கடினப்பட்டு எரியும் விழிகளை மலர்த்த முடியாமல் விழி மலர்த்தியவள் கண்டது என்னவோ தன்னையே மொய்க்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனை தான்.
நாணமும், கூச்சமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட. நொடியில் சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள வழி தெரியாமல் அவனிலேயே புதைந்து போனாள். பாரம் தாங்காத நெற்கதிர் போல்.
இவளுக்குள் ஓராயிரம் மத்தாப்புகள் பூத்து அடங்க. உடல் முழுவதும் விரவிப் போகும் குறுகுறுப்பை என்ன செய்தும் அடக்க முடியவில்லை.
தன்னுள் புதைந்தவளுக்குள் தானும் புதைந்து போக. மீண்டும் அங்கே ஒரு உணர்வுகளின் சங்கமம் அரங்கேறியது.
காலை பொழுதுகள் இத்தனை அழகாய் இருக்குமா என்று உணர்வுபூர்வமாய் உணர்ந்தவாறு குளியல் அறையில் இருந்து வெளியே வந்தான் யஷ்வந்த்.
அதற்குள் வேறு உடைக்கு மாறி இருந்தவள் அவனின் முகம் நோக்க முடியாமல் அவசரமாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
சின்ன சின்ன தீண்டல்களும், செல்ல சில்மிஷங்களும் என அவர்களின் இல்லறம் அழகாய் துவங்கியது.
‘மணி 10 ஆகிடுச்சா இந்நேரம் எல்லாரும் அவங்கவங்க வேலைக்கு போய் இருப்பாங்களே’ என்று தன் செல்பேசியை பார்த்து எண்ணிக்கொண்டே தன் தலையை துவட்டியவாறு யஷ்வந்த் அறையில் இருந்து வெளியே வரவும்.
ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அவனின் தந்தை, அவன் வந்து நின்ற கோலத்தை பார்த்து கோபமாக தன் கையில் இருந்த ரிமோட்டை சோபாவில் போட்டுவிட்டு அறைக்கு எழுந்து சென்று விட்டார்.
சற்று தள்ளி டைனிங் டேபிளில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரியும் கோபமாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடங்கினார்.
“என்னம்மா இன்னைக்கு காலேஜ் போகல?” என்றவாறு அவருக்கு எதிரே இருந்த இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான் யஸ்வந்த்.
அந்நேரம் கிச்சனிலிருந்து அவனுக்கான காபியை கொண்டு வந்து அவனின் முன்னே வைத்த நித்யா, “என்னண்ணா இன்னைக்கு சாட்டர்டே அது கூட மறந்து போச்சா” என்றாள் கிண்டலாக.
தன் தலையில் அழுத்தமாக தட்டிக் கொண்டவன், “ஓ.. ஆமால்ல.. மறந்துட்டேன்” என்றான் அசடு வழிந்தவாறு.
“உங்க அண்ணனுக்கு இப்போ அவனுடைய புது பொண்டாட்டியை தவிர வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது. எழுந்து வர நேரத்தை பார்த்தியா.. இது தான் வீட்டுக்கு வந்த மருமக எழுந்து வர நேரமா.. எங்க உன் பொண்டாட்டி.. மகாராணி எழுந்தாளா இல்லையா.. இன்னும் தூங்கிட்டு இருக்காளா.. அவளுக்கு காபி கொண்டு போக தான் நீ வந்தியா”.
அவரின் முகமே அத்தனை கடுப்பாக இருந்தது.
நேற்று பவித்ரா உறங்கியதற்கே அத்தனை பேச்சு பேசினார். இன்று என்னவெல்லாம் பேசப்போகிறாரோ என்று எண்ணிய யஷ்வந்த் தன்னைத்தானே மானசீகமாக கடிந்து கொண்டான். விரைவில் அவள் எழ உதவி இருக்க வேண்டுமோ என்று.
ஏற்கனவே, நேரம் தாழ்ந்து எழுந்தவளுக்கு மேலும் தாமதம் ஆனதும் இவனால் தானே.
“அம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று தயங்கிக் கொண்டே கூறியவனை முறைத்து பார்த்தவர், “ஏன் அது எங்களுக்கு தெரியாதா.. அப்படி என்ன இன்னைக்கு சனிக்கிழமைன்னு கூட நினைப்புல இல்லாத அளவுக்கு கொண்டாட்டம். வந்ததும் காலேஜ் போகலையான்னு கேக்குற”.
“அது ஏதோ நினைப்புல கேட்டுட்டேன்ம்மா” என்று இவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பவித்ரா அறையில் இருந்து வெளிவந்திருந்தாள்.
“இதோ வந்துட்டாங்களே மகாராணி.. அடியேய் நித்யா உன் சின்ன அண்ணிக்கு இப்ப தான் கோழி கூவி இருக்காம். மேடம்க்கு சூடா காபி கொண்டு வந்து கொடு” என்றார் எள்ளலாக.
“சரி விடுங்கம்மா.. ஒரு நாள் தான” என்று நித்யாவும் பரிந்து பேச.
“ஒரு நாள் கதை தொடர்கதை ஆகிட கூடாதுன்னு தான் பேசிட்டு இருக்கேன். இங்க பாருடா, இப்படி விடிஞ்சு பல மணி நேரம் ஆன பிறகு எழுந்திரிச்சு வரர்து, விளக்கு வைக்கிற நேரத்துல தூங்குறதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது. சொல்லி வை உன் பொண்டாட்டி கிட்ட.. நம்ம குடும்பத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். அவ இஷ்டத்துக்கு எல்லாம் இங்க ஆட முடியாது” என்றவரின் வார்த்தை யஷ்வந்திடம் இருந்தாலும், பார்வை என்னவோ பவித்ராவை தான் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது.
அதில் அவளின் தலை வேகமாக ‘சரி’ என்பது போல் ஆட.
நித்யா அவளின் கையில் காபி கப்பை திணித்து இருந்தாள்.
யஷ்வந்த் நடப்பவற்றை சலிப்பான தலையசைப்புடன் பார்த்தவன். அவளை நோக்கி தன் கண்களை மூடி திறக்கவும். பவித்ராவிற்குள் எழுந்த படபடப்பு சற்று குறைந்த உணர்வு.
அதற்குள் அழைப்பு மணி ஓசை கேட்கவும் யார் என்று பார்த்தான் சேரன்.
அவனின் மனைவி இந்து தான் தங்களின் குழந்தை யாஷிகாவுடன் நின்று இருந்தாள்.
அவள் அருகில் அவளின் தாயும், தந்தையும், தம்பியும் நின்று இருந்தனர்.
“ஹே இந்து என்ன இது.. சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நிக்கிற” என்றவன்.
“வாங்க அத்தை.. வாங்க மாமா.. வா கமலேஷ்” என்று அழைத்தவாறு அவர்கள் உள்ளே வர வழி விட்டு தள்ளி நின்றான்.
“ஒரு நிமிஷம் அங்கேயே நில்லுமா இந்து. இதோ வந்துடறேன்” என்றவாறு வேகமாக சமையலறைக்குள் நுழைந்த பரமேஸ்வரி ஆரத்தி தட்டை கரைத்து கொண்டு வந்து அவளுக்கும், குழந்தைக்கும் ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்து வந்தார்.
முதல் முறை தங்கள் பேர குழந்தை வீட்டிற்கு வந்திருக்கிறது. அதுவே இறுக்கமாய் இருந்த அவர்களின் மனநிலையை தளர்த்த போதுமானதாய் இருக்க.
நேற்று முதல் மண்டி கிடந்த வருத்தங்கள் குழந்தையின் பொன் முகத்தை கண்டதும் கொஞ்சமே கொஞ்சம் விலகி சென்றது.
“என்ன சம்பந்தி நாங்க தான் அடுத்த வாரம் வந்து முறைப்படி நாங்களே அழைச்சிட்டு வரோம்னு சொன்னோமே. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று வந்தவர்களுக்கு சிற்றுண்டியை கொடுத்துக் கொண்டே இன்முகமாக வினவினார் பரமேஸ்வரி.
வந்தவர்களின் பார்வை பவித்ராவின் மேல் ஒவ்வொரு விதமாய் படிய. அவளுக்கு தான் அங்கு நிற்கவே சங்கடமாக இருந்தது.
“எங்க சம்பந்தி சொன்னா கேக்குறா.. இந்து தான் ஒரே அடம்.. இங்க நடந்த பிரச்சனை எல்லாம் நேத்து மாப்பிள்ளை சொல்லி இருப்பாங்க போலருக்கு. இங்க என்ன நிலவரம் தெரியல. நான் உடனே கிளம்புறேன்னு அடம் பிடிச்சு எங்களை இழுத்துட்டு வந்துட்டா. விஷயத்தை கேள்வி பட்ட பிறகு நாங்களும் வந்து விசாரிக்கணுமே இல்லன்னா நல்லா இருக்காது பாருங்க. அதான் அவளையும் அப்படியே விட்டுட்டு விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தோம்” என்றார் லதா இந்துவின் தாய்.
அதற்குள் திருமூர்த்தியும் இவர்கள் வந்திருக்கும் விஷயம் அறிந்து வெளியே வந்து மரியாதை நிமித்தமாக அனைவரையும் அழைத்து இருந்தார்.
பெற்றவர்களுக்கு மற்றவர்களின் முகத்தையே காண முடியாத தர்ம சங்கடமாய் இருந்தது. இப்படி ஒரு சூழலில் அவர்கள் இதுவரை நின்றதே கிடையாது.
அத்தனை மரியாதையோடு வாழ்ந்த குடும்பம். இன்று இவர்களுக்கு பதில் உரைக்க முடியாமல் கூனி குறுகிப் போய் அமர்ந்திருந்தனர்.
“எல்லாம் கேள்விப்பட்டோம் சம்பந்தி. நம்ம யஷ்வந்தா இப்படின்னு எங்களால நம்பவே முடியல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. அதான் இந்த மாதிரி நேரத்துல இந்து இங்க இருந்தா உங்களுக்கும் ஆறுதலா இருக்குமேன்னு கிளம்புறேன்னு சொன்னதும் எங்களுக்கும் தடுக்க தோணல. அதான் உங்களையும் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தோம்” என்றார் சத்யன் இந்துவின் தந்தை.
சட்டென்று கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக் கொண்ட பரமேஸ்வரி, “என்ன பண்றது அண்ணி நாம என்ன தான் பார்த்து பார்த்து ஒழுக்கமா பசங்கள வளர்த்தாலும், அவங்க தலையில என்ன எழுதி இருக்கோ அது படி தானே நடக்கும். என் மகன் இப்படி எங்க தலையில மண் அள்ளி போடுவான்னு நினைச்சதே கிடையாது. அத்தனை பொறுப்பா இருப்பான். அவன் இப்படி செஞ்சுட்டானேன்னு எங்களுக்கும் ஆதங்கமா தான் இருக்கு. என்ன பண்றது”.
“கவலைப்படாதீங்க அண்ணி, விதி என்ன இருக்கோ அப்படித்தானே நடக்கும். யஷ்வந்த் இதுவரைக்கும் தப்பு சொல்ற மாதிரி ஒரு காரியமும் செஞ்சது கிடையாது. அத்தனை ஒழுக்கமான புள்ள. ஏதோ நேரமும், காலமும் உங்க குடும்பத்தை இப்படி போட்டு ஆட்டி படைக்குது. இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல”.
“இப்போ என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க?” என்றார் சத்யன்.
யஷ்வந்திற்கு தன் தாயையும், தந்தையையும் இப்படி காணவே மனம் கனத்துப் போனது. தான் செய்த காரியத்தின் பின்விளைவுகளை பற்றி தெரிந்து தான் செய்தான்.
அவன் ஒன்றும் சிறு பிள்ளை இல்லையே.. எதைப்பற்றியும் சிந்தியாமல் செய்வதற்கு. ஆனாலும், பலனை கண் முன் காணும் பொழுது மனம் வலிக்கத்தான் செய்தது.
“ஏம்மா உன் பேர் என்ன?” என்ற லதாவின் கேள்விக்கு வார்த்தைகள் தொண்டை குழியிலேயே சிக்கிக் கொண்டு வெளி வராமல் சதி செய்தது பவித்ராவிற்கு.
இத்தனை பேரின் பார்வையும் தன்னை துளைத்தெடுப்பது போல் இருக்கவும். மேலும், அவர்களின் வார்த்தைகள் வேறு அத்தனை வேதனையை கொடுத்தது.
“ப.. பவித்ரா” என்றாள் தடுமாறி.
“இந்த காலத்து பிள்ளைங்களுக்கு அவங்க செய்யுறது தான் சரின்னு நினைப்பு. பெத்தவங்க இருக்காங்க நம்ம வாழ்க்கையை முடிவு பண்றதுக்குன்ற எண்ணமே இருக்க மாட்டேங்குது. வளந்ததும் எல்லா முடிவையும் அவங்களே எடுத்துடலாம்னு நினைக்கிறாங்க. சரி விடுங்க சம்பந்தி, நடந்தது நடந்து போச்சு. இனி இத பத்தி பேசி என்ன ஆகப்போகுது” என்று திருமூர்த்தியின் கைகளை பற்றி கொண்டு அவருக்கு ஆதரவாக பேசினார் சத்யன்.
சத்யனின் கை மேல் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்த திருமூர்த்தி, “இந்த விஷயத்தை எப்படி எல்லாருக்கும் சொல்ல போறேன்னு தெரியல சம்பந்தி. யார் முகத்தையும் பார்க்க கூட முடியல” என்றார் வருத்தத்தோடு.
“உன் வீட்டு ஆளுங்க எல்லாம் ஒன்னும் சொல்லலையா?” என்ற அடுத்த அடுத்த லதாவின் கேள்விகள் பவித்ராவையே குறி வைத்து பாய்ந்தது.
“இல்ல..” என்று அவள் முடிப்பதற்குள்ளாகவே, “அவளுக்கு குடும்பம்னு யாரும் இல்லத்த. இனி எல்லாமே நாம தான்” என்றான் அழுத்தமாக.
“இல்ல, அவளுக்கு குடும்பமே கிடையாதுன்னு சொல்றேன். சின்ன வயசுல இருந்து ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தா. நானும் அவள அங்க பார்த்து தான் பிடிச்சு போய் கட்டிக்கிட்டேன்”.
லதாவும் சத்யனும், திருமூர்த்திக்கும் பரமேஸ்வரிக்கும் ஆறுதல் மொழிகளை கூறியவர்கள்.
“அதான் பெத்தவங்க யாரும் இல்லன்னு யஷ்வந்த் சொல்றானே சம்பந்தி. கல்யாணம் பண்ணிட்டாங்க இனி வேற என்ன பண்றது. சிம்பிளா ஒரு ரிசப்ஷன் வச்சு இவங்களுக்கு கல்யாணம் ஆனதை வெளியில் தெரிய படுத்திடுங்க” என்றவருக்கு ஆமோதிப்பாய் தலையசைத்திருந்தார் திருமூர்த்தி.
****
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 😊