மொழி – 2

மொழி – 2

அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. யாருக்கும் இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று விளங்கவில்லை.

சாதாரண நடுத்தரவர்க குடும்பம் தான். 

இப்பொழுது தான் மூன்று வருடத்திற்கு முன்பு இந்த வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறி இருக்கின்றனர்.

திருமூர்த்தியும், பரமேஸ்வரியும் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

வாடகை வீட்டில் இருந்து தொடங்கியது தான் இவர்களின் வாழ்க்கை. 

அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு என அனைத்தையுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் தம்பதிகள்.

மாத வருமானத்திற்கு தகுந்தார் போல் கணக்கு போட்டு குடும்பம் நடத்துபவர்கள். 

அப்படித்தான் மகன்கள் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைத்தனர். தற்போது ஐடியில் வேலையும் கிடைத்துவிட்டது.

மகளின் விருப்பத்திற்கு ஏற்ப பி.எட் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

இதோ அவர்களின் அடிப்படை எதிர்பார்ப்பான வீட்டையும் சொந்தமாக வாங்கி விட்டனர். 

சேரனுக்கு தூரத்து உறவு முறையிலேயே இந்து அமைந்துவிட. நல்ல முறையில் திருமணம் முடிந்து இப்போது தான் அவர்களுக்கு யாஷிகா பிறந்து 4 மாதம் ஆகிறது.

நித்யாவிற்கு படிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் இரண்டு வருடம் பொறுத்து தான் திருமணம்.

யஷ்வந்த் நல்ல வேலையிலும், சம்பாத்தியத்திலும் இருப்பதால் அவனுக்கு தான் இப்பொழுது மும்முரமாக பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.

அதற்குள் அவன் இப்படி மாலையும் கழுத்தமாக வந்து நிற்கவும், மொத்த குடும்பமுமே ஒரு நொடி ஆடித்தான் போய்விட்டனர்.

பிள்ளைகளின் வளர்ப்பிலும், குடும்பம் நடத்துவதிலும் அத்தனை மெனக்கெட்டு பார்த்து பார்த்து செய்த தம்பதியருக்கு நாம் எங்கே சறுக்கினோம், எந்த இடத்தில் தவறவிட்டோம் என்பதே விளங்கவில்லை. தங்களுக்குள்ளேயே ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர்.

யஷ்வந்த் பவித்ராவிடம் அவனின் குடும்பத்தை பற்றி எல்லாம் பெரிதாக எந்த ஒரு விளக்கமும் அளித்திருக்கவில்லை. 

ஆனால், இங்கே வந்து அவர்களை பார்க்கும் பொழுதே அவர்கள் குடும்பத்தின் நிலை இவளுக்கு நன்கு விளங்கி விட்டது.

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் காட்டாத சுத்தமாக பராமரிக்கப்படும் நான்கு படுக்கை அறைகள் கொண்ட வீடு. அதில் வசிப்பவர்களின் செயலிலும், பேச்சிலும் எந்த ஒரு திமிரோ, பந்தாவோ தெரியவில்லை. அத்தனை எதார்த்தமாக இருந்தனர்.

அவர்களின் மனநிலை புரிந்தாலும் அடுத்து என்ன என்று தான் புரியவில்லை. தன் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். பெரும் சங்கடமாக வேறு இருந்தது.

தன் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பரமேஸ்வரி, “அய்யனார் அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது. நம்ம குடும்பத்துல எல்லா நேரமும் நமக்கு துணையா நின்னு இருக்காரு. அவரோட பொண்ண நம்ம யஷ்வந்துக்கு எடுக்க சொல்லி அவரே வாய் விட்டு கேட்டு இருந்தாரு. இவன் இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறானேங்க” என்று தொண்டையை அடைக்க ஆதங்கமாக அவர் கூறிய செய்தியை கேட்ட யஷ்வந்த் திடுக்கிட்டு தான் விழித்தான்.

“என்னம்மா சொல்றீங்க.. இதெல்லாம் எப்ப நடந்துச்சு?” என்று முகத்தில் அப்பிய அதிர்ச்சியோடு கேட்டான் சேரன்.

“ரெண்டு நாள் முன்னாடி அண்ணா கால் பண்ணி இருந்தாங்கடா. இந்த விஷயத்தை முதல்ல சொன்னதும் எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல. வெளியில பொண்ணு பாக்கலாம்னு ஆரம்பிச்சோமே தவிர, அண்ணன் வீட்ல இருக்க பொண்ண கேக்கணும்னு எனக்கும் தோணவே இல்ல பாரு.. அவரே வாயை திறந்து சொன்ன பிறகு தான் எனக்கே தோணுச்சு”. 

“என்னம்மா அப்போ மாமா கிட்ட சரின்னு சொல்லிட்டீங்களா?” என்றிருந்தாள் நித்யா.

“இல்லடி, ஜாதக பொருத்தம் பார்த்துட்டு பேசலாம்னு சொல்லி இருந்தேன். அதுக்குள்ள இந்த படுபாவி இப்படி பண்ணி வச்சிருக்கானே. நம்ம குடும்பத்துல யாருமே இப்படி கிடையாதே டா. நீ மட்டும் ஏன் டா இப்படி இருக்க.. நல்லா தானே இருந்த என்ன ஆச்சு உனக்கு?”. 

அவரால் யஷ்வந்தின் செயலை சற்றும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அவரின் ஆசை மகன் வேறு ஆகிற்றே..

எத்தனையோ முறை சூழ்நிலையை சரியாக கையாள இவருக்கே கற்றுக் கொடுத்தவன் ஆகிற்றே.. 

இன்று அவனால் இப்படி ஒரு நிலை என்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

தன் முகத்தை கரம் கொண்டு அழுந்த துடைத்தவன் தன் தாய்க்கும் தந்தைக்கும் அருகே இருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்தவாறு, “ம்மா எதுக்காக இப்போ இப்படி உடைச்சு போய் இருக்கீங்க. எப்படியும் எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நீங்க பேசுனீங்க தான”. 

“பேசுன எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா? இது என்னடா கோலம்.. நாங்க பேசுனா உன் இஷ்டத்துக்கு நீயே கல்யாணம் பண்ணிப்பியா?” என்று அடக்க மாட்டாமல் கேட்டுவிட்டார்.

“ம்ம்ச்ச்.. நான் அப்படி சொல்ல வரலமா. பவித்ரா பாவம், அவளுக்குன்னு யாருமே இல்ல. ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கும் அவள ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. எப்படியும் நீங்க ஒத்துப்பீங்கன்னு நினைச்சு..” என்று அவன் முடிப்பதற்குள்ளாகவே, “வாய மூடுடா! ஒத்துப்பீங்கன்னு நீயாவே நினைச்சா போதுமா.. பிடிச்சிருந்தா எங்ககிட்ட கேட்கணும்னு உனக்கு தோணலையா?”.

“ம்மா சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு”.

“என்னடா பெரிய சூழ்நிலை? இப்போ வெளியில எல்லாருக்கும் என்னன்னு சொல்றது? இத்தனை நாள் வரைக்கும் ஒரு சின்ன அவமானம் கூட ஏற்படாம இருந்துச்சு. இப்படி மொத்தமா தலை குனிய வச்சுட்டியே.. உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கா.. அவளுக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கிறது? இந்த பொண்ணோட அண்ணன் யாரோ ஒரு பொண்ண குடும்பத்துக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னான்னு யாராவது அவளுக்கு மாப்பிள்ளை கொடுக்க வருவாங்களா?”.

“விடு பரமு, நம்மள பத்தி எல்லாம் எந்த அக்கறையும் இல்லாம அவனுக்கு பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல. எப்படியோ போய் தொலையட்டும் நமக்கு என்ன?” என்று விட்டேட்றியாக வாயை திறந்து இருந்தார் திருமூர்த்தி.

தாய், தகப்பன் இருவருமே யஷ்வந்தின் மீது நிறையவே நம்பிக்கை வைத்திருந்தனர். அவனின் இத்தகைய செயலை அவர்கள் சற்றும் எதிர்பார்த்து இருக்கவே இல்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடு தான் இது.

“அப்பா சாரிப்பா.. தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன். தெரிஞ்சு தான் பண்ணேன். அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிச்சு தான் பண்ணேன். உங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ண முடியாத சிச்சுவேஷன். சாரி மா..” என்று தன் தந்தையிடம் தொடங்கி தாயிடம் முடித்திருந்தான்.

“அதான் அவனே‌ சொல்லிட்டானே எல்லாம் யோசிச்சு தான் பண்ணேன்னு.. எவளையோ பத்தி இவளோ யோசிச்சு இருக்கான். நம்மள பத்தி கொஞ்சமாவது யோசிச்சானா.. அவ்வளவு தான் நமக்கு மரியாதை” என்று கோபமாக கூறியவர் அறைக்கு சென்று விட்டார்.

“ம்மா..” என்று யஷ்வந்த் தன் அன்னையை பார்க்கவும். 

அவரும் கோபமாக எழுந்து சென்று விட்டார்.

யஷ்வந்திற்கும் மனம் ஏதோ பெரும் கற்பாறையை தூக்கி வைத்தார் போல் கனத்துப் போய் தான் கிடந்தது. 

ஆனாலும், இப்படி எல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னமே சிந்தித்தது தானே.. 

அதனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தன் குடும்பத்தை பற்றி நன்கு அறிந்திருந்தவன் நிச்சயம் இந்த நிலை மாறும் என்ற முழு நம்பிக்கையோடு இருந்தான்.

தன் இடையில் இரு கரம் குற்றி பெருமூச்சை விட்டவாறு மேல் நோக்கியவன் ‘உஃப்’ என்று ஊதியவாறு தன் அண்ணனை திரும்பி பார்க்கவும்.

சலிப்பாக, “ஏன் டா?” என்று விட்டு தன்னறைக்கு சென்று விட்டான் சேரன்.

நிலைகுலைந்த நிலையில் இருக்கும் தன் குடும்பத்தை காண நித்யாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. 

பரிதவிப்பான குரலில், “ஏன்ணா இப்படி பண்ண?” என்றாள் அலைபாயும் விழிகளுடன்.

இருகரம் கொண்டு தன் முகத்தை அழுந்த தேய்த்தவன். தங்கையின் அருகில் வந்து அவளின் தோளை சுற்றி கையை போட்டவாறு, “இது என் தங்கச்சி நித்யா” என்றான் பவித்ராவிடம் வெகு இயல்பாக.

அவனுக்குள் அலைமோதும் உணர்வுகளின் போராட்டம் இவளுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும், அத்தனை இலகுவாய் நடந்து கொள்ள முயற்சித்தான்.

அவனின் கையை கோபமாக தட்டி விட்ட நித்யா, “இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு.. நீ பண்ண வேலைக்கு..” என்று பற்களை கடித்துக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தங்கையின் செயலில் மெல்லிய புன்னகையோடு திரும்பியவனின் விழிகளுக்குள் படமாகினாள் பவித்திர பாரிஜாதம்.

அவளின் தவிப்பு உடல் முழுவதும் விரவிப் போய் கிடந்தது. லேசாக கலங்கிய கண்களோடு, உணர்வுகளை கட்டுப்படுத்த அவள் தன் கீழ் அதரங்களை கடிப்பதும் விடுவிப்பதுமாய் போராடிக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் அருகில் வந்தவன் குரலை செறுமி கொண்டு, “எல்லாம் போக போக சரியாகிடும் வா” என்று அவளின் கையை பற்றி தன் அறைக்கு அழைத்து சென்று இருந்தான்.

அவனுடன் ஒரே அறையில் தனித்து இருப்பது ஒன்றும் அவளுக்கு அத்தனை கஷ்டமாக இருக்கவில்லை. நேற்றைய இரவு முழுவதையும் அவனுடன் தானே கழித்திருந்தாள்.

அறைக்குள் நுழைந்தவன் வேறு உடை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். 

அவனுக்குள் இருக்கும் உணர்வு போராட்டத்தை தணிக்க அவனுக்கு சற்று தனிமையும் தேவைப்பட்டது.

நீரில் தன் முகத்தை நன்கு அடித்து கழுவியவன் ஆங்காங்கே முடிகளில் பட்டு தெறித்த நீர் துளிகளுடன் நிமிர்ந்து கண்ணாடியில் தன் முகம் நோக்கினான்.

நேற்று வரையிலும் இன்று உனக்கு திருமணம் என்று யாராவது கூறியிருந்தால் அதை சற்றும் மதித்து கூட இருந்திருக்க மாட்டான்.

ஆனால், ஒரே இரவில் அவனின் வாழ்க்கையே இப்படி தலைகீழாக மாறிவிட்டதல்லவா.. 

அவனாக விரும்பி ஏற்றுக் கொண்ட திருமணம் தான் என்றாலும், தானா இப்படி ஒன்றை செய்தது என்று அவனால் சற்றும் நம்பவே முடியவில்லை.

தன் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு உணர்ந்தவனிற்கு அவர்களின் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்பது அறிந்த ஒன்று தான். 

பவித்ராவை பற்றி ஒன்றும் அறியாததற்கு முன்பே இப்படி என்றால், அவளைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்தால் இவர்களின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற எண்ணம் எழும்பொழுது தான் சொல்லல்லா உணர்வு அவனை சற்று ஆட்டிப்படைத்தது.

பவித்ராவின் மனநிலையோ இவனுக்கு நேர் எதிராய் இருந்தது. திருமணத்தைப் பற்றி எல்லாம் அவள் நினைத்தும் பார்த்தது கிடையாது.

என்றுமே இருவரும் இரு வேறு திசைகள் தான். இன்று ஒரே பாதையில் தங்கள் வாழ்க்கை பயணத்தை துவங்குவோம் என்பதை அவளுமே சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை.

இங்கே யாரைப் பற்றியும் எதுவும் தெரியாது. அவ்வளவு ஏன் யஷ்வந்தை பற்றி கூட அவளுக்கு முழுமையாக தெரியாதே.. 

இது நாள் வரை வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்து பழகிவிட்டவளுக்கு, இனியும் அதே தொடர்கதை தான் என்ற நிதர்சனம் உரைக்கவும். 

நீரோடை போல் வாழ்க்கை இட்டுச்செல்லும் திசைக்கேற்ப தொடர்ந்து பயணிக்க முடிவு செய்துவிட்டாள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி.

ஆனால், இப்படி தெளிந்த நீரோடையாய் அவர்களின் வாழ்க்கை சென்று விடாது என்பதுமே அவளுக்கு திண்ணம்.

தன்னைப் பற்றிய உண்மை தெரிய வந்தால் நிச்சயம் பெரிய பூகம்பமே வெடிக்க நேரிடலாம். அதில் தானும் சின்னா பின்னமாகி போகலாம். எனவே, எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ள கூடாது என்று தனக்குத்தானே உருபோட்டுக் கொண்டிருந்தாள்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
911 11 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page