“அத்த எப்படி இருக்காங்க?”.
அவளின் வார்த்தையில் மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “சீக்கிரம் சரியாகிடுவாங்க?”.
அவன் தன்னிடம் வருவான், ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த திருமூர்த்தி, அவன் பவித்ராவின் அருகில் சென்று நிற்கவும். அவனை முறைத்துப் பார்த்துவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.
நித்யாவும், சேரனும் யஷ்வந்தை நெருங்கியவர்கள், “அம்மா கண் விழிச்சாங்களா யாஷ்?” என்று வினவினர்.
“இல்ல” என்றவனோ, “ஏதாவது சாப்பிட்டீங்களா?”.
“இல்லடா, காலையிலேயே இப்படி ஆனதும் ஒன்னும் புரியல. அப்படியே வந்துட்டோம்”.
அவனின் குரலும், முகமுமே அத்தனை வாட்டமாய் இருந்தது.
“சரி வா, நம்ம கேண்டீனுக்கு போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவோம். அப்பாவுக்கு சுகர் டேப்லெட் போடணும்” என்று தன் அண்ணனுடன் கேண்டீனை நோக்கி நடந்தான்.
பவித்ராவின் அருகில் நின்ற நித்யாவிற்கு அவளுடன் என்ன பேச என்று தெரியவில்லை. முதலில் பேசுவோமா, வேண்டாமா என்பதும் புரியவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாய் தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் அவர்களுக்கான காலை உணவை வாங்கி வந்திருந்தனர்.
சாப்பிட மறுத்த திருமூர்த்தியை வற்புறுத்தி உண்ண வைத்திருந்தான் சேரன்.
அனைவரும் பெயருக்கு கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு நின்றிருந்தனர்.
மீண்டும் பரமேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர் வெளியே வர, அனைவரும் பரபரப்பாகினர்.
“இப்போ மச் பெட்டர். கண் விழிச்சிட்டாங்க போய் பார்க்கலாம். இன்னைக்கு ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”.
“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த அறைக்குள் நுழைந்தனர்.
சோர்ந்து போய் கண்களில் மெல்லிய நீர் படலத்துடன் படுத்திருந்தார் பரமேஸ்வரி.
தளர்ந்த நடையுடன் அவரை அடைந்த திருமூர்த்தி, “கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்ட பரமு உயிரே போயிடுச்சு” என்றார் தழுதழுத்த குரலில்.
அவரின் பார்வை அவரைத் தொடர்ந்து அடுத்ததாய் யஷ்வந்தில் படிந்தது.
அனைவரும் சற்று நேரம் அவருடன் பேசிவிட்டு வெளியே வந்து விட. யஷ்வந்தை கண்களால் அங்கேயே இருக்கும்படி சைகை செய்தார் பரமேஸ்வரி.
அனைவரும் வெளியேறியதும், அவர் அருகில் அமர்ந்தவன். அவரின் முகத்தையே நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“எனக்கு ஏதாவதுனா தான் என்னை பாக்க வருவியா யாஷ்?” என்று குரல் மங்க கேட்டவரை அடிபட்ட பார்வை பார்த்தவன்.
“ப்ளீஸ்மா, இப்படி எல்லாம் பேசாதீங்க. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல. உங்க கோபம் குறையவும் வரலாம்னு தான் போனேன்”.
“அப்போ உனக்கு நான் முக்கியம் இல்ல”.
“மா என்னமா இதெல்லாம்..” என்றான் அவரின் கண்ணீரை துடைத்துவிட்டு.
“அவ தான் முக்கியம்னு அவ பின்னாடியே போயிட்டியே.. நாங்க போனு சொன்னா நீ போயிடுவியா.. அப்போ உனக்கு நாங்க முக்கியம் இல்லையா?” என்று சிறுபிள்ளை போல் கேட்பவரிடம் என்னவென்று கூறுவது.
“அப்படியெல்லாம் இல்லம்மா, எனக்கு நீங்களும் முக்கியம் அவளும் முக்கியம். உங்கள்ல ஒருத்தரையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது” என்று அப்பொழுதுமே பவித்ராவை இணைத்து தான் பேசியிருந்தான்.
அதில் வெறுமென புன்னகைத்தவர், “புரியுது. என் மகன் ஒரு பொண்ணுக்கு கொடுத்த வாக்குக்காகவும், வாழ்க்கைக்காகவும் இவ்வளவு போராடுறான்னு நினைக்கும் பொழுது சந்தோஷமா தான் இருக்கு. ஆனா, அந்த பொண்ணு சரியானவ இல்லயே.. அதான் வருத்தமா இருக்கு” என்றார் மெலிந்த குரலில்.
இதற்கு மேல் இவரிடம் என்னவென்று விளக்க முடியும். ஏற்கனவே, நிறைய பேசியாகின்று. மீண்டும் புரிந்து கொள்ளாமல் பேசுபவரிடம் என்னவென்று விளக்க என்று எண்ணியவன் அமைதியாகி விட்டான்.
“நித்யாவுக்கு நம்ம இந்துவோட தம்பி கமலேஷை கல்யாணம் பண்ணலாம்னு பேசி இருக்கோம். நீ இல்லாம பூ வச்சிட்டோம். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. மனசே சரியில்ல.. உன் நினைப்பாவே இருந்துச்சு. இப்படி என் பையன விட்டுட்டு விசேஷம் செய்யுறோமேனு என் மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு. அப்படி உனக்கு எதுவுமே தோணலையா.. நீ என்னை பார்த்து எத்தன நாள் ஆகுது. இந்த அம்மாவை பார்க்கணும்னு உனக்கு ஒரு தடவை கூட தோணலையா.. என் நினைப்பு வரவே இல்ல”.
“எப்படிமா உங்கள பாக்க தோணாம இருக்கும். உங்க நினைப்பு வராம இருக்குமா.. ஆனா, நினைச்ச நேரம் வந்து பாக்குற மாதிரி சூழ்நிலை இல்லையே.. அதான் வரல. உங்கள நேர்ல வந்து பார்க்கலன்னாலும், தினமும் உங்கள பத்தி யோசிச்சுக்கிட்டே தான் இருப்பேன். நீங்க எல்லாரும் என்ன பண்றீங்கன்னு நெனச்சிட்டு தான் இருப்பேன்”.
“அப்போ எங்களோடவே வந்துடேன் யாஷ்!” என்றவரின் ஏக்கமான வார்த்தைக்கு அவனால் பதில் உரைக்க முடியவில்லை.
பவித்ராவை விட்டு வர வேண்டும் என்றால் அது அவனால் நிச்சயமாக முடியாது. அதை இந்த நிலையில் தன் தாயிடம் கூறவும் முடியாது. அவரின் உடல்நிலை வேறு இப்படி இருக்க என்னவென்று அவரிடம் விளக்கம் தர முடியும்.
அவரின் கேள்விக்கு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன். முதல்ல உங்க உடம்பு குணமாகட்டும். எல்லாம் சீக்கிரம் சரியாகும். தேவையில்லாததை பத்தி யோசிச்சுக்கிட்டு உங்க உடம்ப நீங்களே கெடுத்துக்காதீங்க” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, “சார், அவங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். ரொம்ப நேரம் யாரும் உள்ள இருக்க கூடாது. நீங்க வெளியில் வெயிட் பண்ணுங்க” என்றிருந்தார் செவிலியர்.
“சரி மா. நான் வெளியில வெயிட் பண்றேன் நீங்க தூங்குங்க”.
அவனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்ட பரமேஸ்வரி, “எங்கேயும் போயிட மாட்டல்ல யாஷ். இங்கே தான இருப்ப” என்றார் அவசர கதியில்.
அதில், அவனின் மனம் வெம்ப கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
“எங்கேயும் போகமாட்டேன். உங்க மகன் இங்க தான் இருப்பேன். வெளியில தான் இருப்பேன். எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க நான் உள்ள வருவேன்” என்று விட்டு அவரின் நெற்றியில் அழுத்தமாய் தன் இதழை பதித்துவிட்டு வெளியேறி இருந்தான்.
இரவு வரை அங்கே தான் அவர்களின் வாசம். திருமூர்த்தியும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்பொழுது முறைப்பான பார்வையை மட்டுமே வீசிக் கொண்டிருந்தார்.
அதிலும், பவித்ராவின் புறம் அவரின் பார்வை கூட திரும்பவில்லை. அவள் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் தான் அவர் நடத்தை இருந்தது.
அதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ளும் நிலையிலும் பவித்ரா இல்லை. யஷ்வந்தின் சூழ்நிலையும், வருத்தமும் அவளுக்கு நன்கு விளங்கியது.
கொஞ்ச நாட்களாக மட்டு பட்டு இருந்த குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க துவங்க. அவளின் பார்வை மொத்தமும் யஷ்வந்தின் மேல் தான்.
“அப்பாவை வீட்டுக்கு போக சொல்லுண்ணா. அதான் நாம இருக்கோம்ல. அப்பாவையும், நித்யாவையும் வீட்டுக்கு அனுப்பி வை”.
அதன்படி திருமூர்த்தியும், நித்யாவும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
பவித்ராவை வீட்டிற்கு வருகிறாயா என்று அவர்கள் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.
இவனும் அவர்களுடன் செல் என்றும் கூறவில்லை.
தங்கள் வீட்டிற்கு செல்கின்றோம் என்றும் கூறவில்லை. தன்னோடேயே இருக்க வைத்துக் கொண்டான்.
இப்படி ஒரு சூழலில் அவளை தனியாக விட்டால் அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதும் அவனுக்கு தெரியும் தானே.
இத்தனை மாதங்கள் அவளுடன் உறவில் இருந்தவனுக்கு அவளின் உணர்வுகள் பிடிப்பட்டு விடாதா என்ன..
இரவு போல் தான் யஷ்வந்தும், பவித்ராவும் வீடு திரும்பி இருந்தனர். வீட்டிற்குள் நுழைந்தவன் குளித்துவிட்டு வேறு உடைக்கும் மாறி ஹாலில் அப்படியே அமர்ந்து விட்டான்.
தானும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், இரவு உணவிற்கு தயார் செய்துவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
சட்டென்று அவளின் மடியில் தலை சாய்த்து கொண்டவன் ஒரு வார்த்தையும் அவளுடன் பேசவில்லை. அமைதியாக அவளின் இடையை சுற்றி வளைத்தபடி அவளின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தான்.
அவளிடமும் வார்த்தைகள் இல்லை. நீண்ட நெடிய மௌனம் இருவருக்கும் இடையே ஆட்சி புரிந்தது.
“அம்மா ரொம்ப சோர்ந்து போயிட்டாங்க பவி. நான் போனு சொன்னா அப்படியே போயிடுவியானு கேட்டாங்க.. என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. அவங்க மனசு மாற நினைச்சு தான் நாம அங்க இருந்து வந்தது. கடைசியில அவங்க மனசு இவ்வளவு பாதிக்கப்படும்னு நான் நினைச்சு கூட பாக்கல” என்று அவன் பாட்டிற்கு அங்கே தன் தாயுடன் பேசியதை இவளிடம் புலம்பிக் கொண்டு இருந்தான்.
எதுவும் இடைப்புகாமல் அமைதியாக அவனின் முகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
“இப்போ அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் பெட்டர்னு தான் டாக்டர் சொல்லி இருக்காங்க. நாளைக்கு பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்காங்க. சாப்பிட்டு படுக்கலாம் காலையில ஹாஸ்பிடல் வேற போகணும்” என்றவனுக்கு சம்மதமாக தலையசைத்தாள்.
“என்ன இவ்ளோ சைலன்ட்.. என்ன ஓடுது உன் மண்டைக்குள்ள?”.
அவனுக்கு மறுப்பாக அவள் தலை அசைக்கவும்.
“இங்க பாரு, எது எப்படி ஆனாலும் இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி. அதை மட்டும் யாராலயும் மாத்த முடியாது. அதை நல்லா உன் மண்டையில ஏத்திக்கோ.. தேவையில்லாம ஏதாவது யோசிச்சு உன்னையும் குழப்பி என்னையும் கோபப்படுத்தாத புரிஞ்சுதா”.
“ம்ம்”.
மறுநாள் சீக்கிரமே மருத்துவமனையை அடைந்து விட்டனர்.
“இவன் எதுக்கு ஒவ்வொரு தடவையும் வரும்போது இவளையும் கூடவே இழுத்துட்டு வரான். அவள வீட்ல விட்டுட்டு வந்து தொலைய வேண்டியது தானே. காலங்காத்தாலேயே இவ மூஞ்சில வேற விழிக்க வேண்டியதா இருக்கு” என்று சேரனிடம் காய்ந்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.
“அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்க. அவன் காதுல விழுந்துட போகுது”.
“விழுந்தா மட்டும் என்ன பண்ணிடுவானாம்.. பெத்தவ எப்படியோ போகட்டும்னு கை கழுவி விட்டுட்டு போனவன் தானே இவன் எல்லாம்..” என்று என்னை சட்டியில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தார்.
எத்தனை முயன்றும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சற்று நேரத்தில் இதே போல் அவனிடமும் வெடிக்கப் போகிறோம் என்பதை அவர் அப்பொழுது அறியவில்லை.
சற்று நேரத்தில் நிலைமையே தலைகீழாய் மாறவிருப்பதை உணராதவர்கள், தங்கள் தாயின் டிஸ்சார்ஜிற்காக காத்துக் கொண்டிருந்தனர்.
“ம்ம், எல்லாம் ஓகே தான். உங்க அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்று மருத்துவர் கூறி விடவும்.
அறைக்குள் நுழைந்த யஷ்வந்த் தன் தாயின் கையை பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான்.
“மா உடம்ப பாத்துக்கோங்க. நான் அங்க இல்லனாலும் என் நெனப்பு பூரா உங்கள பத்தி தான் இருக்கும். அப்பப்போ நானும் வந்து உங்கள பார்த்துக்கிறேன். என்னை பத்தி யோசிக்காதீங்க.. உடம்ப பாருங்க.. நித்யா கல்யாணத்தை நல்லபடியா நடத்தணும் இல்ல” என்று ஏதோ சிறு பிள்ளைக்கு கூறுவது போல் இவன் கூறிக் கொண்டிருக்கவும்.
பரமேஸ்வரியின் பார்வை மொத்தமும் அவனின் முகத்திலேயே தான் நிலைத்திருந்தது.
