தன் குடும்பத்தினரின் மன மாற்றத்திற்காக யஷ்வந்த் காத்துக் கொண்டிருக்க.
அவனை போல் நேரங்களும், பொழுதுகளும் காத்துக் கொண்டிருக்காதே.. காலம் தன் ஓட்டத்தை ஓடித் தானே தீரும். நாட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது.
காலை நடை பயிற்சிக்கு அப்போது தான் சென்று விட்டு வந்திருந்த திருமூர்த்தி ஒற்றை கையில் காபி டம்ளருடன், மற்றொரு கையில் நியூஸ் பேப்பரை பிடித்தவாறு படித்துக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல் பரமேஸ்வரி பரபரப்பாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தாலும், அவரின் முகத்திலும், உடலிலும் முன்பிருந்த தெளிவும் சுறுசுறுப்பும் பெருமளவு குறைந்தது போல் தான் அனைவருக்கும் தோன்றியது.
“மா நீங்க போய் கிளம்புங்க காலேஜுக்கு நேரம் ஆகிட போகுது. நான் இந்த பாத்திரத்தை எல்லாம் விலக்கி வச்சிடறேன்” என்ற நித்யாவிடம், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் பாத்துக்குறேன். இத்தன நாள் நான் செஞ்ச வேலை தானே ஏன் என்னால செய்ய முடியாதா” என்று படபடவென பொரிந்தார்.
“மா.. என்னம்மா.. என்ன ஆச்சு? நான் ஹெல்ப் பண்றேன்னு தான சொன்னேன்”.
அவளுக்கு ஏன் இந்த கோபம் என்று விளங்கவில்லை.
“ஒன்னும் தேவையில்ல. யாரும் எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்ல. பாசத்தை கொட்டி திக்கு முக்காட வச்சிட்டு திடீர்னு ஒரு நாள் தூக்கி எனக்கு என்னன்னு கீழ வீசிட்டு போயிடுவீங்க. அப்புறம் அவஸ்தைப்படுறது நான் தானே.. யாருடைய கரிசனையும் தேவையில்ல. அன்பும் தேவையில்ல. அவங்க அவங்க வாழ்க்கைய அவங்க அவங்க தான் பாத்துக்கணும். இதுக்கு இடையில பெத்த பிள்ளைங்களாவே இருந்தாலும், இந்த அன்பு, பாசம் எல்லாம் மட்டும் வச்சிடவே கூடாதுடா சாமி.. என்ன தான் தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேற வேறன்னு சும்மாவா சொன்னாங்க” என்று புலம்பிக் கொண்டே சமைத்த உணவுகளை டிபன் பாக்ஸில் அடைத்தார்.
காரணமே இன்றி கண்கள் வேறு கரித்துக் கொண்டு வர அது வேறு அவருக்கு எரிச்சலாக வந்தது. புறங்கையால் அதையும் துடைத்து எடுத்தவர், வேகமாக தன் வேலைகளை பரபரவென பார்த்துக் கொண்டிருந்தார்.
“மா ப்ளீஸ், இப்படி இருக்காதீங்க. இப்ப என்ன அவசரம்.. ஏன் இப்படி படபடன்னு வேலை பாக்குறீங்க. இன்னும் நேரம் இருக்கு பொறுமையா பாத்துக்கலாம். கொஞ்ச நேரம் உட்காருங்க” என்று தன் தாயை ஆசுவாசப்படுத்த எண்ணி நித்யா கூறவும்.
“இன்னும் எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க? அதான் சொன்னேன்ல யாருடைய கரிசனமும் எனக்கு தேவையில்லன்னு.. உன் அண்ணன் என்னை வேண்டாம்னு கீழ தூக்கி எறிஞ்சிட்டு போன மாதிரி, அடுத்து நீயும் பண்ண போறியா? ஒன்னும் தேவையில்ல. நீங்க எல்லாம் செஞ்ச வரைக்கும் போதும்” என்று காரணமே இன்றி யாரின் மீதோ இருக்கும் கோபத்தையும், கடுப்பையும் இவளிடம் கொட்டினார்.
காபியை அருந்தி முடித்த திருமூர்த்தி செய்தித்தாளை வேகமாக மடித்து டேபிளின் மீது வைத்தவர். வேக நடையுடன் சமையலறை வாசலை அடைந்து, “இப்போ என்னவாம் உன் அம்மாவுக்கு.. சின்ன மகன் நினைப்பு வந்திருக்கும்.. அதான் தேவை இல்லாம உன்கிட்ட எரிஞ்சு விழுந்துட்டு இருக்கா.. அவன் தான் நீங்க யாரும் தேவை இல்லனு தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டான்ல. இப்ப எதுக்கு அவனைப் பத்தின நினைப்பு?” என்றார் பரமேஸ்வரியை முறைத்துப் பார்த்து.
ஏற்கனவே, ஆசை மகனை இழந்த சோகம் அவரை வெகுவாய் வாட்டிக் கொண்டிருக்கிறது. இதில், திருமூர்த்தியின் பேச்சு வேறு அவரின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் ஆகிப் போனது.
அழுகையோடு திரும்பியவர், “இப்போ என்ன.. நான் என் மனசுல தோன்றத இந்த வீட்ல பேசக் கூடாதா.. எனக்குன்னு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லையா.. உங்க எல்லாரோட இழுப்புக்கு தான் நான் ஆடணுமா.. ஏன், எனக்குன்னு சுய புத்தி இல்ல.. எனக்கு தோணுறத நான் இப்படித்தான் பேசுவேன். எத்தன ஆசையா வளர்த்தேன் எவளோ ஒருத்திக்காக என்னை அப்படியே அம்போன்னு தூக்கி போட்டுட்டு போயிட்டான். அந்த ஆதங்கம் எனக்கு இருக்க கூடாதா.. என் மனசுல இருக்குற ஆதங்கத்தை எல்லாம் நான் எங்க போய் கொட்டுவேன். ரெண்டு வார்த்தை புலம்ப கூட எனக்கு இந்த வீட்ல உரிமை இல்லாம போயிடுச்சு” என்று சத்தமாக கத்தியவர் சட்டென மயங்கி சரியவும். யாருக்கும் ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை.
வேகமாக அவரை நோக்கி விரைந்த திருமூர்த்தி அவரை தன் மடியில் தாங்கிக் கொள்ளவும், “அம்மாடி! பரமு! என்னமா ஆச்சு? என்னை பாருமா!” என்று பயம் கலந்த பரிதவிப்போடு அவரின் கன்னத்தை தட்டினார்.
“மா.. இங்க பாருமா.. மா..” என்று நித்யாவின் அழுகைக் குரல் ஒரு புறம்.
இவர்களின் குரல்கள் மாற்றி மாற்றி ஒலிக்கும் சத்தத்தில் அறையிலிருந்து ஓடி வந்தனர் இந்துவும், சேரனும்.
“ப்பா என்ன ஆச்சு? அம்மாக்கு என்ன ஆச்சு?” என்றவாறு மண்டியிட்டு அமர்ந்தவனுக்கு நொடியில் படபடத்துப் போய்விட்டது.
“சேரா தண்ணியை எடு” என்று பதட்டத்தில் கத்தினார் திருமூர்த்தி.
சட்டென்று தண்ணீர் குவலையை எடுத்து வந்தவன் பரமேஸ்வரியின் முகத்தில் தெளிக்கவும். அவரிடம் எந்த ஒரு அசைவும் தென்படவில்லை. உடல் முழுவதும் வியர்த்து விட சற்றும் சுயநினைவு இன்றி அப்படியே கிடந்தார்.
அவரின் தோற்றம் குடும்பத்தினர் அனைவரையும் நிலை குலைத்து விட்டது. குடும்பத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விட்டால் கட்டுமானம் தாங்குமா என்ன..
அனைவருமே பதறி துடித்து அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
மொத்தமாக துவண்டு போய்விட்டார் திருமூர்த்தி. அவரின் தோற்றமே கண்கொண்டு காண முடியவில்லை பிள்ளைகளுக்கு.
முற்றிலுமாக துவண்டு தளர்ந்து போய் அந்த அவசர சிகிச்சை பிரிவின் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார் தலையை சுவற்றில் சாய்த்தபடி.
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்த கமலேஷின் குடும்பம் இவர்களை நெருங்கி, “என்ன ஆச்சு சம்பந்தி? சம்பந்தி அம்மா நல்லா தானே இருந்தாங்க. திடீர்னு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்னு இந்து போன் பண்ணவும், எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல. இப்போ எப்படி இருக்காங்க?” என்றார் இந்துவின் தாய் படபடவென.
“மா டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க. இன்னும் எதுவும் சொல்லல மா” என்று கண்ணீர் மல்க கூறினாள் இந்து.
திருமூர்த்தியின் அருகில் அமர்ந்த இந்துவின் தந்தை அவரின் தோளை அழுத்தமாக பற்றியவாறு, “கவலைப்படாதீங்க சம்பந்தி, சம்பந்தி அம்மாவுக்கு எதுவும் ஆகாது. சீக்கிரமே கண்ணு முழிச்சிடுவாங்க. யாஷ் இப்படி பண்ணதால ஏற்பட்ட மன உளைச்சலால் பிபி அதிகம் ஆகியிருக்கும். பெருசா ஒன்னும் இருக்காது. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” என்று தன்னால் முடிந்த மட்டும் அவரைத் தேற்ற முயற்சித்தார்.
அவரின் கையை பற்றிக்கொண்ட திருமூர்த்தி சிறுபிள்ளைப் போல் உடல் குலுங்க அழவும். அவரை சூழ்ந்து விட்டனர் மொத்த குடும்பத்தினரும்.
இப்படி தன் தந்தையை காணும் ஒரு நாள் வரும் என்பதை நித்யாவும், சேரனும் நினைத்தும் பார்த்தது கிடையாது.
சட்டென அவருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நாற்காலியில் அமர்ந்த சேரன், “பா.. என்ன பா?” என்றான் கலங்கிப்போய்.
தன் நடுங்கும் கரம் கொண்டு அவனின் கன்னத்தை தட்டியவர், “ஒன்னும் இல்லப்பா” என்றார் கரகரத்த குரலில்.
அவரின் முன்பு மண்டியிட்ட நித்யா அவரின் மடியில் தலை சாய்த்து அழவும். அவளின் தலையை தடவிக் கொடுத்தவர், “ஒன்னும் இல்லடா, அம்மாவுக்கு உடம்பு முடியலன்னதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு. வேற ஒன்னும் இல்ல, உன் அம்மா சீக்கிரமே எழுந்து வந்துருவா பாரு, உன் கல்யாணத்த அவ ஆசைப்பட்ட போல ஜாம் ஜாம்னு நடத்த போறோம்” என்றார் கண்ணீரோடு.
“சம்பந்தி நீங்க தான் இந்த குடும்பத்தோட தைரியமே.. இப்படி நீங்களே உடைஞ்சு போயிட்டா பாருங்க, புள்ளைங்க முகத்தை எப்படி தவிச்சு போறாங்கன்னு.. தைரியமா இருங்க சம்பந்தி. சம்பந்தி அம்மாவுக்கு எதுவும் ஆகாது, நாம எல்லாம் எதுக்கு இருக்கோம் அப்படியே விட்டுடுவோமா”.
“இன்னும் அவளுக்கு நினைவு திரும்பல சம்பந்தி. அதான் மனசு கிடந்து அடிச்சிக்குது. கண்ணு முழிச்சு பார்த்து என்னை ரெண்டு வார்த்தை திட்டிட்டா கூட மனசு ஆறிடும். இப்படி பேசமாட்டேன்னு கண் விழிக்காம படுத்து கிடக்குறாளே” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது.
சற்று நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்த மருத்துவர், “மிஸஸ்.பரமேஸ்வரியுடைய அட்டெண்டர்?” என்கவும்.
மொத்த குடும்பத்தினரும் அவரை நெருங்கினர்.
“பிபி ரொம்ப ரைஸ் ஆகி இருக்கு. கொஞ்ச நாளாவே மனசளவுல ரொம்ப அழுத்தத்தில் இருந்திருக்காங்க. இப்படி மயக்கம் போட்டு விழுந்ததுக்கு கூட அது தான் காரணம். வயசானவங்க பிபி டேப்லெட் சரியா போடுறாங்களானு செக் பண்றது இல்லையா.. இப்படித்தான் அஜாக்கிரதையா இருக்கிறதா.. 2, 3 நாளா பிபி டேப்லெட் எடுக்காம விட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். இல்லன்னா இவ்வளவு பிபி ரைசாக சான்சே இல்ல”.
“இல்லையே டாக்டர், அதெல்லாம் அம்மா சரியா போட்டுடுவாங்களே.. டேப்லெட் விஷயத்துல அம்மா அஜாகிரதையா இருக்க மாட்டாங்க” என்றான் சேரன்.
“அதெல்லாம் சாதாரண நாள்ல சரி. ஆல்ரெடி, அவங்களே அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவங்க வேலையை அவங்க சரியா செய்யுறாங்களானு நீங்க யாராவது கவனிச்சு இருக்கணும். இனி பேசி எதுவும் ஆகப் போறதில்ல. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டோம். ஆனாலும், அவங்களுக்கு இன்னும் கான்ஷியஸ் திரும்பல. அவங்க திரும்ப திரும்ப யாஷ் கண்ணானு முணுமுணுத்துட்டே இருக்காங்க. நீங்க தானா அது?” என்றார் சேரனை பார்த்து.
“என் தம்பி” என்றவனுக்கோ தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“எங்க அவர் இன்னும் வரலையா?” என்றார் பார்வையால் அவ்விடத்தை துலாவியபடி.
“வந்துகிட்டு இருக்கான் டாக்டர்” என்று சமாளித்தான்.
“சரி, அவர கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க. அவர உடனே பாக்கணும்னு நினைக்கிறாங்க போலருக்கு. கிரிட்டிக்கல் இல்லனாலும் அவங்க ஹெல்த் வைஸ் இம்ப்ரூவ் ஆகுறதுக்கு அவர் கண்டிப்பா இங்க வந்தாகணும். இல்லனா, கிரிட்டிக்கல் ஸ்டேஜ் போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல”.
“டாக்டர்!” என்றார் திருமூர்த்தி நா தழுதழுக்க.
“நான் ரியாலிட்டிய தான் சொல்றேன் சார். உங்க மனதிருப்திக்காக பொய் சொல்ல முடியாது பாருங்க.. கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க. உங்க மகனையும் சீக்கிரம் வர வைங்க” என்று விட்டு மற்ற நோயாளிகளை பரிசோதிக்க சென்று விட்டார்.
“இன்னும் யாஷ்க்கு இன்ஃபார்ம் பண்ணலையா மாமா?” என்ற கமலேஷிற்கு மறுப்பாக தலையசைத்தார் திருமூர்த்தி.
“என்ன சம்பந்தி, சம்பந்தி அம்மா இப்படி இருக்காங்க ஏன் இன்னும் யாஷ்க்கு தகவல் சொல்லாம இருக்கீங்க?”.
“தகவல் சொல்ற நிலைமையில் அவன் எங்கள வச்சில்லையே சம்பந்தி, அவன் பண்ண காரியத்தால தானே இன்னைக்கு இங்க வந்து படுத்து கிடக்கா” என்றவருக்கோ மனம் ஆறவே இல்லை.
“இப்போ அதைப்பத்தி எல்லாம் பேச நேரமில்லை சம்பந்தி. முதல்ல யாஷ்க்கு தகவலை சொல்லி உடனே வர சொல்லுங்க. என்ன தான் நித்யாவும், சேரன் மாப்பிள்ளையும் இருந்தாலும் சம்பந்தி அம்மாவுக்கு யாஷ் தானே உயிர். யாஷ் வந்தா தான அவங்க உடம்பு தேரும்”
அவர்களை பிரிந்திருக்க இவர்கள் எண்ணினாலும், காலம் சேர்த்து வைக்க அல்லவா காத்திருக்கிறது.. விதியின் விளையாட்டு இன்னும் முடியவில்லை போலும்.
பவித்ராவின் அத்தியாயத்திற்கு இவர்கள் முற்றுப் புள்ளி வைக்க நினைக்க.. காலம் தொடர் புள்ளியை அல்லவா இட்டுக் கொண்டிருக்கிறது.
