மொழி – 10

அவரின் வார்த்தையில் இந்து அவரை அதிர்ந்து பார்க்கவும்.

அவளின் பார்வையை உணர்ந்தவர், “ஆமா, என் பொண்ணு இருந்திருக்க வேண்டிய இடம் தானே.. யஷ்வந்துக்கு என் பொண்ண குடுக்கணும்னு எனக்கும் அவருக்கும் கொள்ள பிரியம். என்ன பண்றது எல்லாம் நம்ம கைலயா இருக்கு” என்று அவர் இந்துவின் அறைக்குள் பேசிக் கொண்டிருக்கவும், வெளியே சலசலப்பு சத்தம் உள்வரை கேட்டது.

“என்ன மாமா இதெல்லாம்? என்ன இப்படி சொல்றீங்க நீங்க?” என்ற சேரன் எழுந்து நின்று விடவும்.

சமையலறையில் அனைவருக்குமாக சமைத்துக் கொண்டு இருந்தார் பரமேஸ்வரி. அவருக்கு உதவி புரிந்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. 

இருவரும் என்னவோ, ஏதோ என்று அப்படியே போட்டுவிட்டு வெளியே வேகமாக வந்து சேர்ந்தனர்.

சேரன் புரியாத பார்வையோடு அதிர்ச்சியாக எழுந்து நின்று இருந்தான். 

திருமூர்த்தி அடுத்து என்ன என்பது தெரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். 

யஷ்வந்த் தன் முகத்தில் அதிர்ச்சியை அப்பட்டமாக தாங்கியவாறு விழி விரித்து நின்றிருந்தான்.

முகம் கோபத்தில் ஜிவ்ஜிவ்வென்று சிவந்து போய் கண்களிலும் சிவப்பேற. கோபமாக சிலுப்பிக்கொண்டு நின்றிருந்தார் அய்யனார்.

அறைக்குள் இருந்த அனைவரும் கூட இவர்களின் சத்தத்தில் கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“என்னாச்சு சேரா ஏன் இப்படி கத்துற?” என்ற பரமேஸ்வரியை பார்த்தவனுக்கு வார்த்தைகளே எழவில்லை. 

இதை எப்படி தன் தாயிடம் கூற முடியும்? அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? என்று எண்ணியவனின் விழிகள் பவித்ராவில் படிய.

தன் மாமா கூறியதை அவனால் நிச்சயம் நம்பவே முடியவில்லை.

பவித்ரா ஒன்றும் புரியாமல் அதிர்ந்து நிற்கும் யஷ்வந்தை பார்த்தாள். 

அவனின் முகமோ அத்தனை அதிர்ச்சியை தாங்கி நின்றது. 

வேகமாக அய்யனாரின் அருகில் வந்து நின்ற அவரின் மனைவி காஞ்சனா அவரின் கையை பற்றியவாறு, “என்னங்க என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு கோவமா இருக்கீங்க?” என்றார் படபடப்பாக.

என்னவோ ஏதோவென்று தவிப்பாக நின்றிருக்கும் பவித்ராவை ஏளனம் பொங்க இகழ்ச்சியான பார்வை பார்த்த அய்யனார், “இந்த பொண்ண உன் மருமவன் எங்க இருந்து கூப்பிட்டு வந்திருக்கான்னு தெரியுமா?” என்றார் எள்ளலாக. 

“என்னண்ணா என்ன பிரச்சனை?” என்ற பரமேஸ்வரிக்கும் எதுவோ சரியில்லை என்று பதட்டம் தொற்றிக் கொண்டது. 

அனைவரும் ஒவ்வொரு மனநிலையோடு பதட்டமாக அய்யனாரை பார்த்துக் கொண்டு நின்றனர்.

“என்னங்க சொல்றீங்க எங்களுக்கு ஒண்ணுமே புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்” என்ற காஞ்சனாவிற்கு பொறுமை காற்றில் கரைந்துப் போய் இருந்தது.

“இது.. இந்த பொண்ணு நல்ல பொண்ணே கிடையாது காஞ்சனா! அந்த மாதிரி இடத்துல இருந்து வந்த பொண்ணு” என்று தன் முகத்தை சுழித்துக்கொண்டு அருவருப்பாக பேசினார்.

பவித்ராவிற்கு மூச்சே நின்றுவிட்ட உணர்வு. தன் மூச்சை இழுத்து பிடித்தவள் சுவாசிக்கவே மறந்து போய் அப்படியே சிலை என ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

“என்னங்க ஒன்னும் புரியல. அந்த மாதிரி இடத்துல இருந்துன்னா.. என்ன சொல்ல வரீங்க?”.

அனைவருக்கும் எதுவும் தெளிவாக புரியாவிட்டாலும், எதுவோ சரி இல்லை என்பது மட்டும் நன்கு விலங்கியது.

“மாமா!” என்று யஷ்வந்த் அவசரமாக குறுக்கே வரவும்.

“நீ கொஞ்சம் சும்மா இரு. காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கன்னு சொன்னதும், நம்ம பொண்ணு இருக்க வேண்டிய இடத்துல வேற எதோ ஒரு பொண்ணு இருந்தாலும், உன் மனசுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொன்னியேன்னு சந்தோஷப்பட்டேன். உனக்கு போயும் போயும் இப்படி ஒரு பொண்ணு தான் கிடைச்சாளா? இவளுக்கு என் பொண்ணு எந்த விதத்தில் குறைஞ்சு போயிட்டா?” என்று ஏத்தமாக கேட்டிருந்தார்.

“மாமா..!” என்றவனின் வார்த்தை அந்த வீடே அதிரும் வண்ணம் அத்தனை கர்ஜனையாய் வெளிவந்திருந்தது.

யாருமே யஷ்வந்திடமிருந்து இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

பவித்ராவின் மேனி யஷ்வந்தின் கர்ஜனையில் ஒரு நொடி தூக்கி வாரிப் போட்டது.

வேகமாக யஷ்வந்தின் அருகில் வந்த பரமேஸ்வரி, “என்னாச்சு யாஷ் ஏன் இப்படி கோபப்படுற? என்னண்ணா இங்க என்ன நடக்குது? எங்களுக்கு ஒண்ணுமே புரியல. கொஞ்சம் தெளிவா தான் பேசுங்களேன்”.

“அம்மாடி பரமு, உம்மவன் எங்க இருந்து இவளை இழுத்துட்டு வந்து இருக்கான்னு தெரியுமா? தப்பான தொழில் பண்ற பொண்ணுங்க இருக்க இடத்துல இருந்து உன் மகன் இந்த பொண்ண இழுத்துட்டு வந்து இருக்கான். காதல், கல்யாணம்னு ஏதேதோ கதை சொல்றான்.. நம்ம குடும்பம் எப்படிப்பட்ட கௌரவமான குடும்பம்? நம்ம குடும்பத்துல இப்படி ஒரு மருமகளா? சொல்லவே எனக்கு வாய் கூசுது. இவ தப்பான தொழில் பண்ணுறவமா.. ஒழுக்கம் கெட்டவ..” என்று தன் பற்களை கடித்துக்கொண்டு ஆத்திரத்தோடு கூறினார்.

அவருக்கு எங்கே தங்கை மகனின் வாழ்க்கையை பொய்க் கூறி இவள் பாழாக்கி விட்டாளோ என்ற ஆதங்கம். அதன் வெளிப்பாடே இந்த கண்மண் தெரியாத கோபம்.

“ஏய்! என்ன சொல்லி நடிச்சு எங்க யஷ்வந்தை ஏமாத்தின? உன்ன மாதிரி ஒரு தொழில் பண்றவளுக்கு காதல், கல்யாணம், குடும்பம் தான் ஒரு கேடா? அப்படி உனக்கு கட்டிக்கணும்னு ஆசை இருந்தா வேற எவனையாவது கட்டிக்கிட்டு போய் தொலைய வேண்டியது தானே? எங்க குடும்பத்துடைய பாரம்பரியமும், கௌரவமும் என்னனு உனக்கு தெரியுமா? உன்ன போல ஒரு அசிங்கத்தை ஒருநாளும் இந்த வீட்டுக்கு மருமகளா நாங்க ஏத்துக்கவே மாட்டோம். முதல்ல வீட்டை விட்டு வெளியே போ!” என்று வார்த்தைகளை கடித்து துப்பினார்.

தன் உடையை இறுகப் பற்றியிருந்த பவித்ராவிற்கு அங்கே அனைவரின் முன்னிலையிலும் நிற்கவே உடல் கூசியது.

அதிலும், அனைவரின் பார்வையும் அவளை ஊசியென துளைத்து சல்லடையாக்க.. கூனிக் குறுகி நின்றிருந்தாள்.

திருமூர்த்தி, “மச்சான்!” என்றிருந்தார் தவிப்பாக.

“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாப்ள. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நம்ம குடும்பத்துக்கு இவ மருமகளா? நிச்சயமா இவ யஷ்வந்தை ஏமாத்தி தான் கல்யாணம் செஞ்சு இருப்பா. நம்ம யஷ்வந்த் வெகுளி.. விவரம் தெரியாதவன்.. 

அதான் இவ பேசுற பேச்சை எல்லாம் நம்பி காதல்னு விழுந்திருப்பான். இவளோட உண்மை முகம் தெரியாம கல்யாணம் பண்ணி இருப்பான். இப்போ அதனால என்ன? அதான் இப்போ தெரிஞ்சிருச்சே.. இவளை இப்போவே அடிச்சு துரத்தி விட்டுட்டு யஷ்வந்துக்கும், திலகாவுக்கும் நம்ம கல்யாணம் பண்ணி வைப்போம்” என்று அவராகவே தீர்வையும் கண்டுபிடித்துவிட்டார்.

பவித்ராவிற்கு வாயையே திறக்க முடியவில்லை. 

இந்த நொடியே பூமி இரண்டாக பிளந்து தன்னை உள் இழுத்துக் கொண்டால் போதும் என்ற நிலையில் நின்றிருந்தாள்.

கண்கள் அருவியென கண்ணீரைப் பொழிந்த வண்ணம் இருந்தது. 

“போதும் மாமா! கொஞ்சம் நிறுத்துறீங்களா” என்று யஷ்வந்த் கத்தியதும் தான் அடங்கினார் அய்யனார்.

“மாப்ள இந்த பொண்ணு..”. 

“எனக்கு எல்லாம் தெரியும்!” என்று அவரைப் பார்த்து அழுத்தமாக கூறியவன். 

மற்ற அனைவரையும் அழுத்தமான பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் அய்யனாரைப் பார்த்து, “எனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னேன்! எல்லாம்னா.. எல்லாமே!” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தான்.

“என்ன.. தெரிஞ்சுமா இப்படி ஒரு பொண்ண..” என்று ஆவேசமாக மீண்டும் அய்யனார் துவங்கவும்.

அவரின் முகத்திற்கு முன்னே தன் ஒற்றைக் கையை நீட்டி பேச விடாமல் தடுத்தவன், “போதும்! ரொம்ப பேசிட்டீங்க! அவளை பத்தி எனக்கு தெரியும். ஆமா, அவ அந்த மாதிரி இடத்துல இருந்து வந்தவ தான்! ஆனா, அவ அந்த மாதிரி பொண்ணு கிடையாது! அவள பத்தி எனக்கு தெரியும். என் பவித்ரா பவித்ரமானவ! எந்த ஒரு தப்பும் பண்ணாதவ.. துளசி செடியைப் போல தூய்மையானவ. அவளைப் பத்தி இனி ஒரு வார்த்தை தப்பா பேசுனீங்க..” என்றவனோ தன் கீழ் இதழை மடித்து கடித்து பேசவும்.

திருமூர்த்தியின் கரம் இடியென யஷ்வந்தின் கன்னத்தில் இறங்கி இருந்தது. 

பவித்ரா அதிர்ந்து தன் கரம் கொண்டு வாயை மூடிக் கொண்டாள்.

“ச்சீ! வாய மூடுடா! என்ன பேசுற நீ? எல்லாம் தெரிஞ்சு தான் இவளை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு மருமகளாக்குனியா? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்ப?” என்று மேலும் அவனின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டிருந்தார். 

அவரின் அடிகள் அனைத்தையும் தன் கன்னத்தில் தாங்கியவன், அப்படியே உடல் இறுகிப்போய் நின்றிருந்தான். 

பவித்ராவிற்கு எப்படி இந்த நிலையை கையாள்வது என்றே தெரியவில்லை. ஒரு வார்த்தையும் அவளுக்கு பேச நா எழவில்லை. யாரின் முகத்தையும் பார்க்கவும் முடியவில்லை. தலை நிமிர முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தாள்.

யஷ்வந்தின் முதுகில் தன் இரு கரம் கொண்டு அடித்தவர், “ஏன்டா.. ஏன்டா இப்படி எல்லாம் செய்யுற? உன் புத்தி ஏன் இப்படி எல்லாம் போகுது? ஏதோ ஒரு பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தேன்னு நினைச்சேன். 

அனாதையா இருந்தாலும் பரவாயில்லைனு உனக்காக அவளை ஏத்துக்க நாங்க தயாரானோம். ஆனா, இப்படி ஒரு பொண்ண போய் கூப்பிட்டு வந்திருக்கியேடா.. நம்ம குடும்பம் எவ்வளவு கவுரவமானதுன்னு தெரியும்ல. இந்த வீட்டை நாங்க கோவில் மாதிரி பார்த்துக்கிறோம். இப்படி ஒரு அசிங்கத்தை வீட்டுக்கு நடுவில் கொண்டு வந்து உட்கார வச்சுட்டியே”. 

“அம்மா ப்ளீஸ், பவித்ராவை பத்தி அப்படி எல்லாம் பேசாதீங்க”. 

“வாய மூடு யாஷ்! உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அம்மாவையும், அப்பாவையும் பாருடா.. நீ பண்ண காரியத்தால் எப்படி நிக்கிறாங்கன்னு பாரு.. கொஞ்சம் கூட அசிங்கமே இல்லாம இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்து இருக்க. என்னால நினைச்சு கூட பாக்க முடியல நீயா இப்படி? ஏன்டா இப்படி எல்லாம் பண்ண?” என்று கோபமாக சாடினான் சேரன்.

இந்து, நித்யா, திலகாவின் பார்வை கூட பவித்ராவின் மேல் ஒரு வித அருவருப்புடன் தான் படிந்திருந்தது.

அனைவரின் பார்வையும் அவளுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்த. யாரின் முகத்தையும் பார்க்க முடியாமல் நின்றிருந்தாள்.

“அண்ணா அவ ரொம்ப நல்லவ. அவளை பத்தி எனக்கு தெரியும். திரும்ப யாரும் அவளை பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசாதீங்க” என்று தன் ஆள்காட்டி விரலை தூக்கி எச்சரிக்கும் விதமாய் அவன் பேசவும். 

அனைவருமே ஸ்தம்பித்துப் போய் தான் அவனின் இந்த புது அவதாரத்தைப் பார்த்தனர்.

“இப்படி ஒருத்திக்காக நம்ம குடும்பத்தையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா யஷ்வந்த்?” என்ற அய்யனாரை உறுத்து விழித்தவன்.

அவரைப் பார்த்து கேட்ட கேள்வியில் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் அய்யனார்.

********

கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 😊.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
905 11 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page