பகுதி 4
தாயின் கோபம் குறையும் வரை.. அவரது கண்களில் அதிகம் அகப்படாமல் சுற்றிக் கொண்டிருந்த வைரம்.. அன்று அவளது கல்லூரி தோழியின் திருமணம் என்று தயாராகி கொண்டிருந்தாள்.
இளமஞ்சள் நிற புடவையும், அதற்கேற்ற ரவிக்கையும் அணிந்து.. எளிமையாகவும், அழகாகவும் தயாராக வந்தவளை, விஜயா முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவரை கண்டுகொள்ளாத வைரம்.. “நான் போயிட்டு வரேன் மா” என கூறிவிட்டு கடந்து செல்ல..
“என்ன இன்னைக்கு அதிசயமா ஆஃபீஸ்க்கு புடவையெல்லாம் கட்டிட்டு போற” என்றார் அவர்.
“அதும்மா, இன்னைக்கு என்னோட காலேஜ் ஃப்ரெண்ட் தனுஜா இருக்கால்ல., அவளுக்கு மேரேஜ். மேரேஜ் அட்டென்ட் பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் ஆஃபீஸ் போறேன். அதான்” என்றவளிடம்,
“ஊர்ல இருக்கிறவளுக கல்யாணத்துக்கு எல்லாம் போ. ஆனா, நீ கல்யாணம் பண்ணிடாத.. இந்நேரத்துக்கு நீ மட்டும் சரின்னு சொல்லியிருந்தா.. உனக்கே நிச்சயம் முடிஞ்சிருக்கும்டி” பற்களை கடித்து கொண்டு பேசும் தாயை முறைத்தவள்…
“போதும்மா, அது முடிஞ்சு ஒரு மாசமாகியும் இன்னும் அதைபத்தியே பேசிட்டிருக்கீங்க. மாப்பிள்ளை பிடிச்சிருந்தா ஓகே சொல்லியிருக்க மாட்டேனா” என்றவள்.. “எனக்கு பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பாருங்க, கண்டிப்பா ஓகே சொல்றேன்” எனக் கூறிவிட்டு, அதற்கு மேல் தாயிடம் வாதிடாமல் புறப்பட்டிருந்தாள்.
யாதவியையும் அழைத்துக் கொண்டு மண்டபத்திற்குள் சென்றவள், தோழியை சந்திக்க மணமகள் அறைக்கு செல்ல..
“ஹே.. டைமண்ட், யாது வாங்கிடி”.. மணப்பெண் அவர்களை வரவேற்க.. இருவரும் தோழியுடன் சற்று நேரம் பேசிவிட்டு, ஹாலில் சென்று அமர்ந்தனர்.
அப்போது நேரத்தை பார்த்த யாது.. “ஏய், டைம் இப்பவே நைன் ஓ க்ளாக் ஆயிடுச்சுடி.. இன்னும் மாப்பிள்ளை எப்போ தாலி கட்டி முடிச்சு, நம்ம எப்போ சாப்பிட்டு ஆஃபீஸ் போறதுனு தெரியலயே. லேட் மட்டும் ஆச்சின்னு வை, அந்த சிடுமூஞ்சி சிங்காரம் இருக்கான்ல்ல.. அவன் நம்மளுக்கு டின்னு கட்டிருவாண்டி”என புலம்ப…
“சரி, அப்போ தாலி கட்டி முடிச்சதும் கிளம்பிடுவோம்டி” என்றாள் வைரம்.
“என்னது தாலி கட்டி முடிஞ்சதும் கெளம்பனுமா.. அடி போடி.. நான் கல்யாணத்துக்கு வந்ததே கல்யாண சாப்பாடு சாப்பிடணும்னுதான். அதை சாப்பிடாம கிளம்பனுமாமில்ல. வேணும்னா தாலி கட்டுறதுக்கு முன்னாடியே சாப்பாடு போட்டாங்கன்னா சாப்பிட்டு அப்படியே கிளம்பிடுவோம்” என்றாள் அவள்.
“அடிப்பாவி.. அப்ப நீ ஃப்ரெண்டோட கல்யாணத்த பார்க்க வரலையா” என வைரம் சிரிக்க..
“ரெண்டுக்கும் சேர்ந்து தாண்டி வந்தேன்” என்றாள் யாது.
இப்படியே இருவரும் வழவழத்து கொண்டிருக்க…
அப்போது மண்டபத்திற்குள் நுழைந்தான் பைரவன்.
திருமண அலங்கார வேலைகள் அனைத்தும் அவர்களது நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், அவனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனால் அங்கு வந்தவன், ஏற்பாடுகள் அனைத்தையும் சரி பார்த்துவிட்டு, இருக்கையில் வந்து அமர்ந்தான்.
அந்தநேரம் அவனை பார்த்த வைரத்தின் கண்கள், ஆச்சர்யத்தில் விரிய..
“முட்டக்கண்ணி, இப்போ எதுக்குடி கண்ணு இப்படி துறக்குற” கேட்டுக் கொண்டே தோழியின் பார்வை செல்லும் திசையை, யாதவி பார்க்க…
அங்கே.. இளமஞ்சள் நிற சட்டையும், வெள்ளை வேஷ்ட்டியும் அணிந்து, தலைமுடி காற்றில் ஆட, மீசையை முறுக்கியபடி… கையில் ஏற்றிவிடப்பட்ட வெள்ளிக் காப்புடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பைரவன்.
“அட நம்ம பைரா ப்ரோ, இவர் எப்படிடா இங்க. அதுவும் உன் சாரிக்கு மேட்ச்சா சட்டை போட்டு வந்துருக்காரு…. என்ன டெலிபதியா ” என்ற யாது.. தலையை ஆட்டி, கிண்டலாக கேட்க…
அவள் கேட்டது எதுவும் காதில் வாங்காமல், பைரவனை ஜொள்ளுவிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாள் வைரம்.
அதை கவனித்த யாது.. “பசங்கதான் இப்படி சைட் அடிச்சி பாத்திருக்கேன். ஆனா, இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக.. ஒரு பொண்ணு இப்படி உலகத்தையே மறந்து அவளோட ஆளை சைட் அடிக்கறதை இப்பதான் பார்க்கிறேன். எதுக்கும் ஒரு போட்டோ எடுத்து வைப்போம், எப்பயாவது தேவைப்படும்” என தன் கையில் இருந்த அலைபேசியில் அவர்களை புகைப்படம் எடுத்தவள்..
“யம்மா டைமண்ட், ஃப்ரண்டோட கல்யாணத்தை பார்க்க வந்தவளே.. அங்க பாரும்மா உன் ஃப்ரண்டு கழுத்துல தாலி கட்டுறாங்க” என வைரத்தின் தலையை பிடித்து திருப்பி விட்டாள்.
உடனே தன்னை மீட்டுக் கொண்டவள், தோழிக்கு அட்சதையை தூவி விட்டு திரும்ப.. அங்கே பைரவன் இருந்த இருக்கை காலியாக இருந்தது.
அவனை காணாததால், வேகமாக எழுந்தவள்.. சுற்றும் முற்றும் மண்டபத்தில் தேட.. சற்று தொலைவில் நின்று யாரோடனோ பேசிக் கொண்டிருந்தான் அவன்.
சில நிமிடங்கள் இமைக்காமல் தன்னவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே வந்த யாதவி.. ‘இப்படி தூரத்திலிருந்து பார்த்தே.. அவர்கூட குடும்பம் நடத்திடலானு முடிவு பண்ணிட்டியாடி…. நானும் நாலு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா கொஞ்சம் கூட என் பேச்சை கேட்கமாட்டல்ல” என்றவள்..
“இப்ப கூட ஒன்னும் கெட்டு போயிடல. தனியாதான் நின்னு பேசிகிட்டிருக்காரு. தயவுசெய்து போய், உன் காதலை அவர்கிட்ட சொல்லுடி” என்றாள் கெஞ்சலாக.
யாதவி கூறியதை கேட்டு வருத்தமான வைரம்.. “எனக்கும் சொல்லனும்னு ஆசைதான்டி. ஆனா, மறுபடியும் அவர்கிட்ட சொல்லி, அவர் முடியாதுனு சொல்லிட்டார்னா, அதை என்னால தாங்கிக்க முடியாது யாது” என்றாள் கரகரத்த குரலில்.
அதை கேட்டு அதிர்ந்தவள்.. “என்னடி சொல்ற… அப்போ நீ ஏற்கனவே அவர்கிட்ட சொல்லிட்டியா” எனக் கேட்க..
“ஆமாம்” என்பது போல் தலையை அசைத்த வைரம், அங்கிருந்து வெளியேறிய பைரவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே, “எப்படி சொன்ன, எங்கே சொன்ன.. அதுவும் எனக்கு தெரியாம எப்போ சொன்ன” யாது வரிசையாக கேட்ட கேள்வியில்.. சலித்துக் கொண்ட வைரம்..
“அதெல்லாம் அப்றம் சொல்றேன். இப்போ கிளம்பலாம் வா, டைம் ஆகுது” என்று, சாப்பிடாமலே அவளை இழுத்துச் சென்றாள்.
*******
மண்டபத்திலிருந்து நேராக அலுவலகத்திற்கு வந்த பைரவன்.. தன் அறையிலிருந்த தந்தையிடம்… “கிளைண்ட்டோட மேரேஜ்ல இருக்கேன்னு சொல்லியும், எதுக்கு இப்போ என்னை அவசரமா வர சொன்னிங்க” என்றான்.
“முக்கியமான விஷயம் பேசனும் பைரவா. அதான் உன்னை வர சொன்னேன்” என்ற பரமசிவம்.. ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி.. “இந்த பொண்ணைதான் உனக்கு பாத்திருக்கோம் பைரவா. புடிச்சிருக்கா பாரு” என்றார்.
படத்தை கையில் வாங்கியவன், இரண்டு நிமிடம் அதை உற்று பார்த்து விட்டு.. அந்த பெண்ணை பற்றிய அனைத்து விவரங்களையும் கேட்டான்.
“பொண்ணு பேர் ரூபிணி, ஊர் தாரமங்கலம். காலேஜ் முடிச்சிட்டு, அதே ஊர்ல இருக்க துணிக்கடையில பில் போடுற வேலைக்கு போயிட்டிருக்கு. அம்மா, அப்பா இரண்டு பேரும் கூலி வேலைக்கு போறாங்க. நடுத்தரத்துக்கும் கீழ உள்ள குடும்பம்தான்ப்பா. பொண்ணுக்கு ஒரே ஒரு தங்கச்சி இருக்கு. இப்போதான் பதினொனாவது படிக்கிது” என அனைத்தையும் கூறி முடித்தவர்..
“உனக்கு புடிச்சிருந்த…. அடுத்த வாரமே பொண்ணு பாக்க போயிடலாம்” என்றார்.
பெண்ணின் விவரங்களோடு சேர்த்து.. பெண்ணையும் பைரவனுக்கு பிடித்து விட.. “பொண்ணை எனக்கு பிடிச்சிருக்குபா” என்றான் மென் புன்னகையுடன்.
அதில் மகிழ்ச்சியடைந்த பரமசிவம்.. “ரொம்ப சந்தோசம்பா.. அப்போ நான் பொண்ணு வீட்ல பேசிடுறேன்” என்றவர், அன்றே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
*********
“லட்சுமி சீக்கிரம் வாமா, நல்ல நேரம் ஆரம்பிக்கும் முன்னேயே பொண்ணு வீட்டுக்கு போகணும்” சாத்திய அறையின் முன் நின்று, மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார் சிவம்.
உடனே கதவை திறந்த லட்சுமி “இதோ வந்துட்டேங்க” என சேலையை சரி செய்துக் கொண்டே வந்தவர்..
“பூ பழம் தட்டு எல்லாம் எடுத்தாச்சில்ல” என்றார்.
“அம்மா உங்களைத் தவிர மத்த எல்லாமே ரெடியா இருக்கும்மா.. நீங்க வந்தா மட்டும் போதும்” என கிருஷ்ணன் நக்கலாக கூறினான்.
அதை கண்டுகொள்ளாத லட்சுமி.. “சரி, அப்போ புறப்படலாம் வாங்க” என வெளியேற, அவரைத் தொடர்ந்து ஆண்கள் மூவரும் சென்றனர்.
அப்போது பைரவனின் அலைபேசி இசைக்க, தொடர்பில் இணைந்தவன்.. “சொல்லுடா சக்தி, கிளம்பிட்டியா” என்றான்.
“இல்ல மச்சான், என் ஒய்ஃப்க்கு திடீர்னு லேபர் பெயின் வந்திருச்சுடா. அதனால நான் ஹாஸ்பிடல் போறேன், நீங்க போய் நல்லபடியா, எல்லாம் பேசி முடிச்சுட்டு வாங்கடா” என்றான் பதட்டமாக.
“சரிடா, சரிடா” என்ற பைரவன், “எந்த ஹாஸ்பெட்டல்க்குடா கூட்டிட்டி போறிங்க” என்று கேட்க..
“நம்ம **** ஹாஸ்பெட்டல்தான்டா” என்றவன், “ரொம்ப அழறடா. பயமா இருக்கு” எனும்போதே மனைவியின் அலறல் அதிகரிக்க.. அழைப்பை துண்டித்திருந்தான்.
நண்பனின் பதட்டம் இவனையும் தொற்றிக்கொள்ள.. தந்தையிடம் சென்றவன்.. “அப்பா, நீங்க மூணு பேர் மட்டும் போய் பாத்துட்டு வந்துருங்கப்பா. அதான் நான் ஃபோட்டோவிலேயே பொண்ண பார்த்துட்டனே” என்றவனை முறைத்த லட்சுமி..
“ஏன்டா ஃபோட்டோல பார்த்தா.. நேர்ல பார்க்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா. இவ்வளவு நேரம் அங்க போக ரெடியாதானே இருந்த. இப்போ எதுக்கு திடீர்னு எங்களை மட்டும் போக சொல்ற” என்றார்.
“அம்மா, சக்தியோட பொண்டாட்டிய ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்களாம். பாவம் அவன் ரொம்ப பயந்து போய் கிடக்கான். நான் கூட போனா கொஞ்சம் தெம்பா இருப்பான். அதனால நான் அங்க போறேன்” என்றான் பைரவன்.
உடனே சிவம்.. “அப்படியாப்பா, சரி… அப்போ நீ ஆஸ்பத்திரிக்கு போ. நாங்க போய் பார்த்து, பேசிட்டு வரோம்” என மகனை அனுப்பி வைத்தார்.
அவன் சென்றதும்.. கிருஷ்ணன் பெண் வீடு நோக்கி வாகனத்தை செலுத்த… “ஏங்க, எதுக்குங்க அவனை அனுப்பி விட்டீங்க. அவனும் வரான்னுதானே, பொண்ணு வீட்ல சொல்லி இருந்தோம். இப்போ அவனை எதிர்பார்த்த எல்லோரும் காத்துகிட்டு இருப்பாங்க. இவன் இல்லாம நாம மட்டும் போன.. அவங்க ஏதாவது தப்பா நினைக்க மாட்டாங்களா” புலம்பியபடியே சென்றார் லட்சுமி.
சிவம்… “லட்சுமி, அதெல்லாம் சொல்லிக்கலாம்மா . அவங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க. நீ இப்படி புலம்பாம வா” எனக்கூற.. அதற்குமேல் அவர் பேசவேயில்லை.
ஒருவழியாக அரைமணி நேரத்தில், பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்களை.. பெண்ணின் பெற்றோர் வரவேற்று, அமரவைக்க…
அப்போது.. பெண்ணின் தாய் மாமன்.. “என்னங்க மாப்பிள்ளை வரார்னு சொன்னீங்க. ஆனா இப்போ நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்றார்.
உடனே, லட்சுமி பரமசிவத்தை பார்க்க.. சிவம்…. “அவனும் வரதாதான்ங்க இருந்தது. திடீர்னு ஒரு அவசர வேலை வரவே, பையன் கிளம்பி போயிட்டான். அதான் வரலை” எனக் கூறினார்.
“அப்படிங்களா” என்று இழுத்தவர்.. “ஆனாலும், நேர்ல ஒரு தடவை மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துட்டாங்கனா கொஞ்சம் திருப்தியா இருக்கும்” என்றவரிடம்…
“அதுக்கு என்னங்க, இன்னொரு நாள் மாப்பிள்ளையை வந்து பார்க்க சொல்லிடுறேன் ” என்ற சிவம், “நல்லநேரம் ஆரம்பிச்சிடுச்சி. பொண்ணை வர சொல்லுங்க” என்றார் இலகுவாக.
ஆனால் பெண் வீட்டினாரால் அதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர்கள்.. எதற்காக தங்களைப் போல் வசதி குறைந்த குடும்பத்தினருடன் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது பைரவன் வராததால் மேலும் யோசனையானார்கள்.
அதை கவனித்த பரமசிவம்.. மீண்டும் அவர்களிடம் பேச… அதன்பின் ரூபிணியை அழைத்து வந்தார், அவளது தாய்.
அனைவரையும் வணங்கியவள், தேநீரை கொடுத்துவிட்டு சென்றுவிட..
“எங்களுக்கும் எங்க பையனுக்கும் உங்க பொண்ணை ரொம்பவே பிடிச்சிருக்கு. அதனால் நிச்சயம் அது இதுன்னு நாளை தள்ளிபோடாம, ஒரே வேலையா கல்யாண தேதியையே முடிவு பண்ணிடுவோம்” என பளிச்சென்று கூறினார் லட்சுமி.
அதில் மகிழ்ந்த ரூபிணியின் தந்தை, “ரொம்ப சந்தோசங்க. நீங்க என்ன முடிவு பண்றீங்களோ அதுபடியே பண்ணிக்கலாம். ஆனா உங்க வசதிக்கு, எங்களால சீர் செனத்தி செய்ய முடியாது. அதுக்காக எங்க பொண்ணை சும்மாவும் அனுப்ப மாட்டோம்” என்று கூற…
“சம்மந்தி நீங்க எதுவும் செய்ய வேண்டாம். எங்க பையன் தெளிவா சொல்லிட்டான். வரதட்சணைனு எதுவும் வேண்டாம்னு….. எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிறோம், சரிங்களா” என்ற சிவம் குடும்பத்தினர், அனைத்தையும் பேசி முடித்துவிட்டு, மகனின் திருமணம் பற்றி எண்ணியபடியே… மகிழ்ச்சியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
இவர்களின் மகிழ்ச்சி நிலைக்காது என்பது தெரியாமல்.
தொடரும்…
ஸ்டோரி எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க வாசகர்களே
