மௌனத்தால் உடைந்த காதல் -4
உதயா வாய் வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், “அதுக்காக அப்பா, அம்மாவை விட்டுட்டு நீ தனியா போகலாம்னு பாப்பியா ? உன் வாழ்க்கையை மட்டும் பாத்துட்டு போவியா?” என்றாள் குரோதமாக..
இப்பொழுது நேசனே பேச ஆரம்பித்தார்..” அவன் என்ன மாப்பிள்ளைக்கு போன் பண்றது. நானே போன் பண்ணி பேச வேண்டியது வரும்.
அவ்வளவு அக்கறையா இருந்தா, நீ எங்களை பார்த்துக்க வேண்டியதுதானே? அவன் தனியா விட்டுட்டு போனா என்ன ?நீ இருக்க இல்ல?” என்றார்.
“எனக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே பா..”
“ஓ! இதுக்கு மட்டும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என் வாழ்க்கையில தலையிடும் போது உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரியலையோ?”
“அண்ணா அது..”
” போதும் திரும்பத் திரும்ப என்ன பேச வைக்காத! உனக்கு அண்ணனா என்ன செய்யணுமோ அதிலிருந்து எதுவும் விலக மாட்டேன். நீ இங்க வர போக இரு. எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது, இனிமே இங்கயே கூட வந்து இருந்துக்கோ ,அதுவும் எனக்கு பிரச்சனை கிடையாது.
அம்மாவை ஏத்திவிட்டு வேடிக்கை பாக்குற வேலை வேணாம். இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட், நீங்க இன்னொரு முறை சுதாவை தப்பா பேசறது, அதுக்கு அவசியமும் வராது, அது வேற விஷயம். நீங்க கண்கானாம பேசினாலும், எங்களுக்கு தேவையில்லாதது”
“அதுக்காக இப்படி அம்மாவ தனியா விட்டுட்டு போவியா?”
” அதான் சொல்றனே ! தனியா விட்டுட்டு போக மாட்டேன். தினமும் ஆபீஸ் முடிஞ்சு வந்து பார்த்திட்டு போவேன்..ஆனா, இனியும் இங்க உங்க கூடவே இருக்க முடியாது. அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான், உங்க பொண்ணு பேச்சை கேட்டு நீங்க பேசின பேச்சு, வார்த்தைகள் மட்டும் தான் மறந்துடாதீங்க..
நீங்க என்னென்ன பேசினீங்கன்றதையும் மறந்துடாதீங்க, ஒரு பொண்ணா அவளோட இடத்துல இருந்து யோசிங்க, நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் கேட்கும் போது அவ மனசு எந்த அளவுக்கு வலிக்கும்னு, அவ அந்த மாதிரி கிடையாதுன்னு உங்களுக்கும் தெரியும்.
அவ இங்க வீட்டுக்கு வந்து எத்தனை வருஷம் ஆகுது. இத்தனை வருஷத்துல எங்கேயாச்சும் உங்க மனசு நோகுற மாதிரி ஏதாவது பண்ணி இருக்காளா? வேலைக்கு போனாலும் காலையில வீட்டு வேலைய செஞ்சு வச்சுட்டு தான போவா..
என்ன ஒரு சில நாள் அவசரமா போற மாதிரி இருந்தா பாத்திரம் கழுவாம இருப்பா. நீங்க பாத்திரம் கழுவிட்டு, பசங்கள பாத்துட்டு இருக்கீங்க, வேலைக்கு போயிட்டு நைட் வந்தும் அவ வீட்டு வேலை பார்க்க தான் செய்றா . இதுவரைக்கும் எந்த இடத்துலயும் அவ உங்களை விட்டு கொடுத்ததில்ல.
ஆனா, நீங்க ஒவ்வொரு முறையும் அவள பேசின பேச்சு கொஞ்ச நெஞ்சம் கிடையாது. இதுவரை பேசுனதெல்லாம் அமைதியா கேட்டுகிட்டேன். இப்போ நீங்க அவளோட கேரக்டரையே தப்பா பேசும் போது அமைதியா என்னால கடந்து போக முடியாது. அப்படி அமைதியா இருந்ததுக்கான தண்டனையும் நான் இப்ப வர அனுபவிச்சிட்டு தான் இருக்கேன்.
இனி அத எப்படி சரி பண்ணனும்னு மட்டும் தான் நான் பாக்கணும் .உங்க பேர பசங்கள ஞாயிற்றுக்கிழமை கூட்டிட்டு வருவேன். அதுவும் அவங்க விருப்பம் இருந்தா? இல்லன்னா, என்னோட கூட்டிட்டு வந்துட்டு, என்னோடவே கூட்டிட்டு போய்டுவேன்.
அவங்களுக்கு விருப்பம் இருந்தா ஞாயிற்றுக்கிழமை லீவு நாள்ல இங்கே காலையில விட்டுட்டு, சாயங்காலம் கூட்டிட்டு போவேன் ..”என்றவன் தன் தந்தையிடம் வந்து ,”புது வீட்டு அட்ரஸ் பா..ஆனா, நான் கால் பண்றேன் .இப்போதைக்கு அங்க வர வேணாம் ..ஏதாவது தேவைனா , சொல்லனும்னா போன் பண்ணுங்க .
நானும் தினமும் வந்து உங்களை பார்த்துட்டு போறேன். என்ன தப்பா நினைக்காதீங்க.. என் நிலைமையையும் புரிஞ்சுக்கோங்க..” என்றான் முழுமூச்சாக..
அவனின் கையைப் பிடித்தவர் .”இப்பயாவது உன் வாழ்க்கைக்காக நீ யோசிச்ச வரை சந்தோஷம் டா.நீ உன் வாழ்க்கை பார்த்துட்டு போ” என்றவர்..
சுதாவை பார்க்க.. அவளது கண்கள் கலங்கி இருந்தது.. ஆனால், ஒரு சொட்டு கண்ணீர் கூட கீழே விழவில்லை.
” இனியாவது இங்க இருக்கிறவங்களை விட்டுட்டு உங்களுக்காக வாழுங்கடா. சாயங்காலம் பசங்க ஸ்கூல் விட்டு வந்துவிடுமேடா என்ன பண்ணுவீங்க ?” என்றார்.
இருவரும் வேலைக்கு செல்வதால், சுதாவை வேலையை விட்டு விடு என்று சொல்வதில் அவருக்கும் விருப்பமில்லை.
” அதுக்கும் நான் ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்பா.”
” என்னடா?” என்றார்..
அதிர்வாகத்தான் பார்த்தாள் சுதா..
“சொல்றேன் பா. அவ்ளோ அவசரம் இல்லை இப்போ.ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன். எனக்கு ஒரு சில பொருள் இங்க எடுக்க வேண்டியது இருந்துச்சு. அதுக்காக தான் வந்தேன் “என்றவன் நேராக தன்னவளைப் பார்க்க. அவள் அறைக்குள் நுழைந்தவுடன், இவனும் நுழைந்து இருந்தான்.
அவள் சுற்றி முற்றி கண்களை மேய விட்டபடி இருந்தாள். அவள் எப்படி வீட்டை விட்டுப் போகும்போது அந்த அறை இருந்ததோ, அப்படியே தான் இப்பொழுதும் இருக்கிறது .இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த மாற்றமும் கிடையாது.
அவ்வப்போது இருவரும் களைத்து போடும் உடைகளை மட்டுமே சரி செய்து வைப்பான். மற்றபடி எந்த ஒரு பொருளையும் எங்கும் மாற்றி அமைக்கவில்லை. தொண்டையை கனைத்தவன்.
ஒரு டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலின் மீது வைத்தான்.
” எங்கப்பா போறோம் பா ?” என்றனர் இருவரும்..
” நம்ம வேறொரு வீட்டுக்கு போறோம். உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் தானே?” என்க ..
இருவரும் திருத்திருவென முழிக்க.
” நம்ம அப்பப்போ வந்து தாத்தாவையும், பாட்டியையும் பாத்துட்டு போகலாம். ஆனா, இங்க இருக்க முடியாது ” என்றான்.
குழந்தைகளுக்கும் புரியத்தான் செய்தது. அன்று பாட்டி பேசியதன் விளைவாக தானே இருவரும் தனித்தனியாக இருக்க வேண்டி வந்தது என்பதை உணர்ந்தவுடன், “சரி!” என்று தலையசைத்து அமைதியாக இருந்தனர்.
முக்கியமான ஒரு சில ஆவணங்களை மட்டும் அதில் எடுத்து வைத்துக் கொண்டான் .. தன்னுடைய சர்டிபிகேட், சுதாவுடைய சர்டிபிகேட் , குழந்தைகளின் பர்த் சர்டிபிகேட் ,குழந்தைகளின் படிப்பு சம்பந்தமான இதர பொருட்கள் என ஒவ்வொரு பொருளாக பார்த்து ,தேவையானதை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டவுடன், “போலாமா ?”என்பது போல் பார்த்தான்.
அவள் அமைதியாக இருக்கவும் அவளை கையோடு அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
“என்ன ண்ணா! இங்க இருந்து பெருசா பல்க்கா எடுத்துட்டு போற போல ?”என்று உதயா அப்போதும் பேச ..
அவளை முறைத்தவன்.” இங்க உனக்கு சம்பந்தமான பொருள் எதுவும் கிடையாது .முக்கியமான விஷயம், இந்த வீட்டிலிருந்து எதையும் நான் கடத்திட்டு போகவும் கிடையாது. இதுல இருக்கிறது மட்டும்தான், அதைத் தாண்டி, இந்த வீட்டில் இருந்து நான் எதையும் எடுத்துட்டு போல.. நானும் ரொம்ப வருஷமா உழைச்சிட்டு தான் இருக்கேன்.
சொந்தக்கால்ல நிக்க தான் செய்றேன், என் வாழ்க்கையையோ ,என் புள்ளைங்களோட எதிர்காலத்தையோ பாத்துக்க எனக்கு தெரியும். என் பொண்டாட்டி அவளோட சொந்தக்கால்ல தான் நின்னுட்டு இருக்கா, என் கையை எதிர்பார்த்து இம்புட்டு நாளும் வாழல, இனியும் வாழ வேண்டிய அவசியம் இல்லை.
என் பொண்டாட்டிக்கு ஒரு புருஷனா என்ன செய்யனுமோ அதை எனக்கு செய்ய தெரியும். இங்க இருந்து எடுத்துட்டு போய் அதுல என் பொண்டாட்டி , புள்ளைங்களை வாழ வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. இதெல்லாம், உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல.
இதை நான் சொல்றது, எங்க அம்மாவுக்காக. அப்பப்போ வந்தமா போனமானு இரு. அதான் உன் வாழ்க்கைக்கும் நல்லது” என்றவன் வேறு எதுவும் பேசாமல் “சரி வரேன் பா.”என்க.
பேரப்பிள்ளைகளை தூக்கி கொஞ்சினார் சித்ரா. பேத்தி ஒரு அடி பயந்து நிற்க.
” பாட்டி நீ வந்ததை பார்க்கல டா குட்டிமா மன்னிச்சிடுடா!” என்று அவள் கீழே குனிந்து கொஞ்சி மன்னிப்பு வேண்ட.
மிது தன் தாயைப் பார்த்தாள். அவள் கண் மூடி திறக்கவும்..
அதன் பின் பாட்டியின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் கொஞ்சி குலாவி விட்டு, “நாங்க அப்பப்போ வந்து பார்த்துட்டு போறோம் பாட்டி !”என்று இருவரும் ஒரே போல கூற.
” இங்கவே இருக்க மாட்டீங்களா ?” என்றார் வருத்தமாக..
“இங்கவே இருக்க வேண்டிய பிள்ளைகளை தான், அப்பப்ப வர அளவுக்கு வச்சிருக்க. அதுக்கு காரணம் உன்னோடு முட்டாள்தனம் மட்டும்தான் சித்ரா. இனியாவது குறைச்சுக்க பாரு. வீடே நிறைஞ்சு இருந்துச்சு, இப்ப யாரும் இல்லாம ,நீயும் நானும் தனியா இருக்க போறோம். நானும் வேலைக்கு போயிட்டனா நீ தன்னந்தனியா தான் இந்த வீட்டில் இருக்கணும் மறந்துடாத!” என்றவர் வேறு எதுவும் கூறவில்லை.
நேசனும் தன் மகனை பாவமாக பார்த்தார். இங்கே இருந்து விட மாட்டார்களா ? என்று..
மருமகளை சித்ரா கருத்தில் கொள்ளவே இல்லை .அவளும் பேசவில்லை. இவரும் அவளிடம் சண்டையிடவோ? அல்லது பேசவோ முயலவில்லை.
சொல்லிக்கொண்டு தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு புதிதாக பார்த்திருக்கும் வீட்டிற்கு வண்டியை விட்டான்.
போகும் வழியில் ‘எங்க கூட்டிட்டு போறாரு?’ என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில்..
தனி வீடு, செடிகள் வைப்பதற்கு என தோட்டம் போல் சின்ன இடம் அமைக்கப்பட்டு இருந்தது.. சுற்றி காம்பவுண்ட், கேட் என இருந்தது..
அனைத்தையும் பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் சுதா. ஒவ்வொரு நாளும் தன் கனவை, தனக்கு பிடித்தமான வீடு இப்படி இருக்க வேண்டும் என்று கூறியது போல் இருந்தது அந்த வீடு…
ஆனால் ,அவர்கள் இவ்வளவு நாள் சொந்தமாக வசித்து வந்த வீட்டில் வெளியே சின்ன இடம் மட்டுமே இருக்க. அங்கு பெரிதாக தோட்டம் போல் அமைக்க முடியாத அளவிற்கு இருந்தது.. அதுவும் ஊஞ்சல் என்றால், அவளுக்கு பிடித்தம் என்று பலநாள் கூறி இருக்கிறாள்.
இப்பொழுது பார்த்திருக்கும் வீட்டில் தோட்டம் ,அதனை ஒட்டி சிறிதாக ஊஞ்சல் என்று இருக்க. கண்கள் விரிய ஆனந்தமாக அதையே பார்த்தபடி வந்தாள்.
அவளில் கண்களை பார்த்தவன். சிறிது மன மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.. ஒவ்வொன்றாக பார்த்தபடியே பிள்ளைகளும் வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்தவுடன் ,”அப்பா பசிக்குது !” என்றனர் இருவரும்..
” இருடா குட்டிமா. இன்னைக்கு ஒரு நாள் ஆர்டர் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் சமைச்சுக்கலாம்” என்றவன் வேகமாக தன் அலைபேசியை எடுத்து பிள்ளைகளுக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்துவிட்டு, தன்னவளையே பார்த்தபடி இருந்தான்.
” சுதா!” என்றான்..
அமைதியாக அவனைத்தான் பார்த்தாள்.
ஆனால், கேட்க வந்ததை கேட்காமல் நிறுத்தி விட்டான். அவனுக்கு இப்போது ஒரு டீ குடிக்கலாம் போல் இருந்தது. ஆனால் ,உரிமையாக கேட்கும் அளவிற்கு தான் வைத்துக் கொள்ளாமல் இருக்க, எப்படி உரிமையாக கேட்பது என்று யோசனையில் அவன் ஆழ்ந்து இருக்க
அவனுடன் வாழ்ந்தவளுக்கு தெரியாதா? அவன் கூப்பிட்டதன் நோக்கம் .
எழுந்து மெதுவாக சமையலறைக்குள் புகுந்தாள் அங்கு என்ன இருக்கிறது என்று தெரியாது. இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கிறான் என்னும் பொழுது, தேவையான அவசியமான ஒரு சில பொருட்களாவது இருக்கும் என்ற எண்ணத்துடன் நுழைந்தாள். அங்கு சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கியிருந்தது ..
அப்போ இப்பவே சமைச்சிருக்கலாமே! என்ற யோசனை தான். அவள் பின்னாடியே வந்திருந்தவன், அவளது யோசனையை உணர்ந்து ,”உனக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல, சாப்பிட்டு ரெஸ்ட் எடு ,நம்ம நைட் சமைக்கலாம்.”
திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்வாக திரும்பி பார்க்க..அவனின் வார்த்தைகளில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இருந்தாலும் வேறு புறம் திரும்பி தன் கண்ணீரை அவனுக்கு காட்டாது மறைக்க ..
“ப்ளீஸ் டி! அழுது என்னை சாகடிக்காது அம்மு. உன்ன அழ வைக்காம சந்தோஷமா வாழ வைக்கணும்னு நான் நினைச்சேன். ஆனா, இப்போ உன்னோட அழுகைக்கு முழு காரணமே நான் தானு நினைக்கும் போது உள்ளுக்குள்ள செத்துட்டேன் டி! உனக்கு புருஷனா மட்டுமில்ல, மனுஷனா இருக்கவே தகுதி இல்லாம போய்ட்டேன் இல்ல”என்றான் விரக்தியாக
வேகமாக அவனை கட்டி அணைத்தபடி நின்றாள் சுதா.
