முரடன் 1
“டேய் உன்கிட்டதான பேசிகிட்டு இருக்கேன், ஏதாவது பதில் பேசுறாயா நீ. வரவர உனக்கு கோபம் அதிகமாயிட்டே போகுது, இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லடா” பைரவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் சக்திவேல்.
அப்போது அங்கு வந்த ப்ரசாந்த் “என்னடா, இப்போ எதுக்கு அவனை சத்தம் போட்டுடிருக்க” என கேட்க..
“இதோ பாறைய முழுங்குன மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கானே, இவங்ககிட்டயே கேளு” கோபமாக கூறினான் அவன்.
உடனே பிரசாந்த், “அப்படி என்னதான்டா பண்ண, சொல்லித்தான் தொலையேண்டா” என்றான் சலிப்பாக.
ஆனால், அவன் கேட்டதற்கு வாய் திறக்காமல், கோபமாக பைரவன் அமர்ந்திருக்க..
“அடேய், உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிகிட்டு நான் தான்டா அவஸ்தை படுறேன். கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு உங்களை பார்க்க வந்தா… ச்சைய், எவனும் எதுவும் சொல்ல வேணாம், நான் கிளம்புறேன்” என்று கடுப்பாக எழுந்தான்.
“டேடேய், உட்காரு நானே சொல்லித் தொலைறேன்” என்ற சக்தி, “நீ கால் பண்ணதும் இங்க வரலாம்னு ரெண்டு பேரும் பைக்ல வந்தோம். வர வழியில ஒரு கார்காரன் இண்டிகேட்டர் போடாமலே யூடன் போட்டான். இவனும் அதை கவனிக்காமல் வேகமாக போய், அவன் கார் மேல மோதிட்டான்”.
“உடனே அவன் நம்மகிட்ட சண்டைக்கு வர, இவன் அவனோட சண்டை போடனு, கூட்டமே கூடிடிச்சிடா” என்ற சக்தியிடம்..
“ஏண்டா தப்பு பண்ணது அந்த கார்காரன்தானே, அப்ப சண்டைதான் போட செய்வாங்க. அதுக்கு ஏண்டா நீ இவனை திட்டிகிட்டுடிருக்க” என்றான் ப்ரஷாந்த்.
“அதுக்காக இவனை திட்டுல” பைரவனை முறைத்த சக்தி.. “அவன் ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டானு, அடிச்சி அவன் வாயவே ஒடச்சிட்டாண்டா. இன்னும் கொஞ்சம் விட்டுருந்தா, அவனை என்ன பண்ணி இருப்பானோ, நல்லவேளை இழுத்துட்டு வந்துட்டேன்” என்றான்.
“அடப்பாவி” பைரவனை திட்டிய ப்ரஷாந்த், “இவன் வாயை உடைக்கிற அளவுக்கு, அப்படி அவன் என்னதான்டா சொன்னான்” என கேட்டான்.
“அதை ஏண்டா கேக்குற, சலித்துக் கொண்டவன், “போங்கடா பிச்சைக்கார நாய்ங்களானு சொல்லிட்டான்டா. அதுக்கு அந்த அடி அடிக்கிறான் டா அவனை” என்ற சக்தி, “இன்னும் ரெண்டு அடி சேத்து அடிச்சிருந்தான்னா, போலீஸ் கேஸே ஆயிருக்கும்” என்றான் பயந்தவாறு.
உடனே, “அப்படி கேஸ் ஆகியிருந்தாலும், அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்” பைரவன் அழுத்தமாக குரலில் கூற…
“ஆமா, இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. அதான் உனக்கே தெரியுதில்ல, நீ இப்போ எந்த இடத்துல இருக்கேன்னு. அப்புறம் எதுக்குடா, ஒரு சின்ன வார்த்தையை கேட்டு உனக்கு அவ்வளவு கோவம் வருது” என்றான் சக்தி.
“சின்ன வார்த்தை” கண்களை மூடி திறந்தவன், “அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது சக்தி, சின்ன வயசுலருந்தே இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டிருந்தா… அதோட வலி என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்” என்ற பைரவனுக்கு தன் சிறுவயது நினைவுகள் வந்து போனது.
“சரி, போதும்டா சாமி… வாரம் முழுக்க வேலை செஞ்சுட்டு, சண்டே ஒரு நாள் ஃப்ரெண்ட்ஸோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு வந்தா, நீங்க எதையெதையோ பேசி, இன்னும் டென்ஷன் பண்ணாதிங்க டா. என்ன ஆர்டர் பண்ணட்டும் அதை சொல்லுங்க” என்றான்.
பிறகு மூவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கி, சாப்பிட்டபடி அரட்டை அடிக்க..,
சற்று தொலைவிலிருந்து, ஒரு ஜோடி கண்கள், பார்வையிலேயே பைரவனை விழுங்கிக் கொண்டிருந்தது.
இதையறியாத மூவரும் வெகுநேரம் பேசிவிட்டு., அவரவர் வீடு நோக்கி புறப்பட்டனர்.
பைரவன்….. “சிவம் வெட்டிங் டெக்கர்ஸ்” ன் உரிமையாளன். 28 வயது நிரம்பிய கட்டிளம் காளை, கருப்பு நிறத்தழகன். சற்று கோபக்காரனும்கூட. எங்கு தவறு நடந்தாலும், அவன் வாய் பேசுமுன் கைதான் முதலில் பேசும்.
சேலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் புகழ்ப் பெற்ற சிவம் டெக்கர்ஸ்.. திருமணம், பிறந்த நாள், ரிசப்ஷன் நிச்சயதார்த்தம் என அனைத்து விசேஷங்களுக்கும், அனைத்து விதமான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து தரும் நிறுவனம்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனக்கான இந்த அடையாளத்தை பெற, பைரவன் படாத துன்பங்களே இல்லை எனலாம்.
அவனுடைய பள்ளி தோழன் சக்திவேல் மற்றும், கல்லூரித் தோழன் ப்ரசாந்த்.
அவனுடைய இந்த வெற்றியில், அவர்களின் பங்கும் சற்று அதிகம் என்றே சொல்லலாம்.
வீட்டிற்கு வந்த பைரவன், “அம்மா.. அம்மா” என உரைக்க அழைத்தும் அறையிலிருந்து வெளி வராமலிருந்தார், தாய் லட்சுமி.
“எத்தனை தடவை கூப்பிடுறேன், இன்னும் வெளிய வராம என்ன பண்ணுது. ஒருவேளை தூங்கிடுச்சா” சந்தேகமாக அறைக்குள் நுழைய…
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர்.
“ஏம்மா, எத்தனை தடவை உன்னை கூப்பிடறது. காது கேக்கலையா உனக்கு” கோபமாக கேட்டவன், “இப்ப எதுக்கு இப்படி உக்காந்து இருக்க நீ” என்றான்.
“ஏன்னு உனக்கு தெரியாதா” லட்சுமி கேட்க..
“இதையே பேசி பேசி என்னை இன்னும் டென்ஷன் பண்ணாத, அப்பா எங்க, அது மட்டும் சொல்லு” என்றான் கடுப்பாக.
“நான் என்ன இந்த வீட்டோட எஜமானியா. எல்லாரும், என்கிட்ட எங்க போறே, எங்க வரேனெல்லாம் சொல்லிட்டு போறதுக்கு” அவரும் கோபமாக பதில் கூற…
“உங்கிட்ட போய் கேட்டேன் பாரு” எரிச்சலாக வெளியேறிய பைரவன், தந்தைக்கு அழைத்திருந்தான்.
“தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் எண், தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது” என்ற குரலில் வெறுப்படைந்தவன், “ச்சே, எங்கதான் போனாரோ இவரு” தந்தையை திட்டிக் கொண்டிருக்க..
“என்னண்ணா யாரை திட்டிட்டிருக்க” கேட்டபடி வந்தான் பைரவரின் தம்பி, கிருஷ்ணன்.
“அப்பா எங்கடா போனாரு, அவனிடம் விசாரிக்க.. எங்கனெல்லாம் சொல்லல ண்ணா. ஆனா கார் எடுத்துட்டு எங்கயோ போனாரு” என்றவன், “ஏண்ணா ஏதாவது முக்கியமான வேலை சொல்லியிருந்தியா அவர்கிட்ட” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ போ” கூறியவன், தன் அறைக்கு சென்றிருந்தான்.
“என்ன இவரு.. என்ன போக சொல்லிட்டு, அவர் போயிட்டாரு” சிரித்துக் கொண்டே சென்றிருந்தான்.
********
“அடியேய், அதான் உன் ஆள் போய் இவ்வளவு நேரமாச்சில்ல. அப்றம் நம்மளுக்கு இங்க என்னடி வேலை. வாடி இப்பவாச்சும் வீட்டுக்கு போகலாம்” தோழியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாதவி.
“ப்ச், இப்போ வீட்டுக்கு போய் என்னடி பண்ண போற, கொஞ்ச நேரம் இரேன்” வைரம் அவளிடம் கூற…
யாதவி… “அடியே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லடி. ஏன்னா நீ நாளைக்கு ஆஃபீஸ்க்கு வந்தா வரலாம் வராட்டியும் போகலாம்.
ஆனால், என் நிலைமை அப்படி இல்லையே. நான் கண்டிப்பா ஆஃபீஸ் போயே ஆகணும்டி. இன்னைக்கு போய் வீட்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்ததான், நாளைக்கு ஃப்ரஸா ஃபீலாகும். வாடி போலாம்” சிறுபிள்ளைப் போல் வராத கண்ணீரை வர வைக்க வேண்டி கண்களை கசக்கி கொண்டிருந்தாள்.
“சரியான இம்சைடி நீ, வந்து தொலை போகலாம்” கடுப்பாக அவளுடன் சென்ற வைரம், வாகனத்தை ஸ்டார்ட் செய்ய,
அதில் ஏறி அமர்ந்த யாதவி.. “போலாம்டி” என்றாள்.
சற்று தூரம் அமைதியாக வந்தவள், “ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி தூரத்திலிருந்தே உன் ஆள பாத்துட்டிருப்பே. போய் அவர்கிட்ட ப்ரொபோஸ் பண்ண வேண்டியதுதானே” என்றாள்.
“நீ வேற ஏண்டி, அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்” வைரம் கூறிய திணுசில், யாதவி பக்கென சிரித்துவிட்டாள்.
உடனே வைரம், “ஹேய், இப்ப எதுக்கு டி சிரிக்கிற” மிரட்டலாக கேட்க..
“இல்லை இதுக்கே சரிப்பட்டு வர மாட்டாருன்னா, அப்புறம் மத்ததுக்கு எல்லாம். அதை நினைச்சேன் சிரிச்சேன்” என்றாள் அவள்.
“ஏய், என்னடி கொழுப்பா, அவன் லவ் விஷயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டான்னு தான் சொன்னேன். நீ நினைக்கிற மாதிரி தப்பால்லாம் ஒன்னுமில்லை எருமை” வைரம் தோழியை திட்ட..
“நானும் ஒன்னும் தப்பா நினைக்கல, லவ் பண்றதுக்கே சரிப்பட்டு வர மாட்டார்னு சொல்றியே, அப்றம் கல்யாணம் பண்றதுக்கெல்லாம் என்ன பண்ணுவியோன்னு தான் சொன்னேன்” என்றாள்.
‘ம்ம்ம் நம்பிட்டேன்’ தோழியை முறைத்த வைரம், பிறகு.. “நானும் அதைதான் யோசிச்சிட்டு இருக்கேன். எங்க வீட்டிலேயும் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை” என்றாள்.
“இங்க பாருடி, இப்படியே யோசிச்சிட்டு இருந்தா.. அப்புறம் வேற எவளாவது நடுவுல பூந்து, உன் ஆளை கட்டிக்கிட்டு போயிடுவா. அதேமாதிரி உன்னை கட்டிகிறதுக்கும் எவனாவது வந்து சேந்துருவான். அப்புறம் அவரை மாதிரி, உன்னால தாடிகூட வளர்க்க முடியாது. அதனால ஒழுங்கா போய் அவர்கிட்ட உன் காதலைபத்தி சொல்ல பாரு” மிரட்டினாள் யாதவி.
அதற்கு வைரம்.. “இவ வேற எதுவும் சரியா தெரியாம அட்வைஸ் பண்றேன்னு, என் உசுர வாங்கற” மனதிற்குள்ளே புகைந்தவள், தோழியை வீட்டில் விட்டுவிட்டு அவளது வீட்டை நோக்கி சென்றிருந்தாள்.
வைரம்.. 25 வயது இளம்பெண், அதோடு வீட்டிற்கு இரண்டாவது பெண்ணும்கூட. மாநிறத்தில் இருக்கும் கிளியோப்பாட்ரா என்றுதான் கூற வேண்டும். இவளுக்கு தங்கம் என்ற அக்காவும், முத்து என்ற தம்பியும் உண்டு.
இவர்களின் பெயர்களிலேயே தெரிந்திருக்கும், வைரத்தின் குடும்பம் எவ்வளவு செல்வ செழிப்பாக இருக்கும் என்று.
ஆனாலும் படித்து முடித்து, வீட்டிலிருக்க பிடிக்காமல், மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.
அவளது தந்தைக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்றாலும், மகளின் விருப்பம் தான் முக்கியம் என விட்டுவிட்டார்.
*********
அவசர அவசரமாக அலுவலகம் செல்லும் மகளை பார்த்து அவளின் தாய் விஜயா, “ஏண்டி, உனக்கு என்ன தலையெழுத்தா, இந்த மாதிரி அடிச்சு புடிச்சு யாரோட கம்பெனிக்கோ வேலைக்கு போகணும்னு. நம்மளோடதே நாலு மில்லு இருக்கு. அதுல ஏதோ ஒரு மில்ல நீ போய் பார்த்துக்க கூடாதா” ஆதங்கமாக கேட்க..
“அம்மா, அதெல்லாம் தாத்தா, அப்பாவோட உழைப்பு. அவங்களோட அடையாளம் மா. அது எனக்கு வேணாம். நான் என்னோட உழைப்பாலதான் என்னோட அடையாளத்தை உருவாக்கனும்மா” என்றாள் வைரம்.
“ம்க்கும், எப்போ நான்” என ஏதோ கூற, அவர் வாய் திறக்க..
“விஜி, அவளே அவசரமா கிளம்பிகிட்டு இருக்கா, இப்போ இந்த பேச்செல்லாம் தேவைதானா” என்று கம்பீரக் குரலில் பேசியபடி அங்கு வந்தார், வைரத்தின் தந்தை ஏகாம்பரம்.
“அதானே, மகளை ஒன்னும் சொல்லிடக் கூடாது உங்களுக்கு. உடனே வந்துருவீங்களே” என்றார்.
அவர் பேசுவதை காதில் வாங்காத ஏகாம்பரம், “டைம் ஆச்சாம்மா, நான் வேணா வந்து டிராப் பண்ணவா” என்றார் மகளிடம்
“வேண்டாம்ப்பா, நான் பாத்துக்குறேன்” என்றவள், “பாய்மா, பாய்ப்பா” வேகவேக சென்று, தன் வாகனத்தை உயிர்பித்து புறப்பட்டிருந்தாள்.
செல்லும் மகளையை பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்திடம்.. “ஏங்க, எப்பதான் அந்த மாப்பிள்ளையை பத்தி உங்க மககிட்ட பேசலாம்னு இருக்கீங்க” என்றார் விஜயா.
“ம்ம்ம், சீக்கிரம் பேசணும்” பெருமூச்சுடன் கூறியவர், உண்டு முடித்து.., அவரது வேலையை பார்க்க சென்றிருந்தார்.
தொடரும்…..
