ராசம்மாள் பாட்டி வீட்டில், மங்கை மணக்க மணக்க நெய் மைசூர்பாக் செய்து கொண்டிருந்தார். காவ்யாவும் திவ்யாவும், திருவிழா வந்தது போல அலமாரியில் இருக்கும் உடைகளில் நல்லதை எல்லாம் தேர்வு செய்து தனி வரிசையில் அடுக்கிக் கொண்டிருந்தனர். பிரபாவுமே பல நாட்களுக்குப் பிறகு சற்றே முகத் தெளிச்சியோடு சிரித்து பேச ஆரம்பித்தார்.
ராசம்மாள், “எப்பாடி, இப்பத்தான் வீட்டைப் புடிச்ச தரித்திரம் தொலைஞ்சது போல இருக்கு. அக்காளும் தங்கச்சியும் சரியான அதிர்ஷ்ட கட்டைங்க” என்று வாய்விட்டு திட்டினார்.
கடைக்குட்டி திவ்யா, “அதிர்ஷ்டமில்லைன்றத கூட தாங்கிப்பேன் பாட்டி. கொல்ல பக்கம் வர்ற நாத்தம் இருக்கே, உவ்வே…” என்று உமட்டிக்காட்டினாள்.
மங்கை, “ஏய், சும்மா இருடி. நல்ல காரியம் நடக்குற வீடு!” என மகளை அடக்கி விட்டு,
“அத்த, நானுமே சொல்ல நினைச்சேன். அந்தப் புண்ணியவதிங்க ரெண்டு பேரும் கிளம்பிப் போனதுல இருந்துதான், மனசு சஞ்சலம் இல்லாம நிம்மதியா இருக்கு. அவ போன, அடுத்த நாளே நம்ம காவ்யாவுக்கு அவ விரும்புன இடத்துல இருந்து சம்பந்தம் தேடி வந்திச்சு பாருங்க!” என்று மைசூர்பாக்கை தட்டில் வைத்தபடி உற்சாகமாகப் பேசினாள்.
காவ்யா பட்டுப் புடவை ஒன்றை மேனியில் சாத்திப் பார்த்தபடி, “அம்மா! இது நல்லா இருக்கா? சாயங்காலம் முத்து மாமா என்னை நிச்சயம் பண்ண வரும்போது, நான் இதை கட்டிக்கவா?” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
“உனக்கென்னடி ராசாத்தி, எதை கட்டினாலும் தேவதை மாதிரி இருப்ப. என் மவ வயித்து பேரன், உன்ன கண்டதும் மயங்கி விழப் போறான் பாரு…” என்றார் ராசம்மாள்.
திவ்யா, “போ பாட்டி, அந்தப் பூர்ணிமா இருந்த வரைக்கும் முத்து மாமா அவ பின்னாடியேதான சுத்திட்டு இருந்தாரு. இப்போதான் அக்காவ ஏறிட்டே பார்க்க போறாரு. எங்கக்கா இன்னிக்கி அவளை விட அழகா இருக்க வேண்டாமா?”
மங்கை, “திவ்யா, நீ வாய அடக்குனு அப்பவே சொன்னேன்னா இல்லையா?…” என இளைய மகளை அடக்கிவிட்டு,
“இங்க பாரு காவ்யா, உங்க அத்தைக்கு நீதான் சின்ன வயசுல இருந்து உசுரு. முத்துவே முடியாதுன்னு சொன்னாலும், அவுங்க விட்டுக் கொடுத்துடுவாங்களா?” என, காவ்யாவை சமாதானப்படுத்தினார்.
ராசம்மாள், “ஆமா கண்ணு, அந்த விடியா மூஞ்சிகள கூட்டிட்டு போன மகராசன், நம்ம வீட்டுப் பீடையையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போயிட்டான். இனி நம்ம வீட்டுக்கு எல்லாமே மங்களகரமா நடக்கும் பாரு!” என்றார் தன் பங்குக்கு.
‘மகளுக்கு சொல்வது போல, எத்தனை முறை ஜாடையாக சொன்னாலும், இந்த கிழவி அபசகுனமா பேசுறதை நிறுத்தவே நிறுத்தாது போலயே!’ என மனதிற்குள் நொந்து கொண்டாள் மங்கை.
அவள் கணவன் பிரபா தனது செல்போனில் ஏதோ கணக்கைப் பார்த்துக் கொண்டே, “ஆமாம்மா, பூர்ணிமா மூணு மாசத்துக்கு முன்னாலேயே கடையை விட்டு வெளியேற சம்மதிச்சதுக்காக, அந்த இடத்தோட ஓனர் நமக்கு ஐம்பதாயிரம் பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டாரு. அங்க கிடந்த பொருளை எல்லாம் வித்தா எப்படியும் பத்தாயிரத்துக்கு குறையாம கையில நிக்கும். முத்து காவ்யாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா, அடுத்த முகூர்த்தத்திலேயே நாள் குறிச்சிடலாம். என் தங்கச்சி குலதெய்வம் கோவில்ல கல்யாணம் வைக்க ஆசைப்படுறா. நம்ம கைக்காசு ஒரு பைசா செலவில்லாம கல்யாணத்தை முடிச்சுடலாம் பாரு!…” என்றார் கை தேர்ந்த வியாபாரி போல.
ராசம்மாள் வெற்றிலையை இடித்தபடி, “நான்தான் சொன்னேன்ல பிரபா? என் பேத்திக்கு தானா கூடி வரும்னு. நீ இப்பவே போய் ஜோசியரை பார்த்து நாள் குறிக்கச் சொல்லிட்டு வா. நிச்சயதோட கல்யாண தேதியையும் முடிவு பண்ணிடலாம்….” என்று மகனை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்.
தாய் பேச்சை தட்ட விரும்பாத பிரபாவும், ஜோசியரைப் பார்த்து நாள் குறித்து விட்டு வந்தார்.
மாலை மங்கும் வேளையில், ராசம்மாள் பாட்டியின் ஒற்றை மகளும், பிரபாவின் தங்கையுமான மோகனா தன் கணவர் சந்தானம் மற்றும் மகன் முத்துவுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். பட்டுப்புடவை சரசரக்க உள்ளே வந்தவரை, பிரபாவும் அவர் மனைவியும் ஆனந்தமாக வரவேற்றனர்.
மோகனாவின் கையில் நிச்சயத்திற்காக தாம்பூலம் தயாராக காத்திருந்தது. வீடெங்கும் அலங்காரம் செய்யப்பட்டு, பார்க்கும் திசையெல்லாம் பளபளவென மின்னியது. சந்தோஷ சிரிப்பில் அந்த இடமே கோலாகலமாக திகழ, முத்துவின் முகத்தில், சந்தோஷம் துளியும் இல்லை. அவன் ஒப்புக்காக கூட சிரிக்கவில்லை.
நன்கு படித்து, ஒழுக்கமான சூழலில் வளர்ந்த முத்து, இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறான். அவன் அந்த வீட்டிற்குள் நுழையும்போதே, அவனது கண்கள் தன்னிச்சையாகப் பூர்ணிமாவும் அபிராமியும் வழக்கமாக அமர்ந்திருக்கும் அந்தத் திண்ணையை நோக்கி பாய்ந்தது.
பனிரெண்டு வயதில் தன் சின்னஞ்சிறு தங்கையின் கையை இறுகப் பற்றிக்கொண்டு, கண்ணீரோடு தயங்கியபடி இந்த வீட்டிற்குள் நுழைந்த பூர்ணிமாவின் உருவம் இன்னும் அவன் நெஞ்சில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது.
அவள் போன்ற ஒரு குணவதியான பெண், எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டாள் என்று முத்து உறுதியாக நம்பினான். அவளது பொறுமையான குணமும், தங்கையிடம் காட்டும் தாயன்பும், வயதுக்கு மீறிய கடுமையான உழைப்பும், அவனைப் பலமுறை வியக்க வைத்திருக்கின்றன.
ஆனால் சீர் வரிசை இல்லாமல், தங்கை எனும் சுமையோடு, தராதரம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த பூர்ணிமாவை, அவன் தந்தையும் தாயும் மருமகளாக்க விரும்பவில்லை. ஆனாலும் முத்து வீம்பாக நின்று, திருமணம் வரை விஷயத்தை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். கல்யாணத்திற்கு ஒருவாரம் இருக்கையில் மணப்பெண் எங்கோ ஓடிவிட்டாள்! என்ற செய்தி மட்டுமே அவனுக்கு கிடைத்தது. பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்த பின் இப்படி ஒரு விஷயம் கசிந்தால், அவன் மனது என்ன பாடுபடும்?
பைத்தியம் போல அவளைத் தேடி அலைந்தான்!
மோகனா, “முத்து, இங்க பாருப்பா… நடந்ததை எல்லாம் மறந்துடு. கண்டவன் கூடப் போனவளைப் பத்தி இன்னும் ஏன் யோசிச்சுட்டு இருக்க? எனக்கு நீ முக்கியம்டா…” என்று சென்டிமென்டாக பேசிப் பார்த்தார்.
“பூர்ணிமா இப்படி பண்ற பொண்ணு கிடையாதும்மா. அவளுக்கு ஏதோ பிரச்சனை…”
“இருக்கட்டுமே, பேர் கெட்டுப்போன பிறகு அவள இந்த வீட்டுக்குள்ள விட நான் சம்மதிக்க மாட்டேன். எனக்கு காவ்யாதான் மருமகளா வரணும். நீ மட்டும் சொன்ன தேதியில காவ்யாவைக் கல்யாணம் பண்ணிக்கல, அப்புறம் இந்த அம்மாவை உசுரோட பார்க்க முடியாது. நான் தீக் குளிச்சு செத்துடுவேன்ப்பா” என மிரட்டித்தான் அவனை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தார் மோகனா.
அதன் பலனாகத்தான் இந்த அவசர நிச்சயதார்த்தம்!
அனைத்தும் சுபமாக நடந்து, ஐயர் திருமண தேதியை குறித்துக் கொண்டிருந்த நேரம், முத்துவுக்கு அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“வாட்? நெஜமாவா சொல்ற? நான் இதோ வர்றேன்…” என்று கூறியபடி எழுந்து ஓடினான் முத்து.
பிரபா, “மாப்ள, மாப்ள… எங்க போறீங்க?” என கத்தியபடி பின்னால் ஓடினார்.
மோகனா, “டேய், எங்கடா போற? உனக்கு ஒரு நல்லது நடக்கும் போது ஏன்டா இப்படி பண்ற? முத்து… முத்து…” என்று கத்திக்கொண்டே பின்னால் ஓடி வந்தார்.
யார் குரலையும் செவி மடுக்காத முத்து, தன் பைக்கில் அவசரமாக எங்கோ கிளம்பினான். அவனைப் பின்தொடர்ந்து பிரபாவும் தன் ஸ்கூட்டரில் ஏறினார். ஆனால் அதற்குள் முத்துவின் பைக் புயலென அந்த வீதியை விட்டு மறைந்திருந்தது. ஒரு நிமிடத்தில் விஷேஷ வீடு, அல்லோலப்பட அத்தனையும் கெட்டுவிட்டது.
“முத்து… அந்தச் சூர்யாவோட பங்களா வாசல்ல, உனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு மழையில நனைஞ்சுட்டு நிக்கிற வீடியோ இப்போதான் லீக் ஆகியிருக்குடா. அவ அங்க ஏதோ பெரிய சிக்கல்ல இருக்கான்னு தோணுது!” நண்பனின் இந்த வார்த்தைகள், திரும்பத் திரும்ப அவன் காதுக்குள் ஒலித்து அவனை வெறியாக்கி இருந்தது.
அதே சமயம், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிப் பாலாஜியின் காரில் ஏறி சூர்யாவின் பங்களாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. தனுஜா கொடுத்த அந்தத் தெம்பில், இப்போது அவள் இதயம் ஓரளவுக்கு நிதானமாகி இருந்தது.
தனக்கு நடந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தபோது, இருட்டிற்கு நடுவே மின்னல்கள் தெரிவது போல, தன் வாழ்விலும் சில நல்ல விஷயங்களும் நடந்திருப்பது அவளுக்குத் புரிந்தது.
முதலாவது, முத்துவுடனான அந்தத் திருமணம் நின்றது! சூர்யாவின் இந்தச் செயலால் உலகமே அவளைத் தூற்றினாலும், பூர்ணிமாவின் மனதிற்குள் ஒரு சிறு நிம்மதி உருவானது உண்மைதான். தன் அடிமனதில் சூர்யாவை வைத்துக்கொண்டு, முத்துவிற்குத் துரோகம் இழைக்க வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை.
இரண்டாவது, அபிராமி! பாலாஜியின் குடும்பத்தினர் அவளைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது அவளுக்குப் பெரும் ஆறுதல்.
பங்களாவின் வாசலில் கார் வந்து நின்றதும், பூர்ணிமா நிமிர்ந்து அந்தப் பிரம்மாண்டக் கதவுகளைப் பார்த்தாள். நேற்று பயந்து நடுங்கி நின்ற அதே இடம்தான், ஆனால் இன்று அவள் பார்வையில் ஒரு தெளிவு இருந்தது.
உள்ளே நுழைந்தவளைப் பார்த்து வேலைக்காரி கோகிலா, “வா பூர்ணி… உடம்பு பரவாயில்லையா?” என்று மெதுவாக விசாரித்தாள்.
“பரவாயில்ல… என் பேர்?”
“முதலாளி ஐயா தான் சொன்னாரு. நீ வந்ததும் அவரோட ரூம்ல வெயிட் பண்ணச் சொன்னாரு.”
பூர்ணிமா பதில் சொல்லும் முன், அவள் பார்வை ஹாலின் மூலையில் இருந்த ஒரு பெரிய எல்.ஈ.டி திரையில் விழுந்தது. அதில் சூர்யா ஒரு பிரஸ் மீட்டில் பேசிக் கொண்டிருந்தான். அவனது முகம் ஒருவித கர்வத்தால் மின்னிக் கொண்டு இருந்தது.
“சார், ஒரு பொண்ணு உங்க வீட்டு வாசல்ல மழைல நிக்குற மாதிரி வீடியோ வந்திருக்கே?”
“அந்த பொண்ணு மட்டும் இல்ல, மாசத்துக்கு ரெண்டு பேர் இப்படி என் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறாங்க. எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே தான். அவங்களுக்கு சம்மதமானு நீங்க தான் கேட்டு சொல்லணும்…”
அவன் வார்த்தைகள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், முகத்தில் இறுக்கம் நிறைந்து கிடந்தது. எனவே அடுத்து ஒரு வார்த்தை பேச எவனும் துணியவில்லை.
‘இந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் முடிந்துவிட்டது!’ என பூர்ணிமா நிம்மதி பெருமூச்சு விட்ட அதே சமயம், முத்து பங்களா வாசலில் நின்று செக்யூரிட்டியிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“பூர்ணிமாவை வெளிய வரச் சொல்லுங்க… இல்லன்னா கேட்டை தாண்டி குதிச்சு நான் உள்ள போயிடுவேன்!”
இதை மாடியிலிருந்து பார்த்த பூர்ணிமாவுக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“முத்து மாமா இங்க எதுக்கு வந்தாரு? சூர்யாவுக்குத் தெரிஞ்சா இவரை என்ன பண்ணுவானோ?” என்று பயந்தபடி கீழே ஓடினாள்.
அவளைப் போலவே பாலாஜியும் டென்ஷனாக கேட்டினை நெருங்கிக் கொண்டிருந்தான். முத்துவின் பின்னோடு வந்திருந்த பிரபா, சற்று தொலைவில் இருந்து அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தார். பாலாஜி, ஏதோ சொல்லி முத்துவை அங்கிருந்து விரட்டி விட்டான். சோர்ந்த முகத்தோடு திரும்பி வந்தவனை, வழிமறித்து நின்றார் பிரபா.
“என்ன மாப்ள? என்ன நடக்குது? எதுக்கு நிச்சயத நிறுத்திட்டு இங்க வந்தீங்க? அவங்க என்ன சொன்னாங்க?” மனதில் பதற்றம் கூடியதால், அடுத்தடுத்து வந்தது கேள்விகள்.
“அவன்தான் பூர்ணிய கூட்டிட்டு வந்திருக்கானாம். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சுனு பாலாஜி சொல்றான்!” என்று கூற, பிரபாவுக்கு காலுக்கு கீழே தரை நழுவுவது போல இருந்தது.
சூர்யா அவளை கடத்தி வந்தது எல்லாம் அதிர்ச்சியே இல்லை. திருமணம் செய்ததுதான் பேரதிர்ச்சி! ஏன்? எதற்காக? என பல நூறு சிந்தனைகள் அவருக்குள்.
அதே மனநிலையில் இருந்த முத்து, “எதுக்காக அவன் தன் ஜென்ம விரோதியை கல்யாணம் பண்ணனும்? அதை சொல்லாம டிவில வேற மாதிரி பேட்டி கொடுக்குறான். ஏதோ தப்பா இருக்கு மாமா…” என்று தலையை பிடித்துக் கொண்டு புலம்பினான்.
“சரி விடுப்பா, அவங்க வாழ்க்கைக்கும் நமக்கும் இனிமே எந்த சம்பந்தமும் இல்ல. நீ உன்னோட எதிர்காலத்தைப் பத்தியும் கொஞ்சம் யோசி” என்று எதை எதையோ சொல்லி அவனை வீட்டிற்கு கூட்டி வந்தார்.
நினைத்தபடி நிச்சயம் நடக்காமல் போனதால், வீடே துக்க மயமாகி இருக்க, அங்கிருந்த எல்லோரும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். பிரபா விஷயத்தை விளக்கிச் சொன்ன பிறகும், அவர்கள் யாரும் முத்துவுக்காக இறங்கி வருவதாக இல்லை.
இறுதியில் மங்கை, “எவளோ ஒருத்திக்காக என் பொண்ண அழ வச்சுட்டு போயிட்டியேப்பா. இப்படித்தான் வாழ்க்கை முழுக்க இருக்கும்னா என் பொண்ண விட்டுரு” என்று பெரிய கும்பிடு போட்டார்.
உடனே பின்பாட்டு பாடுவது போல மோகனாவும், “எனக்கு கையோட காசிக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுயா. நான் அங்கின போய் உட்கார்ந்துடுறேன், உன் விருப்பத்துக்கு குறுக்கவே வரல” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.
பிரபாவும், சந்தானமும் தங்கள் பங்குக்கு அறிவுரைகளை அள்ளி தெளிக்க, “சரி, நீங்க சொல்ற தேதியில காவ்யாவை கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போதைக்கு என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க ப்ளீஸ்…” என்று சொல்லிவிட்டான் முத்து!
நிச்சயத்தையே இந்த கதி ஆக்கிய நம் ஆட்ட நாயகன், திருமணத்தை சும்மா விடுவானா? என்ன நடக்குமோ, கடவுளுக்கே வெளிச்சம்!
இத்தனை களேபரத்தில், அவன் விளையாட்டை ஓரளவு கணித்தது ராசம்மாள் பாட்டி மட்டும்தான். அவருக்கு புத்தி கோக்கு மாக்காக வேலை செய்ய, தன் மகன் பிரபாவை தனியே அழைத்தார். இருவரும் கிசுகிசுப்பாக என்ன பேசினார்களோ… பிரபாவின் முகம் தவுசன் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாக எரிந்தது.
