தன் தாயின் சிறு செயல் அவளின் மனதிற்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணரும் பொழுதே யஷ்வந்திற்குள் சொல்லல்லா உணர்வு.
இன்னும் தன் தாய் அவளை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வப்பொழுது திட்டிக்கொண்டு தான் இருக்கிறார். அதற்கே இப்படி பூரித்துப்போகுபவளை என்னவென்று சொல்வது.
அவரின் ஒரு சிறு செயலே இவளுக்குள் இத்தனை உணர்ச்சியை தூண்டி இருக்கின்றது என்றால், அவர்களின் அன்பு இவளுக்கு முழுமையாய் கிடைத்தால் எப்படி ஒரு மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போவாள் என்று எண்ண எண்ண அவனின் மனம் ஆறவில்லை.
அவளின் இறுக்கமும் கூட, இந்த நேரத்தில் இவனின் அணைப்பு அவளுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக தான் இருந்தது.
அழுத்தமாக அவனின் டி-ஷர்டை பிடித்து கொண்டவளோ மௌனமாய் அழுகையில் கரைந்தாள்.
அவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் தன் இதழை பதித்தவன், “போதும்டா” என்றான் மென் குரலில்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை மீண்டவள், “எனக்கு.. எனக்கு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது எல்லாத்துக்குமே நீங்க தான் காரணம். தேங்க்ஸ்” என்றாள் திக்கி திணறி சிதறிய வார்த்தைகளோடு.
“தேங்க்ஸ் தான சொல்லலாம்..” என்றவனோ அவளின் முகம் தாங்கி தன் செயலால் அவள் பேச முடியாமல் தவிக்கும் அத்தனை வார்த்தைகளையும் தனக்குள் வாங்கிக் கொண்டான்.
“அண்ணே.. அது வந்து.. இது..” என்று பரமேஸ்வரி தடுமாறி நிற்கவும்.
அவர் பதில் கூற முடியாமல் திணறுவது புரியவும். அய்யனாரின் பார்வை பரமேஸ்வரியில் படிந்து அடுத்ததாய் திருமூர்த்தியில் விழுந்தது.
“மச்சான் இந்த பொண்ணு..” என்று அவரும் தடுமாறவும்.
“என் வைஃப்!” என்றிருந்தாள் யஷ்வந்த்.
அதில், நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அதிர்ச்சி தாங்க மாட்டாது எழுந்தே நின்று விட்டார்.
“என்ன சொல்ற யஷ்வந்த்?”.
“ஆமாம் மாமா. நாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்”.
அவரின் விழிகள் இப்பொழுது காஞ்சனாவில் படிய.
அவரோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் மகளை பார்த்தார்.
அவளுமே அதிர்ச்சியாக இருப்பதை அவளின் விழிகளே பறைசாற்றியது.
“பரமு என்னமா இதெல்லாம்?” என்றார் தன் அகத்தின் திகைப்பை குரலில் தேக்கியவாறு.
“ஆமாண்ணா, உங்க கிட்ட பேசின பிறகு யஷ்வந்த் இப்படி பண்ணிட்டு வந்துட்டான். எங்களுக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. அந்த நேரம் உங்கள காண்டாக்ட் பண்ண முடியல. உங்க போன் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு. அதான் நீங்க எப்படியும் நேர்ல வரேன்னு சொன்னீங்களே நேரிலேயே சொல்லிக்கலாம்னு வெயிட் பண்ணோம்”.
“இதை நீங்க முதல்லயே சொல்லி இருக்கலாம். நான் திலகாவையும் இங்க கூப்பிட்டு வராமல் இருந்திருப்பேன்”.
அனைவருக்குமே இந்த சூழ்நிலை அத்தனை சங்கடமாக இருந்தது.
அதுவரை இவர்களுக்கு எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்காமல் இருந்ததை எண்ணி பரமேஸ்வரிக்கும், திருமூர்த்திக்கும் சற்று ஆசுவாசமாக இருந்தது.
“இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்களுமே எதிர்பார்க்கல அண்ணா. எங்களை மன்னிச்சிடுங்க”
“என்ன சொல்றதுன்னு தெரியல பரமு. உன் அண்ணன் யஷ்வந்த் தான் திலகாவுக்கு மாப்பிள்ளைன்ற அளவுக்கு பேசிட்டாரு. நல்ல விஷயத்தை பேசுறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டு வருவோம்னு சொல்லவும், சரின்னு குடும்பமா கிளம்பிட்டோம். இப்போ இப்படி ஆகிப்போச்சு” என்றவரின் முகத்திலும் மித மிஞ்சிய வருத்தம் தென்பட்டது.
பவித்ராவின் பார்வை திலகாவில் படிந்தது. அத்தனை அழகாய் இருந்தாள். அவளின் முகத்தில் இழைந்தோடிய வருத்தத்திற்கு தான் தான் காரணம் என்ற உண்மை அவளை சுடத்தான் செய்தது.
அப்படியே அவளின் பார்வை தவறு செய்து விட்ட சிறு பிள்ளை போல் யஷ்வந்தில் படிய.
அவனோ அவளை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவனின் முறைப்பிற்கான காரணம் புரியாவிட்டாலும் அவளின் மனம் தவிப்பாகவே இருந்தது.
சற்று நேரம் அங்கே அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது. யாருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
தன் குரலை செறுமிய யஷ்வந்த், “தப்பா நினைச்சுக்காதீங்க மாமா வீட்ல பேசுனது எல்லாம் எனக்கு தெரியாது. நானும், பவித்ராவும் காதலிச்சோம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன். என்ன இருந்தாலும் உங்களுக்கு ஹோப் கொடுத்த மாதிரி ஆகிடுச்சு என்னை மன்னிச்சிடுங்க”.
அவனின் தோளில் தட்டிய அய்யனார், “பரவாயில்ல இருக்கட்டும் மாப்ள. காதலிக்கிறது தப்பில்ல வீட்ல சொல்லியே கல்யாணம் செஞ்சு இருக்கலாமே.. எதுக்கு இவ்வளவு அவசரம்?” என்றவரின் பார்வை அவ்வப்பொழுது பவித்ராவில் படிவதும் மீள்வதுமாகவே இருந்தது.
அவளை எங்கோ கண்ட உணர்வு. ஆனால், எங்கே என்பது தான் பிடிபடவில்லை. அதனாலேயே அவ்வப்பொழுது அவரின் பார்வை வட்டத்திற்குள் விழுந்து எழுந்து கொண்டிருந்தாள்.
“அவளுக்கு யாரும் இல்ல மாமா. வீட்ல சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று சாதாரணமாக கூறியிருந்தான்.
“இப்போ என்ன பண்ணப் போறீங்க மச்சான். நம்ம சுத்து வட்டாரத்துல கூட யாருக்கும் இன்னும் இவங்க கல்யாண விஷயம் தெரியாது போலருக்கே. யாருக்காவது தெரிஞ்சிருந்தா என் காதுக்கு விஷயம் வந்திருக்கும். ஆனா, ஒன்னும் வரல. வந்திருந்தா சுதாரிச்சு இருப்பேன்” என்றவரின் முகம் அத்தனை வருத்தத்தை உள்ளடக்கி இருந்தது.
அவருக்கு அவசரப்பட்டு ஆசைப்பட்டு விட்டோமே என்ற உணர்வு. அனைத்தையும் தெளிவாக பேசிவிட்டு தன் குடும்பத்தாருடன் இங்கே வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்தது.
எப்படியும் தங்கை மகன் தானே, பேசி முடிக்கத்தானே போகிறோம் என்ற ஆர்வத்தில் குடும்பத்துடன் புறப்பட்டு வந்துவிட்டார். இப்பொழுது ஏன் வந்தோம் என்ற எண்ணம் தான்.
பெருமூச்சை இழுத்து விட்ட அய்யனார், “அதுவும் நல்லதுக்கு தான். ஊர்ல நாலு பேரு நாலு விதமா பேசுறதுக்கு முன்னாடி நாமளே இது தான் விஷயம்னு போட்டு உடைச்சிடுறது தான் நல்லது” என்று கூறி முடித்தவரின் விழிகள் மீண்டும் பவித்ராவை தொட்டு மீண்டது.
காஞ்சனா சற்று நேரம் பவித்ராவிடம் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரின் விசாரணையிலும் சிக்கி மீள்வதற்குள் பவித்ராவிற்கு தான் மூச்சு முட்டுவது போல் ஆகிவிடுகிறது.
“திலகா நீ வா” என்று அவளின் கையை பற்றி தன் அறைக்கு அழைத்து சென்றாள் நித்யா.
“என்னடி உன் அண்ணா இப்படி பண்ணிட்டாரு?”.
“சாரி டி. வீட்ல பேசினது எங்க யாருக்குமே தெரியாது. அண்ணா திடீர்னு வந்து நிற்கவும் எங்களுக்குமே ஷாக் தான். ஆனா, என்ன பண்றது அண்ணா இப்படி பண்ணிட்டாங்க”.
“ம்ம்” என்றாள் வருத்தமான முகத்தோடு.
“வீட்ல உனக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம் பேசின விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா.. உனக்கு அண்ணா மேல…” என்று அவள் எப்படி கேட்பது என்று தெரியாமல் இழுக்கவும்.
அவளின் கேள்வியை புரிந்து கொண்ட திலகா விரக்தியான புன்னகையை சிந்தியவள், “ம்ம்.. பிடிச்சிருந்துச்சு. யஷ்வந்த் மாமா மாதிரி ஒருத்தர யாருக்கு தான் வேண்டாம்னு சொல்ல தோணும். அவரோட கலகலப்பான பேச்சும், எல்லார்கிட்டயும் அன்பா பழகுற குணமும் எந்த பொண்ணுக்கு தான் இப்படி ஒரு புருஷன் வேண்டாம்னு தோணும்”.
அவளின் வார்த்தையிலேயே இந்த திருமணத்தின் மீதான அவளின் எதிர்பார்ப்பு அப்பட்டமாக நித்யாவிற்கு விளங்கியது.
ஆனால், என்ன செய்ய முடியும். அனைத்தும் நடந்து முடிந்து விட்டதே என எண்ணியவள், “சரி விடு டி. இனி இதை பத்தி பேசி என்ன ஆகப் போகுது” என்று வேறு ஏதேதோ பேசி அவளின் கவனத்தை திசை திருப்பினாள்.
இந்துவின் குழந்தையை தூக்கி கொஞ்சிய காஞ்சனா, “சமத்து குட்டியா இருக்காளே. ஏன் இந்து வந்திருக்க புது பொண்ணு எப்படி?” என்றார் பூடகமாக.
“ம்ம்.. நல்ல பொண்ணு தான் மா”.
“என் பொண்ணு இருக்க வேண்டிய இடம்” என்று பொறுக்க மாட்டாமல் கூறிவிட்டார் காஞ்சனா.
******
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் 😊
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…