ரசிகை – 7

ஜிம்மில் வியர்வை வழிய எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த சூர்யாவுக்கு, வாட்ச்மேனிடம் இருந்து இண்டர்காம் கால் வந்தது. பூர்ணிமாவைத் தேடி பிரபா வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், கையில் இருந்த டம்பிள்ஸை அப்படியே தரையில் நங்கென போட்டுவிட்டு, டவலில் கழுத்து வியர்வையைத் துடைத்தபடி அங்கிருந்து கிளம்பினான். 

முகப்பு பக்கம் அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த செடிகளுக்கு அருகே, சற்று படபடப்போடு நின்று கொண்டிருந்தார் பிரபா. சூர்யா கோபமாக வருவதைப் பார்த்த பூர்ணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன்னால் இருவருக்கும் நடுவில் ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என்று அஞ்சினாள். 

கைகளை நீட்டி அவன் வழியை மறித்து நின்றவளுக்கு, பயத்தில் இதயம் ‘திக் திக்’ என்று அடித்துக் கொண்டது.

“ப்ளீஸ், அவரை எதுவும் சொல்லாதீங்க. அவர் என்னை பார்க்க வந்திருக்காரு. நான் அஞ்சு நிமிஷத்துல பேசி அனுப்பிடுறேன். நீங்க எதுவும் பேச வேண்டாம்!” என்று கரம் குவித்து அவனிடம் கெஞ்சினாள்.

அவனோ அவளை நோக்கித் தன் வில்லத்தனமான புன்னகையை உதிர்த்தான். இப்போது எதற்குச் சிரிக்கிறான்? என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் இதயம், பயத்தில் போர் முரசு கொட்டியது.

அவளை விட்டு தள்ளி நடந்தவன், பூச்செடிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஊஞ்சலை நோக்கிச் சென்றான். அதில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டு, காலால் தரையை உந்தி மெல்ல ஆடியபடி, இவர்கள் இருவரையும் இமைக்காமல் பார்த்திருந்தான். க்ரீச் க்ரீச் என்ற ஊஞ்சல் சப்தத்தைத் தவிர அங்கே வேறு எந்த ஓசையும் இல்லை.

தயங்கித் தயங்கித் தன் பெரியப்பாவிடம் சென்ற பூர்ணிமா, “பெரியப்பா…” என்று அன்போடு பேச முயற்சித்தாள். அவளது குரலில் ஒரு ஆதரவின் தேடல் இருந்தது.

அவரோ முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு, “இங்க பாரு, நான் ஒன்னும் உன்கிட்ட உறவாட வரல. உன் கல்யாணத்துக்காக நான் ஏகப்பட்ட செலவு பண்ணிட்டேன். பத்திரிக்கை, மண்டபம், சமையலுக்குனு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வரை ஆகிப்போச்சு. அதெல்லாம் யாரு திருப்பிக் கொடுப்பா? இருந்திருந்து எங்களுக்குப் பெரிய நஷ்டத்தை உண்டாக்கிட்டு, வந்து இங்க சுகமா இருக்கியா?” என்று சண்டைக்கு வந்தார்.

பூர்ணி அதிர்ந்துவிட்டாள். 

‘இப்போதாவது உனக்கு புத்தி வந்ததா?’ என யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. 

பெரிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள், மீடியா, போலீஸ் எல்லோரும் சூர்யாவின் பக்கம் இருக்கிறார்கள் என்று பூர்ணிக்குத் தெரியும். எனவே அவனிடமிருந்து தன்னை எவராலும் மீட்டுச் செல்ல முடியாது என்று அவளும் அறிந்திருந்தாள். 

அவள் எதிர்பார்த்தது எல்லாம், ‘உனக்கு ஒண்ணும் ஆகலையே? பயப்படாம இரு! நான் அப்பப்போ வந்து உன்னை பார்த்துட்டு போறேன்…’ எனும் ஆறுதல் வார்த்தையைத் தான். 

அதை பொய்யாகக் கூடத் தன் சொந்த பெரியப்பா பேசவில்லையே என்பதுதான் அவளுக்குப் பெரும் வருத்தமாய் இருந்தது. வலி ததும்பும் விழியோடு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

சூர்யாவோ, ‘நீதானே முந்திரிக்கொட்டை போல நான் பேசுகிறேன் என்று முன்னால் போனாய்? இப்போது பேசு…’ எனும் தோரணையோடு முறைத்துப் பார்த்தான்.

எச்சில் விழுங்கியவள், “பெரியப்பா… இப்போ எங்கிட்ட காசு இல்ல. காசு கிடைக்கும் போது எல்லாத்தையும் வட்டியும் முதலுமா திருப்பித் தந்துடுறேன். இப்போதைக்கு என்னை விட்டுடுங்க…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

“அஞ்சு லட்சம் தர்றேன். அது போதுமா உங்களுக்கு?” என்றான், ஊஞ்சலில் ஆடியபடியே.

அந்தத் தொகையைக் கேட்டதும் பிரபாவுக்கு வாயெல்லாம் பல்தான்!

“போதும் தம்பி… போதும்! கேஷ்ஷா கொடுத்துட்டீங்கனா ரொம்ப சந்தோஷம். ஏன்னா, எனக்கு கொஞ்சம் கடன் பிரச்சனை இருக்கு…” என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அவனிடம் போய் நின்றார்.

“பணம் உங்கள தேடி வரும். ஆனா அதுக்கு முன்னால நீங்க எனக்கு ஒரு வேலை செய்யணும்.”

“சொல்லுங்க தம்பி… நீங்க என்ன சொன்னாலும் பண்ணுறேன். உங்க பேச்சைக் கேட்காம நான் எங்க போகப்போறேன்?” என்று குழைந்தார் பிரபா.

உடனே பாலாஜிக்கு போன் போட்ட சூர்யா, ரகசியமாய் எதையோ பேசி முடித்தான். அதை பிரபாவிடம் சொல்லச் சொல்ல, அவரும் பூம்பூம் மாடு போலத் தலையாட்டிக் கேட்டுக் கொண்டார். 

“நீங்க என்ன செய்யணும், எப்ப செய்யணும்னு பாலாஜி உங்களுக்கு சொல்லுவான். என் வேலையை நீங்க முடிச்சு கொடுத்த ஒரு மணி நேரத்துல, உங்க கைக்கு பணம் வந்திடும்” என்று சூர்யா கறாராகச் சொல்லிவிட்டான்.

பூர்ணிமா என்றொருத்தி அங்கே இருப்பதையே மறந்துவிட்ட பிரபா, பணத்தின் நினைப்பிலேயே துள்ளல் நடையோடு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். தன் இரத்த பந்தமே தன்னை பணத்திற்கு விற்றுவிட்டுப் போவதைப் பார்த்த பூர்ணிமா, கல்லாகச் சமைந்து நின்றாள்.

ஸ்லோமோஷனில் அவளது அருகே வந்த சூர்யா, அவளது தோளை உரசி நின்றான்.

“இனிமே டெய்லி எக்ஸ்ட்ரா இரண்டு லிட்டர் தண்ணீர் குடி. அழுறதுக்கு கண்ணுல தண்ணி வேணும்ல?”

“பத்து லிட்டர் குடிச்சாலும் எனக்குப் பத்தாது சூர்யா… அந்த அளவுக்கு எனக்குள்ள காயங்கள் இருக்கு” என்றவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “பரவாயில்ல, நான் தாங்கிக்கிறேன். எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சு. ஆனா, என் மேல இருக்கிற கோபத்துல, அபியை மட்டும் எதுவும் பண்ணிடாத. அவ அப்பாவி குழந்தை… ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.

சூர்யா தன் கைகளை முறுக்கி நெளிப்பெடுத்தான். அவனது விழிகளில் ஒரு நிமிடம் ஏதோ ஒரு புரியாத உணர்வு தோன்றி மறைந்தது.

பதில் வேண்டி நிற்கும் அவளிடம், “எனக்கு இது ஒன்னு தான் புரியல. நம்பிக்கை துரோகத்தை பல தடவ பார்த்த அப்புறமும், உனக்கு எப்படித்தான் இன்னமும் மத்தவங்க மேல நம்பிக்கை வைக்கத் தோணுது?” என்று கேட்க, இவளுக்கு மீண்டும் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

வேண்டுமென்றே, அவள் மறக்க நினைக்கும் காயங்களை குத்தி கிளறியிருந்தான் அவன். பதில் சொல்லத் தெம்பில்லாமல், ஊமையாய் அழுதபடி மெல்ல உள்ளே சென்றாள். அடுத்த சில நிமிடங்களுக்கு அந்த வீடே நிசப்தமாக இருந்தது. அதை உடைக்க உள்ளே நுழைந்தது ஒரு சில்வண்டு!

“ராவணன் மகன்டா!

ஒத்தையில் நிக்கிற எமன்டா…”

என துள்ளல் பாட்டு ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே, உரிமையாய் நுழைந்தாள் தனுஜா. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும் அவளுக்குப் பரிச்சயம் போலிருந்தது அவள் செயல்பாடு. துள்ளி துள்ளி நடந்தவள், நேராகச் சமையலறைக்குச் சென்றாள். அங்கே மணக்க மணக்கப் பூரிக்கு சன்னா மசாலா செய்து கொண்டிருந்த கோகிலாவை பின்னால் இருந்து பாய்ந்து கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

“ஆத்தாடி!” என்று சத்தமாய் கத்தி விட்டார் அவர்.

“நான்தான் கோகி…” என்றவள், முறைமாமன் போல கோகிலாவின் கன்னத்தைக் கிள்ளினாள்.

“ஷப்பா, பயந்துட்டேன். எதுக்குமா என்னை எப்ப பாரு பின்னால இருந்து கட்டிப்பிடிக்கிற?” என்று பொய் கோபத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டார் கோகிலா.

“அப்பதான் உங்களுக்கு என்னோட ஞாபகம் எப்பவும் இருக்கும்? சரி சரி, உங்க கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. எனக்காக இன்னைக்கு என்ன ஸ்பெஷலா செஞ்சு தரப்போறீங்க கோகி?” என்று செல்லம் கொஞ்சினாள்.

“ஏன் தனு! போன வாரம்தானே இங்க வந்து பிரியாணியை ஒரு பிடி பிடிச்சிட்டுப் போன? அதுக்குள்ளவா ரொம்ப நாள் ஆயிடுச்சு உனக்கு?” என்று கோகிலாவின் வாய் கிண்டல் செய்தாலும், தனுஜாவுக்காக சுடச்சுட இரண்டு பூரிகளைத் தட்டில் எடுத்து வைத்துக் கொடுத்தார்.

“உங்களுக்கு அது வெறும் ஏழு நாள். எனக்கு ஏழு இன்ட்டு மூணு, இருபத்தியோரு வேளை பசி! கூட்டி கழிச்சுப் பாருங்க, கணக்கு சரியாக வரும்” என்று லாஜிக் பேசிவிட்டு, சூடாக இருந்த பூரியை ஊதி ஊதி வாய்க்குள் தள்ளினாள்.

இதற்குள் காலை நேரத்து உணவிற்காக ஆர்யா டைனிங் டேபிளுக்கு வந்துவிட்டான். அவனுக்குக் கோகிலா பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுதே, பாலாஜியும் கையில் லேப்டாப் பேக் சகிதம், அலுவலகத்திற்கு தயார் நிலையில் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும், மிச்சமிருந்த பூரியை வேகமாக வாய்க்குள் திணித்துவிட்டு, பாவமானப் பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு தனுஜாவும் டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்தாள்.

ஆர்யா அவளைப் பார்த்ததும், “ஹேய், தகரடப்பா! நீ எப்ப வந்த?” என்றான் கிண்டலாக.

“இப்பதான் ஃபைவ் மினிட்ஸ் முன்னால வந்தேன்டா” என்று தனுஜா அசடு வழிந்தாள்.

“வழக்கமா இந்த நேரத்துக்கு நீ தூங்கி எழுந்திருக்கவே மாட்டியே. எட்டு மணிக்கே இங்க வந்து ஆஜராகி இருக்க? அதுவும் குளிச்சு கிழிச்சு பளபளன்னு வந்துருக்க? ஏதோ தப்பா இருக்கே…” என்று ஆர்யா துருவித் துருவி விசாரித்தான்.

“எனக்கு என்ன தெரியும்? உங்க பிஏ சார்தான் அவசர வேலைன்னு காலையிலேயே போன் பண்ணிக் கிளம்பி வரச் சொன்னாரு. சாப்பிடாம கொள்ளாம ஓடி வந்தேன் தெரியுமா?” என்று பாலாஜியை ஓரப் பார்வை பார்த்துக்கொண்டே சொன்னாள்.

“யாரு நீ? குளிக்காம கூட வந்திருப்ப, ஆனா நீ சாப்பிடாம வர்ற ஆளா?” என்று ஆர்யா கலாய்க்க, 

“நிஜமாடா! காலையிலிருந்து பச்சை தண்ணி கூடப் பல்லுல படாமல் இருக்கேன். என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட?” என்று பொய்யாகக் கண்களைக் கசக்கினாள்.

அப்போது அங்கே வந்த கோகிலா, “என்னம்மா தனுஜா? அதிசயமா இன்னைக்கு வெறும் ரெண்டு பூரியோட கைகழுவி இருக்க? வயிறு ஏதும் சரியில்லையா? இல்லைனா பத்து பூரிக்குக் கம்மியா உள்ள தள்ளாம விட மாட்டியே!” என்று கேட்டுக்கொண்டே அவள் முன் இன்னொரு தட்டை வைத்தார். அதில் மூன்று பூரி இருந்தது.

ஆர்யாவும் பாலாஜியும் அடக்க மாட்டாமல் சிரித்துவிட, “கிரேட் இன்ஸல்ட்!” என்று தனுஜா தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

அதே நேரம், குளித்து முடித்துக் கம்பீரமாகத் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வந்தான் சூர்யா. அவனது காலடிச் சத்தம் கேட்டதுமே, அவர்கள் சிரிப்புச் சத்தங்களெல்லாம் சட்டென அடங்கிப் போயின. பாலாஜியோடு அலுவலக விஷயங்களைப் பேசிக்கொண்டே சாப்பிடத் தயாரானான்.

அவனுக்கு எப்போதும் காலை உணவு என்றால் வேக வைக்கப்பட்ட காய்கறிகளும், சூப்பும்தான். ஆனால் பூரி சுடப்பட்டிருந்தால் மட்டும், மற்றவற்றை ஒதுக்கிவிட்டுப் பூரியைச் சாப்பிடுவான்.

கோகிலாவிடம், “பூரி எங்க?” என்றான். 

“இதோ தட்டுல இருக்கேங்க…” என்றவள், அவனை புரியாத பார்வை பார்த்தாள். 

சிறுவயதில் பூர்ணிமாவின் செல்ல பெயர் பூரி. அதையும் அவனைத் தவிர வேறு யாராவது சொன்னால், கோபித்துக் கொள்வாள்… 

“உன் கன்னம் ரெண்டும் நெஜமாவே பூரி மாதிரி புஸ்னு இருக்கு” என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சுவான். அந்த நினைவுகள் அவன் நெஞ்சில் மின்னலாக வந்து போக, அவன் கண்கள் அவளைத் தேடி துளாவியது.

அவன் பார்வையின் பொருள் புரிந்த பாலாஜி, “பூர்ணிமா எங்க போனா? சாப்பிட வரலையா?” என்றான் கோகிலாவிடம். 

“அந்தப் பொண்ணு ஒரு மாதிரி சோகமா இருந்தது. கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு. தோட்டத்தை கிளீன் பண்றேன். ஏதாவது வேலை இருந்தா கூப்பிடுங்கனு சொல்லிட்டு தோட்டத்துக்கு போச்சு. அங்கதான் இருக்கும்…” என்று வீட்டின் பின்பக்க கார்டன் ஏரியாவைப் பார்த்தாள்.

பாலாஜி, “நான் போய் கூட்டிட்டு வரேன்!” என்று எழப்போக,

சூர்யா, “தேவையில்லை. அவளுக்கு பசிச்சா அவளே வந்து சாப்பிட போறா.  உனக்கு ஏன் வேண்டாத வேலை? கம்பெனி வேலையெல்லாம் முடிச்சுட்டியா? கையில டைம் நிறைய இருக்குதா என்ன?” என்று காட்டமாக பேச,

தனுஜா, “எங்க சார்? வேலை வேலைனுட்டு என்கூட டேட்டிங் வராம ஏமாத்த பாக்குறான்” என்று மெதுவாய் முனுமுனுத்தாள்.

 

சட்டெனச் சூர்யாவின் கழுகுப் பார்வை அவள் பக்கம் திரும்பியது.

‘குத்தவா? கொல்லவா?’ என்பது போல அவன் கருவிழிகள் இவளை முறைத்துக் கொண்டு நிற்க, இவளுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.

சூர்யாவின் கோபத்திலிருந்து தப்பிக்க, கால் வராத தன் செல்போனை எடுத்து அவசர அவசரமாகக் காதில் வைத்துக் கொண்டாள்.

“ஹலோ, ஆமாங்க… நான்தான்…  இப்பவரை உசுரோட தான் இருக்கேன்… இங்க காத்து, அனலா இருக்கு… சிக்னல் சரியாக கிடைக்க மாட்டேங்குது… நான் தோட்டத்து பக்கம் வந்து பேசுறேன்…” என்று கிட்ட தட்ட தெறித்து ஓடினாள்.

“எப்பா… எப்பா… எப்பா…. நார்த் கொரியா கிம்மே தேவலாம் போல?! ஒரு வார்த்தை பேச முடியல. எப்படித்தான் இந்த வீட்டுல மனுஷங்க வாழுறாங்களோ தெரியல…” என்று புலம்பிக்கொண்டே சென்றவள், பூர்ணிமா மாடு போல வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

“ஹாய் அண்ணி, என்ன பண்றீங்க?” என்றாள் சகஜமாய்.

“ஒண்ணுமில்ல, காய்ஞ்சு விழுந்த இலையெல்லாம் க்ளீன் பண்றேன். நீ எப்போ வந்த?”

“இப்பத்தான், உங்க உம்மணாமூஞ்சி அண்ணன் அழைப்பு விடுத்தார். உடனே கிளம்பி வந்துட்டேன். நீங்க ஏன் அப்செட்டா இருக்கீங்க? அந்த காண்டா மிருகம் முட்டிருச்சோ?” என்று கேட்க, 

அவள் முதுகுப்பக்கம் ‘ம்க்கும்!’ என சூர்யா கனைக்கும் சப்தம் கேட்டது. அப்படியே சிலையாய் விரைத்துவிட்டாள் தனுஜா!

🪷🪷🪷🪷🪷

மாட்டிக்கினாரு ஒர்த்தரு!

அவர காப்பாத்தனும் கர்த்தரு!

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page