முரடன் 5

பகுதி 5

 

மகனின் திருமணம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த லட்சுமி.. அவருடைய உடன்பிறந்தோர்,  சுற்றம், சொந்தம் பந்தம் என அனைவரிடமும், அதை பகிர்ந்து கொண்டார்.

 

தகவல் அறிந்த அனைவரும்  “ஏன் லட்சுமி.. பையனுக்கு பொண்ணு பாக்க போனதைபத்தி, ஒரு வார்த்தைகூட எங்ககிட்ட சொல்லவேயில்ல” என  சடைத்துக் கொள்ள.. 

 

“பாத்துட்டு வந்து எல்லாம் முடிவானதுக்கு அப்புறம், எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னுதான் சொல்லலை. தப்பா எடுத்துக்காதீங்க” என அவர்களை சமாளித்தார் அவர்.

 

ஒருவருக்கு‌ தெரிந்தாலே ஊரெல்லா பரவிடும் எனும்போது.. இப்படி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால், என்ன ஆகும்.  இதோ பைரவனின் திருமண விவரம் காட்டு தீ போல் பரவி.. அவனின் அத்தையின் காதிற்கும் சென்று சேர..

 

“என் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டு, வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிடுவானா அவன். இல்லை நான்தான் இந்த கல்யாணம் நடக்க விட்டுவிடுவேனா” என சூழுரைத்தவர்.. மணப்பெண்ணின் தகவல் அனைத்தையும் சேகரித்தார்.

 

இங்கே  இப்படி என்றால், இதையறிந்த வைரமோ.. உயிரே போவது போல் வலியில் துடித்தாள் . “இனி தன்னவன் தனக்கில்லை, வேறொருத்திக்கு சொந்தமாக போகிறான்”  என எண்ணி கண்ணீரில் உழன்றவள்.. “அவன்  இல்லாத இந்த வாழ்வை வாழ்ந்து,  இனி என்ன செய்ய போகிறோம்” என்றே யோசிக்கத் தொடங்கினாள்.

 

 

தோழியின் கண்ணீர் தோய்ந்த முகம் கண்டு கவலையடைந்த யாதவி.. எதற்கும் ஒருமுறை பைரவனை  சந்தித்து, அவள் காதலை சொல்லுமாறு கூற..

 

“அப்போவே என்னை வேண்டாம்னு சொன்னவர்..‌ இப்போ  பொண்ணு பாத்து,  கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ண பிறகு.. நான் போய்  சொன்னா ஏத்துக்குவார் நினைக்கிறியா யாது. சொல்லபோன இன்னும் கேவலமாதான் என்னை பார்ப்பாரு” என அழுது கரைந்தவளை, அரவணைத்துக் கொண்டாள் யாது.

 

இப்படியே சரியாக உண்ணாமல், உறங்காமல் பைரவனை பற்றியே எண்ணிக் கொண்டு.. உடல் தோய்ந்த மகளை கவனித்த ஏகாம்பரம்.. அவளிடம் பேசியே தீர வேண்டும் என்று முடுவெடுத்தார்.

 

அன்று மாலை அலுகத்திலிருந்து களைத்து போய் வந்தவளிடம்.. “வைரோ, ஃப்ரஷாகிட்டு வா. நீயும் நானும் கொஞ்சம் வெளியில போயிட்டு வருவோம்” என்றார்.

 

 

வைரம்.. “அப்பா ஐ அம் வெரி  டையர்ட்.  இன்னொரு நாளைக்கு போலாமே” என்றிட.. 

 

“அப்போ ஒரு ஹாஃப்னவர் ரெஸ்ட் எடு. அப்றம் போகலாம்” என்றார் அவர். 

 

“ப்பா” என்ற வைரம்.. “ஐ கான்ட்.. நீங்க அம்மாவை கூட்டிட்டு போங்கப்பா” சலிப்பாக கூறியவளிடம்…      

 

இன்று என்ன ஆனாலும் உன்னை விடப் போவதில்லை மகளே என்று எண்ணிய ஏகாம்பரம்.. “ஏண்டா, நீ அப்பாகூட  வரமாட்டியா.. ஃபிரண்ட்ஸ்,  ஆஃபீஸ் கொலீக்ஸ் கூட மட்டும்தான் போவியா. இந்த அப்பா  அவ்வளவு அந்நியமாயிட்டனா டா” என்றார்.

 

உடனே “ச்சே, ச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா,  டையர்டா இருந்ததா.. அதான் அப்படி சொன்னேன்… சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, ரெடியாயிட்டு வந்துடறேன்” அறைக்குள் நுழைந்தவள், 15 நிமிடத்தில் தயாராகி வந்திருந்தாள்.

 

உடனே “வா போகலாம்” என மகளின் விரல்களை பற்றிக் கொண்டு வெளியேறிய தந்தையிடம்.. “அப்பா.. அம்மா  வரலையா” எனக் கேட்க…

 

“அவ கோயிலுக்கு போய் இருக்காடா. வர லேட் ஆகும்னு சொல்லிட்டுதான் போனா.  அதனால நாம மட்டும் போறோம்” என்றவர்,அவரது நான்கு சக்கர வாகனத்தை இயக்கினார்.

 

தந்தையுடன் வாகனத்தில் ஏறி அமர்ந்தவள், அமைதியாக வர.. “ இன்னிக்கு மழை வரும்னு நினைக்கிறேன்” என்றார் ஏகாம்பரம்.

 

அதற்கு வைரம்.. “வெயில் இந்த கொழுத்து கொழுத்துது.  அப்புறம் எங்கிருந்து ப்பா  மழை வரும்” வைரம் கூற..

 

“இல்லடா.. எப்போவும் வண்டியில ஏறுனதும் பேச ஆரம்பிச்சா,   இறங்குற வரையிலும்.. லொடலொடன்னு பேசிக்கிட்டே வர   என் பொண்ணு..‌  இன்னைக்கு அமைதியா வராலே, அதனால மழை வரும்னு சொல்றேன்” என மகளை கேலி செய்து சிரித்தார் அவர்.

 

அதை கேட்டு மெல்லிய புன்னகையை சிந்தியவளிடம்.. “என்னடா அப்பா கடி ஜோக் சொல்லி கடுப்படிக்கிறேனா” என்றார்.

 

“இல்லப்பா” என்ற வைரத்தின் கண்கள் ஜீவனற்று வெளியே வெறிக்க..

 

“என்னாயிற்று இவளுக்கு” என்று யோசித்த ஏகாம்பரம்.. சற்று நேரம் பொறு மனமே என்று தனக்குள் கூறிக்கொண்டே, அவ்வப்போது தாங்கள் வந்துபோகும் பூங்காவிற்கு வந்து சேர்ந்தார்.

 

“அப்பா, எப்பவும் தம்பி வந்தாதானே இங்க வருவோம்.  அவன்தான் இல்லையே. அப்றம் எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க” என்றாள்.

 

வைரத்தின் தம்பி முத்து,  சென்னையில் பிரபலமான மருத்துவக் கல்லூரியில்.. மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று கொண்டிருக்கிறான். 

 

இது ஒரு தனியார்  பூங்கா.  ஐந்து வருடத்திற்கு முன்புதான் திறந்தது என்பதால் அவன் இருக்கும் பொழுது அடிக்கடி இங்கே வருபவர்கள்.. அவன் சென்னை சென்ற பிறகும்.. எப்போது அவன் ஊருக்கு வருகிறானோ..  அப்போது மட்டுமே இந்த  பூங்காவிற்கு வந்து செல்வார்கள்‌. 

 

ஆனால் இன்று தம்பியின்றி இங்கு வந்ததால் வைரம் அப்படி கேட்க..

 

 

“ஏன் உன் தம்பி ஊரிலிருந்து வந்தா மட்டும்தான் இங்கு வரணுமா,  இல்லன்னா வரக்கூடாதா……‌    எனக்கு இங்க வரணும் போல தோணுச்சு.  அதனாலதான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்” என்றவர், வாகனத்தை நிறுத்திவிட்டு மகளுடன் பூங்காவிற்குள் நுழைந்தார். 

 

 

மாலை நேரத்து மிதமான தென்றல் காற்றின் வருடல்.. அழகழகான வண்ண மலர் செடிகள்.. உயரமான தேக்கு மரங்கள்.. அங்காங்கே  செயற்கை நீர் ஊற்றுக்கள்… சிறு சிறு கடைகள் என அனைத்தும்  அமைத்து,  விஸ்தாரமாக பறந்து விரிந்திருந்த பூங்காவில்..   கல் மேடையில் ஜோடி ஜோடியாக  அமர்ந்திருந்த மக்கள்… பேசியபடியும்,  தங்கள் குழந்தைகளுடன் விளையாடிபடியும்  இருக்க..   ரம்யமான அந்த சூழ்நிலை வைரத்தின் மனதிற்கு சற்று இதமாக இருந்தது.

 

சற்றுநேரம் இவற்றையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டே மகளுடன் நடந்த ஏகாம்பரம்.. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போடப்பட்டிருந்த ஒரு கல் மேடையில் அமர.. வைரமும் தகப்பனுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

கைபையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து,  தந்தைக்கு கொடுத்து விட்டு.. தானும் ஒரு வாய் பருகியவளுக்கு.. ஏகாம்பரம் கேட்ட கேள்வியில் புறையேறிவிட்டது.

 

“யாரு ம்மா அந்த பையன்” என்ற கேள்வியில், தொண்டைக்குள் இறங்கிய  மொத்த நீயும் வெளியேற இருமியவளின் தலையில் மெதுவாக தட்டி விட்டவர்..

 

“அம்மாடி, நீ யாரையோ மனசுல வச்சுக்கிட்டு மறுகுறேனு இந்த அப்பாவுக்கு  நல்லா தெரியுதுடா. ஆனா அது  ஏன்னுதான் தெரியல” என்றவர், மகளை அன்பாக பார்த்தார்.

 

வைரம்..‌ “அப்பா..  நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமி” அவள் பேசி முடிக்கும் முன்னே..

 

“ஏண்டா, நான் எப்பவாவது மத்த அப்பாங்க மாதிரி உங்ககிட்ட நடந்திருக்கேனா, சொல்லு.  ஒரு ஃப்ரண்டு மாதிரிதானே உங்ககிட்ட நடந்திருக்கேன்.‌ அப்புறம் ஏன் அப்பாகிட்ட இதை  மறைக்கிற” என்றார் வருத்தமாக.

 

உடனே வைரம், தந்தையின் தோள் சாய்ந்து கண்ணீர் விட.. 

 

“வைரம்… அம்மாடி எதுக்குடா அழுகுற”  மகளின்  கண்ணீரை  துடைத்தவருக்கு..  உயிரே துடித்தது. 

 

எதற்கும் கலங்காத தன் மகளை ஒருவன் அழ வைத்ததை எண்ணி கோபமடைந்த ஏகாம்பரம்…

 

“அந்தப் பையன் உன்னை லவ் பண்ணி ஏமாத்திட்டானா, அதான் அப்பாட்ட சொல்ல மாட்டிக்கிறியா….  சொல்லு…. அவன் யாருனு சொல்லு., இப்பவே அவனை உன் காலடியில் கொண்டு வந்து போட சொல்றேன்” என்று ஆத்திரமாக கூறினார்.

 

“ப்பா, அப்.. அப்படி எ.. எதுவும் இல..‌இல்லப்பா” திக்கி திணறியவளை  முறைத்தவர்..

 

“இன்னும் எதுக்கு என்ட்டருந்து மறைக்கிற வைரம். உண்மையை சொல்லு” என்றார் கோபத்திலும் மகளிடம் குரல் உயர்த்தாமல். 

 

இனி எதையும் தந்தையிடம் மறைக்க முடியாது என்று உணர்ந்த வைரம்..  கையில் இருந்த நீரை மீண்டும் பருகி  தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள்..

 

“அப்பா நெஜமாவே நீங்க சொன்ன மாதிரி, யாரும் என்னை லவ் பண்ணி ஏமாத்தலை” என்று கூற..

 

“அப்புறம் ஏன் நீ கொஞ்ச நாளாவே ஒரு மாதிரியா இருக்க” என்றார்.

 

“அது வந்து ப்பா….  தயங்கியவள்..  நான் ஒருத்தரை லவ் பண்ணேன்.‌ அதை அவர்ட்ட சொன்னபோ,  அவருக்கு என்மேல அப்படி எந்த எண்ணமும் இல்லைன்னு சொல்லிட்டாரு. அதான் லைட்டா டிஸ்டர்ப் ஆகிட்டேன்.  கொஞ்ச நாள் போனா எல்லாம் மறந்து,  நார்மல் ஆயிடுவேன்பா. அது வரையும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க” என்றவள், அவனின் திருமண விஷயம் பற்றி கூறவேயில்லை.

 

ஒருவேளை தான் அவரிடம் இதைப் பற்றி கூறினால்..  எங்கே அவனைக் கண்டுபிடித்து, அவனது திருமணத்தை நிறுத்தி விடுவாரோ என்று பயந்தவள் அதைக் கூறாமல் விட்டுவிட்டாள். 

 

ஆனால் விதியும் அப்படி விட்டுவிடு விரும்ப வேண்டுமே‌.  

 

 

மகள்  கூறியதை கேட்டு மனம் நொந்தவர்… “அந்தப் பையன் யாருன்னு சொல்லுமா. நான் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன்” என்று கூற..

 

“வேண்டாம்  ப்பா…. அவங்க அப்பா அம்மாவுக்காக, அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். அதுமில்லாம  இது… ஜஸ்ட் ஒன் சைடு லவ்.   கொஞ்ச நாள்ள நானே எல்லாம் மறந்து சரியாகிவேன்  விடுங்க” என்ற வைரத்திற்கு தெரியும்..  கண்டிப்பாக தன்னால் அவனை மறக்கவே முடியாது என்று.

 

ஏகாம்பரம்…“சீரியஷாதான் சொல்றியாடா. கண்டிப்பா அவனை  மறந்துட்டு,  மூவான் ஆகிட முடியும்தானே” என தவிப்பாக கேட்க..

 

அவரின் கைகளை பற்றிக் கொண்டவள்.. தன் வலியையும், கண்ணீரையும்  தனக்குள் மறைத்து கொண்டு… “ஆம்” என  கூறிவது போல் கண்களை மூடித் திறந்தாள்.

 

ஒரு வருடமா,  இரண்டு வருடமா கிட்டத்தட்ட எட்டுவருட காதல். அதை எப்படி அவ்வளவு சாதாரணமாக அவளால் மறக்க முடியும்.

 

ஆனால் தன் தந்தையை சமாதானப்படுத்துவதற்காக அப்படி கூற.. மகளை அணைத்துக் கொண்ட ஏகாம்பரம்.. 

 

“ஆண்டவா.. எந்த காலத்திலும் என் பொண்ணை பிடிக்கலனு சொன்னவனை,  என் கண்ணுல காட்டிடாதே.  ஒருவேளை அப்படி அவனை நான் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துட்டா… அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாளான இருக்கனும்” என ஆத்திரமாக நினைத்துக் கொண்டார்.

 

ஆனால்,  தானே அவனை மணந்துக் கொள்ள கூறிப் போகிறோம் என்பது..  அப்போது அவரே அறிந்திடாத ஒன்று. 

 

 

 

பிறகு இருவரும் அந்த பூங்காவில் சற்றுநேரம் உலவி விட்டு வீடு திரும்ப…

 

அங்கே அவரின் மூத்த மகள் தங்கமும், ஆசை பேரன் அகிலனும்.. இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

 

 

அவர்களை பார்த்ததும்.. அன்பாக அணைத்துக் கொண்ட ஏகாம்பரத்திடம்..‌

 

“அப்பா, நானும் தம்பியும் இல்லாததால,   இவளை மட்டும் கூட்டிட்டு ஜாலியா ஊர் சுத்துறிங்களா நீங்க” என மல்லுக்கு நின்றவள்..

 

“அம்மா, எல்லாம் உங்களாலதான்” என்று தாயிடம் பாய்ந்தாள்.

 

“நான் என்னடி பண்ணினேன்” விஜயா மகளிடம் கேட்க…

 

“கல்யாணம் இப்போ வேணான்னு சொன்னவளை கன்வீன்ஸ் பண்ணி, கட்டி  வச்சது நீங்கதானே. நீங்க மட்டும் அப்படி பண்ணாம  இருந்ததிருந்தா..  இன்னேரத்துக்கு நானும் இப்படி ஜாலியா அப்பாகூட  சுத்திட்டு இருந்திருப்பேன்ல” என்றவள்.

 

“இப்போ பாருங்க..   இப்படி குழந்தையை வச்சுக்கிட்டு சுத்த வேண்டியதா இருக்கு” என சலித்துக் கொண்டாள்.

 

உடனே வைரம்.. “தங்கா, நீ வேணா குழந்தையை என்கிட்ட விட்டுட்டு..  ஜாலியா மாமாகூட ஊர் சுத்து.  யார் வேண்டாம்னு சொன்னது” என்றவள், தன் மகனை தூக்கி கொஞ்சினாள்.

 

“ம்க்கும், உங்க மாமாதானே அப்படியே  கூட்டிட்டு சுத்திட்டாலும்” நொடித்துக் கொண்டவள்.. 

 

“அவர் எப்பவும் அவருடைய பிசினஸோட சுத்துவார்.  அதை அடுத்து அவரோட ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்துவார். எங்கூட சுத்தறதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லை” என்றவள்.. “இப்போ கூட அவரோட ஃப்ரண்டு பைரவன் மேரேஜ் விஷயமாதான் எங்கேயோ சுத்திட்டிருக்காரு” என்றாள்.

 

அதை கேட்ட வைரத்தின் இதழிலிருந்த புன்னகையோ.. அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றிருந்தது. 

 

 

     தொடரும்…

 

 

ஹாய் வாசகர்களே.. ஸ்டோரி எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க. கதையோட நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. மாத்திக்கிறேன்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page