முரடன் 9

      பகுதி 9

 

“ப்ளீஸ் வைரம்..  தயவு செஞ்சு இப்படி இருக்காத, என்னால உன்னை இப்படி  பாக்கவே முடியல.  உடனே முடியலனாலும் கொஞ்சம் கொஞ்சமாவது அதிலிருந்து வெளியில வர முயற்சி பண்ணுடி” என தோழிக்கு அறிவுரை கூறிய யாதவியை வேதனையாக பார்த்தவள்…

 

“ உனக்கு என்னை எவ்வளவு நாளாடி தெரியும்”..  என கேட்க.. 

“ ஏய், நான் என்ன சொன்னேன், நீ என்ன கேக்குற” என்றாள் அவள்.

“கேட்டதுக்கு பதில் சொல்லு.. யாது”  என்ற தோழியிடம்….

“ ஃபோர் அண்ட் ஆப் இயர்ஸா தெரியும்” என யாதவி பதில் கூறினாள்.

 

“ நாலரை வருஷமா ஃப்ரண்டா இருக்கறவளையே..  உன்னால இப்படி பார்க்க முடியலையே..   10 வருஷமா.. நான் உயிருக்கு உயிரா நேசிச்சவர்,  இன்னொருத்திக்கு சொந்தமாக போறதை.. என்னால எப்படி  யாது தாங்கிக்க முடியும்”.. என கண்ணீர் வடித்தவள்.. “ அவர நான் நினைக்காம இருக்கணும்னா, அதுக்கு என் மூச்சு நிக்கணும் யாது… அப்பதான் அது நடக்கும்” என்றாள்.

“10 வருடக் காதலா”  என   வியப்படைந்த யாதவி… “டைமண்ட்,  என்னடி சொல்ற, பத்து வருஷமா லவ் பண்றியா”….   என்றவள், “நாலு வருஷமே அதிகம்னு,   நான் நினைச்சிடிருக்கேன். இவ என்னடானா பத்து வருஷம்னு குண்ட தூக்கி போடுற” என மனதில் நினைத்தவள்,   அவள் மனம் இப்போது என்ன பாடுபடும் என்பதை எண்ணி கவலையடைந்தாள்.

 

யாதவி..  “உன் நிலைமை என்னால புரிஞ்சுக்க முடியுதுடி.  ஆனா நீ   இப்படி சரியா சாப்பிடாம, தூங்காம  அழுதுட்டே இருக்கறதால மட்டும்  ஏதாவது மாறப்போகுதா சொல்லு… நம்ம கையை மீறி போன ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டு,  நேரத்தை வீணாக்குறத விட, அடுத்து என்னனு யோசிச்சு நகர்ந்து போறதுதான் நமக்கு நல்லது டைமண்ட்,  புரிஞ்சிக்கோ” என்றாள்.

“நீ சொல்றதும் சரிதான்.. இனிமே எதுவும் மாறப் போறது இல்லை.. அப்படியே மாறினாலும் அவர் என்னை ஏத்துக்க போறதும் இல்லைதான். ஆனால், என்னால” என்ற வைரம் வாய் மூடி  கதற…

“டைமண்ட் ப்ளீஸ், காம்டவுன் டா.. யாராவது பாத்தா, தப்பா நினைக்க போறாங்க” என அவளை தேற்றிய யாதவி.. யாரும் கவனிக்கிறார்களா என கேட்டீனை சுற்றி பார்த்தாள். 

 

அப்போது அவர்களின் முன் வந்து நின்ற மோகன்.

 

“ஹே டைமண்ட், என்ன ஆச்சு… ஏன் இப்படி அழுதுட்டு இருக்க.. எதுவும் பிராப்ளமா… சொல்லு” என்றான்  பதட்டமாக.

உடனே கண்களை துடைத்துக் கொண்ட வைரம்… “ந.. நத்திங் மோகன்.. ப்ளீஸ்.. நீ” என்றவளின் பார்வையில் அவள் கூற வருவதை புரிந்து கொண்டவன்.. 

“நீயாவது சொல்லேன்” என யாதவியை பார்க்க.. அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளின் செயலில் சலிப்படைந்த மோகன்.. “இவளையெல்லாம்.. ம்ம்ம்ம்” பெருமூச்சுடன், அங்கிருந்து செல்ல…

“டைமண்ட், வா ஃபர்ஸ்ட் ரெஸ்ட் ரூம் போய் ஃபேஸ் வாஷ் பண்ணுவோம்” என்ற யாதவி, ஒரு முடிவுடன்.. அவளை அழைத்து சென்றிருந்தாள்.

                  *******

 

பைரவனுக்கு திருமண தேதி குறித்ததை பற்றிய விவரம் கூற.. தன் மைதுனன் குமரேசனுக்கு அழைப்பு விடுத்த  பரமசிவம், “ஹலோ..  குமரேசா நல்லா இருக்கியா” எனக் கேட்க..

“நான் நல்லா இருக்கே மாமா,  நீங்க எப்படி இருக்கீங்க.. லட்சுமி, பைரவன்,  கிருஷ்ணன் எல்லாம் எப்படி இருக்காங்க”  என்றார் அவர்.

 

“அந்த ஆண்டவன் புண்ணியத்துல, எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கோம். உடம்பெல்லாம் பரவாயில்லையா.. தங்கச்சி, பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க”  எனக் கேட்டார் சிவம்.

“எல்லாரும்  நல்லா இருக்காங்க மாமா” என்றவரிடம்…

 

“அப்புறம் கடையில வியாபாரம் எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு. நீ இப்போ கடையில்தான் இருக்கியா” என்றார் சிவம்.

“ஆமா மாமா, கடையில தான் இருக்கேன்.  வியாபாரமெல்லாம் சூப்பரா போயிக்கிட்டிருக்கு” என குமரேசன் கூற…

“ரொம்ப நல்லது”… என்ற சிவம்..   “ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், அதுக்குதான் போன் போட்டேன் மச்சான்” என்றார்.

“சொல்லுங்க மாமா.. என்ன விஷயம் என கேட்டவரிடம்…

பைரவனுக்கு,  பொண்ணுக்கும் ஜாதகம் பார்த்துட்டு வந்தாச்சு. பொருத்தமெல்லாம் நல்லா அமைஞ்சிருக்குனு ஜோசியர் சொல்லிட்டாரு…. கையோட கல்யாண தேதியும் குறிச்சிட்டு வந்துட்டோம் மச்சான்” எனக் கூறினார் சிவம்.

“என்ன மாமா சொல்றீங்க,   தேதி குறிச்சிட்டீங்களா.  ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை” என உரிமையாக குமரேசன் கேட்க…  

“ உனக்கு போன் போட்ட குமரேசா.. நீ எடுக்கவே இல்ல,  தங்கச்சிக்கும் போட்டே.. சவுண்டே போகல. அதனால்தான் சொல்ல முடியல… கோச்சுக்காதப்பா” என்றார் வருத்தமாக.

 

“என் ஃபோன் சைலன்ட்ல இருந்திருக்கும்.   காந்திமதியோட ஃபோன் டவர் கிடைச்சிருக்காதுனு நினைக்கிறேன்… சரி, பரவால்ல விடுங்க மாமா… இப்போ என்ன, நீங்க என்கிட்ட சொல்லியிருந்தா மட்டும் உடனே என்னால கிளம்பி வந்திருக்கவா முடியும்” என்றார்.

“நீ வரியா வரலையோ.,  ஆனா முதல்ல தாய்மாமனுக்கு தகவல் சொல்லணுன்றது தானே முறை” என்ற சிவத்திடம்…

“முறையா நீங்க சொல்லியிருந்தாலும், நான் வரக்கூடிய நிலைமையிலயா மாமா இருக்கேன். எல்லாம் ஏன் தலையெழுத்து” என கவலையாக கூறினார் குமரேசன். 

“சரி விடுப்பா..   எதுக்கு இப்போ அதெல்லாம்  பேசிகிட்டு” என்ற சிவம், திருமண தேதியையும் மற்ற விவரங்களையும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். 

அப்போது கடைக்கு வந்து குமரேசனின் மனைவி காந்திமதி… “யார்கிட்டங்க பேசிகிட்டு இருக்கீங்க” எனக் கேட்க..

“பரமசிவம் மாமாட்ட தான் பேசிகிட்டிருந்தேன் மதி” என்றார் அவர்.

“என்னவாம்” என முகத்தை சுளித்த மனைவியிடம்.. பரமசிவம் கூறியதைப் பற்றி  குமரேசன் விவரிக்க… 

கோபமான காந்திமதி,  “நல்லா இருக்குங்க உங்க தங்கச்சி பண்றது..   பொண்ணு பாக்கறதையும்  சொல்லல, கல்யாண தேதி குறிக்கறதையும் சொல்லல. இதுதான் ஒரு தாய் மாமனுக்கு  கொடுக்கிற மரியாதையா” என்றார்.

உடனே அவர்… “இப்ப எதுக்குடி இவ்வளவு கோவப்படுற,  உனக்குதான் என் பொறந்த வீட்டு ஆளுங்களை கண்டாலே ஆகாதே, அப்புறம் எதுக்கு அவங்க எனக்கு மரியாதை கொடுக்கணும்னு மட்டும் எதிர்பார்க்குற.  உன் பேச்சை கேட்டுதானே யாரும் வேண்டாம்னு.. எல்லாரையும் விட்டுட்டு வந்து, உன் ஊரிலேயே குப்பை கொட்டிட்டிருக்கேன். அப்ப அவங்க எனக்கு இந்த மரியாதையைத்தான் கொடுப்பாங்க”..  என்றவர்,  “சரி இப்ப சொல்லி இருந்தா மட்டும்…   உடனே வாங்க முதல்ல போய் உங்க தங்கச்சி பையன் கல்யாண வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துறலாம்னு சொல்லிருப்பியா, இல்லல்ல.  அப்புறம் என்ன அமைதியா இரு” என்று மனைவியை அடக்கியவர், வேலையை பார்க்கச் சென்றிருந்தார்.

“ம்கும்..  தங்கச்சிங்களை பத்தி எதுவும்  சொல்லிடக்கூடாது, உடனே எகிறிகிட்டு வந்துற வேண்டியது” என நொடித்துக் கொண்ட காந்திமதி… “இன்னிக்கு அந்த லட்சுமிக்கு இருக்கு” ‌என்று கறுவிக்கொண்டே வீடு நோக்கி புறப்பட்டார்.

 

பைரவனின் தாய் லட்சுமியுடன் பிறந்தவர்கள் இருவர்.  அதில் குமரேசன் தான் மூத்தவர். இரண்டாவது பார்வதி,  லட்சுமி மூன்றாவது.

 

பார்வதி, லட்சுமிக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் குமரேசன், காந்திமதியை திருமணம் செய்து கொண்டார்.

குமரேசனுக்கும், காந்திமதிக்கும் திருமணமான சிறிது காலத்திலேயே காந்திமதிக்கு, குமரேசனின் பொற்றோருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதனால்,   காந்திமதி தனி குடித்தனம் சென்றால்தான்  அவருடன் வாழ்வேன் என்றும்,  அதுவும் தனது ஊரான ஓசூர்க்குதான் செல்ல வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறிவிட.. மகனின் மகிழ்ச்சியான வாழ்வே முக்கியம் என்று உணர்ந்த குமரேசனின் தாய் தந்தை இருவரும்.. குமரேசனை காந்திமதியுடன் தனி குடித்தனம் அனுப்பியிருந்தார்கள். 

குமரேசனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்றாலும் பெற்றோரின்  வார்த்தைக்கிணங்கி, மனைவியுடன் ஓசூர் வந்தவர்.. அங்கேயே சிறிய மளிகை கடை ஒன்றை தொடங்கி, தனது உழைப்பால், அதை இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாற்றியிருந்தார்.

குமரேசனின் தாய் தந்தை இறந்து ஐந்து வருடங்கள் கடந்து பிறக்கும், காந்திமதி குமரேசனின் உடன்பிறந்தோருடன், பெயரளவிற்கு மட்டுமே தொடர்பு வைத்துக்கொண்டார்.

அப்படியிருக்க… இப்போது தாய் மாமனுக்கான மரியாதையை மட்டும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று எண்ணினார் குமரேசன்.

 

ஆனால் காந்திமதி அப்படி நினைக்க வேண்டுமே.  வீட்டிற்கு சென்றவர்.. முதல் வேலையாக லட்சுமிக்கு ஃபோன் செய்து, முறையாக தங்களிடம் எதுவும் கூறவில்லை என குதித்தார்.

“என்ன அண்ணி, இப்படி சொல்லிட்டீங்க..  நான் போய் அப்படியெல்லாம் நினைப்பேனா, எனக்கும் இதெல்லாம் நீங்க முன்னாடி நின்னு செய்யணும்னு தான் ஆசை.   ஆனா நீங்கதான் தூரமா இருக்கீங்களே, நினைச்ச நேரம் டக்குனு வர முடியுமா.   அதனாலதான் நாங்க மட்டும் போக வேண்டியதாயிடுச்சு” என்று லட்சுமி கூற…

“நீ என்ன சொன்னாலும் சரி, நான் ஒத்துக்கவே மாட்டேன் லட்சுமி…. பொண்ணு தான் சொல்லாம கொள்ளாம.. பாத்துட்டு வந்தீங்கன்னா..இப்போ கல்யாண தேதியையும் எங்ககிட்ட சொல்லாமலே குறிச்சிட்டு வந்திருக்கீங்க,  இதுதான் நீங்க ஒரு தாய் மாமனுக்கு கொடுக்கிற மரியாதையா. பெருசா அண்ணா அண்ணன்னு பேசுறிங்க. ஆனால் அண்ணனுக்கு ஒரு வார்த்தை சொல்லன்னு கூட தோணலையே” என்றார், கோபமாக.

 

உடனே.. “ஐயோ அண்ணி.. உங்கிட்ட சொல்றதுக்கு தான் ஃபோன் பண்ணினோ” என்ற லட்சுமி.. முழுதாக கூறி முடிக்கும் முன்..

“என்ன சொன்னா உங்க அண்ணன் நம்புவார்னு தெரிஞ்சி,  அவர்கிட்ட சொல்ற விதத்துல சொல்லியாச்சு.  இதுக்கு மேல நான் சொல்றதா எடுபட போகுது. ஏதோ சொல்றிங்க..  நாங்களும் அதை நம்புறேன்” என நொடித்து கொண்ட காந்திமதி..‌  “தேதி என்னைக்கு குறிச்சிருக்கீங்க” என்றார், ஒன்னும் தெரியாதது போல்.

“கல்யாண தேதி வைகாசி 15 வச்சிருக்குங்கண்ணி” என மகிழ்ச்சியாக லட்சுமி கூற… 

 

“அப்படின்னா.. இன்னும் ஒருமாசம்தான் இருக்கா.. இப்படி திடுதிப்புன்னு வச்சா எப்படி லட்சுமி..  நாங்களும் சீர் செனத்தியெல்லாம் பண்ணனுமே..  தங்கம் என்ன கொஞ்ச நஞ்ச வெலையா விக்குது..  நாள் கொஞ்சம்  தள்ளி வெச்சி இருக்கலாமில்ல” என்றார் ஆதங்கமாக.

“அது வந்து அண்ணி…  இன்னும் மூணு மாசத்துல பைரவனுக்கு  கல்யாணம் நடக்கலைன்னா..‌ மூணு வருஷம் தள்ளி போய்டுன்னு ஜோசியர் சொன்னாரு.  அதனாலதான் சீக்கிரம் வெச்சிட்டோம்”‌‌ என்றவர்..‌ “உங்களால் என்ன முடியுதோ அதை மட்டும் பண்ணுங்க அண்ணி” என்று கூறினார்.

“ஆமா… உனக்கென்ன நீ சொல்லிருவே.. ஆனா சொந்த பந்தம் சும்மா விடுமா.. ஒரு தங்கச்சி பொண்ணு கல்யாணத்துக்கு ரெண்டு பவுன் சீர் செஞ்சிட்டு,  இந்த தங்கச்சி பையன் கல்யாணத்துக்கு மட்டும் கம்மியா செய்றாங்கன்னு பேசாது” என்ற காந்திமதி.. “எப்படியோ செஞ்சி தான் ஆகணும்”…. என பெருமூச்சி விட, வருத்தமடைந்த  லட்சுமி அமைதியாக இருந்தார். 

 

“என்ன சத்தத்தையே காணோம்.. நான் சொன்னதும் கோவம் வந்துருச்சா” என்றவரிடம்.. “அப்படி எல்லாம் இல்லை அண்ணி” என லட்சுமி கூற.. “சரி….  எத்தனை பொருத்தம் பொருந்தியிருக்கு” எனக் கேட்டார் காந்திமதி.

“பத்துக்கு… ஏழு பொருத்தம்  சரியா இருக்காம் அண்ணி. அதுவும் முக்கியமான பொருத்தம் நல்லவே அமைஞ்சிருக்குன்னு ஜோசியர் சொன்னார்” லட்சுமி கூறிய அதேநேரம்… 

“இவன்…  அன்னைக்கு கடையில பார்த்தோமே..  அவன்தானே” என தோழியிடம் கூறிய ரூபிணி.. “அவங்க அத்தை சொன்ன மாதிரியே சரியான ரவுடியதான் இருப்பான் போல. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, எதிர்ல இருக்குறவனை என்ன அடி அடிக்கிறான் பாரு” என்றாள், தெருவில் ஒருவனை அடித்து கொண்டிருந்த பைரவனை பார்த்து.

 

  தொடரும்…

தாமதத்திற்கு மன்னிக்கவும்…. இனி தொடர்ச்சியாக அத்தியாயங்கள் பதிவிடப்படும்

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page