மௌனத்தால் உடைந்த காதல் -2
வக்கீல் இருவரையும் உள்ளே வரக் கூறினார்.
சுதா தன் மகனையும் ,ஆதி தன் மகளையும் அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்குள் நுழைந்தனர்.
ஜட்ஜ் இருவரிடமும் சில பல கேள்விகள் கேட்டார்.
“இது ஃபேமிலி கோர்ட் (குடும்ப நல நீதிமன்றம்) . இங்கு வரும் கணவன், மனைவியை பிரிப்பது மட்டும் எங்களது நோக்கம் அல்ல. அவர்களது வாழ்க்கை சீர்குலையாமல் இருப்பதற்கு வழி வகுப்பதும் எங்களது வேலைதான் ..
சமரசம் செய்து மீண்டும் சேர்ந்து வாழ வழி செய்வதும் நீதிமன்றத்தின் முக்கியமான கடமை தான்” என்றார்..
இருவரிடமும் அமைதி எதுவும் பேசவில்லை.
“முதலில் உங்களின் பிரச்சனை என்ன ? சொல்லுங்க?”
சுதா தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.”சார்… என்னால இனிமே இவருடன் வாழ முடியாது. எனக்கு விவாகரத்து வேண்டும்.”என்றாள் பட்டென்று..
அவனுக்கு அடி வாங்கிய உணர்வு, குற்ற உணர்வில் தத்தளித்தான்.
ஜட்ஜ்,” நீங்க நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தீங்களா? ஒரு குடும்பம் உடைஞ்சு போறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல” என்றவர்.
ஆதியை பார்த்து,” நீ என்னப்பா சொல்ற?”என்றார்.
“சார்… எனக்கு விவாகரத்து வேணாம். எனக்கு என் மனைவி கூட சேர்ந்து வாழ தான் ஆசை, விருப்பமும்..நான் என் பக்க தவறை சரி செய்து, மீண்டும் அவளுடன் வாழ தான் விரும்புறேன்..” என்றான் ஆதி..
ஜட்ஜ் சுதாவை பார்த்து,”உங்க கணவர் இன்னும் உங்களுடன் வாழ விருப்பம் என சொல்கிறாரே. அவருக்கு நீங்க ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே?”
“
நான் ரொம்ப யோசித்துத் தான் இந்த முடிவை எடுத்தேன் சார். திரும்பி என்னால அங்க போக முடியாது.”என்றாள் உள்ளுக்குள் ஏற்பட்ட வலியுடன்..
மனம் உடைந்து கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்து நிற்க. அவளைத்தான் விழியாகலாது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. மனதிற்குள் அவளிடம் மன்றாடி கொண்டு இருந்தான்.
‘ ப்ளீஸ் டி நான் செஞ்ச தப்ப எப்படியாவது சரி பண்ணிடுறேன். என்கூட வந்துடு, என்னால நீ இல்லாம வாழ முடியாது ,உன்னாலையும் நான் இல்லாம வாழ முடியாதுன்னு எனக்கு தெரியும்டி. ப்ளீஸ்! நான் செஞ்ச தப்பை சரி பண்ணிடுறேன். வா டி..’ என்று வாய் விட்டு கதற முடியாமல், உள்ளுக்குள் மௌனமாக புழுங்கிக் கொண்டு இருந்தான்.
மீண்டும் ஆதியைப் பார்த்தார் ஜட்ஜ்.
அவனோ, மொத்த உணர்வுகளையும் கண்களில் தேக்கி,”இந்த ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடு சுதா”என்றான்..
அவனால் வாய்விட்டு வேறு எதுவும் பொதுவெளியில் பேச முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவளிடம் பேசுவதற்கு அவள் இடம் அளிக்கவும் இல்லை. இந்த குறிப்பிட்ட காலத்தில் தனியாக பேசக்கூடிய சூழ்நிலை அமைந்தால், தன் மனதில் இருப்பதை கொட்டி விடலாம் என்ற எண்ணம். ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பு அளிக்காமல் இருப்பவளிடம் என்ன பேசுவது, எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் கண்களாலே கெஞ்சினான். இப்பொழுது அவனை நேராக பார்த்தவளிடம்..
தொண்டையை செருமிக் கொண்ட, ஜட்ஜ்,
” உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்ச கால அவகாசம் கொடுக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் ,இரண்டு பேருமே நிதானமா யோசிங்க. நீங்க தனி கிடையாது. உங்களுக்கு பசங்க இருக்காங்க.. ரெண்டு பேரும் அவங்களோட எதிர்காலத்தையும் மனசுல வச்சு யோசிங்க. கசப்பான நிகழ்வுகள் நடந்திருப்பது போல், இனிமையான நிகழ்வுகளும் உங்க வாழ்க்கையில நிறைய நடந்திருக்கும். கசப்பான நிகழ்வுகளை புறந்தள்ளி வச்சிட்டு, இனிமையான நிகழ்வுகளை யோசிச்சீங்கன்னா உங்களுக்கான எதிர்காலமும், உங்க பிள்ளைகளுக்கான எதிர்காலமும் காப்பாற்றப்படும் நினைக்கிறேன்.
முக்கியமா உங்க கணவன் விவாகரத்து கொடுக்க விரும்பல .ஆகையால், இருவருக்குமே சிறிது கால அவகாசம் தரேன் . ரெண்டு பேரும் ஆறு மாசம் சேர்ந்து வாழுங்க. அதுக்கப்புறமும் ரெண்டு பேருமே விவாகரத்து பண்ற முடிவுல இருந்தீங்கன்னா மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்.
ரெண்டு பேரும் மியூச்சுவலா விவாகரத்து கேட்டிருந்தா கவுன்சிலிங் அனுப்பிருப்பேன். அவர் விவாகரத்து வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதால், கவுன்சிலிங் வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்க என்னம்மா சொல்றீங்க ?”என்று கேட்க.
அவளோ அமைதியாக இருக்க..
” சுதர்சனா ?..”என்றார் வேகமாக..
” சார் ..!”என்றாள் நினைவுகளில் இருந்து மீண்டு,
லேசாக புன்னகை பூத்தவர்.
“
உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. ஆனா, நீங்க ஏதோ ஒரு மன உளைச்சலில் இருக்கீங்க. அதனாலதான், விவாகரத்து கேட்டு வந்து இருக்கீங்கன்னு புரியுது. உங்க பார்வையே அதை எடுத்துரைக்குது ,என்னால ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் பண்ண முடியும். யோசிங்க பொறுமையா.. வாழ்க்கைனா நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்து தான் இருக்கும்.
வலி மிகுந்த நாட்களை யோசிக்கிற மாதிரி, சந்தோஷமா இருந்த நாட்களையும் யோசிங்க. நீங்க உங்க கணவன், உங்க ரெண்டு புள்ளைங்க, குடும்பமா வாழ்ந்த நாட்களை யோசிச்சு பாருங்க , உங்களுக்கு பிரியணும் என்ற எண்ணமே தோணாது. கொஞ்சம் காலம் எடுத்துக்கோங்க.”
” சார் என்னால திரும்பவும் அந்த வீட்டுக்கு போக முடியாது..” என்பதில் மட்டும் மீண்டும் உறுதியாக இருந்தாள் .
இப்பொழுது அவனைப் பார்க்க..
அவனும் கண்மூடி திறந்து,” இல்ல சார் இனி அவளே வரேன்னு சொன்னாலும், நான் அந்த வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போக விரும்பல. தனியா வீடு அரேஞ்ச் பண்ணிட்டேன் .இப்ப கையோட கூட கூட்டிட்டு போகிற முடிவுல தான் இருக்கேன். வாங்க வேண்டிய பொருள் மட்டும் ஒரு சிலது வாங்க வேண்டியது இருக்கு. மத்தபடி வேற வீடு ரெடி பண்ணி இருக்கேன்.. அங்க தான் போகலாம்னு இருக்கேன்” என்றான் தீர்க்கமாக,
அவன் அவ்வாறு கூறியவுடன் வீட்டு உறுப்பினர்களால் தான் இவர்களுக்குள் பிரச்சனை என்பதை உணர்ந்து கொண்டவர் ,இப்பொழுது சுதாவை பார்த்தார்..
அவளும் ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு, தன் பிள்ளைகளை பார்த்தாள். இருவரும் ஏக்கம் நிறைந்த விழிகளுடன் அங்கு ஒருப்பக்கமாக அமர்ந்திருப்பதை பார்த்தவுடன்,” சரி சார்!” என்று தலையாட்டி இருந்தாள்.
” ஆறு மாசம் கழிச்சு..” என்றவர். ஒரு சில நொடிக்கு பிறகு ,”ஆறு மாசமே உங்களுக்கு அதிகம்னு தோணுது.. அதுக்குள்ள நீங்க உங்களுக்குள்ள பேசி சரி பண்ணி விடுவீங்கன்னு நம்புறேன்” என்றவர் தன் பேச்சு முடிந்தது என்பது போல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அதன் பிறகு ,இருவரும் பிள்ளைகளுடன் வெளியே வர.
சுதாவின் அம்மா கமலா சத்தம் போட ஆரம்பித்தார்..
” எதுக்கு சுதா இப்போ நீ திரும்ப அவர் கூட சேர்ந்து வாழ்றேன்னு சொல்ற ?”
“ஏம்மா அப்புறம் என்ன பண்ண சொல்ற? உன் வீட்டுல வந்து உட்கார்ந்துக்க சொல்றியா?”
” சுதா அது நீ பிறந்து வளர்ந்த விடுடி !”
“நான் பொறந்து வளர்ந்த வீடுதான்.நான் இல்லன்னு சொல்லல.. அங்க நான் வரப்போக இருந்தா தான் எனக்கு மதிப்பு, மரியாதை .”
“அதுக்காக.. அவ்ளோ பேச்சு பேசறாங்க உன் மாமியாரு. அப்ப அமைதியா இருந்துட்டு..”
“அம்மா ப்ளீஸ்! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..” என்று அவரின் மேற்கொண்ட பேச்சு வார்த்தைக்கு தடை விதித்தாள்..
இவ்வளவு நேரம் தன் மாமியார் பேசியதை கேட்டபடி, அமைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் ஆதி..
” போகலாமா ?” என்றாள்.வேறு எங்கோ பார்வையை பதித்த படி,
தன் கண்களை மூடி திறந்தவன்..” போலாம்!” என்று கூற,
கிளம்புவதற்கு முன்பு, தன் மாமியாரை பார்த்தவன்.
” அத்தை இத்தனை வருஷம் நாங்க சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையில எந்த இடத்தில் நான் தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு புரியல .ஆனா, அன்னைக்கு நடந்தது.. பெரிய தப்புதான். அதுவும் அந்த இடத்துல நான் வாய்த்திறக்காமல் இருந்தது என்னோட முழு தப்பு. அப்போ அதை நான் உணராமல் இருந்திருந்தாலும், அதுக்கப்புறம் இந்த இடைப்பட்ட நாளில் உணர்ந்துட்டேன்.
என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க பொண்ணை.. (என் பொண்டாட்டியை) நல்லா பாத்துப்பேன் .. ப்ளீஸ் நான் எங்க அப்பா அம்மான்னு சொல்லல .. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன். எங்களுக்கு நடுவுல வராதீங்க பிளீஸ் !இவ்வளவு தூரம் இந்த பிரச்சினை வரதுக்கு காரணம் என் அம்மாவும் ,என் தங்கச்சியும் எந்த அளவுக்கு காரணமோ ,அதே அளவுக்கு இப்ப நாங்க கோர்ட் வாசப்படி மிதிக்க காரணம் ஒரு வகையில் நீங்களும் தான்
இத எங்களுக்குள்ள நாங்க பேசி கூட சரி பண்ணி இருந்திருக்கலாம். ஆனா, அதுக்கான கால அவகாசமோ, இல்ல நேரத்தையோ கொடுக்காமல் ரொம்ப இறுக்கி பிடிக்கிறீங்க எல்லாரும்.. கெஞ்சி கேட்கிறேன்,இது உங்க பொண்ணோட வாழ்க்கை மட்டும் கிடையாது ..உங்க பேர பசங்களோட வாழ்க்கையும், எதிர்காலமும் இதில் அடங்கி இருக்கு. என் புள்ளைங்க முகத்தை பாருங்க..” என்றான் தழுதழுத்த குரலுடன் ..
அவருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. இருவரும் வயிற்றில் இருக்கும்போது இருந்தே ஒட்டி வளர்ந்தவர்கள் ஆயிற்றே, இப்போது இடைப்பட்ட காலத்தில் தனித்தனியாக இருப்பதை எண்ணி கவலைக் கொண்டார்.
“நான் உங்களை தப்பு சொல்லல மாப்ள. ஆனா, என் பொண்ணோட நடத்தையை உங்க வீட்ல தப்பா பேசவும்…” கையெடுத்து கும்பிட்டவன்..
” எனக்கும் புரியுது.. உணர்ந்துட்டேன். என் தப்ப நான் புரிஞ்சுகிட்டேன். அதை எப்படி சரி பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன். திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க ப்ளீஸ்! இனி அப்படி ஒரு விஷயம் நடக்காம பாத்துக்குறேன்.
என்னால இப்போதைக்கு அவ்வளவுதான் உங்களுக்கு சொல்ல முடியும். என்னை நம்பி உங்க பொண்ணை அனுப்பி வைங்க ..அது போதும்..!” என்றான்.
” சுதா வீட்டுக்கு வந்துட்டு போடி!” என்று தன் மகளைப் பார்க்க .
அவள் அமைதியாக ஆதியை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் மகளை தூக்கிக் கொண்டாள்.
“இல்ல அத்தை இன்னொரு நாள் வரோம்.. தேவையான திங்ஸ் எல்லாம் புது வீட்டுல ரெடியா இருக்கு..”
” மாப்பிள்ளை வீடு எங்க இருக்கு?”
” சொல்றேன். ஆனா, இப்போ இல்ல..இப்போ எங்களுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க. நானா வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்..”
அவனுக்குமே சிறு படபடப்புத்தான். இன்னமும் குறையவில்லை படபடப்பு.
இவள் கேட்கிறாள் என்றவுடன் இங்கு விவாகரத்து கொடுத்து விடுவார்களோ ?என்று அஞ்சினான் உள்ளுக்குள்.. ஆனாலும், வீட்டில் இருந்து கிளம்பும்போது ,அனைத்தையும் பேசிவிட வேண்டும் என்று தான் கிளம்பினான் .
இப்பொழுது ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தாலும், தன் மனைவியின் மனம் மாறக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்தான்.
இதற்கு இடையில், தன் பெற்றவர்களாகட்டும் அல்லது அவள் பெற்றவர்களாகட்டும் பேசி குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும். ஆகையால், தான் தன் பெற்றவர்களை அழைத்துக் கொண்டு கூட வராமல் இருந்தான்..
” சரி மாப்பிள்ளை” என்றவரை ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்து இருந்தான்.
சுதாவிற்கு இப்பொழுது தாய் மட்டும் தான். தந்தை இரு வருடங்களுக்கு முன்பு தான், உடல் நல குறைவால் இறந்துவிட்டார்.
சுதாவிற்கு உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான் . அவனுக்கு திருமணம் ஆகி குடும்பமாக வெளியூரில் வேலையில் வசிக்கிறான்.
இங்கு தாய் மட்டும் தனியாக இருக்க. அன்று மகளைப் பார்க்க வந்தவர், வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் கையோடு மகளை அழைத்துக் கொண்டும் சென்று விட்டார் ..
ஆதித்யா சுதர்சனா இருவரது திருமணமும் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். 11 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது .. நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. அவர்களது வாழ்வு..
திருமணம் முடிந்த அடுத்த பத்தாவது மாதத்தில் இரட்டை குழந்தைகள் .மகிழ் நிலவன், மிதுன்யா .
திருமணத்திற்கு முன்பே சுதர்சனா வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.. குழந்தை பிறந்து மூன்று வருடங்கள் வீட்டிலிருந்தாள்.. குழந்தைகள் சிறிது வளர்ந்து விட்டார்கள் என்ற பிறகு, அவர்களையும் பள்ளி அனுப்பி வைத்துவிட்டு, வீட்டில் மாமியார் இருக்க ,மாமியார் பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள்.
அவள் வேலைக்கு சென்று கொண்டிருந்த பணத்தில் பாதியை தன் பிறந்த வீட்டிற்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். அது ஏனோ மாமியார் சித்ராவிற்கு பிடிக்கவில்லை. அப்பொழுது இருந்து அவளை குறை கூறிக் கொண்டு இருந்தார்.
“வீட்டில் புள்ளையைப் பார்க்க சொல்லுடா .இப்போ பொம்பளைக்கு வேலை ஒன்னு தான் கேடா!” என்று எந்த நேரமும் அவளை கரிச்சிக் கொட்டியபடி தான் இருந்தார்..
இதில் தூபம் போடுவது போல் அவ்வபோது வந்துச் சென்ற ஆதியின் தங்கை உதயா அவரை இன்னும் ஏத்திவிட்டு செல்வாள்.
இப்படித்தான் அவர்களின் வாழ்வில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது.
