது நேரம் போனது.வாரக்கடைசியில் எட்டாம் தளத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அந்த அரசியல் பிரமுகர் உடல்நிலை நன்றாகத் தேறி விட்டது.தினமும் வீட்டிலேயே வந்து பார்ப்பதற்கு என்று ஒரு மருத்துவரையும், காலை -மாலை என்று இரண்டு செவிலியர்களையும் மருத்துவ நிர்வாகம் அவருடன் அனுப்பி வைத்தது. அந்த தளத்தில் வேலை செய்த செவிலியர்கள் ஆறு பேருக்கும் மருத்துவமனை இரண்டு நாட்கள் ஓய்வுக்கென்று விடுப்பு கொடுத்து அனுப்பியும் வைத்தது.

வார கடைசியில் விடுமுறை என்பதால் சந்தனா தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பி சென்றுவிட்டாள்.அவளுக்கு அவ்வளவு மனசோர்வு.ஒருவாரமாக மருத்துவமனை வாசம் அவளை பிழிந்து எடுத்தது.ஏற்கனவே கோவிட் சமயத்தில் வீட்டுக்கே வராமல் மருத்துவமனையில் இருந்த நாட்களை இந்த பத்து நாட்கள் அவளுக்குள் மீண்டும் கடத்தியிருந்தது.

சந்தனாவை பார்க்கவென்று ஒருவழியாக மனதில் திடத்தைக் கொண்டுவந்து அவள் வீட்டிற்கு சென்று பார்த்த அரவிந்தனுக்கு கிடைத்தது ஏமாற்றமே!  பூட்டியிருந்த வாயில் கதவுகள்தாம் அவனை வரவேற்றது.

திங்கட்கிழமை காலை வழக்கம்போல் சந்தனா கிளம்பி மருத்துவமனைக்கு வந்துவிட்டிருந்தாள். அன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு அவளுக்கு காலை நேர பணி. அதுவும் இதய நோய் பிரிவில் சத்திர சிகிச்சை முடிந்து வார்டிற்கு மாற்றப் பட்டிருக்கும் நோயாளிகளை கவனித்தாக வேண்டும்.   நிற்கக்கூட நேரமில்லாமல் நேரம் கழிந்தது.நடுவில் ஒரு முறை மட்டும் அவளது தரிசனம் கிடைக்கப் பெற்றான் அரவிந்தன். அப்போதும்  மருத்துவனுடன் இன்னமும் சில மருத்துவர்கள் நின்று பேசிக்கொண்டிருக்க இவனால் அவலைம்நோக்கி ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியவில்லை.அவளும் இவனை நோக்கி பார்ப்பது கூட கிடையாது.

மனதளவில் அவள் தெளிவாகத் தான் இருக்கிறாள். அதனாலேயே  அவனை விட்டு நகர்ந்து நிற்பதும் அவனை கடந்து செல்வதும் அவளுக்கு எளிதாக இருக்கிறது. மீண்டும்  சந்தனா அரவிந்தன் கண்களில் படவே இல்லை. மருத்துவன் அவளை மருத்துவமனை வளாகத்தில் கூட பார்க்க முடியவில்லை. அவள் வீட்டுக்கு சென்று பார்க்கவும் தயக்கம். இப்படியே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். பிறகுதான் தெரிந்துகொண்டான் ,சந்தனா பயிற்சிக்காக என்று அந்த மருத்துவமனையின் தலைமை கட்டிடத்திற்கு சென்று இருக்கிறாள் என்று . அவளுக்காகவே காத்திருப்பு.

மாதங்கள் மூன்று சென்ற வேகம் தெரியவில்லை.அரவிந்தனின் தங்கை கூட கணவனுடன் நியூசிலாந்து சென்றாகிவிட்டது. அவர்கள் வீட்டில் இப்போது மூன்று நபர்கள்தாம்.காலையிலே அராவிந்தனின் அப்பாவும் அவனும்  வேலைக்கு சென்று விட்டார்கள் என்றால் வீட்டில் அரவிந்தனின் அம்மா மட்டும்தான். அந்தத் தனிமை அவரை துன்பம் செய்தது.

வீட்டில் கணவரிடம் அரவிந்தனின் திருமணம் பற்றி நச்சரிக்க ஆரம்பித்தார். அரவிந்தனின் மனம் தெரிந்தது அதனாலேயே அவனின் அப்பா தனது மனைவிக்கு எந்த பதிலும் தராமல் மௌனம் காத்தார்.ஒருசில முறை சொல்லவும் செய்தார்,” அவனுக்கு கல்யாணம் செஞ்சாலுமே மருமக பொண்ணு வேலைக்கு போனா நீ தனியாத்தான் இருந்தாகணும். அதோட அவன் அவனுடைய ஹாஸ்பிடலுக்கும் மருமகளோட ஆஃபீசுக்கும் சீக்கிரமா போறா மாதிரி வீடு பார்த்துட்டு போனா அப்போவும் நாம ஒன்னும் சொல்ல முடியாது. கொஞ்சநாள் அமைதியா விடு.இப்போது தான பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு அனுப்பி வச்சிருக்கோம்.கடன் இருக்கு.இன்னமும் இழுத்து விட்டுக்க முடியாது.”

கணவர் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தலால் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார்.

மனைவியிடம் ஆயிரம் விஷயங்கள் சொல்லி விஷயத்தை ஆறப்போட்டாலும் மகனிடம் பேச அவர் தயங்கவில்லை.” அரவிந்த், அந்த பொண்ணு சந்தனாவை உனக்கு பிடிச்சிருக்குனு தெரியும்.அவகிட்டே உன்னோட விருப்பம் பற்றி சொன்னியா?”

மகனிடம் சுத்தமாக பதில் இல்லை. இன்னமும் சொல்லவில்லை என்று தலையை மட்டும் ஆட்டினான். பெரியவருக்கு ஆயாசமாக இருந்தது. இந்தக்காலத்து பிள்ளைகள் ஒருபக்கம் வெகு அவசரம் இல்லையென்றால்  வெகு நிதானம் என்று மனதிற்குள் நொடித்துக்கொண்டார். அவளிடம் இன்னமும் பேசவில்லை என்றால் இந்தப் பையன் எப்போது பேசி, அவள் சம்மதம் சொல்லி, திருமணம் செய்ய எப்படியும் சில வருஷங்கள் கடந்துவிடும் என்றுதான் அவருக்கு தோன்றியது.

“எப்போ சொல்லுறதா உத்தேசம் அரவிந்த்?உங்கம்மா ஏற்கனவே என்கிட்ட உன்னோட கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க சொல்லுறா. இப்போதைக்கு சமாளித்து வச்சிருக்கேன்.எவ்ளோ நாள் தாங்கும்?

நீ சீக்கிரமா சந்தானாகிட்டே பேசு. அவளோட சம்மதம் வாங்கு. அவளோட பேரன்ட்ஸ்கிட்ட நா பேசறேன் “என்று நிறுத்தியவரை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தான் அரவிந்த்.

மகனது நிலைமை புரிந்தவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. சந்தனாவுடன் சாதாரண பேச்சுக்கு கூட வழியில்லை.இப்போதெல்லாம் அவள் வருகிறாளா என்று கூட தெரியாது. அரவிந்துக்கு முன்பெல்லாம் உதவிக்கென்று ரொட்டேஷனில் வருவாள்.இப்போதெல்லாம் வேறே யாராவதுதான் வருகிறார்கள். சந்தனாவை ஸ்பெஷல் கேர் என்று அந்த மருத்துவமனையில் இருக்கும் பிரிவுக்கு நியமித்திருக்கிறார்கள். அங்கே வருபவர்கள் எல்லோரும் வி ஐ பி கிரேடில் இருப்பவர்கள்தான்.

நீண்ட நேர யோசிப்பிற்குப் பிறகு அரவிந்தன் மனதில் ஏதோ ஒரு திட்டம் உருப்பெற்றது.”உன்னிடம் பேசவேண்டும் “என்று சந்தனாவுக்கு ஒரு வாட்சாப் தட்டிவிட்டு  அங்கிருந்து கிளம்பினான்.அவனது அப்பா கிளம்பிச் சென்று அரைமணிநேரம் ஆகிவிட்டது. சந்தனா அரவிந்தனின் செய்தியை படித்தவளுக்கு மனதில் நெருடல். தன்னிடம் பேசுவதற்கு டாக்டருக்கு என்ன விஷயம் இருக்க முடியும் ?

என்ன விஷயமாக இருக்கக்கூடும் என்று அவளுக்குள் ஒரு ஊகம் இருந்தது. அதைத்தொடர அவளுக்கு விருப்பம் இல்லை.இத்தனை  நாட்களின் கண்ணாமூச்சி இன்று முடிவுக்கு வந்து விடும் என்று மட்டும் ஒரு ஆஸ்வாசம். தான் திருமண வாழ்க்கைக்கு இப்போது தயார் என்று அவள் நினைக்கவில்லை.அவளது தலைமீது நின்றுகொண்டிருக்கும் ராகிணிக்கான கடமை. இருவருக்கும் ஏறத்தாழ பதினாறு வருஷங்கள் இடைவெளி உண்டு. பெற்றவர்களுக்கும் கொஞ்ச வருஷங்களில் முதுமை எட்டிப்பார்க்கும் .அப்போது ராகினியை கரை ஏற்றும் பொறுப்பை யார் மீது சுமத்த முடியும்?

தன்னை திருமணம் முடிப்பவர் ராகினியை ஏற்கவேண்டும் என்று சொல்லவோ,நிர்பந்திக்கவோ முடியாது.அது சரிவராது. அதிலும்  டாக்டர் அரவிந்தனின் நிலையில் அவரிடம் எதைச்சொல்லி எப்படி புரியவைக்க முடியும்? முதலில் அடுத்தவரிடம் என்னுடைய பாரத்தை சேர்ந்து நீயும் சுமக்க வேண்டும் என்று கேட்பது கூட பிழையல்லவா?

யாருக்கும் சுமையாகவோ, கடமையாகவோ இருக்க தனக்கு விருப்பம் இல்லை என்று எப்படி சொன்னால் டாக்டருக்கு புரிய வைக்க முடியும் என்றெல்லாம் அவளுக்குள் தீவிர யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக என்ன வருகிறதோ அதற்கு தகுந்தாற்போல பேசி புரியவைக்கலாம் என்று முடிவு செய்து கொண்டவள் மாலை ஷிப்ட் முடிந்த பிறகு ஏழு மணி அளவில் அருகில் இருக்கும்  ரெஸ்டாரெண்டில் பார்க்கலாம் என்று பதில் அனுப்பி வைத்தாள். அவளால் வேலையில் தனது முழு கவனத்தையும் திருப்பவே முடியவில்லை.தலைவலிப்பது போல் இருந்தது.

மாலை வேலை நேரம் முடிந்தவுடன்  நர்ஸ் ஸ்டேஷனுக்கு சென்று முகம் கழுவி நெற்றியில் பொட்டு இட்டுக்கொண்டவள் முகத்திற்கு வேண்டுமென்றே அன்று பவுடர் பூச விடுத்தாள். அப்போதும் முகம் பளிச்சென்று இருப்பதை பார்த்து அவளுக்கு ஆயாசம் தான்.இந்த அழகுதானே மனிதனை என்னவெல்லாமோ செய்ய தூண்டுகிறது என்று அறவே வெறுத்தாள். யாரும் அவளுடைய மன அழகைப் பற்றிய கவலை கொள்வதில்லை.

இன்று காலையில் கூட ஸ்பெஷல் கேரில் இருப்பவருடைய உறவினன் என்று வந்தவன் இவளிடம் எவ்வளவு நேரம் கடலை வறுத்தான். அவனிடம் முகம் திருப்பவோ, கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பதோ கூடாது.அதே சமயம்  வேலைநேரத்தில் அதிகமாக யாரிடமும் பேசினால் மனிதவளத்துறையிலிருந்து கூப்பிட்டு விடுவார்கள்.

காலையில் உடுத்திக்கொண்டு வந்திருந்த ஆகாய நீல புடவையை உடுத்திக்கொண்டவள் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அங்கே ரெஸ்டாரெண்டில் மருத்துவன் இன்னமும் வந்திருக்கவில்லை. தனக்கென்று ஒரு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தாள். பத்து நிமிஷம் காத்திருந்த பிறகு ஜூஸ் வந்தது.அதே நேரம் அரவிந்தும் வந்துவிட்டான்.

பரஸ்பர அறிமுகப்புன்னகை. சந்தனாவின் கையில் இருக்கும் கோப்பையை பார்த்தவன் தனக்கும் அதே போல ஒரு பழச்சாறை தருவித்துக்கொண்டான்.இருவருக்கும் வெகு நேரத்திற்கு பேச நா எழவில்லை.ஏதோ ஒன்று தொண்டையை கவ்விப் பிடிப்பது போன்ற உணர்வு.

கொஞ்சநேரம் பொறுத்துப் பார்த்த சந்தனா தான் மீண்டும் ஆரம்பித்தாள்.” டாக்டர்,நாம இங்கே வந்து ரொம்ப நேரம் ஆச்சு.வீட்டுல லேட் ஆனா என்னய தேடுவாங்க.இன்னமும் போன் பண்ணி சொல்லல. நா கிளம்பவா?”

அவளது கேள்வியில் திடுக்கிட்டவன்’இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது’ என்று தனது மனதை திறக்க ஆரம்பித்தான். வார்த்தைகளை கோர்த்து நிதானமாக சொன்னவனை உணர்வற்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் சந்தனா.

அவளிடம் பேசும் வார்த்தைகளுக்குக் கூட வலிக்காமல் தனது காதலை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அரவிந்தன். அவளுக்கு மனதில் சாரல். இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால்,அவனுக்கு உடன்படவும் முடியாது. அவன் சொல்லி முடிக்கும் வரை நடுவில் இடையிட்டு ஒரு வார்த்தை கூட பேசவில்லை பெண். முகம் ஏனோ கொஞ்சம் சோகத்தை காண்பித்தது. உணர்வுகளை எவ்வளவுதான் மரக்க செய்யமுடியும்?

“உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முடியுமா டாக்டர் ?”—சந்தனா.

“நிச்சயமா முடியும் சந்தனா. அப்பாவுக்கு ஏற்கனவே தெரியும். என்னோட தங்கச்சி கல்யாண பத்திரிக்கை வைக்க உங்க வீட்டுக்கு வந்தோமே!அப்பாவுக்கு சம்மதம் தான். அம்மாகிட்டே பேசணும் .”—அரவிந்

“கொஞ்சம் நிதானம் டாக்டர்.என்னைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? உங்க சின்ன வயது தோழியா?இங்கே வேலை பாக்குற ஒரு நர்ஸா? பார்வைக்கு அழகா இருக்குற ஒரு பெண்ணா?உங்க அப்பாவுடைய நண்பரின் மகளா?

இதுக்கும் மேல எனக்கான வாழ்க்கையும் நாட்களும் உண்டு சார்.அவசரப்பட்டு என்னை கலியாணம் செஞ்சுக்க நினைக்கறது தப்பு. அதை விடுங்க. என்னோட ரோகிணியின் வாழ்க்கை,அவளோட வளர்ப்பு எல்லாமே என்னுடைய கடமை.உங்க வாழ்க்கை முறையும், கடமைகளும் எனக்கு நல்லாவே தெரியும். என்னால என்னோட சம்பளத்தை உங்ககிட்டே குடுக்க முடியாது.வேலைக்கு முழுக்கு போடவும் முடியாது.உங்கம்மா என்னோட கமிட்மெண்டை ஒத்துக்கவும் மாட்டாங்க.அவங்களுக்கு எங்க குடும்பத்தை பார்த்தாலே ஒரு இளக்காரம்.ஆரம்பம் முதலே.இதெல்லாம் சரி வராது. சோ இதுக்குமேல என்னோட நிலைமையை வெளிப்படையா சொல்ல முடியாது.”

அவளிடம் அவளைப்பற்றிய எந்த விளக்கங்களும் இல்லை.முடியாது என்பதை மட்டும் சில வார்த்தைகளை கோர்த்து சொல்லிவிட்டாள். அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது என்பதை அவள் கண்களே சொல்ல, வார்த்தைகளோ முடியாது என்பதற்கான காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தது.

இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது தான் அவனுக்கு. அதைக் கேட்கும் நிலையில் பெண் இல்லை. விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று அவனுக்குள் ஒரு எண்ணம். அவள் சொன்ன இடைப்பட்ட காலம் என்பது அவன் மனதில் பதியவே இல்லை, அல்லது வாகாக விடுத்து விட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page