ஹோட்டல் அறையின் விசாலமான ஹாலில் நிலவிய நிசப்தமும், அதன் பிரம்மாண்டமும் பூர்ணிமாவை நின்ற இடத்திலேயே அமரச் செய்திருந்தது. தங்கையின் நினைவு வேறு அவள் மனதை அழுத்திக் கொண்டிருக்க, நேரம் காலம் தெரியாமல் அவளை நெருங்கினான் சுஜித்.
அவன் விழிகளில், இரையை குறி வைத்திருக்கும் ஒரு மிருகத்தின் வக்கிரம் அப்பட்டமாக தெரிந்தது. செதுக்கி வைத்த சிலை போல் இருந்த பூர்ணியை, அவன் விழி விரித்துப் பார்த்தான்.
“யார் நீ? செக்கச் செவேர்னு… பாக்க செர்ரி பழம் போல இருக்க! அவனோட புது சர்வென்ட்டா இல்ல சைடு விசிட்டா?” என்று கேட்டபடி அவளை மிக நெருங்கி வந்தான்.
அவன் பேச்சில் இருந்த ஆபாசம் பூர்ணிமாவின் நரம்புகளை முறுக்கேற்றியது. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அதே பெண்ணுக்குள், சீற்றம் தலைதூக்கியது.
“தயவு செஞ்சு தள்ளிப் போங்க!” என்று கரகரப்பான குரலில் எச்சரித்தாள்.
சுஜித் அலட்சியமாகச் சிரித்தபடி, “ஏய்! நான் யாருன்னு தெரியுமா? இந்தியாவே என் பின்னாடி சுத்துது. நீ என்னன்னா அசால்ட்டா தள்ளிப்போன்னு சொல்ற?” என்று கூறி, அவளது முகத்தை நோக்கித் தன் கையை நீட்டினான். அவள் இதழுக்கும் அவன் விரலுக்கும் சில இஞ்ச் தூரமே எஞ்சியிருந்தது.
அடுத்த நொடி, பூர்ணிமாவின் கை அங்கிருந்த டீபாயில் வைக்கப்பட்டிருந்த கனமான பீங்கான் பூஜாடியைச் சட்டெனப் பற்றியது. மின்னல் வேகத்தில் அதைத் தூக்கி அவன் தலையை நோக்கி ஓங்கினாள்.
“பக்கத்துல வந்த.. உன் மண்டையைச் சிதறடிச்சிடுவேன்!” என்று ஆவேசமாகக் கத்த, சுஜித் திடுக்கிட்டு பின்வாங்கினான்.
கேவலம், காசுக்காக அவனோடு வந்தவள், தன்னைத் தாக்கத் துணிவாள் என்று சுஜித் எதிர்பார்க்கவில்லை. அதைவிட அவனுக்கு அழகும், அதனால் வரும் புகழும் மிக முக்கியம். எனவேதான் விரைந்து பின்வாங்கினான்.
பூர்ணிமாவின் கண்கள் சிவந்து, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தாலும், அவளது பிடியில் உறுதி இருந்தது. பூஜாடியைத் தூக்கியவாறே ஒரு கணம் சிலையாக நின்றவள், மெல்ல மூச்சை இழுத்து விட்டுத் தன் கைகளைக் கீழே இறக்கினாள்.
பூஜாடியைத் திரும்ப மேசை மீதே வைத்துவிட்டு, அவனை பார்க்க பிடிக்காமல் திரும்பி நின்றாள். சுஜித்தின் முகம் கோபத்தில் கறுத்தது. ஒரு சாதாரணப் பெண்ணிடம் தான் அவமானப்பட்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
“ஏய், என்னடி? பெரிய பத்தினினு நினைப்போ? பணத்துக்காக படுக்க வந்தவ தானடி நீ? ஹோட்டல் வரைக்கும் வந்துட்டு சீன் போடுற? பார்த்துக்கிறேன் உன்னை!” என்று பல்லைக் கடித்தபடி, கதவை ஓங்கி சாத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
அவன் சென்ற அடுத்த நிமிடம், பூர்ணிமா அங்கேயே சரிந்து அமர்ந்தாள். உடலெங்கும் வியர்த்து வழிய, இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
“கடவுளே… இந்த அசிங்கம் மட்டும்தான் என் வாழ்க்கையில மிச்சம் இருந்தது. அதையும் கொண்டு வந்து சேர்க்க பாக்குறியா? இதுக்கு மேல என்னால எதையும் தாங்க முடியாது. ஏன் என்னை இப்படி படுத்துற?” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.
தன்னைச் சுற்றியுள்ள சுவர்கள் தன்னை நசுக்க வருவது போன்ற ஒரு பிரமை அவளுக்குள் ஏற்பட்டது. இலக்கின்றி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென ஒரு மெல்லிய சப்தம் காதுகளில் விழத் தொடங்கியது.
அது அப்சராவின் சிணுங்கல் சத்தம்தான். கொஞ்சலும் கெஞ்சலுமாய் அவள் முணங்குவது, மெல்ல மெல்ல அதிகரித்தது.
“கமான் பேபி!” என்று சூர்யா கத்துவது, பூர்ணிமாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது.
‘தன்னவன், இப்போது இன்னொரு பெண்ணின் மடியில்…’ என்ற எண்ணம் அவளைக் கொலையாய் கொன்றது.
“வேண்டாம்… என்னால இதைக் கேட்க முடியல. இதுக்கு என்னை நேத்தே நீ கொன்றுக்கலாமேடா!” என்று அலறித் துடித்தவள், தனது இரு கைகளையும் தூக்கி காதுகளை இறுகப் பொத்திக்கொண்டாள். அதற்கு மேலும் அதிகரித்த அந்த முணகல் சப்தம், அவளது ஆழ்மனதிற்குள் ஊடுருவி கத்தியைப் போல குத்தி குதறிற்று.
காய்ச்சலின் சூடு ஒரு புறம் அவளை வாட்ட, மறுபுறம் இந்த மன ரீதியான சித்ரவதையும் நொடிக்கு நொடி அதிகரித்தது. பூர்ணிமா தன் தலையை முழங்கால்களுக்கு இடையே புதைத்துக் கொண்டாள். எத்தனை அழுதும் அவள் மன பாரம் குறையவே இல்லை, பாவம்…
“வேணும்னே என்னை இங்க இருக்க வச்சுட்டு, இன்னொரு பொண்ணோட நீ இப்படி… என்னால தாங்க முடியலடா…”
அவள் கண்ணீர் அருவியாய் கொட்டியது. அரை மணி நேரத்திற்கு பிறகு, பட்டென கதவு திறந்தது. அந்த சப்தத்தில் பூர்ணிமா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடையில் ஒரு வெள்ளை நிற டவலுடன் வெளியே வந்தான் சூர்யா. அவன் அகன்ற மார்பிலும், தோள்களிலும் அரும்பி நின்ற வியர்வை முத்துக்கள், அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் வைர கற்கள் போல மின்னின.
முழங்காலினைக் கட்டிக் கொண்டு, ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தவள் முன்பு சென்று நின்றான். அவன் கண்கள் ஒரு நிமிடம் அவளை அணு அணுவாய் மேய்ந்தன. உடனே உடலைக் குறுக்கியவள், அனிச்சையாய் உடையை சரி செய்து கொண்டாள். அவனோ ஒற்றை விரலால் அவள் முகத்தை தனை நோக்கி நிமிர்த்தினான். அவள் கண்கள் சிவந்து, முகம் வீங்கிப்போயிருந்தது.
அதை பார்த்து திருப்தியுற்றவன், அவளுக்கு நேர் எதிரில் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டைக்குள் சரித்து, பாதிக்கும் மேல் குடித்துவிட்டு தலைக்கு மேல் தூக்கி எறிந்தான். அது எங்கோ முட்டிக்கொண்டு பொத்! என தரையில் விழுந்தது. அந்த சப்தத்தில் லேசாக அதிர்ந்து அடங்கினாள் பூர்ணி.
“ஏய்… இதுக்கே செத்துகித்து தொலைச்சிடாத. இன்னும் மூணு மாசத்துக்கு நீ உசுரோட இருக்கணும்…” என்று மிக அலட்சியமாகக் கூறினான்.
அந்த ‘மூன்று மாதம்’ என்ற வார்த்தை பூர்ணிமாவின் காதுகளில் இடியாக விழுந்தது. தன் ஆதிக்கத்தின் எல்லையை அவன் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிட்டான்.
‘வெறும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கே என் ஜீவனில் பாதி போய்விட்டது. இன்னும் மூன்று மாதங்கள் இந்த நரகத்தில் என்னால் இருக்க முடியுமா?’ என்று கேட்பது போலவே இருந்தது அவளது பார்வை. அந்தப் பார்வையில் இருந்த வலியைக் கண்டுணர்ந்த பின்னும் அவன் மனது இரங்கவில்லை.
“என்ன முறைப்பு? இப்படியே உட்கார்ந்து பொழுத நகர்த்திடலாம்னு நினைச்சியா? எழுந்து போய் வேலையை பாருடி…” என்று அதட்டினான்.
சுவற்றைத் துணையாகப் பிடித்துக்கொண்டு, தள்ளாடிய படி எழுந்தாள் அவள்.
“உள்ள என் டிரஸ் கெடக்குது. அதையெல்லாம் எடுத்துட்டு வா…” என்று அவன் கட்டளையிட்டான். இதயம் கனக்க அந்த அறைக்குள் நுழைந்தாள்.
அந்த அறை கிடந்த கோலத்தைப் பார்த்த பூர்ணிமாவுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. படுக்கை விரிப்புகள் கலைந்து, தலையணைகள் தரையில் சிதறிக் கிடந்தன. அந்த அறையெங்கும் அவர்களின் நெருக்கத்தை விவரிக்கும் படி நிறைய அடையாளங்களை விட்டுச்சென்று இருந்தான். சுவாசத்திற்கு ஒவ்வாத ஒருவித வாடை, அந்த காற்றெங்கும் நிறைந்திருந்தது. அது அவளை உள்ளே நுழையவிடாது, குடலை பிரட்டியது.
“சீக்கிரம்டி, அபிய பார்க்க போகணுமா வேண்டாமா?”
வேண்டுமென்றே அவளுக்கு விருப்பமில்லாத அந்த செயலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினான். மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள் பூர்ணிமா. தன் காதலையும், தன் சுயமரியாதையையும் அந்த அறையின் வாசலிலேயே பலி கொடுத்துவிட்டு, உள்ளே நுழைந்தாள்.
படுக்கையில் அரை நிர்வாணமாய் படுத்திருப்பவள் மீது பார்வை திரும்பாதபடி, தரையில் கிடந்த அவன் துணிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கத் தொடங்கினாள். உள்ளாடைகள் முதற்கொண்டு அனைத்து உடைகளையும் ஒவ்வொன்றையும், நடுங்கும் கரங்களோடு சேகரித்தாள்.
தன் நேசத்திற்குரியவன் இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்துகொண்ட அந்தத் தனிமைத் தருணங்களின் எச்சங்களைத் தொடுவது, அவள் இதயத்தில் கத்தியால் கீறுவது போன்ற வலியைத் தந்தது. விம்மி வந்த அழுகையைத் தொண்டைக் குழியிலேயே அடக்கிக்கொண்டு, அந்த ஆடைகளைத் திரட்டி ஹாலுக்கு எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
சூர்யா அவளிடமிருந்து துணிகளைப் பிடுங்குவது போல வாங்கிக் கொண்டான். எவ்விதக் கூச்சமும் இன்றி அங்கேயே நின்றபடி, அந்த உடைகளை உதறி அணிந்து கொண்டான். இவள்தான் கண்களை மூடிக்கொண்டு திரும்பி நிற்க வேண்டியதாயிற்று. கண்ணாடி முன் நின்று தன் கலைந்த கேசத்தைச் சரி செய்துகொண்டவன், ஒருமுறை கூட அவளைத் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறத் தொடங்கினான்.
ஆனால் பூர்ணிமாவின் கால்கள் நகர மறுத்தன. ஆடைகளின்றி போர்வையின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அப்சராவின் பாதுகாப்பு குறித்து உருவான பதற்றம் இவளைத் தொற்றிக்கொண்டது.
‘சூர்யா அவளை அப்படியே விட்டுவிட்டு எப்படிக் கிளம்புகிறான்? கதவு கூடச் சரியாக மூடப்படவில்லையே?’ ஒரு பெண்ணாகப் பூர்ணிமாவுக்குத் தோன்றிய அந்தத் தார்மீகப் பயம் அவளைப் பாடாய்ப்படுத்தியது.
அறை வாசலைக் கடந்த பின்னும், அவளது பார்வை அந்த அறையின் கதவையே சுற்றிச் சுற்றி வந்தது. அந்தப் பதற்றத்தில் தள்ளாடி நடந்தவள், கால் தடுமாறி விழப்போனாள். கீழே விழாமல் இருக்கத் தன்னிச்சையாக முன்னே சென்றுகொண்டிருந்த சூர்யாவின் கையைப் பற்றிவிட்டாள். அவளை கீழே விழாதபடி தாங்கிப் பிடித்திருந்த உத்தமனோ, ஒரு ஏளனப் பார்வை பார்த்தான். உடனே வெடுக்கென தன் கையை உருவிக் கொண்டாள்.
விடுவானா அவன்? அவளை நெருங்கினான். சுவற்றுக்கும் அவனுக்கும் இடையே மாட்டிக் கொண்ட பேதை, புழுவாய் நெளிந்தாள். சுட்டுவிரலால் அவள் நெற்றி முடிகளை ஒதுக்கிவிட்டபடி, பேச ஆரம்பித்தான்.
“என்ன? வேணும்னே என்னைத் தொட்டுப் பார்க்குறியா? நான் டிரஸ் சேஞ்ச் பண்றத பாத்ததும் உனக்கு ஆசை வந்திடுச்சுல?”
முகம் சுளித்தவள், “இல்ல, நான் கால் தடுக்கி விழப் பார்த்துட்டேன்…” என்றாள்.
“இதெல்லாம் ஒரு சாக்குனு தெரியாத அளவுக்கு நான் என்ன சின்ன பையனா? வேணும்னா சொல்லு, உனக்கும்…” என்றபடி அவள் இதழை நெருங்கினான்.
அவை இரண்டும் இன்னொரு பெண்ணை தீண்டிவிட்டு வந்திருக்கும்! எனும் எண்ணமே அவளை கொலையாய் கொன்றது.
முயன்று அவனை தன்னைவிட்டு தள்ளி நிறுத்தியவள், “வேணாம் சூர்யா… அந்தப் பொண்ணு… உள்ள… அப்படி… கிடக்குது… யாராவது உள்ள போனா… என்ன ஆகும்?” என்று திக்கித் திணறியபடி தன் மனதை அறித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்டாள்.
“அவ்வளவு கவலையா இருந்தா, நீ வேணும்னா அவளுக்குக் காவலுக்கு அங்கேயே உட்காரு” என்று கொஞ்சமும் ஈவிரக்கமின்றிச் சொன்னவன், லிஃப்ட்டை நோக்கி நகர்ந்துவிட்டான்.
“அட்லீஸ்ட் கதவை மட்டுமாவது…” என்றவளை நோக்கி ஒரு பார்வையைத்தான் வீசினான். அவள் இதழ்கள் கம் போட்டது போல ஒட்டிக்கொண்டன.
லிஃப்ட்டினுள் அவன் போய்விட, இவளுக்கும் பின்னால் ஓட வேண்டிய சூழ்நிலை. பேஸ்மெண்டில் இருக்கும் பார்க்கிங் ஏரியா நோக்கி பயணித்தது லிஃப்ட். அது தரை இறங்கும் வரை பூர்ணிமா, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இப்போதாவது யாரையாவது அழைத்து அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்வான், அல்லது அவள் அண்ணனுக்கு தகவல் சொல்வான்!’ என்று மனதின் ஓரம் நம்பினாள்…
ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், லிஃப்ட் கதவு திறந்ததும் காரை நோக்கிச் சென்றுவிட்டான். பூர்ணிமாவால் அதற்குமேல் மௌனமாக இருக்க முடியவில்லை.
அவன் காருக்குள் ஏறி அமர்ந்ததும், “கொஞ்சம் கூட மனசுல மனிதாபிமானமே இல்லையா உனக்கு?” என ஆவேசமாகக் கேட்டாள்.
சூர்யா ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்தான். அவனது முகம் இறுகி, கண்கள் சிவந்தன.
“ஏன் இருக்கணும்? மிருகங்கள் மட்டுமே வாழ்ற இந்த உலகத்துல, நான் மட்டும் ஏன் மனுஷனா இருக்கணும்? நீயுமே பணத்துக்காக என் வாழ்க்கையை அழிச்சவ தான? என்ன தைரியத்துல என்னைப் பார்த்து இந்த கேள்வியை கேட்கிற?” என்று நறுக்குத் தெறித்தாற்போல அடுத்தடுத்துக் கேள்விகளைத் தொடுத்தான்.
அவன் வீசிய பழிச்சொற்கள் பூர்ணிமாவை நிலைகுலையச் செய்தது. பதில் பேச முடியாமல் ஊமையாகிப் போனாள். நகர மறுத்து நின்றவளை இழுத்து காரில் போட்டவன், புயல் வேகத்தில் வாகனத்தைக் கிளப்பி இருந்தான். எப்போது வண்டி வீடு வந்து சேர்ந்தது என்றே அவளுக்கு தெரியவில்லை. சாவி கொடுத்த பொம்மை போல அவனை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள்.
அங்கே பாலாஜி நின்றிருந்தான். அவன் இருவருக்குமே சிறு வயது தோழன்தான். ஆனால் பத்து வருடத்திற்கு முன் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு, பூர்ணிமாவோடு அவன் பேசவே இல்லை. சூர்யாவின் நிழலாக மாறிப்போனவன், அவனது அத்தனை பிசினஸ் ரகசியங்களை கட்டிக்காக்கும் ஒரு பொறுப்பான பிஏவாக இப்போது வளர்ந்து நிற்கிறான்.
அவனைக் கண்டதும், பூர்ணிமாவின் கண்கள் சட்டெனப் பிரகாசமடைந்தன. அவனிடமாவது தனக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஓடிப் போய் அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.
“பாலாஜி… பாலாஜி, அபியைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? அவ எங்க இருக்கா? பத்திரமா இருக்காளா? நேத்துல இருந்து அவளைப் பார்க்காம என் உயிர் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்கு. அவ சின்னக் குழந்தையை, பெரியவங்க இல்லாம தனியா எதுவும் செய்யத் தெரியாது. தயவுசெஞ்சு அவனுக்குச் சொல்லேன்… என் தங்கச்சியை என்கிட்டயே திருப்பி கொடுத்துடச் சொல்லேன். அவன் என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்… ஆனா அபியை மட்டும் கொடுத்துடச் சொல்லு…” என்று விம்மி அழுது அவனிடம் கெஞ்சினாள்.
பாலாஜியின் கண்களில் ஒரு கணம் கழிவிரக்கம் தோன்றி மறைந்தது. அவளுக்குப் பதில் சொல்ல அவனது மனசாட்சி துடித்தது. ஆனால், சூர்யாவின் கட்டளைக்கு மீறி ஒரு வார்த்தை கூட அவனால் பேச முடியாது. அவன் மௌனமாகத் தலைகுனிந்து கொண்டான். அந்த மௌனம் பூர்ணிமாவை இன்னும் அதிகமாக வாட்டியது.
அதே நேரம் சூர்யா, “நான் சொன்ன வேலை எல்லாம் முடிஞ்சதா பாலாஜி?” என்று அதிகாரக் குரலில் கேட்டான்.
பாலாஜி சட்டெனத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “முடிஞ்சது பாஸ், நீங்க கேட்ட ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் மெயில் அனுப்பிட்டேன்” என்றான் உறுதியாய்.
“ப்ரொடக்ஷன் டிலே ஆகுமோனு கஸ்டமருக்கு நம்ம மேல எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. சொன்ன தேதிக்குச் சரியா நம்ம பொருட்களை எக்ஸ்போர்ட் பண்ணியிருக்கணும். ஒரு சின்னத் தப்பு நடந்தாலும் அது நம்ம பிராண்ட் பேரை பாதிக்கும்” என்று சூர்யா பிசினஸ் ரீதியாகவே பேசினான்.
“நிச்சயமா டிலே ஆகாது, அதுக்கான வேலைகள் ரொம்ப வேகமா நடந்துட்டு இருக்கு. சொன்ன தேதிக்கு ஒரு நாள் முன்னாடியே எல்லா பொருட்களையும் எக்ஸ்போர்ட் பண்ணிடலாம். நான் ஃபேக்டரிக்கு நேர்ல போய் ஒருமுறை செக் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று பொறுப்பாகப் பதிலளித்தான்.
“குட்… நான் மதியம் ஆபீஸ்க்கு வருவேன். ஜஸ்ட் டாகுமெண்ட்ஸ் செக் பண்ணிட்டு கிளம்பிடுவேன்.மத்த வேலைகளையெல்லாம் நீயே பொறுப்பா பார்த்துக்கோ…” என்று சூர்யா கூறி முடிக்கும் போதே, ‘பொத்’ என ஒரு சப்தம் கேட்டது.
எத்தனை தூரம்தான் அவளது தேகம் தாங்கும்? கண்கள் இருள, நினைவுகள் தப்ப, அந்தப் பளிங்குத் தரையில் மயங்கி விழுந்திருந்தாள் பூர்ணிமா.
🪷🪷🪷🪷🪷
அடேய் சூர்யா! இரக்கமில்லையாடா உனக்கு? 😡😡😡
