அத்தியாயம் : 01
சென்னையில், அந்தப் புறநகர் பகுதி அக்டோபர் மாத மழையின் பிடியில் சிக்கியிருந்தது…
ஒரு காலத்தில் வண்ணங்களின் சரணாலயமாக, கலைகளின் சொர்க்கமாகத் திகழ்ந்தது அந்தப் பெரிய பங்களா வீடு. வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் ஆகாஷின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் உயிரோட்டத்துடன் பேசிக் கொண்டிருக்கும்; தூரிகைகளின் முனையில் அவன் தீட்டிய ஒவ்வொரு நிறமும் ஒரு கதையைச் சொல்லும். ஆனால், இன்று அந்த வீடு ஒரு மௌனக் கல்லறையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது பார்ப்பவருக்கு…
தடிமனான திரைகளால் அறையின் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்க, உள்ளே சிறு ஒளிக்கீற்று கூட நுழைவதை ஆகாஷ் எப்பொழுதும் அனுமதிப்பதில்லை. வெளிச்சம் முகத்தில் பட்டாலே கோபப்படும் அவனுக்கோ, அந்த வெளிச்சம் எப்பொழுதும் ஒரு பரம எதிரி! ஏனென்றால், வெளிச்சம் இருக்கும் போது தான் தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்ற கொடிய உண்மை அவனைச் சுட்டெரிக்கும். அறவே வெறுத்தான் அந்த வெளிச்சத்தை!
அவனது கண்கள் திறந்து இருக்க, அந்தச் சாய்வு நாற்காலியில் சிலையென அமர்ந்திருந்தவனின் பார்வையோ எதையும் தேடவில்லை. அந்த விழிகளில் ஒரு காலத்தில் தெரிந்த கலைத்தாகம், இப்போது வெறும் சூனியமாக மாறி இருப்பது போல் தோன்றியது. வெளியே இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்க, அந்த ஜன்னல் திரைகளைத் தாண்டி உள்ளே புகுந்த இடிச் சத்தமோ, அவனது இதயத்தின் அமைதியை நிலைகுலையச் செய்தது.
“இந்த மழைக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு… மழை, திரும்பவும் அதே மழைதான்!” என்று பல்லைக் கடித்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
“இந்த மழையினால தான் என்னோட வாழ்க்கை மொத்தமாவே போச்சு. ஏன் தான் இந்த மழை எல்லாம் வருதோ? யார் மழை வரலைன்னு சொல்லி அழுதுகிட்டு இருந்தா? ச்சே!” என்று சலித்துக் கொண்டவன், சரியாகத் தனக்கு நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு…
இதேபோல் ஒரு மழைக்காலத்தில்தான் அந்த விபத்து நடந்தது. கையில் தழுவி இருந்த அந்த ‘தேசிய விருது’ கொடுத்த பெருமிதமும், “இனி எல்லாம் வசந்தம்தான்” என்கிற மார்தட்டலும் அவனது நெஞ்சில் முழுவதுமாக நிரம்பிப் போயிருக்க, மழையின் ஒவ்வொரு துளியும் அவனது வெற்றியைப் பாடுவது போலவே அவனுக்குத் தோன்றியது. அன்று அந்த மழையை முழுவதுமாக ரசித்தான்.
ஆனால் விதியோ வஞ்சகம் நிறைந்தது. ஒரு லாரியின் ரூபத்தில் அந்தச் சாலை வளைவில் காத்திருக்க, மின்னல் வெட்டும் நொடியில் அவனது வாழ்க்கை தலைகீழானது! இரும்புக்கும் இரும்புக்கும் மோதிய அந்தப் பயங்கரச் சத்தம், மழையின் இரைச்சலையும் மீறி ஒரு மரண ஓலமாய் எழுந்தது. அந்தச் சாலையில் கார் அப்படியே குலைந்து போனது மட்டுமல்லாமல், அவனது கனவுகளும் அங்கேயே நசுங்கிப் போயின.
ஆம், அவன் உயிர் பிழைத்தான். ஆனால், கண்கள் திறந்தபோது அவன் கண்டது விடியலை அல்ல; முடிவே இல்லாத ஒரு நீண்ட கரிய இரவை! “கண்களின் நரம்புகள் செயலிழந்து விட்டன” என்ற மருத்துவரின் வார்த்தைகள், அந்த மழையை விடக் குளிர்ச்சியாகவும், மிகவும் கொடூரமாகவுமே அவனது காதுகளில் வந்து விழுந்தன.
வண்ணங்களால் உலகைச் செதுக்க வேண்டிய ஒரு கலைஞனுக்கு, காலம் கருப்பு மையால் திரை போட்டு மறைத்து விட்டது. அன்று காரின் ஜன்னலுக்கு வெளியே பெய்த மழை எவனுக்கு அழகாகத் தெரிந்ததோ, இன்று அதே மழையின் சத்தம் அவனது இழப்பை ஏளனம் செய்வது போல் கேட்கிறது.
அறையின் வெளியே ஜானகியோ, ஒரு தட்டில் காபியுடன் தயங்கி நின்று கொண்டிருந்தார். கதவைத் திறப்பதா வேண்டாமா என்கிற தயக்கம் அவரது விரல்களில் நன்றாகவே தெரிந்தது.
“ஆகாஷ்… காபி எடுத்துட்டு வந்து இருக்கேன்ப்பா,” என்றபடி மெதுவாகக் கதவைத் தள்ளினார்.
அவர் கதவைத் திறந்தவுடன் உள்ளே புகுந்த சிறு வெளிச்சத்தைக் கூட, அந்த அறையின் அடர்ந்த இருட்டு அப்படியே விழுங்கி விட்டது. அங்கிருந்த பழைய காகிதங்களின் வாசனையும், காய்ந்து போன வண்ணங்களின் நெடியும் ஜானகியின் நெஞ்சை அடைத்தது. ஒரு காலத்தில் இந்த அறை எப்படி இருந்தது? இப்பொழுது அதற்கு நேர் எதிராக மாறியிருப்பதை நினைத்து அவர் நெஞ்சம் கலங்கியது. அது ஒரு அறையைப் போல இல்லை; ஒரு கலைஞர் தன்னைத்தானே சிறை வைத்துத் தனிமைப்படுத்திக் கொண்ட கல்லறைப் போல் தோன்றியது ஜானகிக்கு.
“அம்மா! நான் எத்தனை முறை உங்ககிட்ட சொல்லியிருக்கேன்? என் அனுமதி இல்லாமல் இந்த இருட்டைக் கலைக்காதீர்கள் என்று!” – ஆகாஷின் குரல் அந்த இருட்டு அறையைக் கிழித்துக் கொண்டு சத்தமாக வெளிப்பட்டது. அது சாதாரணப் பேச்சல்ல; காயம்பட்ட ஒரு சிங்கத்தின் கர்ஜனை போல் தோன்றியது ஜானகிக்கு.
“அது… அது வந்து… இல்லப்பா, நீ காலையிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் குடிக்கல. இப்படியே ரூமுக்குள்ளேயே இருக்க, அதான்…” ஜானகியின் குரலோ நடுக்கத்தில் பாதியிலேயே நின்றது.
“என்னது சாப்பாடா? எனக்குப் பசி இல்லைன்னு உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு இப்போ தேவையானது சோறு கிடையாது, வெளிச்சம்! இந்த உலகத்தைப் பார்க்கிற வெளிச்சம்! அது உங்களால திருப்பித் தர முடியுமா? முடியாதுல… அப்புறம் எதுக்கு இந்த பாழாய்ப்போன அக்கறை மட்டும் எனக்கு வேணும்?” என்று ஆக்ரோஷமாக எழுந்த ஆகாஷ், குருட்டுத்தனமாகக் கையை வீசினான்.
அவன் கையை வீசிய அடுத்த நொடி, மேஜையிலிருந்து அவனது பழைய ஓவியத் தூரிகைகள் அடங்கிய ஜாடி தரையில் விழுந்து சிதறியது. அந்தச் சத்தம்… மரத் தூரிகைகள் தரையில் மோதிய அந்தச் சத்தம், ஆகாஷின் இதயத்தில் ஏதோ ஒன்று உடைந்தது போல் இருந்தது. அப்படியே அந்தச் சத்தத்தைக் கேட்டு உறைந்து நிற்க, அவனது விழிகளோ எதையோ தேடி அலைந்தன. ஆனால், அவனது கண்களுக்கு இருட்டைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. பாவம், தனக்குப் பார்வை தெரியாது என்பதையே தேடும் பதற்றத்தில் மறந்து விட்டான் போலும்!
“அம்மா! இங்க கீழ என்ன விழுந்தது? அம்மா… பதில் சொல்லுங்க, என்ன விழுந்தது?” – குரலில் இப்போது கோபத்தை விட ஒரு விதமான பதற்றம் அதிகமாகவே தொற்றிக் கொண்டது.
“என்னோட தூரிகைகளா? சொல்லுங்கம்மா என்கிட்ட! என் கண்கள் செத்துப் போனது பத்தாதுன்னு, இப்போ என் கருவிகளையும் நானே கொன்னுட்டேனா?” என்று சொல்லிக் கொண்டே அவனது கைகள் தரையைத் துழாவிக் கொண்டிருக்க, தட்டுத் தடுமாறி எதையோ தேடும் அவனது அந்த உருவம், ஒரு மாபெரும் கலைஞனின் வீழ்ச்சியை ஜானகிக்கு உரக்கச் சொன்னது.
தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, அந்த உடைந்த ஜாடியையும் சிதறிக் கிடக்கும் தூரிகைகளையும் பார்த்தவரோ, “அது… அது வந்து… உன்னோட… உன்னோட தூரிகைப்பா… எல்லாம் கீழ விழுந்து சிதறிடுச்சு,” என்றார் தழுதழுத்த குரலில்.
“என்னது… தூரிகைகளா?” – அந்த வார்த்தையைக் கேட்டவுடன், ஏதோ ஒரு கசப்பான மருந்தைப் போல அவன் உதடு உச்சரிக்க, அவன் இதழோரத்தில் ஒரு விகாரமான சிரிப்பு வந்து போனது.
“அதுக்கெல்லாம் இன்னும் இந்த அறையில என்ன வேலை இருக்கு? உயிர்போன பிணத்துக்கு எதுக்கு அலங்காரம்? சொல்லுங்கம்மா, நிறங்களை இழந்தவனுக்கு இந்த மரக்கட்டைக் குச்சிகள் எதுக்கு? இதையெல்லாம் இப்பவே எடுத்து குப்பையில போடுங்க!” எனச் சொல்லிக் கொண்டே அவன் குரல் உயர்ந்து போனது. சுவரைத் துழாவிக் கொண்டிருந்த அவனது விரல்களோ நடுங்கிக் கொண்டிருந்தன.
“இனிமே என் கைக்கு எட்டற தூரத்துல இந்தத் தூரிகைகள் இருக்கக் கூடாது. கருப்பு வெள்ளையைத் தவிர வேறு எதுவுமே தெரியாத இந்தக் கண்ணுக்கு முன்னாடி எதுக்கு இந்த வண்ணக் கோல்கள்? நான் செத்துட்டேன்னு ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது? வெளியில நடமாடி எல்லார்கூடயும் சிரிச்சுப் பேசுற இந்த ஆகாஷ் வெறும் சதைப்பிண்டம்! ‘கலைஞன் ஆகாஷ்’ அன்னைக்கு அந்த விபத்திலேயே செத்துப் போயிட்டான்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவன், சட்டென்று அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். கோபம் மறைந்து, அந்த இடத்தில் ஒரு பெரும் சூனியம் வந்து அமர்ந்து கொண்டது போல் இருந்தது.
“போயிடுங்க அம்மா… அந்தத் தூரிகைகளை வெளியே எடுத்துட்டுப் போயிடுங்க. எப்பவாவது நான் தூக்கத்துல தெரியாம கூட அதை மறுபடியும் தொட்டுவிடக் கூடாது. ஏன்னா, அந்தத் தொடுதல் நான் இழந்த இந்த உலகத்தை எனக்குத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும். அந்த வலி என்னைக் கொல்லாம கொல்லுதம்மா… ப்ளீஸ், என்னைத் தனியா விட்டுடுங்க,” என்று சொல்லும்போது, கர்ஜனையிலிருந்து ஒரு சிறுவனின் அழுகையாக மாறி இருந்தது அவனது குரல்.
அதே சமயம், அந்த வீட்டின் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. வானம் கருமேகங்களால் போர்த்தப்பட்டு, உலகம் சாம்பல் நிறத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், அந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளம்பெண் இறங்கினாள். அவளது கையில் இருந்த அந்த மஞ்சள் நிறக் குடை, அடர்ந்த மேகங்களுக்கு இடையே தவறி விழுந்த ஒரு சிறு சூரியனைப் போல அந்தத் தெருவிற்கே ஒரு பிரகாசத்தைத் தந்தது போல் இருந்தது.
அவள் பெயர் நிலா. பெயருக்கேற்றாற்போல், அமாவாசை போன்ற ஆகாஷின் வாழ்வில் மெல்லிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வந்தவள் அவள். வெறும் தன்னார்வலர் மட்டுமல்ல; வார்த்தைகளால் தைக்க முடியாத மனதின் ஆழமான காயங்களை, மௌனத்தாலும் மென்மையான புன்னகையாலும் மருந்திட்டு ஆற்றத் தெரிந்த ஒரு அபூர்வமான ஆத்மா.
அவள் பணிபுரியும் ‘விழிச் சுடர்’ என்ற மறுவாழ்வு மையம், ஆகாஷைப் போன்ற திறமையான கலைஞர்களின் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை. “நிலா, ஆகாஷ் ஒரு சாதாரண நோயாளி அல்ல; அவன் ஒரு மகா கலைஞன். அவன் கண்களை இழந்திருக்கலாம், ஆனால் அவனுக்குள் இருக்கும் கலையை அவன் இழக்கக்கூடாது. அவனுக்கு இப்போது தேவை மருத்துவம் அல்ல, மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே,” என்று அவளது மேலதிகாரி அவளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.
மழையின் இரைச்சல் அவளது மெல்லிய காலடிச் சத்தத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. ஈரமான தரையில் விழுந்த அந்த மண்ணின் வாசத்தை ரசித்தபடி நிலா வாசற்படியை நெருங்கினாள். உள்ளே ஆகாஷின் ஆக்ரோஷமான குரலும், ஏதோ உடையும் சத்தமும் அவளது செவிகளில் நன்றாகவே விழுந்தன.
ஒரு கணம் தயங்கினாள். கோபத்தில் எரியும் ஒரு எரிமலைக்குள் நுழையப் போகிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அந்த எரிமலைக்கு அடியில் உறைந்து கிடக்கும் ஒரு கலைஞனின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அவளது அடுத்த அத்தியாயக் கடமை!
வானவில்லின் வருகை தொடரும் …..🌈🌈🌈
