மயக்கம் – தயக்கம் 8
இரவு தூங்கும்முன்பு ஒருமுறை மகளைக் காணவென்று சென்றவனுடன் தயா கொஞ்சநேரம் விளையாடினாள்.’ அப்பா’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு குழந்தை அவனை சுழற்றித்தான் போட்டாள். குழந்தையின் அப்பன் எனும் ஸ்தானம் அவனது அலுவலக நிலையை விட,சமூக அந்தஸ்தை விட அவன் விரும்பும் ஒன்று.
இன்றைய திகதியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவின் சமூக நிலையை பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் அப்பா ..அப்பா என்று உருகும் இந்த சின்ன உயிர் தான் அவனது தினசரி நாளை நிருணயம் செய்கிறது என்பது வெளியில் எத்தனை பேருக்குத் தெரியும்?
விளையாடியபடிக்கே மருந்துகளின் உபயத்தில் உறங்கியும் போனாள். தனது அறைக்கு வந்தவனுக்குத்தான் தூக்கம் என்ற வரம் வாய்க்கப் பெறவில்லை. வெகுநேரம் உறக்கம் வராமல் தனது மடிக்கணினியை உயிர்பித்தவன் ஏதேதோ ஞாபகங்கள் உந்தியவனாக அவளது முகநூல் பக்கத்துக்குள் நுழைந்தான். அங்கே அவள் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்தாள்.
ஏனோ அவளும் சரி ,இவனும் சரி பரஸ்பரம் தங்களது முகநூல் பக்கத்திலிருந்து மற்றவரை நீக்கவில்லை. மற்றவர்கள் வாழ்வில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வமாக இருக்கலாம். முன்பெல்லாம்,அப்படியென்றால் அவளோடு சேர்ந்து வாழ்ந்த காலங்களில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவள் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவாள்.
ஆரம்பத்தில் “இதிலெல்லாம் என்ன இருக்குடா..நம்ம பிரைவசி போயிரும் “என்று சொல்லிப் பார்த்தவன் பிறகு அவளது ஆர்வத்தை பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டான்.அதைவிட ரசிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டான்.
அவள் தனது இக்காலத்துடன் எங்கேயோ வெளியே சென்றிருக்கிறாள் போலும்.இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டிருந்த புகைப்படங்கள் நிரம்பி வழிந்தது.எங்கே எடுத்தது எண்டு பார்த்தான் ‘ கேப்ச்சர் ஜெர்மன் ‘என்று இருந்தது. விஜயராகவனுக்கு கொஞ்சநஞ்சம் வருவதாக இருந்த தூக்கமும் போனதுதான் .கணினியை மீண்டும் அணைத்துவிட்டு படுத்துவிட்டான்.விடியும் நேரத்தில் கண்கள் இழுத்துக்கொண்டு சென்றது. மகள் அருகில் இருக்கும்பொழுது தூங்குவது இவ்வளவு கடினமாக இருந்தது இல்லை.
அரவிந்த் மருத்துவமனையிலிருந்து கிளம்பும்நேரத்தில் சந்தனா வெளியே வருவதை பார்த்தவன் அவளருகே தனது காரை கொண்டுபோய் நிறுத்தினான். சந்தனாவுக்குள் குழப்பம்.இங்கே யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று ஒருபுறம். மறுத்தால் மருத்துவருக்கு தலையிறக்கமாக இருக்கும் என்று கிடைத்த நொடிகளுக்குள் அத்தனை யோசனைகள்.அவற்றை அவளது முகமும் கூட பிரதிபலித்தது. உள்ளிருந்து முன்பக்க கதவை திறந்து விட்டான் அரவிந்.
வெகு நாட்களாக அவன் காத்துக்கொண்டிருந்த சந்திப்பு.இன்று விடுவதாக இல்லை. நேரே அண்ணாநகர் டவருக்கு சென்றவன் அங்கே இருந்த பூங்கா அருகில் காரை நிறுத்தினான்.
மருத்துவன் சொன்னவற்றை நிதானமாக கேட்டவள், ” உங்க அம்மாகிட்ட பெர்மிஷன் கேளுங்க.பிறகு பேசுவோம் ‘ என்று முடித்துவிட்டாள். எதை சொன்னால் அரவிந்தனின் வாயை அடைக்க முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தாள் சந்தனா.
அரவிந் மனதில் பெரிய தாக்கம்.அம்மா சம்மதிக்க மாட்டாள் என்று தெரியும்.”அப்போ உங்கம்மா சம்மதம் சொல்லலைன்னா இந்த காதலோட எதிர்காலம் என்ன?அவளை உங்கம்மாவை மீறி கல்யாணம் செஞ்சுப்பியா?அந்த தைரியம் உனக்கு இருக்கா?”என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்விக்குத்தான் அவனிடம் பதில்கள் இல்லையே!
மீண்டும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான் அரவிந்.சந்தனா ஒன்றுமே பேசவில்லை. அவளுக்கு அவனிடம் பேசுவதற்க்கென்று ஒன்றுமே இல்லை. சந்தனா வீட்டில் அவளை இறங்கிவிடும் சமயத்தில் அவளது தங்கை ராகினி அங்கே வந்து விட்டாள். அவளுக்கு ஏனோ ஆரம்பம்முதலே அரவிந்த் வீட்டிலிருந்து யாரை பார்த்தாலும் ஒதுங்கி சென்று விடுவாள்.இன்றும் துள்ளிக்கொண்டு வாசலுக்கு ஓடி வந்தவள் அரவிந்தனின் காரை பார்த்தவுடன் பிரேக் போட்டு அங்கேயே நின்று விட்டாள்.
மனதில் எழும் சில உணர்ச்சிகளுக்கு காரணம் எதுவும் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாதே!
வீட்டுக்குள் நுழையும் சந்தனாவையே ஏக்கப்பார்வை பார்த்தபடி காரைக்கிளப்பிகொண்டு தமது வீட்டை நோக்கி காரை வேகமாக செலுத்தினான் ‘எதிலிருந்தோ தப்பிப்பவன் போல ” வீட்டுக்குள் நுழைந்த சந்தனாவோ திரும்பியும் இவனை பார்க்கவில்லை. ராகிணியுடன் பேசிக்கொண்டே வீட்டுக்குள் சென்று மறைந்தும் போனாள். அவளுக்கு தனது ராகினியை பார்த்த பிறகு உலகில் இருக்கும் அத்தனை விஷயங்களும் மறந்துதான் போகும். அந்தப் பிணைப்புக்குப் பின்னால் இருக்கும் வலியும் அதன் கதையும் எப்பேர்பட்டவரையும் அழ வைத்துவிடும்.
ராகினியை பெற்றதற்கு,இந்த சுற்றுப்புறத்தில் கீதாவையும் அவளது கணவரையும் கேலியாகப் பேசாதவர்கள் வெகு சொற்பம்.”ஏன்டா ,கொஞ்ச வருஷம் வெயிட் பண்ணா உன்னோட பெண்ணுக்கே கல்யாணம் செஞ்சு பேத்தியை பார்த்திருக்கலாம்.இப்போ இதென்ன அசிங்கமா இத்தனை வருஷம் கழிச்சு உன்னோட ஆண்மையை நிருபிச்சே ஆகணும்னு?”
இந்த மாதிரி கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் இருவரும் திணறிய நாட்கள்? இன்னமும் அக்கா தங்கை இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் பொதுவில் கொஞ்சம் வெளிப்படையான கேலியில் பார்க்கப் படும் ஒன்றாகவேதான் இருக்கிறது.அந்தக் குடும்பம் அதை பழகிக் கொண்டார்கள்.
எத்தனையோ வீடுகளில் எத்தனையோ விஷயங்கள் பார்க்கப்படாமல் அவர்களுக்காக காத்திருக்கும் பொழுது எதற்க்காக அடுத்த வீட்டு வம்பு?இதைக் கேட்டால் அதற்கும் நம்மை வைத்து வம்பளக்கும் வேலை இல்லாத கூட்டம் என்று ஒதுக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அப்படி ஒன்றும் சந்தனாவின் பெற்றவர்கள் மிகவும் வயதானவர்கள் இல்லை .இருவரும் இன்னமும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியும் அவர்களை நோக்கி ஆயிரம் கேள்விகள் வீச படுகிறது.ஒருவேளை இயலாமையில் வந்த பொருமலாக இருக்கலாம் .இந்த வேலை இல்லாத வம்புக்கூட்டத்தில் அரவிந்தனின் அம்மாவும் உண்டு.
சந்தனாவின் குடும்பம் மீண்டும் தங்களது சொந்த வீட்டுக்கு வந்த புதிதில் ராகினிக்கு எட்டு வயது இருக்கும். கீதா இரண்டு பெண்களையும் அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சங்கட ஹர சதுர்த்திக்கு என்று சென்றிருந்தார். அப்போது அங்கே தனது தோழிகளுடன் வந்திருந்த அரவிந்தனின் அம்மா கேட்ட கேள்விகளை பட்டியல் போட்டால் அருவருப்புதான் மிச்சமாக இருக்கும்.
இதையெல்லாம் அரவிந்தனிடம் சொல்லி புரியவைக்க சந்தனாவால் முடியாது.அந்தக் குடும்ப சூழ்நிலைக்குள் நுழைந்தால் நிச்சயம் இவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அன்றே கீதா அரவிந்தனின் அம்மாவுக்கும் அவரது தோழிகளுக்கும் சரியாக கொடுத்துவிட்டார்.அதுவும் சிரித்துக்கொண்டே!
இதோ இன்று சந்தனாவின் அருகில் ராகினி .அவளது அறிவியல் பாடபுத்தகத்துடன் அமர்ந்து கொண்டு அன்றைக்கு பள்ளியில் நடத்தியிருந்த பாடங்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டாள் சந்தனா. இது அவர்கள் இருவருக்குமான நேரம்.அந்நியருக்கு இடமில்லை.
இருவருமாக பாடங்களை படித்துக்கொண்டிருக்க கீதாவும் ரங்கனும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இதுபோல நடப்பது உண்டு.கீதா தங்களது அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அடுக்களைக்குள் சென்றார்.பிளாஸ்கில் இவருக்கான தேநீர் இருக்க அதை இரண்டு கோப்பைகளில் நிரப்பி கணவனுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு மற்றொன்றை தான் எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.
பள்ளியில் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே வேலை செய்யும் ஒரு ஆசிரியை தங்கள் மகன் மருத்துவராக வேலை செய்யும் மருத்துவமனையில் அனுபவம் உள்ள நர்ஸுகள் தேவைப்படுவதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அதோடு கீதாவிடமும் இதைப்பற்றி பேசினார்.
“நல்ல சம்பளம் டீச்சர். ரெண்டு வருஷம் அங்கே செண்டு வேலை செஞ்சுட்டு வந்தான்னா கையில நல்ல இருப்பு கூடும். மேக்கொண்டு பிடிச்சிருந்தா அங்கேயே கூட செட்டில் ஆகிடலாம்.என்னோட பையன் அங்கே போய் ஆறு வருஷம் ஆகுது.கல்யாணம் முடிஞ்சு அங்கேயே செட்டில் ஆகிட்டான். யோசிச்சு சொல்லுங்க.நா என்னோட பையன்கிட்டே பேசறேன் “என்றும் சொல்லியிருக்க அதைப் பற்றி தனது கணவரிடம் பேசியிருந்தார் கீதா.இப்போது மகளிடம் இது பற்றி எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம்.
ரங்கனுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. மகள் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனாலும் அவருக்கு சந்தோசம் தான். மகள் ஒப்புக்கொள்ள வேண்டுமே!ராகினியை விட்டு அவள் செல்வது நடக்காத விஷயம். பெற்றவர்கள் இருவருக்குமே தெரியும். ஆனாலும் இவளுக்கென ஒரு வாழ்க்கை, துணை இதை பற்றியெல்லாம் யோசிக்காமல் இருக்க முடியுமா?ஏற்கனவே பலமுறை திருமணம் பற்றி பேசி,வீட்டில் அமைதி கெட்டுப்போனதுதான் மிச்சம்.
இப்போது இதையாவது முயன்று பார்க்கலாமே!என்று மனதின் ஓரத்தில் இருக்கும் ஆசை.மகளின் வாழ்க்கை மீதான அக்கறை. சந்தனாவும் ராகினியும் அன்றைய படிப்பை முடித்தபிறகு சந்தானா தனது அறைக்குள் நுழையவும் கூடவே உள்நுழைந்த அம்மாவை கேள்வியாய் பார்த்துவைத்தது சந்தனாவின் கண்கள்.
ஒருவாறு தன்னை ஒருநிலை படுத்தி கீதா விஷயத்தை சொல்லி முடிக்கவும்,சந்தனாவின் வாயிலிருந்து வந்தது ஒரே பதில் தான்.”நோ “கண்டிப்பாக மகள் இந்த பதிலைத்தான் தரக்கூடும் என்று தெரிந்துதான் கீதா கேட்டார்.
அவர் சொன்ன நியாயங்களை காதில் கூட ஏற்றிக்கொள்ள சந்தனாவுக்கு விருப்பம் இல்லை. கீதாவும் விடுவதாக இல்லை.”ஏன் நோ சொல்றே? ஒண்ணு வெளிநாட்டுக்கு போய் காசு சம்பாரிக்குற வழிய பாரு. வயசான காலத்துல நிம்மதியா உக்கார்ந்து சாப்பிடலாம்.எவ்ளோ வருஷம் பிரைவேட் ஹாஸ்பிடல்ல வேலை செய்ய முடியும்?வயசான வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அதுக்கு பதிலா வெளிநாட்டுக்கு கொஞ்ச வருஷம் போய் வேலை செஞ்சுட்டு வரலாம். அப்படி இல்லையா…பிரச்சனை இல்ல, சந்தனாவை கரை சேக்கவும் எங்களுக்கு முடியும். ராகிணியை நல்லவிதாம வளர்க்கவும் எங்களால முடியும். நானும் அப்பாவும் எங்க வயசான காலத்தை ஓட்டுற அளவுக்கு திராணி இருக்கு.நீ கல்யாணம் செஞ்சுக்குற வழிய பாரு.உனக்குன்னு ஒரு குடும்பமாவது அமைஞ்சா நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருப்போம்.”
அம்மா சொன்ன விஷயங்கள் இரண்டுமே அவளுக்கு பிடித்தமானதாக இல்லை.ஆனால்,இப்போதைக்கு அம்மாவிடம் ஏதாவது பேசினால் பிரச்சனை முடியாது என்று யோசித்தவள், “இன்னிலேந்து ஒருவருஷம் டைம் குடுங்க.என்னோட வாழ்க்கை நல்லவிதமா செட்டில் ஆகிடும். அதுவரைக்கும் என்கிட்டே வேறே எதுவும் பேசாதீங்க “என்றுவிட்டாள்.
ஏதோ மகள் இந்த அளவுக்காவது இறங்கி வந்து பதில் சொல்கிறாளே என்று மனதை தேற்றிக்கொண்ட கீதா சந்தனாவின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார். மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்களது அறைக்குள் சென்றுவிட்டார் ரங்கன்.
இரவுக்கான உணவை சமைத்துவிட்டு ,”ஏங்க சீக்கிரம் சாப்பிட வாங்க.உங்ககிட்டே பேசணும் “என்று கணவனை அழைத்த கீதா ராகினியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார். ராகினி அரை தூக்கத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு சோறு எடுத்து ஊட்டி விட்ட கீதாவுக்கு அவரையும் அறியாமல் பெருமூச்சு எழுந்தது.
