மரணத்தின் வாசல் வரை
நிழலாய் தொடர்ந்த வலிகளை,
நிஜமாய் வந்த உன் காதல்
நிசப்தமாய் கொன்று விட்டதே,
இனி இறுதி வரை
நான் சுவாசிப்பது
வெறும் காற்றை அல்ல
உந்தன் காதலை மட்டுமே…!
வலியை சூடிய காதலே – 1
மாநகரமே வியந்து பார்க்கும் வண்ணம் அந்த திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அது மண்டபம் என்பதை விட ஒரு இந்திரலோக மாளிகை என்றே சொல்லுமளவு பிரமாண்டமாக இருந்தது,
நுழைவாயிலில் பன்னீர் தெளிக்க அழகான பெண்கள் பட்டுடையில் நின்றிருக்க, மங்கல இசை காற்றோடு கலந்து காதுகளுக்குத் தேனாய் பாய்தது, வாசலில் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய எல்.இ.டி (LED) திரையில் “நிஷாலினி Weds தீரண்” என்ற எழுத்துக்கள் மின்னிக் கொண்டிருந்தது,
மண்டபத்தின் உள்ளே நுழையும்போது பாதங்கள் பதியுமளவிற்கு மென்மையான சிவப்பு கம்பள விரிப்புகள் ஒருபுறம், மறுபுறம் மண்டபத்தின் விதானத்தில் இருந்து தொங்கும் ஆயிரக்கணக்கான ஸ்படிக சரவிளக்குகள் (Crystal Chandeliers) ஒளியை வைரங்களாகச் சிதறவிட்டன,
எங்கு பார்த்தாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை மற்றும் ஊதா நிற ஆர்க்கிட் மலர்களின் மணம், ”என்ன ஒரு ஆடம்பரம், ஒரு பெரிய தொழிலதிபர் வீட்டுத் திருமணம்னா இப்படித்தான் இருக்கணும்” என்று வந்திருந்த விருந்தினர்கள் தங்களுக்குள் வியந்து பேசிக்கொண்டனர்,
உணவறுந்தும் இடத்திலோ வரிசை கட்டி நின்றிருந்த பலதரப்பட்ட பதார்த்தங்கள், தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் முதல் மேலைநாட்டுச் சுவைகள் வரை அனைத்தும் அங்கே சங்கமித்திருந்தன,
தங்க முலாம் பூசப்பட்ட தட்டுகளில் பரிமாறப்படும் உணவின் மணமே பசியை இன்னும் கொஞ்சம் தூண்டித் தான் விட்டது ஆனால் அந்த கூட்டத்திலும்,
அந்தப் பிரம்மாண்டத்தில் எதிலுமே ஒட்டாமல் மணமகள் அறையின் வெளியே நின்றிருந்தான் ஆரியன், அவன் கையில் இருந்த கடிகாரத்தின் முட்கள் நகர்வதை விட, அவனது கண்கள் சுற்றி இருந்த சூழலை சரியாக எடை போட்டுக் கொண்டிருந்தது,
ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல்வாகு, சீராக வெட்டப்பட்டிருந்தாலும் அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசை, எதற்கும் வளைந்து கொடுக்காத நிமிர்வு, அவன் அணிந்திருந்த உடை சாதாரணமாக இருக்கலாம்,
ஆனால் அவன் அதைத் தாங்கி நின்ற விதம் எந்தவொரு பிராண்டட் உடையையும் விட கம்பீரமாகத் தெரிந்தது,
அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டபமே பரபரப்பில் இருந்தது, பூக்களின் வாசம், நாதஸ்வர ஓசை, உறவினர்களின் பேச்சுச் சத்தம் என அனைத்தும் நிறைந்திருந்தாலும்,
இவையெல்லாம் மணப்பெண் அறையில் இருந்த நிஷாலினிக்கு அந்தப் பரபரப்பு கொஞ்சம் கூட எட்டவே இல்லை, அவள் கண்ணாடி முன் அமர்ந்து, தன் கழுத்தில் இடம் பதித்திருந்த வைர அட்டிகையை வெறித்துக் கொண்டிருந்தாள்,
அந்த வைரங்களின் ஜொலிப்பை கண்டும் தனக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி பூரிக்க வேண்டிய அவளது கண்களோ பொலிவிழந்திருந்தது,
ஏனென்றால் அவளுக்குத் தெரியும், அடுத்த சில நிமிடங்களில் இந்த மண்டபமே போர்க்களமாகப் போகிறது என்று, தன் தந்தை விஸ்வநாதன் அதிகாரத் தோரணையில் தொழில் ரீதியாக நிச்சயித்த இந்தத் திருமணம், இன்னும் சற்று நேரத்தில் அவர் கனவிலும் நினைக்காத ஒரு காட்சியை சந்திக்கப் போகிறது,
”நீ இன்னும் ரெடியாகலையா, நேரம் ஆச்சு நிஷா” என்றே பின்னாலிருந்து கேட்ட அந்தக் குரல் அவளுக்குள் ஒரு பெரும் நிம்மதியைத் தந்தது, திரும்பிப் பார்த்தாள் அங்கே ஆரியன் நின்றிருந்தான்,
”எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஆரி, டேடி என்ன பண்ணுவாருன்னு தெரியல, அவரை மீறி என்னால எதுவுமே பண்ண முடியாது” என்ற நிஷாலினியின் குரல் நடுங்கியது, ஆரியன் அவளுக்கு அருகில் வந்து நின்றான்,
“நான் இருக்கேன் நிஷா உனக்குப் பிடிக்காத எதையும் நடக்க விடமாட்டேன், என்னை மீறி உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்ற அவனது குரலில் இருந்த உறுதி நிஷாலினியை ஏனோ வலுப்படுத்த முடியவில்லை,
காரணம் அவளது தந்தை விஸ்வநாதனின் முரட்டுத்தனமும் பிடிவாத குணமும் தான், அவர் ஒரு முடிவெடுத்து விட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது, விஸ்வநாதன் ஒரு முடிவெடுத்தால் அது கல் மேல் எழுத்து,
வீட்டிலும் சரி தொழிலிலும் சரி அவருடைய முடிவே இறுதி, இதற்கிடையில் யாரும் ஒரு வார்த்தை கூட பேச முடியாது, ஒரு கழுகின் கூர்மையோடு அவர் யாரையாவது பார்த்தால், அங்கே நியாயம் கேட்க யாருக்கு துணிச்சல் வரும்,
என் மகளின் கழுத்தில் ஏறப்போகும் தாலி, என் கௌரவத்தின் கிரீடம், அதைத் தடுக்க நினைப்பவன் என் காலடியில் பிணமாகத் தான் கிடப்பான், என்ற உறுதியோடு இருப்பவரை எப்படி எதிர்க்க முடியும் என்று நினைத்து தன்னையே வதைத்துக் கொண்டாள்,
“ஹாய் டார்லிங்” என்றபடி அங்கு வந்தான் தீரண், தீரணைக் கண்டதும் மிரண்ட மான்குட்டியாய் மருண்டது அவளது பார்வை,
தீரணின் குரல் அந்த அறையின் குளிர்சாதன வசதியையும் மீறி ஒருவித வெப்பத்தை ஏற்றியது, அவன் உள்ளே நுழைந்த விதம், அந்த இடமே தனக்குச் சொந்தம் என்ற மமதையை பறைசாற்றியது,
”ஹாய் டார்லிங்” என்று அவன் அழைத்த விதம் நிஷாலினிக்கு அருவருப்பைத் தந்தது, கண்ணாடி பிம்பத்தின் வழியாகத் தெரிந்த தீரணின் உருவத்தைக் கண்டதும், அவள் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது,
தீரண் மெல்ல அவள் பின்னால் வந்து நின்றான், அவன் கைகள் மெல்ல அவள் தோளை நோக்கி நகர, நிஷாலினி சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து விலகி நின்றாள்,
“இது.. இது என்னோட ரூம், மேரேஜூக்கு முன்னாடி நீ இங்க வர்றது தப்பு, என் டேடிடேடிக்கு தெரிஞ்சா தப்பாயிடும், ப்ளீஸ் வெளிய போ தீரண்” என்று குரலில் நடுக்கத்தை மறைக்கப் போராடிச் சொன்னாள்,
தீரண் லேசாகச் சிரித்தான், அந்தச் சிரிப்பில் காதலை விட ஒருவித கர்வமும் அதிகாரத் தோரணையுமே மேலோங்கி இருந்தது,
“இது உன்னோடது என்னோடதுன்னு ஏன் பிரிச்சு பார்க்குற, இந்த ரூம் நம்மோடது, அதுவும் இல்லாம இன்னும் சில மணி நேரத்துல நீயே எனக்குச் சொந்தமாகப் போறவ, அப்புறா சரி எது தப்பு எதுன்னு பார்க்க அவருக்கு கூட ரைட்ஸ் இல்ல?” என்று கூறிய,
அவன் மீண்டும் அவளை நோக்கி நெருங்கி வர,
நிஷாலினி தஞ்சம் தேடுவது போலத் தூரத்தில் நின்றிருந்த ஆரியனைப் பார்த்தாள், அங்கே ஆரியனோ ஒரு சிலையென நின்றிருந்தான், ஆனால், அவனது கண்கள் மட்டும் எரியும் எரிமலையாகத் வெடித்துச் சிதற காத்திருந்தது,
அவன் கைகள் கோபத்தில் தானாகவே சுருண்டு முஷ்டிகளாக மாறின, அவனது கட்டை விரல் நகம் உள்ளங்கையில் அழுந்தி ரத்தம் கசியும் நிலைக்குச் சென்றது,
தீரண் நிஷாலினியைத் தீண்டும் ஒவ்வொரு நொடியும் ஆரியனின் இதயம் ஆயிரமாயிரம் ஊசிகளால் குத்தப்படுவது போன்ற வலியை உணர்ந்தான்,
இப்போதே இவன் கையை உடைக்க வேண்டும் என்று அவன் மூளை உத்தரவிட்டுக் கொண்டேருக்க, ஆனால் அவனது இதயம் ‘இது அதற்கான நேரமில்லை கொஞ்சம் பொறுமையாக காத்திரு’ என்று கட்டளையிட்டு அவனைக் கட்டிப்போட்டது, அப்போது நிஷாலினியின் பார்வை சென்ற திசையில் தீரண் திரும்பி பார்க்க அங்கே ஆரியனைப் இருந்தான்,
“ஓஃஹோ நீ இங்க ஒருத்தன் இருக்கிறதையே கவனிக்காம விட்டுட்டேனே, ஆமா நீ இங்க என்ன பண்ற, கேக்குறேன் இல்ல பதில் சொல்லு, என்ன ஆரி எதுவும் பேசாம சிலையாட்டம் நிக்குற” என்று தீரண் பல்லை வெறுக,
“நான் தான் ஆரிய வரச் சொன்ன, அது என்னன்னா எனக்கு குடிக்க கூல்டிரிங்ஸ் வேணும் அதான் ஆரிகிட்ட” என்று அவள் இழுக்க,
“ஓஹோ அப்படியா, சரி சரி அது போகட்டும், நான் கேட்ட கேள்விக்கு பதில் தான் சொல்ல மாட்ட, ரைட்டு ஆனா ஆரி இன்னைக்கு எனக்கும் நிஷாவுக்கும் மேரேஜ் ஆகப் போகுது அதுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டியா?” என்று கேட்டான் தீரண்,
”உங்க இரண்டு பேருக்கும் வாழ்த்துச் சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை, இப்ப அதற்கான அவசியமும் இல்ல, நேரம் வரும் போது சொல்றேன் வார்த்தையா இல்லாம செயலா சொல்றேன்” என்று ஆரியன் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு, ஒருவிதமான மரத்துப் போன குரலில் சொன்னான்,
தீரண் புருவத்தை உயர்த்தி, “ஓ… அப்படியா வெரி குட், இந்த அடக்கம் தான் உங்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஆரி, ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, இனிமேல் நீ நிஷா கூட பேசவோ பழகவோ கூடாது,
ஏன்னா இனி அவ இந்த தீரணுக்கு மட்டும் தான் சொந்தம், எனக்கும் அவளுக்கும் நடுவுல யாரும் வரக்கூடாது, அதுவும் குறிப்பா நீ வரவே கூடாது புரியுதா” என்று ஆதிக்கம் நிறைந்த குரலில் கூறிவிட்டு,
நிஷாலினியின் பக்கம் திரும்பி ஒற்றைக் கண்ணால் சைகை செய்துவிட்டு, ஒரு திமிரான நடையுடன் வெளியேறினான்,
அவன் சென்றதும் அந்த அறையில் ஒரு கனத்த மௌனம் நிலவியது, நிஷாலினி அப்படியே சுவரோரம் சாய்ந்து சரிந்தாள், ஆரியன் அவளருகே வந்து நின்றான், அவன் கண்கள் இப்போது தணிந்திருந்தன
”ஆரி என்னால முடியல ஆரி தீரண் என்கிட்ட வரும் போது எல்லாம் அருவருப்பா இருக்கு, என்னால இவன் கூட வாழப்போறதை நினைச்சாலே அப்படியே செத்துடலாம் போல இருக்கு,
இந்த உலகத்துல எனக்கு தெரிஞ்ச இரண்டே பேர்ன்னா அது ஒன்னு என் டேடி இன்னொன்னு நீ மட்டும் தான் ஆரி, அதனால தான் உங்கிட்ட கேட்குறேன்,
ப்ளீஸ் ஆரி ஏதாவது பண்ணி என்னை காப்பாத்து ஆரி, நீதான் நீ மட்டும் தான் என்னை காப்பாத்த முடியும், ப்ளீஸ் ஆரி” என்று அவன் காலைப் பற்றி விம்மினாள்,
“தயவு செஞ்சு என் முன்னாடி நீ அழாத நிஷா” என்று கூறியவன், மனதில்
“இது அந்த விஸ்வநாதனோட ஆட்டமா இருக்கலாம் ஆனா இதோட முடிவு என்னோடதா மட்டும் தான் இருக்கும், இந்த கல்யாணம மேடை மட்டும் இல்ல இன்னும் எத்தனை கல்யாணத்த ஏற்பாடு பண்ணாலும் எதையும் நடக்க விடமாட்டேன்,
நான் இருக்கிற வரைக்கும், உன்னை யாராலையும் நெருங்க முடியாது, உன் ஒருத்தியால மட்டும் தான் என் குடும்பத்தை சரி செய்ய முடியும், உன்னை ஊருக்கு கூட்டிட்டு வருவேன்னு நான் குடுத்த சத்தியம் கண்டிப்பா நடந்தே தீரும்” என்று
எண்ணிய மனதிற்குள் தீப்பிழம்பாய் கொதித்த நிகழ்வுகளை நினைத்தபடி இருந்தவன் நிஷாவின் விம்மி அழும் சத்தம் சிந்தனையை சிதறடித்தது,
“நான் சொல்றதை மட்டும் செய் மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன், உன்னை இங்க இருந்து பத்திரமா கூட்டிட்டு போக வேண்டியது என்னோட பொறுப்பு போதுமா, அழாம தைரியமா இரு” என்ற
அவனது வார்த்தைகள் நிஷாலினிக்கு ஒரு சிறு நம்பிக்கையைத் தந்தாலும், வெளியே காத்திருக்கும் அவளது தந்தை விஸ்வநாதனின் உருவம் மனக்கண்ணில் வந்து அவளை இன்னும் பயமுறுத்திக் கொண்டே இருந்தது,
நேரம் கடந்து செல்ல மண்டபம் மொத்தமும் ஆட்கள் நிரம்பத் தொடங்கினர், முகூர்த்த நேரமும் நெருங்கியது, மணமேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அக்னியின் முன்பு ஆரியனிடம் பார்வையால் இறைஞ்சியபடி அமர்ந்திருந்தாள் நிஷாலினி,
“என்னப்பா முகூர்த்த நாழி நெருங்கிடுத்து, கன்யாதானத்துக்கு பொண்ணே வந்தாச்சு, ஆனா இந்த மாப்பிள்ளையாண்டானை இன்னும் காணோமே, நாழியாகறது கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லுங்கோ” என்று ஐயர் கூறிவிட்டு மந்திரம் சொல்வதை தொடர்ந்தார்,
மாப்பிள்ளையை அழைத்து வரவேண்டிய நண்பர்களோ ஏதோ தீவிரமாக தங்களுக்குள் பேசி கொண்டு நிற்க, தீரணின் தகப்பனார் வீரராகவன் அவர்களின் அருகில் வந்தார்,
“என்ன ஆச்சு தீரண் ஏன் இன்னும் மணமேடைக்கு வரல, அவனை கூட்டிட்டு வராமா நீங்க மட்டும் தனியா நின்னு என்ன பேசிட்டு இருக்கீங்க” என்று கேட்டார்,
“அது வந்து அங்கிள்…, தீரணை கொஞ்ச நேரமா காணோம், நாங்களும் தேடி தேடி பார்க்கறோம், அவன் எங்க போனான்னே தெரியல” என்று தயக்கத்துடன் தீரணின் நண்பர்கள் கூறியதைக் கேட்டதும் வீரராகவனுக்கு கோபம் தான் வந்தது,
“என்னடா சொல்றீங்க, அவன் என்ன சின்ன குழந்தையா காணாம போறதுக்கு, இன்னைக்கி இங்க என்ன நடக்குதுன்னு தெரியுதா இல்லையா, எவ்ளோ சீரியஸான சுவிட்சுவேஷன்ல இப்படி சின்ன பசங்க மாதிரி விளையாடிட்டு இருக்கீங்க,
அங்க முகூர்த்ததுக்கு நேரமாயிடுச்சுன்னு ஐயர் சொல்லிட்டே இருக்கார், மேரேஜூக்கு வந்த விஐபிஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, இந்த நேரத்துல மாப்பிள்ளைய காணோம்னு சொல்லி இரிடேட் பண்ணிட்டு இருக்கீங்க” என்று எரிந்து விழுந்தார் வீரராகவன்,
அதேசமயம் மாப்பிள்ளை மணமேடைக்கு வராததால் அங்கே சலசலப்பு ஆரம்பித்தது,
தீரண் எங்கே?
நிஷாலினியின் கதி என்ன?
தீரண் காணாமல் போனதற்கும் ஆரியனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
