அத்தியாயம் 1
அந்த நீளமான மண் பாதையில் இருசக்கர வாகனம் ஒன்று மிதமான வேகத்தில் மூன்று நபர்களை தாங்கி வந்து கொண்டிருந்தது. மூவருமே மது அருந்தியிருப்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது. இரண்டாவதாய் அமர்ந்திருந்தவன் போதையில் உலறினான். “டேய் என்ன விட்டுருங்கடா,” திமிறியவனின் கைகளையும்,உடம்பையும் பின்னேயிருந்தவன் இறுக்கிப்பிடித்து அழுத்தினான்.
மண் பாதை நீண்டு சென்றது.. தென்னை மரங்கள் அதிகமாய் தென்பட்டன. தூரத்தில் விட்டு விட்டு எறிந்த மின் விளக்கில் உணர்ந்தான், எவனோ ஒருவனின் தோப்பு வீட்டிற்கு தன்னை தூக்கி வந்ததாய். தூரத்தில் நான்கு அடியில் ஒரு நாய் கட்டி போடப்பட்டிருந்தது.. விவரம் தெரிந்தவர்கள் அதன் தோற்ற அமைப்பை வைத்தே அது ராஜபாளையம் ஊர் வகையைச் சேர்ந்த நாட்டு நாய் என்று கணித்து விடுவார்கள்.
வண்டியைப் பார்த்ததுமே குரைக்க ஆரம்பித்தது. அதற்குள் அவ்வீட்டின் பாதுகாப்பிற்கு வைத்திருந்த வேலையாள் ஒருவன் வந்து அதற்கு கறித்துண்டுகளை போட்டான். அடுத்த நொடி சத்தமின்றி அது தனக்கான உணவை உட்கொள்ளத் தொடங்கியது.
வண்டியிலிருந்து அவனை குண்டுகட்டாய் அவ்விருவரும் தூக்கி வந்தனர். மரநாற்காலி ஒன்றில் அவனை அமர வைத்து கைகளையும், கால்களையும் கட்டினர். “டேய் என்னடா பண்றீங்க, என்ன விட்டுருங்கடா, இல்லாட்டி உங்களை சும்மா விட மாட்டேன்..” இருவரும் அவன் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை..
“டேய்.. தைரியம் இருந்தா கட்ட அவிழ்த்துவிடுங்கடா.. ஒண்டிக்கு ஒண்டி பாப்போம்”
“என்னடா ரொம்ப திமிரா பேசுற” என்றவன் அமர்ந்திருந்தவனின் வாயில் அவன் ஆத்திரம் தீரும் மட்டும் குத்தினான்.. அமர்ந்திருந்தவன் வாயில் இரத்தம் குபு குபுவென்று வந்தது..
அவன் அடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மகிழுந்து வந்து நின்றது.முதலில் இரண்டு அடியாட்கள் இறங்கினர். மூன்றவாதாய் ஆறடியில் ஒருவன் வந்திறங்கினான்.வயிற்றில் தொப்பையும், தலையில் அரைகுறை முடியுடனும், அளவான மீசையமைப்பில் சற்று குண்டான தோற்றமாய் இருந்தான்.
அவன் முகம் சற்று வீங்கியிருந்தது. நல்ல குடி போலும். ஆனாலும் சற்று கம்பீரமாய் தான் அமர்ந்திருந்தான். சூடான இரத்தத்தைக் கக்கிக் கொண்டிருந்தவனை ஏளனமாய் பார்த்தான்.
“ஏய் ஒத்தைக்கு ஒத்த வாங்கடா ஆம்பளையா இருந்தா?” மீண்டும் அடி வாங்கினான்…
“ஏன்டா நீ என்ன பெரிய இவனா.. என் அண்ணன் உன் கடைக்கு வந்தப்ப வெளிய போக சொல்லிற்க.. ஏன் ஜாதிய பத்தி பேசினா என்னடா தப்பு? என் கடைக்கு எல்லா ஆளுங்களும் தான் வருவாங்க, இங்க நின்னு இதெல்லாம் பேசக்கூடாது, கிளம்புங்கனு சொல்லிருக்க. நீ என்ன அவ்ளோ பெரிய ம**ரா?” என்றவன் ஆத்திரத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலியை எத்திட, கீழே விழுந்தான். எத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்தான் அவன் கண்களில் கோபத் தனல் அதிகமாய் தென்பட்டது. இரும்புக் கம்பி கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தான். இரத்தம் உதிர்தவனோ வலியில் அலறினான். முதுகு,கால்களில் வரி வரியாய் ஆனது…
முகத்திலும் அடித்தான். இடது கண்ணுக்கு மேல் புடைத்தது. இரத்தம் வெளிவந்து ஓய்ந்தது. முகம்,கை,கால், உடம்பு என அனைத்தும் ரணமாய் வலிக்கத் தொடங்கியது..
வலியில் துடித்தவனோ முனு முனுத்தான். “டேய் என்ன அரகுறையா விட்டுறாதிங்க. கொன்றுங்கடா! அதான் உங்க எல்லாருக்கும் நல்லது. என்ன உயிரோட விட்டிங்கனா நாளைக்கு உங்களுக்குத்தான் பிரச்சனை”
“தோடா! ஹீரோ மிரட்ராருப்பா.. எல்லாரும் பயந்துருங்க”என்று கிண்டலடித்தான் அக்கூட்டத்தில் ஒருவன். அடியும் மிதியும் விழுந்தவாறே இருந்தது.. உடலை தாங்கியிருந்த சட்டை கிழிந்து உள்ளாடையில் தென்பட்டான்.. வெள்ளை நிற பனியன் இரத்தம் வழிந்து இளஞ்சிவப்பாய் மாறிக்கொண்டிருந்தது.
ஏற்கனவே போதையில் இருந்தவனுக்கு இன்னும் மதுவை ஊற்றினர்.. ஏற்கனவே இரண்டு நாள் பட்டிணியில் கிடந்தவனுக்கு இந்த அடிகளும் உதைகளும் உடலை தழுதழுக்க வைத்தன.. “தண்ணி தண்ணி” என்றவன் மயங்கினான்.
“ஏய் என்னடா இது. அவன் மயங்குற அளவா அடிப்பிங்க .. போதும் நிறுத்துங்கடா. அவனுக்கு தண்ணி குடுத்து எழுப்பி பாருங்கடா”
தண்ணீரை முகத்தில் அடித்ததும் அவன் தசை அவனையறியாமலே ஆடியது வலியில். அரை மயக்கத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல தன்னிலை மறக்கலானான்.
“விதுரா! விதுரா! அவன் காதருகில் அவனுக்கு பரிச்சயமான குரல் கேட்பது போல் இருந்தது. கண்களைத் திறக்க மெனக்கெட்டான். இரத்தமும் தண்ணீரும் கலந்து அவன் முகமே சிவந்து கிடந்தது.
“டேய் உங்க அண்ணனை கடைய விட்டு வெளிய போக சொன்னது தப்பு தான்டா.. மன்னிச்சுருங்கடா. என்ன விட்ருங்கடா நான் போனும்” என்றான்
“என்னடா இவ்ளோ நேரம் என்ன கொன்றுங்கனு சொன்ன இப்ப விட்டுருங்கனு கேக்குற. உயிர் பயம் வந்துருச்சா விதுரா?” கர்ஜித்த அடியாட்களின் தலைவன் தொடர்ந்தான்.
“பாக்க சுள்ளான் மாதிரி இருந்துட்டு என்னயவே ஏளனமா பேசுறியா? ஏதோ உங்கப்பன் முகத்துக்காக தான் இவ்ளோ நாள் உன்னை சும்மா விட்டேன்.. உன் அப்பன் ஒரு இளிச்ச வாயன் எப்ப பாரு நீதி,நேர்மை, நியாயம்னு கூப்பாடு போட்டுட்டு. அவனுக்கு சமூகத்துல நாளு பெரியவங்களை தெரியுதேனுதான் அவன் கூட சுத்திட்டு இருக்கேன்”
“ஏய் எங்கப்பாவை மரியாதையா பேசுடா பரசேதி பயலே. என்னை இப்படி கொண்டு வந்து வச்சு டார்ச்சர் பண்றது எங்கங்கப்பனுக்கு தெரிஞ்சுது உன்னை சும்மா விட மாட்டாரு. ஒழுங்கு மரியாதையா என்ன விட்டுருங்கடா நான் போகனும்.. என்னால வலி வேற தாங்க முடியல”
ஆவேசமாய் பேசிய விதுரனின் பேச்சில் அடியாட்களின் தலைவன் ஆக்ரோஷமாய் சிரித்தான். “ஹாஹாஹாஹா என்ன விதுரா காமெடி பண்ணிட்டு இருக்க, உன்ன போட சொன்னதே உங்கப்பன் தான்டா. ஹாஹாஹாஹாஹா”
உயிர் போகும் வலியில் இருந்தவனுக்கு இவன் கூறியது மேலும் இடியாய் இறங்கியது. முகத்தை தரையோடு புதைத்து தானாய் வரும் கண்ணீரை மறைத்தான். தரையோடு தரையாய் கிடந்த விதுரனின் முகத்தை தன் கால் கொண்டு தூக்கினான் அந்த தடியன்.
“என்ன விதுரா அழுகை வருவது போல.. நீ சாகுற அளவுக்கு என் பசங்க அடிச்சாங்க அப்ப கூட இந்த கண்ணு கலங்கல. உங்கப்பன் தான் உன்ன கொல்ல சொன்னானு சொன்னதும் அப்படியே குச்சி ஜசா உருகுது கண்ணு”
“இல்ல நீ பொய் சொல்ற. நான் நம்ப மாட்டேன். என் அப்பா அப்படிலாம் சொல்லிற்க மாட்டாரு. அவருக்கு என் மேல கோபம் இருக்குதான் ஆனா அதுக்காக என்ன கொல்ல சொல்ற அளவுக்கு போக மாட்டாரு. நீ பொய் சொல்ற”
“டேய் தமிழு அவங்கப்பனுக்கு போன போடுடா” உடனிருந்த அடியாட்களில் ஒருவனிடம் சொல்ல, “இதோ பண்றேன்ணா” என்று கூறினான் அவன்..
அவன் அழைப்பதற்குள் விதுரனின் தந்தையே போன் செய்தார். இருக்குமிடத்தின் வழியை கேட்டறிருந்துவிட்டு அரைமணி நேரத்தில் வருவதாய் கூறி வைத்தார்.
நேரம் இருபது நிமிடத்தை தாண்டும் முன்னமே விதுரனின் தந்தை அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். அதற்குள் கீழே கிடந்த விதுரனை தூக்கி நாற்காலியில் அமர வைத்து கைகளையும், கால்களையும் பழைய மாதிரி கட்டி வைத்திருந்தனர்.
விதுரனின் தந்தையைப் பார்த்த அடியாட்களின் தலைவனான லிங்கம் “அண்ணா வாண்ணா…” என்றழைத்தபடி அவர் அருகில் சென்றான்.
“என்ன லிங்கம் இது” என்ற கர்ஜனையான குரலில் விதுரன் மிழிகளை மெதுவாய் நகர்த்தினான். தலையை நிமிர்த்தி மிழிகளைத் திறக்க முற்பட்டான்.. அவனுக்கு எதிராய் இருந்த ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் அவன் கண்களை கூசச் செய்தது. இருப்பினும் விழிகளை மெல்லச் சுருக்கியும் விரித்துமாய் ஜன்னல் துவாரத்தின் வழியாக பார்க்க அவனின் ஆருயிர் தந்தை லிங்கத்தின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
விதுரனின் அப்பா லிங்கத்திடம் பணக் கட்டை கொடுத்ததை பார்க்கும் போது அவன் விழிகள் வேகமாய் சூடான நீரை இறக்கியது. பாராட்டி சீராட்டி வளர்த்த தந்தையே தன்னை கொல்ல சொல்லியிருக்கிறார் என்பதை விதுரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… மனமும், உடலும் ரணமாய் வலிக்க அவன் மொத்தமும் செயலிழந்து போனதாய் உணர்ந்தான்.. தன் தந்தையே தனக்கு எதிராய் மாறியதை எண்ணி இருதயம் வலித்தது.
மனதளவில் சுக்குச் சுக்காய் நொருங்கியவனை குடிபோதை தலைக்கு ஏறியிருந்த அடியாள் ஒருவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். சாராயத்துடன் கஞ்சாவும் உபயோகித்த இருந்த அவனால் அவனை கட்டுப்படுத்த முடியாமல் மூலையில் காலியாய் கிடந்த சாராயக் குடுவையை எடுத்து விதுரனின் தலையில் ஒரே போடாய் போட்டுவிட்டான்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவன் அப்படியே நாற்காலியோடு தரையில் சரிந்தான். மொத்த உடலின் பலமும் காற்றில் கரைவதாய் உணரத் தொடங்கினான்.
அப்போதும் அவன் காதோரம் அவனுக்கு பரிட்சயமான குரல் ‘விதுரா! விதுரா!’ என அழைத்தது. மென்மையான குரல் தான்.. ஆனால் அது விதுரனிற்கு ஆயிரம், ஆயிரம் யானை பலத்தை தருவதாய் உணர்ந்தான். “விட்ற மாட்டேன் பாப்பா உன்னை நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி வந்தே தீருவேன்” சபதமாய் சூளுரைத்தான் விதுரன்.
