மொழி – 12

“டேய் இப்பவும் ஒன்னு கெட்டுப் போயிடல. அப்படியே போயிடுவோம்.. எனக்கென்னமோ இதெல்லாம் சரியா வரும்னு தோணல” என்ற யஷ்வந்தை சலிப்பாக பார்த்தவர்கள், “சும்மா இருடா, இதையே சொல்லிட்டு இருக்காத. இவ்வளவு தூரம் வந்த பிறகு அப்படி இதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு தான் நாம இங்க இருந்து போறோம்” என்றவாறு அவனையும் இழுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்.

வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு உள்ளே வந்ததும் கை கால்கள் எல்லாம் கிடுகிடுக்க, திருதிருவென அவர்கள் விழிக்கவும். 

அவர்களின் பார்வையை வைத்தே இவ்விடத்திற்கு அவர்கள் புதிது என்பதை அறிந்து கொண்ட ராணி அம்மா, அவரே அவர்கள் மூவரையும் மூன்று அறைகளுக்குள் அனுப்பியிருந்தார்.

திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கான அனுபவத்திற்காக தான் அவர்கள் இப்பொழுது இங்கே வந்திருப்பது. 

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை இப்படி முடியும் என்று யஷ்வந்த் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அறைக்குள் அமர்ந்திருந்தவன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே, “ச்ச.. இவனுங்க வேற சொல்றத கேட்க மாட்டேங்கிறாங்க. இப்போ வெளியில் போனா கிண்டல் பண்ணியே சாவடிச்சிடுவானுங்க. வந்ததுக்கு கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு இருந்துட்டு கிளம்பிடலாம்” என்ற மனநிலையில் தான் அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டு நின்றான் யஷ்வந்த்.

சட்டென்று அவனின் பின்னே வலையோசையும், கொலுசொலியும் கேட்கவும் தான் வெடுக்கென திரும்பிப் பார்த்தான்.

பளிச்சென்ற புன்னகையோடு முகத்தில் அளவுக்கு அதிகமாகவே பூசப்பட்ட ஒப்பனைகளுடனும், கை நிறைய வளையல்களும், காலில் பெரிய கொலுசோடும் நின்றிருந்தவளின் தலையில் நிறைந்திருந்த மல்லிகைப்பூவின் மனம் இவனின் நாசியையே தெவிட்டச் செய்திருந்தது.

சட்டென்று தன் நாசியில் கரம் கொண்டு உரசியவாறு, “ஸ்மேல் ரொம்ப அதிகமா இருக்கு. அந்த பூவை எடுத்துடுறியா” என்று இலகுவாகப் பேசத் தொடங்கினான்.

அவளின் பளிச்சென்ற புன்னகை சற்றும் வாடாமல் அவன் கூறியது போலவே அத்தனை பூவையும் தலையில் இருந்து இறக்கிய பிறகு தான் அவளின் தலையின் பாரமும் இறங்கியதை போல் ஒரு நிம்மதியுணர்வு அவளின் முகத்தில் படர்ந்தது.

அவளின் முகத்தில் வந்து போன அந்த நிம்மதி உணர்வு ஒரு நொடி தான் என்றாலும், அவளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் இருந்து சற்றும் அது தப்பவில்லை.

அவளாக அவனிடம் எதுவும் பேசவில்லை என்றாலும், தனக்கு இது மிகவும் பழக்கம் தான் என்பது போல் அவளின் முகத்திலும், உடல் மொழியிலும் அப்படி ஒரு வெகு சாதாரணமான பாவனை.

புன்னகை மாறா முகத்தோடு மீண்டும் வந்து அவன் எதிரே அவள் தயாராக நின்றாள்.

மீண்டும் அவனின் விழிகள் அவளில் ஆராய்ச்சியாய் படற. 

“இந்த மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு அப்படியே ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடு. இந்த வளையலையும், கொலுசையும் கூட ரிமூவ் பண்ணிடலாம்” என்று ஒவ்வொன்றாக அவன் குறிப்பிட்டுக் கூறவும்.

அவன் கூறிய அனைத்தையும் செய்து முடித்தவள் மீண்டும் அவனின் முன்பு வந்து நின்றாள்.

நிஜத்திற்கு அந்த ஒப்பனைகள் எல்லாம் இல்லாமல் இருக்கும் பொழுது தான் அவனின் கண்களுக்கு அவள் அழகாகவே காட்சியளித்தாள். 

“இப்படி உட்கார்ந்து பேசலாமா?” என்றவனுக்கு வேகமாக தலையசைத்தவள் கட்டிலில் அமரவும்.

அவளின் முகம் மலர்ந்தே தான் இருந்தது. 

நீ இன்று என்ன கூறினாலும் நான் அதை அப்படியே செய்வேன் என்பதை போல் அவளிடம் அப்படி ஒரு பாவனை.

“உன் பேர் என்ன?”. 

“பவித்திர பாரிஜாதம்” என்றவள் பதிலுக்கு அவனின் பெயரை எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை.

அத்தோடு அவனின் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டு தான் என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணமும் கூட இருக்கலாம்.

வெளியே அத்தனை சாதாரணமாக இயல்பாக இருப்பதைப் போல் அவள் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள். 

ஆனால், அது அவளின் முகத்தில் துளியும் காட்டப்படாமல் இருக்க பெரும் பாடுபட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

யஷ்வந்திற்கும் இது அனைத்துமே புதிது. 

ஆனால், ஒருவரின் முகத்தில் வந்து போகும் மாற்றங்களை எல்லாம் உணர்ந்து கொள்ள முடியாத சிறுவன் இல்லையே அவன். 

அவளையும் படித்தான்.. 

அவளின் முகத்தில் வந்து மறையும் உணர்வுகளையும் படித்தான்..

“என்ன அமைதியாவே இருக்க.. ஏதாவது பேசு”.

அவனின் அணுகுமுறை இவளுக்கும் சற்று ஆசுவாசமாக இருந்தது.

தன் கை நடுக்கத்தை மறைக்க தன் கை விரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், “நீங்க ஏதாவது கேளுங்க நான் பதில் சொல்றேன்”. 

“ம்ம்.. இங்க நீ எத்தனை வருஷமா இருக்க?”. 

“பொறந்ததுல இருந்து”. 

“ஓ”.

“நான் பொறந்ததும் என்னை யாரோ கொண்டு வந்து இந்த வீட்டு வாசல்ல போட்டுட்டு போயிட்டாங்களாம். அதுக்கப்புறம் என்னை வளர்த்தது எல்லாமே ராணியம்மா தான்”. 

“ராணி அம்மா?” என்று அவன் கேள்வியாக அவளைப் பார்க்கவும்.

ஒரே ஒரு நொடி அவளின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்து மீண்டவாறு, “அவங்க தான் இந்த இடத்துக்கு இன்சார்ஜ்” 

“ஓ! அப்போ நீ வளர்ந்தது எல்லாமே இங்க தானா?”.

“ம்ம்” என்றவளுக்கு வியர்வையில் கைகள் பிசுபிசுத்து விட்டது.

சட்டென்று அவளின் கையை பிடித்தவன், “என்ன இப்படி வேர்த்து இருக்கு?” என்றவனுக்கு அவளின் நடுக்கத்தை இவனின் கைகளிலும் நன்கு உணர முடிந்தது.

அவளின் கைகள் சில்லிட்டு வேறு இருக்க, அதன் குளுமை இவனுக்குள்ளும் ஊடுறிவியது.

‘எதுவோ சரியில்லை’ என்று அவனின் உள்ளுணர்வு எடுத்துரைத்துக் கொண்டே இருந்தது.

சட்டென்று அவன் தன்னை உணர்வதற்கு முன்னதாக தன் கையை அவனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டவள், “அது.. கொஞ்சம் புழுக்கமா இருக்கு இல்ல அதான்..” என்றாள் சமாளிப்பாக.

“படிச்சிருக்கியா?”. 

“ம்ம்.. 12வது”.

“மேல படிக்கலையா?”. 

“இங்க அவ்ளோ தான் படிக்க முடியும். இதுவே பெருசு.. இங்க இருந்து படிச்சது நான் மட்டும் தான். அதுவும் ராணியம்மா உதவியாள”.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் மனதையும் படிக்க முயற்சித்தான். கொஞ்சம் கொஞ்சம் அதில் வெற்றியும் கண்டான்.

இந்த அறைக்குள் வரவே அப்படி பயந்து கொண்டு தான் நுழைந்தாள். அவளுக்குமே இது தான் முதல் அனுபவம். 

ஒவ்வொருவரும் ஒரே போல் கிடையாதே.. 

சிலர் மென்மை என்றால், சிலர் முரட்டு தனமும், கடுமையுமாக இருப்பார்கள்.. 

எத்தனை நபர்களை கடந்து வந்திருக்கிறாள்.

இவனை பற்றி எதுவும் தெரியாது. இவன் எப்படியோ என்ற பதட்டத்தோடு தான் உள்ளே நுழைந்தாள்‌.

ஆனால், அவனின் அணுகுமுறை இறகைப் போல் மிருதுவாய் இருக்க. அந்த மிருதுவில் தன்னையும் மீறி தன் மனதில் இருப்பது அனைத்தையும் மனப்பாடம் செய்ததைப் போல் அவனிடம் ஒப்பிக்க துவங்கி விட்டாள் பவித்ரா, அவளே அறியாமல்..

“இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைமா?” என்று தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி பட்டென்று யஷ்வந்த் கேட்டு விடவும்.

அவனின் கேள்வியில் தடுமாறியவள், பின் சுதாரித்து மென் புன்னகையுடன், “தெரியுதா?” என்றாள் தன் நெற்றியில் பூத்த வியர்வை முத்துக்களை துடைத்தவாறு.

அவனோ, “ம்ம்” என மென் புன்னகையுடன் அவளை பார்க்கவும்.

“சின்ன வயசுல இருந்து இங்க தான் வளர்ந்தேன். ஆனாலும், இதெல்லாம் எனக்கு பழக்கம் கிடையாது. இங்க 18 வயசுக்கு மேல ஆனா தான் இதெல்லாம் செய்ய சொல்லுவாங்க..” என்று அவள் நிறுத்தவும்.

“உனக்கு இப்போ தான் 18 வயசு ஆகுதா?” என்று புருவங்கள் இடுங்க அவன் கேட்கவும்.

புன்னகைத்தவள், “இல்ல.. 21”. 

“அப்புறம் எப்படி இத்தனை நாள்..?” என்று இழுத்தவனுக்கு அதற்கு மேல் எப்படி வினவுவது என்று விளங்கவில்லை. 

அவனின் தடுமாற்றத்தை கண்டு கலகலவென நகைத்தவள், “எல்லாத்துக்கும் ராணி அம்மா தான் காரணம். அவங்க தான் என்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தாங்க. என் மேல ரொம்பவே பாசம் அதிகம். அவங்க சொந்த பொண்ணு போல பாத்துப்பாங்க. அதனால எனக்கு 18 வயசு ஆனதை யார்கிட்டயும் சொல்லாம மறைச்சுட்டாங்க. இப்போ 21.. ஆனா மத்தவங்கள எல்லாம் பொருத்தவரைக்கும் எனக்கு இன்னைக்கு தான் 18 வயசு. இதுக்கு மேல அவங்களாலயும் ஒன்னும் பண்ண முடியல. சின்ன வயசுல இருந்து என்னை வளர்த்ததால அவங்க மனசுல என்னை அவங்க பொண்ணு போலவே நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரொம்ப நல்லவங்க.. என்னோட வாழ்க்கை இப்படி வீணா போறதுல அவங்களுக்கு விருப்பமில்ல. ஏதாவது நடக்கும் நான் இங்க இருந்து போயிடுவேன்னு அவங்களும் ஏதேதோ பொய் சொல்லி இத்தனை நாள் கடத்திட்டாங்க. ஆனா, ஒன்னும் நடக்காதுன்னு அவங்களுக்கு அப்போ தெரியல. இனிமேலும் பொய் சொல்லி தடுக்க முடியாதுல்ல.. எனக்கு பெத்தவங்க, கூட பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. அப்புறம் எப்படி நான் இங்கிருந்து போக முடியும்? யார் என்னை வந்து இங்கிருந்து கூட்டிட்டு போக போறா? இதெல்லாம் அவங்களுக்கும் தெரிஞ்சாலும், என்னமோ என் மேல இருக்க பாசம் இத்தனை நாள் அவங்கள என்னை காப்பாத்த வச்சிடுச்சு” என்றவளின் இதழ்களில் விரக்தியான புன்னகை.

கண்களோ இலக்கின்றி எங்கோ உயிர்ப்பற்ற வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன உணர்ந்தானோ, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என பட்டென்று கேட்டு விட்டான். 

“ஆங்!” என்றவளுக்கு அவனின் வார்த்தைகள் செவிகளை அடைந்திருந்தாலும், தான் கேட்டது தவறோ என்ற எண்ணம் தான்.

அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், “உன்ன நான் இங்க இருந்து கூட்டிட்டு போறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”. 

“கல்யாணமா?” என்றவள். 

தன் விழிகளை உருட்டி விரித்து பிறகு சுதாரித்து, “அதெல்லாம் எப்படி சரி வரும்? அதுவும் என்னை போய் கேட்கிறீங்களே?” என்றாள் கேலி போல் புன்னகைத்துக் கொண்டு.

“ஏன் உனக்கு என்ன.. அழகா இருக்கியே.. உன் முகத்தை விட மனசு ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு சரினா சொல்லு கல்யாணம் பண்ணிக்கலாம்”.

அவன் விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணியவளுக்கு அவன் உண்மையிலேயே தான் கேட்கிறான் என்பது அவனின் விழிகளிலும், வார்த்தையிலும் இருந்த அழுத்தமே கூறியது.

“அது.. எப்படி.. நான்..” என்று வார்த்தைகள் இன்றி தடுமாறினாள்.

அவளின் கையை அழுத்தமாக பற்றியவன், “நீ வளர்ந்த விதம் வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனா, நீ ரொம்ப நல்ல பொண்ணு. உன் மனசுல எந்த தப்பும் இல்லை. உன் கண்ணுல பொய்யில்லை. உன் வார்த்தை எல்லாமே உண்மையா தான் இருக்கு. அதோட எனக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. உன்ன இங்கிருந்து நான் கூப்பிட்டு போறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்.. நமக்குன்னு ஒரு குடும்பம், சொந்தம் எல்லாமே கிடைப்பாங்க. என்ன சொல்ற?”. 

கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்.

இப்படி பேசுபவனிடம் எப்படி மறுக்க தோன்றும். அதுவும் அவள் இருக்கும் நிலையை அறிந்தே கேட்பவனிடம் மறுக்க தோன்றுமா என்ன..

ஒப்புக்கொண்டாள்..

அவன் எது கேட்டாலும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவளின் தலை ‘சரி’ என்பதை தவிர்த்து வேறு புறம் ஆடவில்லை.

********

டியர் சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் மனசு வச்சு கதையை பத்தி நாலு வார்த்தை சொல்லுங்க டா. அப்படி சொன்னா சீக்கிரம் அடுத்த எபி கிடைக்கும் 😉.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page