யஷ்வந்த் வீட்டிற்குள் நுழையும் பொழுது அத்தனை ஆர்பாட்டமாய் இருந்தது.
“அண்ணா வந்துட்டியா.. இங்க வா.. இப்ப தான் இந்து அண்ணியுடைய அம்மாவும், அப்பாவும் வந்து இந்த திங்ஸ் எல்லாம் கொடுத்துட்டு போனாங்க” என்றவாறு அவளுக்கான புடவையையும், பட்டாசு, இனிப்புகள் என அனைத்தையும் வரிசைப்படுத்தி காட்டினாள் ஒரு வித குதூகலத்தோடு.
“ஓ! இந்து அண்ணியுடைய அப்பாவும் அம்மாவும்.. அப்ப உன்னுடைய மாமியார், மாமனார் வரல. அண்ணி கேட்டிங்களா உங்க அம்மா அப்பாவாம்” என்று ராகம் இழுத்து வழக்கம்போல் அவளை வம்பு இழுத்தான்.
“அண்ணா” என்று அவள் சிணுங்கவும்.
“அவளை ஏன் கிண்டல் பண்ற.. இங்க வா ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுட்டேன் வழக்கம்போல டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குன்னு சொல்லு” என்று கிச்சனில் இருந்து வெளியே வந்தவர் தன் மகனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார்.
அங்கே பவித்ரா என்ற ஒருத்தி நின்றிருப்பதே யாரின் கண்களுக்கும் தெரியவில்லையா.. அல்லது, தெரிந்தும் அதை அவர்கள் உணரவில்லையா என்பது தான் புரியவில்லை.
அவளை வா என்று கூட அழைக்க யாரின் வாயும் திறக்கப்படவில்லை.
மெல்லிய சிரிப்போடு அமைதியாக தங்கள் உடை பெட்டியுடன் அறைக்கு சென்று விட்டாள். இது வழக்கமாக நடப்பது தானே அப்படி ஒன்றும் வருத்தமெல்லாம் அவளுக்கு இருக்கவில்லை.
இவளிடம் பேசுகிறார்களோ இல்லையோ, யஷ்வந்திடம் அவர்கள் பேசுவதை கண்டே அப்படி மகிழ்ந்து போவாள்.
இன்றும் அப்படித்தான் அவனின் தாயின் அந்த உரிமையான அழைப்பும், இணக்கமான பேச்சுவார்த்தையும் இவளுக்கும் அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
குழந்தை யாஷிகா அழுது கொண்டே இருக்கவும். இந்துவினால் சமையலறையில் பரமேஸ்வரிக்கு ஒத்தாசையாக இருக்க முடியவில்லை.
நித்யா தான் அவருக்கு கூட மாட வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
பவித்ராவிற்கு உதவி செய்ய செல்லலாமா என்று கால்கள் பரபரத்தாலும், ஒரு வித சங்கடத்தோடு தள்ளியே நின்று கொண்டாள்.
“வாவ் மா! வழக்கம் போல உங்களுடைய கைமணம் மாறாம எல்லா பலகாரமும் பிரமாதமா வந்திருக்கு” என்று சிலாகித்துக் கூறியவன்.
நேராக ஒன்றைக் கொண்டு வந்து பவித்ராவின் கையில் திணித்தான்.
“இந்தா பவி, சாப்பிட்டு பாரு.. அம்மாவோட கை பக்குவம் சும்மா அப்படி இருக்கும்” என்று தூண்டவும்.
அவளும் ருசி பார்த்தவள், “நல்லா இருக்கு” என்றிருந்தாள்.
“நான் சொன்னேன்ல” என்றவன் தன் அன்னையைப் பார்த்து, “பார்த்தீங்களா.. பவித்ராக்கு கூட ரொம்ப பிடிச்சிருக்கு”.
அவனும் எப்படியெல்லாமோ பேசி சரி கட்ட தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நடப்பவை அனைத்தும் அவனின் பார்வைகளுக்கு மட்டும் விழாமல் போய்விடுமா என்ன..
அவனும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். பவித்ராவிடம் யாரும் பேசாமல் இருப்பதும், அவளை ஒரு பொருட்டாக கருதாமல் ஒதுக்குவதும் அவனுக்குமே நன்கு புரிகிறது.
குடும்பத்தையும், மனைவியையும் ஒருசேர சமாளிக்கும் வித்தையை திறம்பட கற்றுக் கொண்டான் யஷ்வந்த்.
அறைக்குள் வேகமாக நுழைந்த பரமேஸ்வரி கையில் ஒரு கட்டை பையுடன் வெளியே வந்தவர், ஹால் ஷோபாவில் அமர்ந்தவாறு, “யாஷ் இங்க பாரு, இதான் உனக்கு வாங்குன டிரஸ். இது நித்யாவுக்கு” என்று ஒவ்வொருவரின் உடைகளாக எடுத்து அவனிடம் காண்பித்துக் கொண்டு இருந்தார்.
அனைத்தையும் பார்த்து, “நல்லா இருக்குமா” என்று கூறிக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.
அப்பொழுது அவனின் செல்பேசி இசைக்கவும் அணைப்பை ஏற்றவன், “சொல்லுடா”.
“என்னடா மச்சான் தல தீபாவளி செலெப்ரேஷன் எல்லாம் எப்படி போகுது?” என்றான் சுதாகர்.
உண்மையிலேயே இதைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அந்த அளவில் குடும்பத்துடன் இன்னும் இணக்கம் ஆகாததால் பவித்ராவிற்கு தலை தீபாவளி பற்றிய எண்ணம் எழுந்தாலும், யஷ்வந்திடம் அதைப் பற்றி எதுவும் கலந்து கொள்ளவில்லை.
“இப்ப தான் டா அம்மா வீட்டுக்கு வந்தோம்” என்றவன் பவித்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நான் அப்புறமா கால் பண்றேன் டா” என்றவாறு அழைப்பை துண்டித்தான்.
“அம்மா இது எங்களுக்கு தல தீபாவளி ஆச்சே.. பவித்ராவுக்கு வாங்குன டிரஸ் எங்க?” என்றான் தன் தாயை பார்த்து.
“ஆமா, முறைப்படி நாங்க கட்டி கூப்பிட்டு வந்தவ பாரு.. தல தீபாவளி கொண்டாடுற நிலைமையிலையா நாம இருக்கோம். வீட்டுக்குள்ள சேர்த்ததே பெருசு இதுல தல தீபாவளி தான் ஒரு கேடு” என்று சட்டென்று கோபமாக திட்டிவிட்டார் திருமூர்த்தி.
“என்னங்க” என்ற பரமேஸ்வரி மேலும் பேசும் முன் அவரை முறைத்துப் பார்த்தவர்.
“இந்து வீட்டிலிருந்து சீர் செஞ்சாங்களே அதை உன் சின்னப் பிள்ளை கிட்ட சொல்ல வேண்டியது தானே.. அவ தான் நாம பார்த்து இந்த வீட்டுக்கு கட்டி கூப்பிட்டு வந்த மருமக.. முறையா பெரியவங்க ஆசீர்வாதத்தோட நடந்த கல்யாணம். அவளோட அம்மா அப்பா வந்து முறைப்படி சீர் வச்சு குடுத்துட்டு போயிருக்காங்க. இவன் பொண்டாட்டிக்கு அப்படி யார் வந்து சீர் வச்சா, உன் மகன் தல தீபாவளி கொண்டாட” என்று சிடுசிடுத்தார்.
அவரின் வார்த்தையில் பவித்ராவிற்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது. கண்ணீரை வெளியே காட்டாமல் இருக்க இதழ் கடித்து பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தாள்.
“அப்பா அவளுக்கு எல்லாமே நான் தான்! வேற யாரு அவளுக்கு சீர் வைக்கனும். நான் ஒன்னும் இப்போ சீர் வைக்கிறது பத்தி பேசலையே.. குடும்பத்துல இருக்குற எல்லாருக்குமே புது துணி எடுத்திருக்கீங்க. விசேஷ நாள்னு தான.. அதுபோல என் பொண்டாட்டிக்கு எங்க புது துணின்னு தான கேட்டேன்” என்றான் இழுத்து பிடித்த பொறுமையோடு.
என்ன தான் அவள் குட்ட குட்ட குனிகிறாள் என்றால் வசமாய் அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா.. அவளுக்கான உரிமைகளையும் பெற்று தர வேண்டிய பொறுப்பும், கடமையும் இப்பொழுது இவனுடையது தானே.
“அதெல்லாம் எடுக்கல”.
“ஏன்?”.
“அதான் சொன்னியே பா, குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் புது துணி எடுத்து இருக்கோம்னு.. அவளுக்கு எடுக்கலன்னா அதுக்கு என்ன அர்த்தம்.. அவள இந்த குடும்பத்துல ஒருத்தியா நாங்க யாரும் பாக்கலைன்னு அர்த்தம்”.
அவரின் வார்த்தை யஷ்வந்திற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவள் எத்தனை அனுசரித்து போகிறாள். அதற்காக அவளை இப்படியா பேசுவது என்று வருத்தமாகி போக.
“அவளுக்கு புது துணி வாங்கலைன்னா எனக்கும் இந்த புது துணி வேண்டாம் மா. எங்க ரெண்டு பேருக்கும் நான் ஏற்கனவே எடுத்துட்டேன். அதுவே எங்களுக்கு போதும்”.
“யாஷ் என்னப்பா பேசுற நீ?”.
“ஆமாமா, நான் வேற அவ வேற கிடையாது. நாங்க ரெண்டு பேரும் ஒன்னு தான். அவ வேண்டாம் ஆனா நான் மட்டும் எப்படி உறவாக முடியும்?”.
“என்கிட்ட தான் புது துணி இருக்கே. எதுக்கு இத ஒரு விஷயமா பேசிட்டு இருக்கீங்க” என்று யஷ்வந்தின் கையைப் பிடித்து மெதுவாய் கூறினாள் பவித்ரா.
அவளை முறைத்துப் பார்த்தவன், “ஒரு குடும்பம்னா எல்லாருக்குமான இடம் அந்த இடத்துல கிடைக்கணும். அப்படி கிடைக்காத பட்சத்துல கேட்டு வாங்கிக்கிறது ஒன்னும் தப்பில்ல” என்றவன் அவளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.
“இப்போ ஏன் இவ்வளவு கோபம்?” என்று அறைக்குள் நுழைந்தவள் வினவவும்.
கோபமாக தன் சிகையை கோதியவன், “இப்போ டிரஸ் வாங்காதது ஒரு விஷயம் இல்ல பவி. குடும்பத்துல ஒரு ஆளா பார்க்கலைன்னா அதுக்கு என்ன அர்த்தம்?” என்றான் வார்த்தைகளை மென்று விழுங்கியவாறு.
“அவங்களுக்கு இன்னும் கோபம் முழுசா போகல இல்ல”.
“நானும் அதை தப்பா சொல்லல.. அதனால தானே பொறுத்து போறோம். அதுக்காக ஒரு விசேஷ நாளில் கூட ஒதுக்கி வச்சா எப்படி?” என்றவனுக்கு அத்தனை ஆதங்கமாக இருந்தது.
“ம்ம்ச்ச்.. என்னை பாருங்க பாவா” என்று அவனின் கன்னத்தை பற்றி தன்னை பார்க்கச் செய்தவள்.
“இப்போ இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. நல்ல நாளும் அதுவுமா இப்படி சண்டை போட்டுக்கிட்டு நல்லாவா இருக்கு. அப்புறம் அத்த மனசு கஷ்டப்படும். இதுக்காகவா நம்ம அங்க இருந்து இங்க கிளம்பி வந்தோம். என்கிட்ட இல்லாத துணியா.. இதை பெருசு படுத்த வேண்டாம் விட்டுடுங்க. அவங்க மனசு மாறுற வரைக்கும் பொறுமையா காத்துட்டு இருக்கலாம்”.
அவளைப் போல் அத்தனை பெருந்தன்மையாய் அவனால் யோசிக்க முடியவில்லை. அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்.
“எப்படி.. இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமையா காத்துக்கிட்டு இருக்கிறது. தூரத்தில் இருந்து கூட காத்துக்கிட்டு இருந்திடலாம். இப்படி பக்கத்துல ஒரே குடும்பமா நிக்க வச்சு வார்த்தையால விலக்கி வச்சு பேசும்பொழுது ரொம்ப வலிக்குது பவி”.
தனக்கே இப்படி என்றால் அவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று தான் அவனின் மனம் அடித்துக் கொண்டது.
செல்லும் இடமெல்லாம் விரட்டி அடித்தால் அவளும் என்ன தான் செய்வாள்.
அவனின் மனநிலையை சரியாக கணித்துவிட்டாள். அவன் தனக்காக எண்ணி வருந்துவது இவளுக்கும் வருத்தத்தை அளிக்க.
“எனக்கு எந்த கஷ்டமும் இல்ல பாவா. நானே வெயிட் பண்றேன்னு சொல்றேன். அப்புறம் உங்களுக்கு என்ன.. என்னை பத்தி யோசிக்காதீங்க. எனக்கு இங்க இப்படி வந்துட்டு போறது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இவங்க துணி எடுத்து கொடுத்தாதான் நான் இந்த குடும்பத்துல ஒருத்தின்னு இல்லையே.. நான் யஷ்வந்தோட பொண்டாட்டின்ற அங்கீகாரம் எனக்கு எப்பயோ கிடைச்சிடுச்சு. இவங்க ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலனாலும் நானும் இந்த வீட்டோட மருமக தானே.. அது அவங்களுக்குமே புரியும். ஆனாலும், ஒத்துக்க அவங்க மனசு இடம் தரல. அவங்க பக்கம் இருக்க நியாயத்தையும் நாம பார்க்கணும்ல” என்று அவனுக்காக அவள் பேச, அவளுக்காக அவன் பேச என பொழுதுகள் நீண்டு கொண்டே சென்றது.
அவன் எடுக்காமல் வைத்துவிட்டு சென்ற துணியை பார்த்த பரமேஸ்வரி தன் கணவரை திரும்பி பார்க்கவும்.
“என்னை எதுக்கு பாக்குற இப்போ.. அவனுக்கு எப்பயும் போல நம்ம குடும்பத்துக்கு துணி எடுக்கும் பொழுது சேர்த்து தான் எடுத்தோம். அவன் வீம்புக்கு கோவிச்சுக்கிட்டு போனா அதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது” என்றார் விட்டேற்றியாக.
“பேசாம அந்த பொண்ணுக்கும் புது துணி எடுத்து இருக்கலாம். இப்ப தேவையில்லாத பிரச்சனை”.
“இங்க பாரு பரமு, உனக்காக மட்டும் தான் நான் சகிச்சுக்கிட்டு பல்ல கடிச்சுக்கிட்டு இங்க நடக்கிறதை எல்லாம் பாத்துட்டு இருக்கேன். அதுக்காக எப்பயும் நான் அப்படியே இருப்பேன்னு மட்டும் நினைச்சுடாத. அதான் அவங்களுக்கு அவங்களே புது துணி எடுத்து இருக்காங்களாமே.. அதையே கட்டிக்கிட்டு தல தீபாவளி கொண்டாடுவாங்களாம்.. தல தீபாவளி..” என்று முணுமுணுத்துக் கொண்டே அறைக்கு சென்று விட்டார்.
“சரி விடுங்கம்மா, இந்த அளவுக்கு அப்பா அமைதியா இருக்கிறதே பெரிய விஷயம். இத பெரிசு படுத்த வேண்டாம். இவ்வளவு தூரம் இறங்கி வந்தவங்க இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா அந்த பொண்ணையும் ஏத்துப்பாங்க”.
பரமேஸ்வரிக்கும் அவரின் மனநிலை புரிந்தது. தன்னாலேயே இன்னும் அப்பெண்ணை முழுமனதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னும் பொழுது, தன் கணவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதும் அவருக்கு நன்கு விளங்கியது.
